விவேகானந்தரின் நறுக்

கடவுள் நாம் விரும்பியதை கொடுப்பவர் அல்ல, நமக்குத் தேவையானதை கொடுப்பவர்...

May 10, 2010

காதல் கசக்குதய்யா....


பெருந்தன்மை என்ற வார்த்தைக்கு இன்றுதான் அர்த்தம் என்ன என்று தெரிந்து கொண்டேன். நான் எழுதிய தோனி சொல்ல மறந்த கதை என்ற பதிவை பல இணைய நண்பர்கள் தரவிறக்கம் செய்து மின்னஞ்சலில் அனுப்பி உள்ளார்கள். அது சுற்றி சுற்றி இன்னொரு பதிவாக வேறொரு தளத்தில் வந்து என் பதிவை விட மிக அதிக வோட்டுகள் வாங்கி விட்டது. அது நம்ம கிருஷ்ணா அவர்களின் பதிவு. அந்த தளத்தில் சென்று இது என்னுடையது என்று கருத்து தெரிவித்தேன். அவர் நினைத்திருந்தால் அதை அப்படியே விட்டிருக்கலாம். ஏனென்றால் இது என்னுடைய பதிவு என்பதற்கு எந்த வித ஆதாரமும் கிடையாது. ஆனால் நான் சொன்னதை நம்பி தன் பதிவில் என் வலைப்பக்கத்தின் இணைப்பை தந்து தன் பெருந்தன்மையை நிருபித்துவிட்டார். ஒவ்வொரு பதிவுக்கும் இருநூறு ஹிட் வாங்கவே கஷ்டப்படும் என் மாதிரி புதியவனுக்கு ஒரே பதிவில் இரண்டாயிரத்துக்கும் அதிக ஹிட்டுகள். "நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லோருக்கும் பெய்யும் மழை". நன்றி கிருஷ்ணா அவர்களே...


சமீபத்தில் நம்ம தலயோட ஆருயிர் ரசிகர் யோகநாதன் அவர்கள் தனக்கு முகம் தெரியாத ஒருவரிடம் இருந்து காதல் குறுந்தகவல்கள் வருவதாக சொல்லியிருந்தார். உடனே என் பழைய நினைவுகளை பதிவாக போடவேண்டும் என்று நினைத்துக்கொண்டேன். அவரும் அதையே சொல்ல, விளைவுதான் இந்த பதிவு. 


ஒவ்வொரு பையனுக்கும் தன் விடலைப்பருவத்தில் காதல் கண்டிப்பாக வரும். எனக்கும் வந்தது. எங்கள் ஊரில் ஆண் பெண் இருவருக்கும் தனிதனி பள்ளிகள். இரண்டும் வெவ்வேறு துருவங்கள். எனவே பத்தாம் வகுப்பு படிக்கும் வரை என் வயது பெண்களின் அருகாமை இருக்கவே இல்லை. அதனாலோ என்னவோ எனக்கு காதல் பற்றி அவ்வளவாக ஈடுபாடு இருந்ததில்லை. அதன் பின் சிறு சிறு அனுபவங்கள் ஏற்பட்டன. எனக்கு காதல் வந்தது என்று சொல்ல முடியாது. என் வயது பசங்க எல்லாம் என் ஆளு உன் ஆளு என்று பேசிக்கொண்டிருக்கும் போது நமக்கு மட்டும் ஆளு இல்லையே என்று நினைப்பேன். கண்ணில் படும் பெண்ணை எல்லாம் இவள்தான் நம் ஆளு என்று முடிவு கட்டிக்கொள்வேன். ஆனால் அவள் கண்டிப்பாக வேறு ஒருவனின் ஆளாகத்தான் இருப்பாள். இவர்கள் எல்லோரையும் தாண்டி என்னைப்பார்த்தவள் அவள்தான். அவள் பெயர் மீனா. என்னை இமைகொட்டாமல் பார்ப்பாள். எனக்குத்தான் கூச்சமாக இருக்கும். ஆனால் அப்போது என் மனம் காதல் செய்வது என்று முடிவு கட்டவில்லை. எனக்கு ஒரு ஆள் இருக்க வேண்டும் என்று நினைத்தது கூட நண்பர்களிடம் பெருமையாக சொல்லிக்கொள்ள வேண்டும் என்றுதான். என் நோக்கம் எல்லாம் திருட்டு தம், பலான சினிமா என்று இருந்தது. நான் அவதான் என் ஆள் என்று நண்பர்களிடம் பெருமையாக கூறிவேன். ஆனால் அவளிடம் பேசியதே கிடையாது. காரணம் எனக்கு பயங்கர கூச்சம். அந்த வயது வரை எனக்கு நன்கு தெரிந்த ஒரு பெண் என்றால் அது என் அம்மாதான். அப்போது என் குடும்பத்தில் நிகழ்ந்த சில அதிரடி சம்பவங்களால் என் வாழ்க்கை திசை மாறியது. என் கவனமும் மாறியது. பின் கல்லூரியில் சேர்ந்தேன். மீனாவை மறந்து போனேன் என்று சொல்வதை விட, இதயத்தில் ஏதோ ஒரு மூலையில் போட்டுவிட்டேன். என்னுடைய நடவடிக்கைகள் மாறின. கண்ணில் படும் சப்பை பிகர் கூட அழகாக தெரிந்தாள். எனக்கு கூச்சம் போயிருந்தது (குறைந்திருந்தது). ஆனால் அந்த இடத்தை திமிர் நிரப்பி இருந்தது. எவ்வளவு பெரிய அழகியாக இருந்தாலும், அலட்சியமான ஒரு பார்வை பார்த்துவிட்டு போய் விடுவேன். பிறகு நான் செய்ததை நினைத்து நொந்து கொள்வேன். ஆனால் எவ்வளவு முயற்சி செய்தும் என்னால் மாறமுடியவில்லை. நானாக வலிய சென்று பேசியதில்லை. அவர்களாக பேசினால் நன்றாக பேசுவேன். இதுவே எனக்கு ஒரு நல்ல பெயரை பெண்கள் மத்தியில் பெற்று தந்தது. முதலில் திமிர் பிடித்தவன், நடிக்கிறான் என்று சொன்னவர்கள் கூட, இவன் இயல்பே இப்படித்தான் என்று சொன்னார்கள். என் வகுப்பில் உள்ள பெண்கள் எல்லோருக்கும் பேவரிட் ஆனேன். ஏனென்றால் எனக்கு பெண்களிடம் எப்படி பேச வேண்டும் என்று தெரியாது. ஆண் நண்பர்களிடம் எப்படி பேசுவேனோ அதே தோரணையில் தான் பெண்களிடமும் பேசுவேன். இது அவர்களுக்கு இன்னும் பிடித்து போனது. இவன் தேவையில்லாமல் வழிவதில்லை என்ற பெயர் வாங்கி கொடுத்தது. அதே போல ஆண் நண்பர்களும் என்னுடன் நன்கு பழகினார்கள்.

எங்கள் செட்டில் எனக்குதான் நண்பர்கள் அதிகம். யாரிடமும் தேவையில்லாமல் பேசுவதில்லை. பேசினால் தோழமையான, தண்மையான வார்த்தைகளே வரும். இதனால் எல்லா டிபார்ட்மென்ட்களிலும் ஆண் பெண் பேதமில்லாமல் நண்பர்கள் இருந்தார்கள். பேசும்போது நகைச்சுவை தெறிக்கும். அதனால் என்னை சுற்றி நண்பர்கள் இருந்துகொண்டே இருந்தார்கள். நாட்கள் செல்ல செல்ல எனக்கு ஒரு உண்மை புரிந்தது. எனக்கு நண்பர்கள் அதிகம். நான் பேசுவதை கேட்பார்கள், சிரிப்பார்கள். ஆனால் காதலி என்று ஒருத்தி இல்லை. இனி அமையாது. ஏனென்றால் அனைவரும் நண்பர்கள், என்னால் அவர்களை வேறு கோணத்தில் பார்க்க இயலாது.


அப்போதுதான் என் நண்பன் எனக்கு ஒரு அரிய யோசனை ஒன்றை கூறினான். "டேய் நம்ம செட்டுல பார்த்தா வேலைக்காகாது. பேசாம ஜூனியர ட்ரை பண்ணு." என்றான். அவன் சொன்னதை வேதவாக்காக கொண்டு, என்னவளை தேடினேன். ஒருவழியாக அவளை கண்டுபிடித்தேன். பெயர் நர்மதா. சாயலில் மீனாவை(நடிகை அல்ல. என் பள்ளி பருவத்தில் வந்தவள்.) ஒத்திருப்பாள். நான் கல்லூரிக்கு செல்லும் பேருந்தில்தான் அவளும் வருவாள். தினமும் அவளை கவனிக்க தொடங்கினேன். அவளை நெருங்கி பேசிவிடவேண்டும் என்று நினைப்பேன். திடீரென ஏதோ ஒன்று என்னை தடுத்தது. ஆம் வெகு நாட்களாக காணாமல் போயிருந்த ஒன்று. கூச்சம். எவ்வளவோ முயற்சி செய்தும் அவளிடம் பேச முடியவில்லை. மறுபடியும் என் நண்பனிடம் ஐடியா கேட்டேன். "மச்சி பெண்களிடம் எப்படி பேச்சை தொடங்குவது என்று தெரியாதவர்களுக்கேன்றே ஒரு வழி இருக்கிறது. நீங்கள் இருவரும் ஒரே கலரில் உடை அணிந்து வந்தால் அன்று அவளிடம் சேம் பின்ச் என்று சொல் கண்டிப்பா சாக்லேட் வாங்கி தருவா." என்றான். நான் அந்த நாளுக்காக காத்துக்கொண்டிருந்தேன். அந்த நாளும் வந்தது. என் வாழ்வில் மறக்க முடியாத நாள். பேருந்தில் ஏறினேன். அவள் அமர்ந்திருந்த சீட்டின் அருகில் நின்று கொண்டேன். எனக்கும் கூச்சத்துக்கும் பெரிய போராட்டம். அவளை பார்த்தேன். என்னை பார்த்ததும் புன்னகைத்தாள். அட என்னை தெரிந்திருக்கிறதே என்று மகிழ்ந்தேன். கஷ்டப்பட்டு மென்று விழுங்கிக்கொண்டே "சேம் பின்ச்" என்றேன். அவள் காதில் விழவில்லை போலும். "என்ன அண்ணா சொன்னீங்க?" என்றாள். தலையில் பெரிய இடி விழுந்தது போலிருந்தது. ஒன்றும் இல்லை என்று சொல்லிவிட்டு வந்துவிட்டேன்.

பேருந்து நிறுத்தத்தில் சோகமாக நின்று கொண்டிருந்தேன். அருகில் ஒரு பெண். பார்த்தால் என் கண்களை நம்ப முடியவில்லை. மீனா. அட என்ன கொடுமைடா. என்னை பார்ப்பதற்காக நிற்பது போலிருந்தது. மனதில் சிறு ஆறுதல். பின்னால் இருந்து என் நண்பன் முதுகில் தட்டினான். "என்னடா இங்கே" என்றேன். "இல்லைடா நானும் என் ஆளும் படத்துக்கு போறோம்." என்றான். "எங்கேடா அவ?" என்று கேட்டேன். இதோ என்று மீனாவை காட்டினான். ஏற்கனவே தலையில் இறங்கிய இடி இதயத்திலும் இறங்கியது. என் நண்பனும் கூச்ச சுபாவம்தான். ஆனால் புத்திசாலி. பிடித்துக்கொண்டான். எங்கிருந்தாலும் வாழ்க என்று பாடிக்கொண்டே வந்துவிட்டேன். அதிலிருந்து எந்த பெண் மீதும் ஈடுபாடு காட்டவே இல்லை. என் நண்பர் கூட்டம் பெருகியது. 


நான் இறுதி ஆண்டு படித்து கொண்டிருந்த போது, எனக்கு ஒரு பெண்ணிடம் இருந்து மின்னஞ்சல் வரும். கொஞ்சலான வார்த்தைகள் கொட்டி கிடக்கும். என் நண்பர்களுக்கு குறும்பு அதிகம். அதனால் எவனாவது ஒருவன்தான் கலாய்க்கிறான் என்று அதை கண்டு கொள்ள வில்லை. ஆனால் மின்னஞ்சல் வருவது நிற்க வில்லை. ஒரு வழியாக கல்லூரி வாழ்க்கை முடிந்து விட்டது. மின்னஞ்சல் வருவதும் நின்று விட்டது. இரண்டு ஆண்டுகள் ஓடி விட்டன. திடீரென ஒருநாள் ஒரு போன் கால். "நான் உங்கள் ஜூனியர். என் பெயர் சரண்யா. உங்கள் நண்பி ரம்யாவின் தங்கை." என்று. நான் ரம்யாவை பார்த்து வெகு நாட்கள் ஆகி விட்டதால், சரண்யாவிடம் ஆர்வமாக விசாரித்தேன். அவள், "என்ன என்னை பற்றி ஒன்னும் கேட்க மாட்டேங்கறீங்க?" என்று கேட்டாள். என்னடா ரூட்டு மாறுகிறது என்று நினைப்பதற்குள், "என் அக்கா உங்கள பத்தி நிறைய சொல்லி இருக்கா. நான் உங்களை கல்லூரியிலேயே பார்த்திருக்கிறேன். ஆனால் பேச கூச்சமாக இருக்கும். ஆனால் இப்போதான் தைரியம் வந்தது." என்று பேசிக்கொண்டே இருந்தாள். அடிக்கடி பேச ஆரம்பித்தாள். ஒரு நாள் பேச்சு வாக்கில் என்னை காதலிப்பதாக சொன்னாள். எனக்கு அப்போது வேலை இல்லை. அதனால் என்ன முடிவு எடுப்பது என்று தெரியவில்லை. மழுப்பிக்கொண்டே இருந்தேன். பின்னொருநாள் அவள் அக்கா ரம்யாவை சந்தித்தேன். அவள் வேறு டிபார்ட்மென்ட். ஆனால் நல்ல பழக்கம். சந்தித்து வெகு நாட்கள் ஆனதால் பல விஷயங்கள் பேசினோம். "வீட்டில் மாப்பிள்ளை பார்க்கிறார்கள், எனக்கு கொஞ்சம் கூட பிடிக்கவில்லை." என்று சொன்னாள். பின் அலுவலகத்தில் சக பணியாளர் ஒருவர் தன்னை காதலிப்பதாக சொல்லி அதை தான் மறுத்த விசயத்தையும் சொன்னாள். நானும் பேச்சு வாக்கில் எனக்கு படிக்கும் காலத்தில் வந்த காதல் மின்னஞ்சல்கள் பற்றிய விஷயத்தை சொன்னேன். அவள் முகம் மாறியது. அமைதியாகவே இருந்தாள். என்ன விஷயம் என்று கேட்டேன். அதற்க்கு அவள், "நீ இன்னும் அதை நினைவில் வைத்திருப்பாய் என்று நினைக்கவில்லை. ஒரு உண்மையை சொல்கிறேன். அந்த மின்னஞ்சல்களை அனுப்பியது நான்தான். உன்மேல் அளவு கடந்த காதலால் அப்படி செய்துவிட்டேன். என்னால் இப்போது உன்னை மறக்க முடியவில்லை. அதனால்தான் இன்னொருவர் சொன்ன காதலை கூட நிராகரித்து விட்டேன். நீ ரொம்ப நல்லவன். என்னுடன் ஆரோக்கியமான நட்புடன் இருக்கிறாய். என்னை மன்னித்துவிடு" என்றாள்.


எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. அக்காவும் தங்கையும் மாறி மாறி காதலை சொன்னார்கள். இருவரின் காதலையுமே ஏற்க முடியாது என்று எனக்கு தெரியும். அக்காவை கூப்பிட்டு தங்கை காதல் சொன்ன விஷயத்தை சொன்னேன். அவள் பக்குவமானவள். ஏற்றுக்கொண்டாள். அவள் மற்றும் அவள் தங்கையால் ஏற்பட்ட மனகஷ்டத்துக்கு மன்னிப்பு கேட்டாள். பின் அவள் தங்கையுடன் பேசினாள். தங்கை என்னிடம் வந்து பயங்கரமாக அழுது சண்டை போட்டாள். முதலில் அமைதியாக பேசிய நான் ஒரு கட்டத்தில் கோபம் தாளாமல் திட்டிவிட்டேன். அவள் கோபத்துடன், "நீ பெரிய இவனா?" என்று திட்டிவிட்டு சென்று விட்டாள். அக்கா வந்து, "உனக்கு பெரிய தொந்தரவு தந்துவிட்டேன். உனக்கு என் மேல் காதல் இல்லாமல் இருக்கலாம். ஆனால் என் காதலை என்னால் மறக்க முடியாது. குட் பை!" என்று சொல்லி விட்டு சென்றாள். பின் அவளை தொடர்பு கொள்ள முடியவில்லை. செல்போன் எண்ணை மாற்றி விட்டாள். 


அந்த கால கட்டத்தில் மிகுந்த மன உளைச்சலில் நான் இருந்தேன். ஆனால் இப்போது இந்த கதையை யாரிடம் சொன்னாலும் விழுந்து விழுந்து சிரிக்கிறார்கள். இது காதல் கதையோ காமெடி கதையோ என் வாழ்வில் நடந்த உண்மை கதை. இப்போதும் பழைய ஞாபகங்களில் மூழ்கும் போது நினைவில் வருவது மீனாதான். நானும் அவளும் காதலித்தது இல்லை. ஆனால் அந்த இளம் வயதில் காதலி என்று நான் நினைத்தது அவளைத்தான். ஆனால் இப்போது அவள் மாற்றான் மனைவி. அவளை காதலியாய் நினைக்க முடியாது. இனி ஒரு பெண் என் வாழ்வில் வந்தாலும் அவள் மீனாவாக இருக்க முடியாது...


பிடிச்சிருந்தா ஓட்டு போடுங்க...
உங்க கருத்துக்களை இங்க பதிவு பண்ணுங்க...

4 comments:

Anonymous said...

பழச ஞாபகப் படுத்திட்டீங்க. என் வாழ்க்கையில் ஒரு “கீதா”. உங்க வாழ்க்கை மாதிரிதான் என் வாழ்க்கையும் ஆச்சு. நான் தேடிய போது ஒன்றும் கிடைக்கல. இப்போ வேண்டாம்னு நினைக்கையில் 3 பெண்கள் விரும்புகிறார்கள். அதனால் ஓடி ஒளிகிறேன்.

Yoganathan.N said...

தற்செயலாகத் தான் இன்று இந்த பதிவைப் படித்தேன். இது உருவாக நானும் ஒரு காரணம் என்பதில் மகிழ்ச்சி. எனது தளத்தைச் சுட்டிக் காட்டியதற்கும் நன்றி. :)

உண்மையைச் சொல்லப் போனால், மிக சுவாரசியமாக எழுதியுள்ளீர்கள். ரசித்துப் படித்தேன்.

//நானாக வலிய சென்று பேசியதில்லை. அவர்களாக பேசினால் நன்றாக பேசுவேன். இதுவே எனக்கு ஒரு நல்ல பெயரை பெண்கள் மத்தியில் பெற்று தந்தது. முதலில் திமிர் பிடித்தவன், நடிக்கிறான் என்று சொன்னவர்கள் கூட, இவன் இயல்பே இப்படித்தான் என்று சொன்னார்கள்.//

ஏறக்குறைய நானும் இப்படித் தன் இருந்தேன். ஆனால், கடைசி வரை அப்படியே இருந்து விட்டேன், பெண் நண்பர்களே இல்லாமல். சமீபத்தில் உடன் படித்த ஒருவளிடம் தொடர்பு ஏற்ப்பட்டது. 'நீ அப்படி இருந்த தால் தான் உன்னை எனக்கு மிகவும் பிடிக்கும்' என்றாள்.

Yoganathan.N said...

//அவள் காதில் விழவில்லை போலும். "என்ன அண்ணா சொன்னீங்க?" என்றாள். தலையில் பெரிய இடி விழுந்தது போலிருந்தது.//

படிக்கும் பொழுது அலுவலகத்தில் இருந்தேன். வாயைப் பொத்திக் கொண்டு சிரித்தேன். பயங்கர 'twist'

என்ன நண்பரே, கடைசியில் அக்காவும் இல்லாமல் தங்கையும் இல்லாமல் போய்விட்டதே... :(

Bala said...

//என்ன நண்பரே, கடைசியில் அக்காவும் இல்லாமல் தங்கையும் இல்லாமல் போய்விட்டதே... :(

இப்போது உண்மையிலேயே நிம்மதியாக இருக்கிறேன்.

Related Posts Plugin for WordPress, Blogger...