நான் சிறு வயது முதலே ஆங்கில படங்களின் ரசிகனாக இருந்துள்ளேன். எங்கள் ஊரில் உதயம் என்றொரு தியேட்டர் இருந்தது. அங்கு பெரும்பாலும் ஆங்கில படங்கள் மட்டுமே திரை இடப்படும். எனக்கு விவரம் (சினிமா பார்த்து கதை ஓரளவுக்கு புரிந்து கொள்ளும் அளவிற்கு) தெரிந்த நாள் முதல் பார்த்த படங்கள் ஏராளம். இதன் பின் டிவி சேனல்கள் வந்த பின் பெரும்பாலும் பொழுது ஸ்டார் மூவிஸ், HBO, போன்ற சேனல்களில் தான் கழியும். முதலில் சண்டைக்காட்சிகளுக்காக, பின் கிளு கிளு காட்சிகளுக்காக , பின் கதைக்காக, பின் மேக்கிங்குக்காக என என் ரசிப்புத்தன்மை பல மாற்றங்கள் அடைந்துள்ளன. நான் ஒன்றும் பெரிய உலக திரைப்பட விமர்சக வித்தகன் கிடையாது. ஒரு சராசரி ரசிகனின் பார்வையிலேயே படங்களை பார்ப்பேன். இப்போதெல்லாம் அண்ணன் ஹாலிவுட் பாலா மாதிரி ஆட்கள் உதவியுடன் படங்கள் பார்க்க தொடங்கி உள்ளேன். பல படங்கள் பார்த்தாலும் நினைவில் நிற்கும் படங்கள் கொஞ்சம் தான். அவற்றை பற்றி என் பார்வையில் எழுதலாம் என்று கருதியே எழுதுகிறேன்.
எனக்கு சிறு வயது முதல் கௌபாய் படங்கள் என்றால் பிடிக்கும். அவர்கள் உடுத்தும் ஸ்டைல், துப்பாக்கியால் சுடும் லாவகம் எல்லாம் பிடிக்கும். ஆனால் அப்போதெல்லாம் அந்த படங்களின் கதை புரியாமல் பார்த்ததுண்டு. பின் பெரியவன் ஆனதும் வெகு நாட்கள் இடைவெளியில் நான் பார்த்த படம் தான் The Good, the Bad, and the Ugly. முதல் முறையாக கதை புரிந்து பார்த்த படம். படம் வெளி வந்த ஆண்டு 1965. கதை சுருக்கம் இதுதான்.
படத்தில் மூன்று ஹீரோக்கள். ஒவ்வொருவரின் குணாதிசயங்களை வைத்துதான் படத்தின் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
ப்லோண்டி நல்ல(?) திருடன் - the Good,
எஞ்சேல் ஐஸ் கெட்ட திருடன் - the Bad,
டுகோ கேவலமான திருடன் - the Ugly.
இந்த மூவரில் ப்லோண்டியும், டுகோவும் சந்தர்ப்பவாத நண்பர்கள். நேரம் கிடைக்கும் போது ஒருவரை ஒருவர் மாட்டி விடும் எண்ணத்தில் இருப்பவர்கள். இருவரும் ஒரு ராணுவ வீரனின் மரண வாக்கு மூலமாக ஒரு புதையல் இருக்கும் இடத்தை அறிந்து அதை எடுக்க செல்கின்றனர். டுகோ எல்லா பணத்தையும் தானே அடைய நினைக்கிறான். ஆனால் அவனுக்கு புதையலை அடைய பாதி வழிதான் தெரியும். இன்னொரு பாதி ப்லோண்டிக்குதான் தெரியும். எனவே புதையலை அடைந்தவுடன் அவனை தீர்த்து விடலாம் என்று நினைக்கிறான் டுகோ. இதற்க்கிடைய எஞ்சேல் ஐஸ் என்னும் முன்னால் ராணுவ வீரன் அந்த புதையல் இருக்கும் இடத்தை எப்படியோ தெரிந்து கொண்டு அவனும் புதையலை நோக்கி பயணிக்கிறான். இந்த மூவரும் சரியாக புதையல் இருக்கும் இடத்தில் சந்திக்கிறார்கள். புதையலை யார் அடைந்தார்கள் என்பதுதான் கிளைமாக்ஸ்.
படத்தில் ப்லோண்டியாக நடித்திருப்பவர் நம்ம கிளின்ட் ஈஸ்ட்வூட். இவர் வாயில் சுருட்டு வைத்திருக்கும் தோரணையும், கண்களை சுருக்கி விடும் தெனாவெட்டான லுக்கும், சரியான மேன்லியான ஹீரோ. எதையுமே நிதானமாக, புத்திசாலிதனமாக செய்யும் ஹீரோ.
எஞ்சேல் ஐஸ்ஆக நடித்திருப்பவர் லீ வான் கிளீப். ஆளை பார்த்தாலே கள்ளத்தனம் நிறைந்தத ஒரு ஓநாயின் குணம் தெரியும். அப்படியே ப்லோண்டியின் குணம். ஆனால் செயலில் ஒரு கொடூரம் இருக்கும். நேர்வழி ஒத்து வராது. குறுக்கே யார் வந்தாலும் போட்டு தள்ளி விட்டு போய் கொண்டே இருப்பான். முதல் காட்சியில் இவரின் குணாதிசயத்தை கட்டும் விதமாக வரும் காட்சியே சான்று (மூன்று பேருக்கும் அவரவர் குணாதிசயத்தை காட்டும் காட்சி உண்டு) .
படத்தில் பட்டய கிளப்பியிருக்கும் ஒரு பாத்திரம் என்றால் அது டுகோ தான். டுகோவாக நடித்திருப்பவர் எலி வாலாச். எதையுமே முந்திரி கொட்டை மாதிரி அவசரப்பட்டு செய்து விட்டு மாட்டிக்கொண்டு முழிக்கும் ஒரு திருடன். எவ்வளவு தான் கேவலப்பட்டாலும் அதை சிறிதும் முகத்தில் காட்டிகொள்ளாமல் கேவலப்படுத்தியவர்களை அவர்கள் முதுகுக்கு பின்னாடி கெட்ட வார்த்தையால் திட்டுபவன். இவர் ஒவ்வொரு முறையும் ப்லோண்டியிடம் எதாவது சில்மிஷம் செய்து கடைசியில் அது இவருக்கே வினையாக முடிவது சுவாரசியம்.
படத்தில் சில குறிப்பிடத்தக்க விஷயங்கள்
1. படத்தின் இசை. எனியோ மோர்ரிகோனே இசையமைத்துள்ளார். இப்படத்தில் வரும் ஒரு விசில் சப்தம் உலக பிரசித்தம். இப்போதும் பல கௌபாய் படங்களில் அந்த சப்தம் பயன் படுகிறது. படத்தில் வரும் அமானுஷ்யமான அமைதி படதிர்ற்கு வலு சேர்க்கிறது.
2. படத்தில் ஒரு தூக்கு கயிறு ஒரு கதா பாத்திரமாக வரும். ப்லோன்டிக்கும் டுகோவிற்கும் நடுவே உள்ள நட்பின் சின்னமாக இந்த கயிறு வரும்.
3. படத்தில் பெண்களே இல்லை(அய்யய்யோ). ஒரே ஒரு பெண் வருவார். அவரும் ஒரு நிமிடம் மட்டுமே.
4. படத்தின் இயக்குனர் செர்ஜியோ லெயோன் இத்தாலியை சார்ந்தவர். ஸ்டைலிஷ்ஆன கௌ பாய் படங்கள் எடுத்தவர். இந்த படம் அவர் எடுத்த படங்களிலேயே சிறந்த படம் என்று போற்ற பட்டது.
5. படத்தின் நீளம் இரண்டே முக்கால் மணி நேரம் (uncut version மூன்று மணி நேரம்). இவ்வளவு நீளமான ஒரு படத்தை பொறுமையாக பார்க்க முடியுமா என்ற சந்தேகத்தை உடைத்த படம் என்று பல விமர்சகர்களால் பாராட்ட பட்ட படம்.
6. படத்தின் கிளைமாக்ஸ் கல்லறை காட்சியில் நடக்கும் நிகழ்ச்சிகள் அனைத்தும் சுவாரசியமானவை. அதுவும் கடைசியில் டுகோவை தூக்கு கயிற்றில் மாட்டிவிட்டு ப்லோண்டி செல்லும் காட்சி எத்தனை தடவை பார்த்தாலும் சலிக்காது.
இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். நேரம் கிடைத்தால் பாருங்கள்.
பிடிச்சிருந்த ஓட்டு போடுங்க.
உங்க கருத்த இங்க பதிவு பண்ணுங்க.
1 comments:
ஈஸ்ட் வூட்-இன் பல படங்களையும் மேனரிசங்களையும் copy & paste பண்ணித்தான் நமது சூப்பர் ஸ்டார்(!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!) ஸ்டைலிஷ் நடிகர் ஆனார்.
Post a Comment