விவேகானந்தரின் நறுக்

கடவுள் நாம் விரும்பியதை கொடுப்பவர் அல்ல, நமக்குத் தேவையானதை கொடுப்பவர்...

March 6, 2010

சாமியார்கள் பெருகியது கடவுளின் குற்றமா?


கடவுளின் பெயரால் காம லீலைகள் நடத்துபவர்கள் பெருகியது யார் குற்றம்? கடவுளின்  குற்றமா? இப்படி ஒரு வசனம் பராசக்தி படத்தில் வரும்.

 ஒவ்வொரு முறையும் எதாவது ஒரு சாமியார் பிரச்சனை கிளம்பினால் நம்ம அறிவு ஜீவிகள் கையில் எடுப்பது,    கடவுள் இல்லை என்ற வாதத்தை தான். மக்கள் மூடர்கள், நான்தான் அறிவாளி, என் பேச்சை கேளுங்கள் என்று கிளம்பி விடுகிறார்கள். இதுவும் ஒரு வகையில் பெரும் மடத்தனம் தான். என்னை பொறுத்த வரை குற்றங்களுள் பெரும் குற்றம்(பாவங்களுள் பெரும் பாவம் என்றுதான் எழுத நினைத்தேன்) ஒருவன் தவறு செய்யும் போது அவன் செய்ததை குத்தி  காட்டுவது (கவனிக்கவும் சுட்டி காட்டுவது அல்ல), இந்த ஒரு நிகழ்வையே காரணம் காட்டி அவனது வாழ்வாதாரமான அடிப்படை  நம்பிக்கைகளை தகர்க்க முயற்சி செய்வது, அல்லது அவனது இழி நிலையை பயன்படுத்தி தன் பக்கம் இழுப்பது. இதை யார் செய்தாலும்  அது குற்றம் தான். அது ஆத்திகனோ நாத்திகனோ, எந்த மதத்தை சார்ந்தவனோ, அல்லது மதம் சாராமல் தன்னை பகுத்தறிவுவாதி என்று சொல்லிக் கொள்பவனோ இதற்கு விதி விலக்கல்ல.

மதம் என்பது பாதை தானே ஒழிய ஒரு சங்கமோ, அமைப்போ, கட்சியோ அல்ல. அதை பின்பற்றுபவன் மனிதன்தானே ஒழிய அவன் அந்த மதத்தின் உறுப்பினர் அல்ல. வழிபாடு, சடங்கு போன்றவை எல்லாம் ஒரு ஆத்மா திருப்திக்காகவே செய்யப்படுகிறது. இவற்றை செய்யவில்லை என்றால் கடவுள் ஒன்றும் கோபித்துக்கொள்ள போவதில்லை. உங்கள் நண்பர் திருமணத்திற்கு செல்கிறீர்கள். பரிசுப்பொருள் வாங்கி செல்கிறீர்கள். நீங்கள் பரிசுப்பொருள் வாங்கி செல்லா விட்டாலும் அவர் ஒன்றும் கோபித்து கொள்ள போவதில்லை. பின் ஏன் வாங்கி செல்கிறீர்கள்? ஒரு ஆத்மா திருப்தி. இது ஒரு மொக்கையான உதாரணம் தான். இப்படி நம் வாழ்க்கையில் பல நிகழ்வுகள். எல்லாவற்றிற்கும் அர்த்தம் தேடி சென்றால் கடைசியில் மிஞ்சுவது மன அழுத்தம் தான்.  மனசாட்சியுடன் அல்லது தனியாக இருக்கும் போது நம்முடன் நாமே பேசிக்கொண்டிருப்போம் நமக்குள் ஒருவர் இருப்பதாக நினைத்துக்கொண்டு. இது நமக்கு ஒரு வடிகால். இதில் கொண்டு போய் பகுத்தறிவை புகுத்தினால் மனசாட்சியுடன் பேசுவது கூட மூட நம்பிக்கையாகதான் தோன்றும். சில பேர் பிச்சைக்கரர்களுக்கு உதவுவது என்பது அவர்களை சோம்பேறி ஆக்கும் செயல் என்பார்கள். ஆனால் உதவி செய்வது என்பது நல்ல மனதின் வெளிப்பாடு என்றும் சிலர் சொல்வார்கள் . இதில் எதை எடுத்துக்கொள்வது? என்னைக்கேட்டால் இரண்டாவதுதான் சரி. 

சரி நான் சொல்ல வந்தது அதுவல்ல. ஒரு பிரச்சனை என்று வந்தால் அதன் பின்னணியை ஆராயாமல் வாய்க்கு வந்தபடி திட்டுவது, பின் சில நாட்கள் கழித்து மீண்டும் அதே தவறை செய்வது. இது மக்கள் செய்யும் தவறு. இதற்கு அடிப்படை காரணம் சரியான புரிதல் இல்லாமை. அதனை சரி செய்தால் போதும். புலன்களை அடக்க வேண்டும் என்று யாரும் சொன்னது கிடையாது. ஆன்மிகம் என்றால் பட்டை பூசி கொள்வது, காவி அணிந்து கொள்வது, கடவுளுக்கு பூஜை செய்வது என்று அர்த்தம் கிடையாது. புலன்களை கடக்க வேண்டும். அதாவது புலன்களுக்கு அடிமையாகி விடக்கூடாது. அவற்றை அவற்றின் போக்கிலேயே விட்டு விட வேண்டும். தும்மல் வந்தால் மனதில் ஒரு புத்துணர்ச்சி கிளம்பும். இதை  பலரும் அனுபவித்திருக்க கூடும்.  ஆனால் அதற்காக நாள் முழுவதும் தும்மல் வரவைத்து அதை அனுபத்து கொண்டிருந்தால் என்ன ஆகும்? நம் இயல்பான செயல்பாடுகள் பாதிக்கப்படும். தும்மல் என்பது எப்படி இயல்பானதோ அதே மாதிரிதான் பாலுணர்வும். அது இயல்பானது. அது ஏற்படும்போது அடக்குவது ஆபத்தானது. ஆனால் எப்பொழுதும் அதிலேயே உழன்று கிடப்பது அதை விட  ஆபத்தானது. இதைத்தான் பெரும்பாலான மதங்கள் சொல்கின்றன. 

அறிவியல் நமக்கு கற்றுக்கொடுத்திருக்கும் ஒரு பாடம் எதையுமே Define செய்தால் தான் அதை நம்ப முடியும். ஆனால் Define செய்ய முடியாத சில விஷயங்களும் நம்மிடையே உள்ளன. (இதை படித்த உடனே பலருக்கு கோபம் வரும். அப்படி எதுவும் கிடையாது என்று). அறிவியல் அறிஞர்கள் கூட அப்படி பட்ட விஷயங்களுக்கு Let us assume that, என்று கூறுவார்கள். X-ray என்று பெயர் வைக்கப்பட்டது எப்படியோ அதே மாதிரிதான். Define செய்ய முடியாத ஒன்றுக்கு சொல்லப்படும் பெயர்கள் தான் வேறு. சரி கடவுள் இருக்கிறாரா இல்லையா என்ற பிரச்சனை வேண்டாம். அதற்க்கு ஒரு பதிவு பத்தாது. 

ஒன்று மட்டும் உறுதி. நம்மை கடவுளிடம் கொண்டு செல்ல யாராலும் முடியாது. அவர் ஒன்றும் சிகரம் அல்ல. அடைவதற்கு. உணர வேண்டும். அதற்க்கு இடைத்தரகர்கள் தேவை இல்லை. விவேகானந்தர், கடவுளை உனக்குள்ளே தேடு என்றார். தேநீரை சுவைத்து பருகு. தேநீர் கோப்பையை கொண்டாடாதே என்கிறது ஜென் தத்துவம். யார் நல்ல கருத்துக்கள்  சொன்னாலும் கேட்கலாம் தவறில்லை. ஆனால் சொன்னவரை கடவுளாக கொண்டாடுவதுதான் தவறு.  இதை எப்போது நாம் உணருகிறோமோ அப்போது இந்த மாதிரி சாமியார் பிரச்சனைகள் வராது. எந்த சாமியார் பின்னாலும் மக்கள் ஓட மாட்டார்கள்.  

போராட தெரியாதவன் தான் கடவுள் பின்னால் செல்வான் என்று நண்பர் ஒருவர் தன் பதிவில் சொல்லி இருக்கிறார். உண்மை, முற்றிலும் உண்மை. ஆனால் எல்லோருக்கும் அந்த குணம் வந்து விடாதே? எந்த ஒரு செயலும் நம்பிக்கை என்ற ஒன்று இல்லாவிட்டால் நடக்காது. அது யார் மீது என்பது தான் வேறு படும். போராட தெரியாதவன் கடவுள் பின்னால் சென்றால் தவறில்லை. ஆனால் போராடாமல் கடவுள் பின்னால் செல்வது தான் தவறு. 

பிடிச்சிருந்தா ஓட்டு போடுங்க..
பிடிச்சாலும் பிடிக்கலைனாலும் கருத்து தெரிவிங்க..

3 comments:

Yoganathan.N said...

//ஒன்று மட்டும் உறுதி. நம்மை கடவுளிடம் கொண்டு செல்ல யாராலும் முடியாது. அவர் ஒன்றும் சிகரம் அல்ல. அடைவதற்கு. உணர வேண்டும். அதற்க்கு இடைத்தரகர்கள் தேவை இல்லை. //

அதே அதே... மிகத் தெள்ளத் தெளிவாக சொல்லியுள்ளீர்கள். :)


//போராட தெரியாதவன் கடவுள் பின்னால் சென்றால் தவறில்லை. ஆனால் போராடாமல் கடவுள் பின்னால் செல்வது தான் தவறு. //

அருமையான கருத்து நண்பரே. இதை என் facebook-இன் முகப்பில் எழுதிக் கொள்ளப் போகிறேன். :)

மிக அழகாக, தெளிவாக எழுதியுள்ளீர்கள். நல்ல நடை உங்களுக்கு... வாழ்த்துகள் :)

பாலா said...

மிக்க நன்றி யோகநாதன்!!!!!!!!

சிவகுமார் said...

மிக நன்று

Related Posts Plugin for WordPress, Blogger...