விவேகானந்தரின் நறுக்

கடவுள் நாம் விரும்பியதை கொடுப்பவர் அல்ல, நமக்குத் தேவையானதை கொடுப்பவர்...

March 16, 2010

பிளஸ்-2 தேர்வும், காக்கா வலிப்பும்....


ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதத்தின் சிறப்பு என்ன என்று கேட்டால் எல்லோரும் டக்கென சொல்வது தேர்வுகள். அதிலும் குறிப்பாக பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பொது தேர்வுகள். ஒவ்வொரு ஆண்டும், மன்னிக்கவும் அதற்க்கு முந்தய ஆண்டில் இருந்தே மாணவர்களை கசக்கி, பிழிந்து அவர்களிடம் எவ்வளவு சாறு எடுக்க முடியுமோ அவ்வளவு எடுத்து பொதுதேர்வுகளுக்கு அவர்களை தயார் படுத்துகிறார்கள்.
ஒவ்வொரு நாளிதழிலும், டிசம்பர் மாதத்தில் இருந்தே மாதிரி வினா விடை, மாணவர்களுக்கு டிப்ஸ் முதலியவற்றை வழங்குகிறார்கள். பெற்றோர்கள் பாவம் தங்களால் இயன்றவரை தன் பிள்ளைகளை தனி வகுப்புகளுக்கு அனுப்பி, வீட்டில் கேபிள் இணைப்பை துண்டித்து, இரவெல்லாம் விழித்து அவர்களுக்கு ஊக்கம் அளிக்கிறார்கள். ஒரு பன்னிரண்டாம் படிக்கும் மாணவ/மாணவியின் நாள் அதிகாலை 3 மணியில் இருந்து தொடங்கி, நள்ளிரவு 12 மணிக்கு முடிகிறது. இடையில் அவர்கள் பார்ப்பது எல்லாம், புத்தகம், நோட்டு, வினாத்தாள், ........ கிட்டத்தட்ட ஒன்றரை வருடமாக மாணவர்களும் தன் எதற்கு படிக்கிறோம் என்று தெரியாமலே ஒரு இயந்திரம் போல எல்லாவற்றையும் உள்ளே அனுப்பி, அரைத்து, விடைத்தாளில் கொட்டிவிட்டு வந்து விடுகின்றனர்.

தேர்வு நடக்கும் காலங்களில் மாணவர்களின் மன நிலை இருக்கிறதே, சொல்ல முடியாதே வேதனையான விஷயம். கிட்டத்தட்ட ஒரு மன நோயாளி போலவே ஆகி விடுகின்றனர். தேர்வு எழுதுவதற்குள், இந்த கேள்வி வருமா? இதே கேள்வி எல்லா வினாத்தாளிலும் இருக்கே? இது எத்தனை மார்க் கேள்வி? வினாத்தாள் லீக் ஆகி விட்டது என்று சொன்னார்களே? தேர்வு தள்ளி போகுமா? என்று ஆயிரம் கேள்விகள்.தேர்வு தொடங்கும் முன் இருக்கும் அந்த பத்து நிமிட படபடப்பு. அந்த இளம் இதயங்கள் எப்படித்தான் தாங்குகிறார்களோ? சத்தியமாக அப்போதுதான் இதயம் துடிப்பது நம் காதுக்கு கேட்கும். அத்தனை சத்தமாக நம் இதயம் துடிக்கும். இந்த ஆண்டு கணித தேர்வுக்கான வினா மிகவும் கடினமாக இருந்ததாம். இதனை பார்த்த ஒரு மாணவருக்கு, அங்கேயே வலிப்பு வந்து விட்டதாம். என்ன கொடுமை?

சரி எதற்க்காக இந்த போராட்டம். பன்னிரண்டாம் வகுப்பு தேர்வுகள் அத்தனை முக்கியமானவயா? அப்படித்தான் நம் சமூகம் ஒரு மாயையை உருவாக்கி வைத்துள்ளது. பிளஸ் 2 என்பது வாழ்க்கையில் ஒரு முக்கியமான இடம். இங்கு சறுக்கியவர்களுக்கு வாழ்கையே வீணாகி விடும், என்பது போன்ற தரமான அறிவுரைகளால், ஏற்கனவே பலஹீனமாக இருக்கும் நம் இளைய சமுதாயத்தினருக்கு பீதியை கிளப்பி விடுகிறோம். இதனால் பிளஸ் 2 வில் பெயில் கூட ஆக வேண்டாம், மதிப்பெண் சிறிது குறைந்தாலே தற்கொலை முயற்சிகள் நடப்பதற்கு இதுதான் காரணம். (இப்போதாவது பரவாயில்லை. நான் படிக்கும் காலங்களில் நுழைவுத்தேர்வு வேறு உண்டு). பன்னிரண்டாம் வகுப்பில் சரியாக படிக்காதவர்கள் வாழ்கையில் நல்ல நிலைக்கே வந்ததில்லையா?? நம்மில் பலர் அப்படித்தான். எங்கே நெஞ்சை தொட்டு சொல்லுங்கள்? உங்கள் கண் முன் எத்தனை பேர் வாழ்கை இருண்டு போனது??

முதலில் நாம் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். தேர்வு என்பது நமது கற்றல் திறனை சோதிக்கும் ஒரு கருவியே அன்றி அது நம் தலைவிதியை நிர்ணயிக்கும் கடவுள் அல்ல. மேலும் எல்லோரும் போகிறார்கள், நிறைய பணம் கிடைக்கிறது என்பதற்காக, நமக்கு வராத, திறன் இல்லாத ஒரு துறைக்குள், முட்டி மோதி இடம் பிடிப்பது என்பது முட்டாள் தனமானது. எத்தனை மாணவர்கள் பிளஸ் 2 வில் நல்ல மதிப்பெண் பெற்று பொறியியல் மற்றும் மருத்துவத்தில் சோபிக்காமல் போகிறார்கள் என்பது சம்பந்தப்பட்டவர்களுக்கே நன்றாக தெரியும் .எனக்கு தெரிந்த ஒரு மாணவன் கேட்ட வேதனைக்குரிய கேள்வி.."நானும் என் சகோதரனும் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கிறோம். அவன் உயிரியல், நான் வணிகவியல். என் வீட்டுக்கு வரும் உறவினர் அனைவரும் அவனுக்கு ஆயிரம் அறிவுரைகள் வழங்குகிறார்கள். எல்லா கல்லூரிகளிலும் வெற்றிக்கு வழிகள் என்று அவன் சார்த்த துறை மாணவர்களுக்கு கருத்தரங்குகள் நடத்துகிறார்கள். எனக்கு பயமாக உள்ளது. ஒரு வேளை நான் உயிரியல் படிப்பை தேர்வு செய்திருக்கலாமோ? என் துறைக்கு அவ்வளவு முக்கியத்துவம் இல்லையோ என்று ". இப்படித்தான் ஒவ்வொரு மாணவனையும் நாம் குழப்பி கொண்டிருக்கிறோம்.

எந்த ஒரு துறையிலுமே முழு ஈடுபாடுடன், படித்தால் நமக்கு நல்ல எதிர்காலம் அமையும். மதிப்பெண் என்பது நாம் தேர்வு எழுதியதர்க்குதானே தவிர நமக்கு அல்ல. ஒரு மாணவன் கணிதத்தில் குறைவான மதிப்பெண் எடுத்தால் அவனைப்பார்த்து "கணக்கே சரியா வரல இதெல்லாம் எங்க உருப்பட போகுது?" என்ற கேணத்தனமான கேள்வி கேட்பதை உடனே நிறுத்தவேண்டும். தொழிற்கல்விதான் உலகில் சிறந்தது அது கிடைக்காவிடில் வாழ்க்கையே இருண்டு போய் விடும் என்ற மூட நம்பிக்கையை மாணவர் மனதில் விதைக்காமல் இருக்க வேண்டும். தேர்வு என்பது கிளைமாக்ஸ் அல்ல, அது படிப்பின் ஒரு பகுதி என்று மாணவர்கள் உணரவேண்டும் .


காலையில் வீட்டில் ஒரு சின்ன டென்ஷன். என்னால் வேலையில் சரியாக கவனம் செலுத்த முடியவில்லை என்று நாம் சொல்வதுண்டு. நன்கு பக்குவப்பட்ட நமக்கே அப்படி என்றால், இன்னும் மலராத மொட்டுகள் அவரகளுக்கு எப்படி இருக்க்கும்? இதை நாம் எப்போது உணர்வோம்????


இது பற்றிய உங்கள் கருத்துக்களை பதிவு பண்ணுங்க..
பிடிச்சிருந்தா ஓட்டு போடுங்க...


5 comments:

Yoganathan.N said...
This comment has been removed by the author.
Yoganathan.N said...

// இந்த ஆண்டு கணித தேர்வுக்கான வினா மிகவும் கடினமாக இருந்ததாம். இதனை பார்த்த ஒரு மாணவருக்கு, அங்கேயே வலிப்பு வந்து விட்டதாம். என்ன கொடுமை?//

மிகவும் வேதனைக்குரிய விஷயம் :(

//தேர்வு என்பது நமது கற்றல் திறனை சோதிக்கும் ஒரு கருவியே அன்றி அது நம் தலைவிதியை நிர்ணயிக்கும் கடவுள் அல்ல. //

பஞ்ச் நல்லா இருக்கே... நாளைக்கே இதனை ஒருத்தர் தன் படத்தில் சொன்னாலும் சொல்வார்... ஹிஹி

சிந்திக்க வைக்கக் கூடிய பதிவு. மாணவர்கள் கண்டிப்பாக இந்த இடுகையை படிக்க வேண்டும். :)

பி.கு http://www.open2.net/open2static/source/file/root/0/57/51/236753/024girlwriting.jpg

பொண்ணு பார்க்க நன்னா இருக்கு. அட்ரஸ் கிடைக்குமா... :P

பாலா said...

அதான் அட்ரஸ் உங்க காமேன்ட்டிலேயே இருக்கே. .....:)))))))

malar said...

நல்ல படிக்கும் மாணவிகளே பேப்பர் கச்டம் என்று சொல்றங்க CBSE .இனி மார்க் எப்படி வருதோ அதை நினைத்தால் இன்னும் கவலையாக இருக்கு.

ஹுஸைனம்மா said...

நல்ல கருத்துக்கள்.

கடைசி நேரப் பரபரப்புகளைத் தவிர்க்க, மாணவர்களை அன்றாடப் பாடங்களை அன்றாடம் திருப்பிப் பார்த்துப் புரிந்துகொள்ளும் பழக்கம் வேண்டும்.

மதிப்பெண்களும் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் சக்தியாக இருக்கும் நிலை மாறும்வரை இந்நிலை தொடரவே செய்யும்; நாமும் விட்டு விலக முடியாது.

Related Posts Plugin for WordPress, Blogger...