விவேகானந்தரின் நறுக்

கடவுள் நாம் விரும்பியதை கொடுப்பவர் அல்ல, நமக்குத் தேவையானதை கொடுப்பவர்...

May 12, 2010

பத்தாயிரம் ருபாய் லஞ்சமும், பத்தாயிரம் ஹிட்டுகளும்.....


தமிழ் கூறும் நல்லுலகிற்கு அறிவித்து கொள்வது என்னவென்றால், எழுத்து என்றால் என்னவென்றே தெரியாமல் மனம்போன போக்கில் எழுதிய என் வலைப்பக்கமும் பத்தாயிரம் ஹிட்டுகளை எட்டி உள்ளது. இதற்க்கு உறுதுணையாய் இருந்த விஜய், அஜித், தோனி, சச்சின், நித்தியானந்தா, கலைஞர் (பின்னே இவர்கள் இல்லை என்றால் எதைப்பற்றி எழுதுவது?) என் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். இவர்கள் மேலும் மேலும் எனக்கு உறுதுணையாக இருக்குமாறு வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறேன். 


இந்த பதிவில் வரும் கருத்துக்களை எழுத்துப்பிழை இருந்தாலும் பொறுத்துக்கொண்டு படித்த நண்பர்களுக்கும், முரணான கருத்துக்களுக்கு பின்னூட்டம் இட்டு குட்டிய தோழர்களுக்கும், தங்கள் பொன்னான வாக்குகளை அள்ளி வீசிய வாக்காளர் பெருமக்களுக்கும் என் சிரம்தாழ்ந்த நன்றி. பத்தாயிரம் ஹிட்டுகள் வாங்கிய மகிழ்ச்சியில் எண் பத்தாயிரம் பற்றி ஏதாவது ஒரு தகவலை வெளியிடலாம் என்று பார்த்தால் ஒன்றும் சிக்கவில்லை. சமீபத்தில் நடந்த ஒரு வினோதமான நிகழ்ச்சி ஒன்றை மட்டும் சொல்கிறேன். 


அதிகாரிகள் லஞ்சம் வாங்கி ஏப்பம் விடுவார்கள் என்று சொல்வதுண்டு. ஆனால் அதே போன்ற ஒரு நிகழ்ச்சி சமீபத்தில் நடந்துள்ளது. தூத்துக்குடியில் மின்வாரிய அதிகாரி ஒருவர் பத்தாயிரம் ருபாய் (20 ஐநூறு ருபாய் நோட்டுகள்) லஞ்சம் பெறும்போது கையும் களவுமாக பிடிபட்டுள்ளார். உடனே என்ன செய்வது என்று தெரியாமல் அதை அப்படியே வாயில் போட்டு விழுங்கி உள்ளார். அவரை பிடிக்கவந்த காவலர்களில் ஒருவர் படக்கென அவர் வாயில் கையை விட்டு பணத்தை எடுத்துள்ளார். இந்த நிகழ்ச்சியை கேட்டு சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை. 


ஆங்கிலயர்கள் காலத்தில் இந்தியாவில் பயன்படுத்தி வந்த பத்தாயிரம் ரூபாய் நோட்டின் படம் இது. இந்த நோட்டு மட்டும் இப்போது புழக்கத்தில் இருந்திருந்தால் அந்த அதிகாரி சிக்கி இருக்கவே மாட்டார். பணத்தை எளிதில் விழுங்கி இருக்கலாம். அவரை பிடிக்க வந்த காவலர்களும் குற்றத்தை நிரூபிக்க மல ஜல பரிசோதனை போன்ற வேறு வழிகளை கையாள வேண்டி இருந்திருக்கும். எங்கள் ஊரில் ஒரு சப்இன்ஸ்பெக்டர் ஒருவர் இருந்தார். வழக்கத்துக்கு மாறாக (?!!) நல்லவர். மக்கள் கூட்டம் அதிகம் இருக்கும் பகுதியில் வந்து நின்றுகொள்வார். சின்ன சின்ன விதிமீறல் செய்யும் நபர்களுக்கு இம்சை அரசன் ஸ்டைலில் வித்தியாசமான தண்டனை கொடுப்பது அவர் வழக்கம். அதாவது சைக்கிளில் ட்ரிபிள்ஸ் செல்பவர்களை நிறுத்தி அந்த சைக்கிளை தூக்கி கொண்டே குறிப்பிட்ட தூரம் வரை நடந்து போக சொல்வார். மேலே கூறிய லஞ்ச அதிகாரிகளையும் இந்த மாதிரி தவறு செய்யும் இடத்திலேயே தண்டித்தால்தான் லஞ்சம் குறையும். பத்தாயிரம் லஞ்சம் வாங்கிய அந்த அதிகாரியை பத்தாயிரம் ரூபாய்க்கு பத்துரூபாய் ஐந்து ரூபாய் நோட்டுகளாக மாற்றி தின்ன சொல்லியிருக்க வேண்டும். எது எப்படியோ, திருடனாய் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்பது மட்டும் நிஜம்.

நேற்று நாளிதழை திருப்பிய எனக்கு ஒரு செய்தி கண்ணுக்கு புலப்பட்டது. அது இந்திய அணி அரையிறுதிக்கு தகுதி என்ற செய்திதான். எனக்கு சந்தேகம் வந்துவிட்டது. பொதுவாக இந்தியா அணி கிரிக்கெட் ஆடினால், அணி தோற்கும் நிலையில் இருந்தால் கூட கதற கதற கடைசி பந்து வரை மேட்ச் பார்ப்பது என் வழக்கம். 1996 உலககோப்பை அரையிறுதியில் கூட கடைசி நிமிடம் வரை பார்த்துக்கொண்டிருந்தேன். நேற்றும் இதே நிலைதான். இலங்கை 143 ரன்களை கடந்த பிறகும் கடைசி வரை ஆட்டத்தை பார்த்துக்கொண்டிருந்தேன். ஆனால் காலையில் பேப்பரில் வேறு மாதிரி செய்தியை படித்தவுடன் அதிர்ச்சி அடைந்து விட்டேன். பின்னர் பார்த்தால் அது மகளிர் கிரிக்கெட்டாம். அதுவும் நேற்று இந்திய ஆண்கள் அணி இலங்கையை எடுக்கவிடாமல் போராடிய அதே 144 ரன்கள். இலங்கை 79 ரன்களில் ஆட்டம் இழக்க, இந்திய மகளிர் அணி அரையிறுதியில். அடுத்து அரையிறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய மகளிர் அணியை எதிர்கொள்கிறார்கள். இதில் ஜெயிப்பதற்கு வாய்ப்பு கம்மி என்றாலும், சோம்பேறி ஆண் சிங்கங்கள் செய்யத்தவறியதை, பெண் சிங்கங்கள் செய்து முடிப்பார்கள் என்று நம்புவோமாக... 


இந்த வாரம் எதிர்பாராத விதமாக சன் தொலைக்காட்சியில் டாப் 10 மூவீஸ் நிகழ்ச்சி பார்க்க வேண்டிய அவலம் நேர்ந்தது. ஒரு காலத்தில் ஆர்வமாக நான் பார்த்து வந்த நிகழ்ச்சி. பேசாமல் இந்த நிகழ்ச்சிக்கு சன் பிக்சர்சின் டாப் 10 மூவீஸ் என்று பெயர் மாற்றி விடலாம். பெரும்பாலான படங்கள் சன் குழுமத்தின் படங்கள். மற்ற படங்கள் சன் குழுமத்தின் விசுவாசமிக்க நிறுவனங்களின் படங்கள். அதிர்ச்சியான செய்தி என்ன வென்றால் நான்காம் இடத்தில் 'தம்பிக்கு இந்த ஊரு' என்ற ஒரு அற்புத காவியம் இருக்கிறது. ஒத்துக்கொள்கிறீர்களோ இல்லையோ தம்பிக்கு இந்த ஊரு படம் அசல் படத்தை விட சிறந்த படமா என்று தெரியவில்லை. (நன்றாக கவனியுங்கள் , அசல் சிறந்த படம் என்று சொல்லவில்லை..) சன் பிக்சர்ஸ் அசல் படத்தை வாங்க முயற்சி செய்து, சிவாஜி ப்ரோடக்சனால் நிராகரிக்கப்பட்டதாம். ஒருவேளை அசல் சன் கைக்கு போயிருந்தால் சுறா ரிலீஸ் வரை அசல் முதலிடத்தில் இருந்திருக்கும். என்ன கொடுமை பிரபு இது? தன் பாதங்களை நக்கி சுத்தம் செய்யும் நிறுவனங்களின் படங்களை திட்டமிட்டு வெற்றி பெற்றதை போல் மாயை ஏற்படுத்துவதில் சன்னுக்கு நிகர் சன்னேதான். சன் இணைய தளத்தில் இந்த டாப் 10 நிகழ்ச்சியை பற்றி என்ன கூறியிருக்கிறார்கள் என்றால், படங்கள் வசூல் ரீதியாக வரிசைப்படுத்தப்பட்டுள்ளன, இது படம் பார்க்க செல்பவர்களுக்கு உதவியாக இருக்கும் என்று. எனக்கு ஒரு சந்தேகம், நாடோடிகள் என்ற படம் கொஞ்ச நாள் கூட டாப் 10 இல் இல்லை. வாரணம் ஆயிரம் என்ற படம் பத்துபடங்களில் இடம்பெறவே இல்லை. இதன் காரணம் என்ன? சன் டிவி தனக்கு இருக்கும் நல்ல பெயரை சுய லாபத்துக்காக துஷ்பிரயோகம் செய்து கொண்டிருக்கிறார்கள். எல்லாவற்றிற்கும் ஒரு முடிவுண்டு. அது என்றைக்கு என்றுதான் தெரியவில்லை.


கடைசியாக கொஞ்சம் உருப்படியான மேட்டர் பற்றி பார்க்கலாம். பள்ளிகளுக்கு அதிக பட்ச கட்டண நிர்ணயம் செய்துள்ளது நம் அரசு. மீறும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. எனக்கு ஒரு சந்தேகம். இதே போல சட்டங்கள் இதற்கு முன் இருந்ததில்லையா? நம் நாட்டில் சட்ட திட்டங்களுக்கு பஞ்சமே இல்லை. ஆனால் அதனை நிறைவேற்றுவதில்தான் பிரச்சனையே அடங்கி இருக்கிறது. இதுவரை வெளிப்படையாக கேட்டு வந்த பள்ளிகள் இனி மறைமுகமாக கேட்பார்கள். பொறியியல் கல்லூரிகளில் அதிக தொகை கேட்டால் பெற்றோர்கள் தாராளமாக புகார் செய்யலாம் என்று சொன்னதை கேட்டு எத்தனை பெற்றோர்கள் புகார் செய்தார்கள்? இல்லை எத்தனை கல்லூரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது? கல்லூரிகளின் தரம் எப்படி உள்ளது என்று அறிய ஒவ்வொரு ஆண்டும் ஆய்வுக்குழு இன்ஸ்பெக்சன் வரும். மிக கறாரான ஆசாமிகள்தான் வருவார்கள். அவர்கள் கல்லூரிகளில் உள்ள வசதிகளில் குறை கண்டுபிடிப்பதே குறிக்கோளாக கொண்டிருப்பார்கள். காரணம் கல்லூரிகளின் தரம் உயர வேண்டும் என்ற நோக்கம் அல்ல. எத்தனை குறை கண்டுபிடிக்கிறார்களோ அவ்வளவு பணம் நிவாகத்திடம் இருந்து கறந்து விடலாம். இது போன்ற நிலைமை இந்த பள்ளி கட்டண விசயத்திலும் ஏற்பட்டுவிடக்கூடாது. இந்த சட்டம் வரவேற்புக்குரியது. அதே நேரத்தில் இதனை நடைமுறைப்படுத்தும் விதத்தில்தான் உண்மையான வெற்றியே அடங்கி இருக்கிறது. பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். 


பிடிச்சிருந்தா ஒட்டு போடுங்க...
உங்க கருத்துக்களை இங்கே பதிவு பண்ணுங்க...


2 comments:

Yoganathan.N said...

வாழ்த்துகள் நண்பரே (தாமதத்திற்கு மன்னிக்கவும்)... நல்ல யோசிக்கவைக்கும் பதிவுகளைத் தொடர்ந்து எழுதி வருக்கிறீர்கள். எனது ஆதரவு எப்போதும் உண்டு. :)

//இதற்க்கு உறுதுணையாய் இருந்த விஜய், அஜித், தோனி, சச்சின், நித்தியானந்தா, கலைஞர் (பின்னே இவர்கள் இல்லை என்றால் எதைப்பற்றி எழுதுவது?) //

இந்த கிண்டன் தானே வேணாம்கிறது... :P

பி.கு பதிவுகளில் இதற்கு மேல் அஜித் பெயருக்கு பிறகு விஜய் பெயர் எழுத வேண்டுகிறேன். சின்ன விசயமா இருந்தாலும் நமக்கு இது முக்கியம். ஹிஹி

Bala said...

//எனது ஆதரவு எப்போதும் உண்டு. :)

மகிழ்ச்சியாக உள்ளது.
நான் முதலில் இட்டது விஜய பற்றிய பதிவுதான். அதனால் தான் முதலில் பெயரை போட்டேன்.

Related Posts Plugin for WordPress, Blogger...