எனக்கு ஒரு குறுந்தகவல் வந்தது.
அடுத்த ஆண்டு நோபல் பரிசு வழங்குவதற்கான பரிந்துரைகள் பெறப்பட்டு வருகின்றன. சச்சின் டெண்டுல்கர் இந்தியா சார்பில் பரிந்துரைக்கப்படுகிறார், ஒரு இணையதளத்தில் அவருக்கான வாக்கெடுப்பு நடக்கிறது. இப்போது வாக்கெடுப்பில் முன்னணியில் இருப்பவர் ரிக்கி பாண்டிங். சச்சின் மிகவும் பின்தங்கி உள்ளார். எனவே இந்த தகவலை அனைவருக்கும் பரப்புங்கள். உடனடியாக வாக்களியுங்கள். நீங்கள் உண்மையிலேயே ஒரு இந்திய குடிமகனாக இருந்தால் சச்சினுக்கு வாக்களியுங்கள்.
இதுதான் எனக்கு வந்த தகவல். கடைசி வரியை படித்தவுடன் எனக்கு கோபம் வந்துவிட்டது. நான் சச்சினுக்கு வாக்களித்தால்தான் இந்திய குடிமகனா? பிறகு ஒருவழியாக சமாதானம் ஆனேன். சரி இந்தியா சார்பில் சச்சின்தான் பரிந்துரைக்கப்படுகிறார். ஆகவே அவர் வென்றால் இந்தியா வெல்லும். எனவே ஒரு இந்திய குடிமகன் என்ற வகையில் சச்சினுக்குதான் வாக்களிக்க வேண்டும்.
பிறகு வெகு தாமதமாகத்தான் என் உருப்படாத அறிவு விழித்துக்கொண்டது. அடங்கொய்யால.... விளையாட்டுக்கும் நோபல் பரிசுக்கும் சம்பந்தமே கிடையாதே? விளையாட்டுக்கென்று நோபல் பரிசு கொடுப்பதில்லேயே? என்று யோசித்தேன். பின் ஒருவேளை அமைதிக்கான நோபல் பரிசு கொடுக்கிறார்களோ என்று சந்தேகப்பட்டேன். அடுத்ததாக நோபல் பரிசு கொடுப்பதற்கு தனி அமைப்பு இருக்கிறது. அவர்கள் ஏன் இணையதளத்தில் வாக்கெடுப்பு நடத்தவேண்டும் என்று யோசித்தேன். அப்படி நடத்தினால் ஒவ்வொரு ஆண்டும் இந்திய சீன பிரதிநிதிகள்தான் நோபல் பரிசு வெல்வார்கள். அதிலும் கழக கண்மணிகளுக்கு அமோக வாய்ப்பிருக்கிறது. அவர்கள்தான் சொல்லி அடிப்பதில் கில்லி ஆயிற்றே... இப்போதெல்லாம் எனக்கு இந்த விருதுகளில் நம்பிக்கை குறைந்து கொண்டே வருகிறது. எப்போது தளபதிக்கு முனைவர் பட்டம் கொடுத்தார்களோ அப்போதிருந்து அதில் நம்பிக்கை போய்விட்டது. எப்போது இரட்டை அர்த்த காமெடியன் விவேக்குக்கு பத்மஸ்ரீ விருது கொடுத்தார்களோ அதிலும் நம்பிக்கை போய் விட்டது. இன்னும் இவர்கள் விட்டு வைத்திருப்பது பாரத ரத்னா ஒன்றுதான். அது கூடிய விரைவில் ஒருவருக்கு கிடைக்க வாய்ப்பிருக்கிறது. ஒபாமாவுக்கு (அமைதிக்காக??!!) வழங்கப்பட்டதில் இருந்து நோபல் பரிசிலும் நம்பிக்கை போய் விட்டது. இதை வென்று சச்சின் என்ன சாதிக்க போகிறார்?
சரி நான் சொல்ல வந்தது அதுவல்ல. நம் இந்தியர்கள் குறிப்பாக தமிழர்கள் உணர்ச்சிவசப்பட்டவர்கள். அவர்களின் அடிப்படை உணர்ச்சிகளை லேசாக உரசிவிட்டால் பொங்கி விடுவார்கள். ஆகவேதான் சில இவர்களை உசுப்பிவிட்டு அவ்வப்போது குளிர் காய்ந்து கொள்கிறார்கள். இதற்கு சான்றாக, சச்சின் பிறந்தநாள் கேக்கில் இந்திய கொடி, சானியா மிர்சா திருமணம், குஷ்பு-கற்பு,ஜெயராம், நித்யா, அஜித்குமார், ரஜினிகாந்த் ஆகியோர் மீது எழும் சர்ச்சைகளையும் குற்றசாட்டுகளையும் சொல்லலாம். இது நாடு முழுவதும் நடக்கிறது. இதே நிலைதான் கர்நாடகாவினருக்கும். அங்கே காவிரியை காக்காவிட்டால் அவன் கன்னடத்துக்கு துரோகி. இந்த உணர்ச்சியை சிலர் பயன் படுத்திக்கொள்கிறார்கள். இப்படித்தான் கொஞ்ச காலம் முன்னால் தாஜ்மகாலுக்கு ஓட்டு போடுங்கள், மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு ஓட்டு போடுங்கள், அப்போதுதான் உலக அதிசய கமிட்டி(அட பேர் நல்ல இருக்கே!) தேர்ந்தெடுப்பார்கள். நீங்கள் இந்தியனா? தமிழனா? என்றெல்லாம் உணர்ச்சிவசமாக பேசினார்கள். சரி உலக அதிசயத்தை தேர்ந்தெடுப்பதற்கு இவர்கள் யார்? என்று யாராவது யோசித்தார்களா? யோசித்து விட்டால் நாம் தமிழன் இல்லையே? இந்தியன் இல்லையே? ஏதோ ஒரு நிறுவனம் தன்னை விளம்பரப்படுத்திக்கொள்ள, தன் இணையம் அதிக ஹிட்டுகள் வாங்க செய்யும் கேவலமான செயல் என்று எத்தனை பேருக்கு தெரியும்? இதில் கொடுமை என்னவென்றால் ஓட்டுபோட்ட அனைவரும் படித்தவர்கள்.
அதே மாதிரிதான் ஏதோ ஒரு நாதாரி பொழுதுபோகாமல் கிளப்பி விட்ட வதந்தியை நம்பி, சச்சினுக்கு ஓட்டு போடுங்கள் என்று எல்லோருக்கு குறுந்தகவல் அனுப்பி விடுகிறோம். இது ஒரு சின்ன உதாரணம்தான். முன்பெல்லாம் மக்களின் மூட நம்பிக்கையை பயன்படுத்தி, ஒவ்வொருவருக்கும் தபால் அட்டை வரும். அதில் இதை 50 பேருக்கு அனுப்பா விட்டால் வீட்டுக்குள் பிசாசு குடிபுகும் என்று பீதியை கிளப்பி விடுவார்கள். காலம் மாறிவிட்டது. இது கணிப்பொறிகளின் காலம். அதனால்தான் இதே பீதியை மின்னஞ்சல், குறுந்தகவல் மூலமாக கிளப்பி விடுகிறார்கள். இப்போது குறுந்தகவலுக்கு கட்டணம் என்று வந்ததும் இவ்வகையான வதந்திகளும் அதிகரித்து விட்டன. எனக்கு சமீப காலமாக வந்த சில குறுந்தகவல்கள்...
1. ஓம் விநாயகா (இந்த இடத்தில் காளி, பராசக்தி, சிவன், ஜீசஸ், அல்லா என சீசனுக்கு ஏற்ற மாதிரி மாறும்) ..இதை பத்துபேருக்கு அனுப்புங்கள். நாளை நல்ல செய்தி வரும். இல்லா விட்டால் பத்து ஆண்டுகளுக்கு குடும்பம் சீரழியும்.
2. சச்சினுக்கு ஓட்டு போடுங்கள். நீங்கள் உண்மையான இந்தியனாக இருந்தால்....
3. இது அதிர்ஷ்ட தேவதையின் படம் (மின்னஞ்சல்) இதை அனுப்பியவுடன் ஜப்பானை சேர்ந்த ஒரு நாதாரிக்கு ஒரு கோடி லாட்டரி விழுந்தது, அனுப்பாத ஒருவருக்கு பக்கவாதம் வந்தது உடனே 20 பேருக்கு அனுப்புங்கள்.
4. www.ajaalkujaal.com இந்த தகவலை பத்துபேருக்கு அனுப்பி, 50 ரூபாய் டாக்டைம் இலவசமாக பெறுங்கள். இது உண்மையிலேயே வேலை செய்கிறது. (நான் போஸ்ட் பெய்ட் இணைப்பு வைத்துள்ளேன் எனக்கு எப்படி வேலை செய்யும்?).
இவற்றுக்கெல்லாம் அசராதவர்களுக்கேன்றே தனியாக ஒரு ஐடியா கைவசம் இருக்கிறது.
பத்துமாத குழந்தைக்கு உடனே இதய சிகிச்சை செய்யவேண்டும். நீங்கள் இந்த தகவலை அனுப்பினால் பத்து பைசா கிடைக்கும். உங்களால் முடிந்த அளவுக்கு அனுப்பி உங்கள் மனிதத்தன்மையை காட்டுங்கள். உண்மையிலேயே உங்களுக்கு இதயம் இருந்தால் அனுப்புங்கள். சந்தேகமாக இருந்தால் இந்த எண்ணுக்கு தொடர்பு கொள்ளுங்கள்.(0000000).
நம்மில் பலபேர் அந்த எண்ணை சோதிப்பதில்லை. என் நண்பன் ஒருவன் அந்த எண்ணுக்கு தொடர்பு கொண்டு வகையாக வாங்கி கட்டிக்கொண்டான். அது யாருடைய எண் என்றே தெரியவில்லை. இதே போல ரத்தம் தேவை போன்ற தகவல்களும் வரும். நம் மக்கள் ரத்த தானம் செய்ய முன் வரமாட்டார்கள். எனவே அவர்கள் நோக்கம் அந்த தகவல் பரவ வேண்டும் அவ்வளவுதான். என்னை மாதிரி ஆர்வகோளாறுகள் அந்த எண்களுக்கு தொடர்புகொண்டால் எண் உபயோகத்தில் இருக்காது. இதில் பாதிக்க படுவது நாம் இளைய தலைமுறைதான். பரீட்சை நேரத்தில் இந்த மாதிரி தகவல் வந்தால் உடனே அனுப்பி விடுவார்கள். பெயில் ஆகிவிடுவோமோ என்ற பயம்தான் காரணம்.
இப்படி செய்வதால் யாருக்கு லாபம் என்று தெரியவில்லை. ஆனால் நிஜமாகவே பரப்பவேண்டிய செய்திகள் நம்பகத்தன்மையை இழந்துவிடுகின்றன. நண்பர்களே! ஒரே ஒரு வேண்டுகோள் கடவுள் ஒன்றும் மெசேஜ் கவுன்ட்டர் அல்ல. நாம் எத்தனை தகவல் அனுப்புகிறோம் என்று எண்ணிப்பார்த்து அருள் பாலிக்க. அதே போல இலவச டாக்டைம் கொடுக்கும் அளவிற்கு தாராள பிரபுகள் அல்ல நாம் செல்போன் நிறுவனங்கள். அவர்களுக்கு மார்க்கெட்டிங் செய்ய பல வழிகள் உள்ளன. எனவே இதுபோல் தகவல்கள் வந்தால் அனுப்பியவருக்கு தொடர்பு கொண்டு உறுதி படுத்திக்கொள்ளுங்கள். சேவை சம்பந்தமான தகவல்கள் பற்றி எனக்கு தெரியவில்லை. மெசேஜ் பார்வட் செய்தால் பத்துபைசா கிடைக்கும் என்று சொல்வது நம்பும்படி இல்லை. யாராவது உறுதி படுத்துங்களேன். எது எதுக்கோ பகுத்தறிவை பயன்படுத்தும் நாம், இந்த சின்ன விஷயத்திலும் பயன்படுத்துவதில் தவறொன்றுமில்லையே?
பிடிச்சிருந்தா ஓட்டு போடுங்க...
உங்க கருத்துக்களையும், அனுபவங்களையும் பகிர்ந்து கொள்ளுங்க...
3 comments:
Its really great ya
நெத்தியடி இடுகை. இருந்தாலும் பலருக்கு உரைக்க மாட்டேங்குது...:( எனக்கும் அடிக்கடி இது போன்ற விசயங்கள் மெயிலில் வரும். உடனே அழித்துவிடுவேன்...
Where is the link for vote?
Post a Comment