ஒண்ணறை லட்சம் ஹிட்ஸ்களை அடைய காரணமாக இருந்த அனைத்து வாசகர் மற்றும் பதிவர் நண்பர்களுக்கும், திரையுலக, அரசியல், விளையாட்டு பிரபலங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
முகு: கொஞ்சம் நீளமான பதிவு....
கையாளுதல் (Handling) என்பது தலைமைப்பண்புகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. இதில் நிறைய பிரிவுகள் உண்டு. நேரத்தை, பணத்தை, சூழ்நிலைகளை, மனிதர்களை என்று நிறைய விஷயங்களை திறம்பட கையாளுபவரே, சிறந்த தலைவராகவோ அல்லது மேலாளராகவோ இருப்பார்கள். கையாளுதல் என்பதற்கு தொழில் முறை விளக்கமே நான் கொடுத்திருக்கிறேன். ஒரு அலுவலகமோ, அல்லது தொழிற்கூடத்திலோ நடக்கும் இத்தகைய நிகழ்வு கண்டிப்பாக அந்த நிறுவனத்தின் நன்மைக்காகவே செய்யப்படுவது. நான் இப்போது அதைப்பற்றி கூறப்போவதில்லை. இதே கையாளுதல் என்ற செயல் சுயநலத்துக்காகவோ அல்லது ஏதாவது காரியம் சாதித்துக்கொள்ளவோ பயன்படும்போது இதற்கு வேறு பெயர் கிடைக்கிறது. அது ஆங்கிலத்தில் Manipulation என்று அழைக்கப்படுகிறது. எந்த ஒரு பலவீனத்தையும் தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்வதே இந்தவகை கையாளுதல் கலையின் நோக்கம். இதில் ஒரே ஒரு பிரிவான மனிதர்களை பயன்படுத்திக்கொள்ளும் கலை பற்றி மட்டும் பார்ப்போம். இந்த கட்டுரையின் நோக்கம், அடுத்தவர்களை தமக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்பவர்களை ஊக்குவிப்பதல்ல. மாறாக, நம்மை பிறர் பயன்படுத்திக்கொள்ள முனையும்போது அதில் இருந்து தப்புவதற்காகவே...
இது எத்தனை வகைப்படும்?
பொதுவாக இதை உடல்ரீதியாக மற்றும் மனரீதியாக என்று இரண்டு வகைகளில் பிரிக்க முடியும். இரண்டுமே அடுத்தவரின் மீது பயன்படுத்தி காரியம் சாதித்துக்கொள்ள முடியும். இவை இரண்டுக்குள்ளுமே உட்பிரிவுகள் நிறைய உண்டு. நான் கூறப்போவது இரண்டாவது வகை பற்றித்தான் என்றாலும், முதல் பகுதி பற்றி கொஞ்சம் சுருக்கமாக கூறி விடுகிறேன்.
உடல்ரீதியான ஆளுமை:
தன்னுடைய உடல் பலத்தைக்காட்டி ஒருவரை தனக்கு சாதகமாக வேலை செய்ய வைப்பதே இந்த வகை. இதில் பல வழிமுறைகள் உள்ளன. சிறு சிறு வன்முறையில் தொடங்கி, இறுதியில் கொலை மிரட்டல் வரை செல்லமுடியும். இதனை லாவகமாக பயன்படுத்துவதிலேயே இதன் வெற்றி அடங்கி இருக்கிறது. இது சம்பந்தப்பட்ட இருவரின் மனோ தைரியத்தை பொறுத்திருக்கிறது. பாதிக்கப்பட்டவர் பயப்படும் வரைதான் உடல்ரீதியான ஆளுமை வேலை செய்யும். அவர்கள் திடீரென்று எங்க வீட்டுப்பிள்ளை எம்ஜிஆர் மாதிரி வீரமாக மாறிவிட்டார்கள் என்றால் அவ்வளவுதான். அதே போல, இந்த ஆளுமை செலுத்த முயல்பவர் எந்த அளவுக்கு இறங்குவார்கள் என்பதை பொறுத்திருக்கிறது. சிலர் ஒரே ஒரு அடி மட்டும் அடித்து விட்டு அடுத்தவர்கள் அடிபணிந்து விடுவார்கள் என்று எதிர்பார்ப்பார்கள். அது நடக்காத பட்சத்தில், பின்வாங்கி விடுவார்கள். ஒரு சிலர் மரண அடி கூட அடித்து விடுவதுண்டு. உடல்ரீதியான ஆளுமைக்கு நாம் வேறெங்கும் செல்ல வேண்டியதில்லை. சில மனைவிமார்கள், கணவனைக்கண்டாலே பயந்து நடுங்குவதையும், அடம்பிடிக்கும் சில குழந்தைகள் தந்தை பெயரைக்கேட்டதும் சமர்த்து ஆகி விடுவதும் அடிக்கு பயந்துதான். இவ்வகை ஆளுமை செலுத்துபவர்கள் பெரும்பாலும் மிக நெருக்கமானவர்களாகவே இருக்கிறார்கள். இவர்களிடம் இருந்து தப்புவது அவ்வளவு எளிதல்ல.
மனரீதியான ஆளுமை:
முதலாமவதை விட இது மிக பயங்கரமான ஆயுதம். குறிப்பாக உடல்ரீதியான ஆளுமைக்கு உள்ளானவர்களுக்கு தாங்கள் பயன்படுத்தப்படுகிறோம் என்பது தெரியும். ஆனால் இந்தவகையில் சிக்கி இருப்பவர்கள், தங்களை அடுத்தவர்கள் பயன்படுத்திக்கொள்கிறார்கள் என்பதைக்கூட அறியாமல் இருப்பதுதான் பரிதாபம்..
நேரடி மிரட்டல்: இது உடல்ரீதியான ஆளுமையை செலுத்துவதன் முந்தைய நிலை. ஒருவரை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ மிரட்டி சாதிக்க முடியும். "இப்படி செய்யாவிட்டால், உன்னை பற்றி மேலிடத்தில் போட்டுக்கொடுத்து விடுவேன்", "நான் சொல்வதை நீ கேட்காவிட்டால் நீயும் நானும் சேர்ந்து எடுத்த போட்டோக்களை இணையத்தில் வெளியிட்டு விடுவேன்", என்று பலவகை மிரட்டல்களை நாம் கேள்விபட்டிருக்கிறோம். அதே போல மறைமுகமாக, "நீங்கள் இதை செய்யாவிட்டால் உங்க பொண்ணு வாழ்க்கை நாசமாகி விடும்.", என்று மாமனார் மாமியாரை மிரட்டும் கணவன்களையும் பார்த்திருக்கிறோம். இதை சாதிப்பதில் சம்பந்தப்பட்டவரின் மனோதைரியத்தை எடைபோட்டுக்கொள்வது அவசியம். அப்பாவி மனைவியை மிரட்டி அடிமைப்படுத்தி வைத்திருக்கும் பல கணவன்கள் வெளி உலகத்தில் அம்மாஞ்சிகளாகவே இருக்கிறார்கள். அவர்கள் வீரம் எல்லாம் அப்பாவியான மனைவி மீது மட்டும்தான்.
பச்சாதாப ஆளுமை : இது தன்னை பலவீனமானவனாக காட்டிக்கொள்ளும் முறை. அதாவது தன்மீது மற்றவர்களுக்கு இறக்கம் வரும் அளவுக்கு பாவமாக நடந்து கொள்வது. அல்லது தான் அன்பின் ஆழத்தை காட்டி பரிவு தேடுவது. உதாரணமாக ஒரு பெண்ணின் நட்பை பெறவேண்டுமானால், காதலில் தோல்வி அடைந்தவன் போலவும், உலகத்தையே வெறுப்பவன் போலவும் காட்டிக்கொள்வது. சில மனைவிகள், கணவனிடம் காரியம் சாதித்துக்கொள்ள, “எல்லாம் என் தலையெழுத்து. நான் ஒரு பாவப்பட்ட ஜென்மம்.”, என்று கண்ணை கசக்குவதை பார்த்திருப்போம். சிலர் தற்கொலை செய்துகொள்ளப்போவதாக கூட மிரட்டுவார்கள். "எனக்காக இதைக்கூட நீ செய்ய மாட்டாயா?". இந்த வார்த்தையை எத்தனை பேர் ஆயுதமாக பயம் படுத்துகிறார்கள் என்று யோசித்து பாருங்கள். இதற்கு கொஞ்சம் நடிப்பு திறமை இருந்தால் போதும்.
குழப்பிவிடும் வார்த்தை ஜாலம்: சிலர் சொல்ல வந்த விஷயத்தை நேரடியாக சொல்லாமல், சுற்றி வளைத்து கதை பேசி சொல்வார்கள். இதன் மூலம் இவர்களின் நேரடி நோக்கம் நமக்கு தெரியாமல் போய்விடும். சில நேரங்களில் அவர்களின் கோரிக்கை தவிர்க்க முடியாமல் ஆகி விடும். உதாரணமாக, பக்கத்து வீட்டு பெண்கள், “ஏம்மா உன்ன மாதிரி இந்த காம்பவுண்ட்ல இருக்கிற யாருக்குமே நல்ல மனசு கிடையாது. எல்லாம் அடுத்தவங்க வளர்ச்சிய பாத்து பொறாமைப்படுற கும்பல்கள். உனக்கே தெரியும் நான் மனசுல எது பட்டாலும் உடனே சொல்லிடுவேன். உன்னை பார்த்தா என் சகோதரி மாதிரி தெரியுது. உன் கிட்ட கேட்ட தப்பில்லைன்னு தொனிச்சு. ஒரு 500ரூவா கைமாத்தா கிடைக்குமா?”, என்று கேட்டு சங்கடத்தில் நெளிய வைத்து விடுவார்கள். "சார் ஒண்ணு கேட்டா மாட்டேன்னு சொல்லக்கூடாது. இந்த ஆபீஸ்ல உங்களை போல யார் கிட்டையும் ப்ரீயா பேச முடியல. எல்லாரும் உங்கள மாதிரி இருப்பாங்களா? ஒரு அவசர வேலையா வெளிய போக வேண்டி இருக்கு. உங்க வண்டி சாவிய கொஞ்சம் கொடுங்களேன். வேணும்னா நானே பெட்ரோல் போட்டிடுறேன்." இந்த மாதிரி வார்த்தைகளை டெய்லி நாம் கேட்டிருப்போம்.
குற்றம் சுமத்தி காரியம் சாதிப்பது: பயன்படுத்த கொஞ்சம் கடினமாக இருந்தாலும் மிக பலமான ஆயுதம். எதிராளியை நிலைகுலைய வைப்பதோடு, நீண்ட காலம் அடிமையாக வைத்திருப்பது இதுதான். அவர்களின் மீது வரிசையாக குற்றம் சுமத்தி, தாழ்வு மனப்பான்மையை உருவாக்குவது. "எல்லாத்துக்கும் நீதான் காரணம். உன்னாலேதான் இது நாசமா போச்சு, என் பேச்சை எப்போ கேக்கப்போறியோ, அப்போதான் எல்லாம் உருப்படும்." இந்த வார்த்தைகள் உபயோகிக்காத கணவன்மார்களை விரல்விட்டு எண்ணி விடலாம். "எல்லாமே உன்னாலேதான் ஸ்பாய்ல் ஆகிடுச்சு. உன்னோட ஜாலியா டைம் ஸ்பெண்ட் பண்ணலாம்னு வந்தா, எப்பவுமே இப்படி பேசி என் மூடை கெடுத்திடுற உனக்காக என் வேலையெல்லாம் விட்டு வந்தேன் பாரு என்னை சொல்லணும்." என்று தன் காதலனிடம், காரியம் சாதித்துக் கொள்ளாத காதலிகள் இல்லை.
தனிமைப்படுத்தி காரியம் சாதிப்பது: காரணமே இல்லாமல் ஒருவரை தவிர்த்து விடுவது, இப்படி தொடர்ந்து செய்து அவர்களை தவிக்க விடுவது. ஒரு கட்டத்தில் அவர்கள் ஓடோடி வந்து உங்களிடம் நிற்பார்கள். அப்போது சாதிக்க முடியாத காரியங்களே இல்லை. வீட்டிற்கு வரும் கணவன் தன்னிடம் எதுவுமே பேசாமல், சாப்பிடாமல் படுக்கையில் போய் படுத்துக்கொண்டால் மனைவி கண்டிப்பா பதறுவாள் என்று கணவனுக்கு தெரியும். கால் செய்தும் எடுக்காமல், மெசேஜுக்கு ரெப்ளை செய்யாவிட்டால் காதலன் எப்படி பதறுவான் என்று காதலிக்கும் தெரியும். அவர்களை திரும்ப பேச வைப்பதற்கு என்ன வேண்டுமானாலும் செய்வதற்கு தயாராக இருப்பார்கள் என்றும் தெரியும். அந்த நேரத்தில் எளிதாக காரியம் சாதித்துக்கொள்ளலாம்.
மயக்கி சாதிப்பது: ஒருவருக்கு எதையாவது கொடுத்து மயக்கி காரியம் சாதிக்கும் முறை. காலம்காலமாக இது நடந்து வருகிறது. பணமாகவோ, பொருளாகவோ, இல்லை பாசமாகவோ கூட இருக்கலாம். லஞ்சம் கொடுப்பது, பதிலுக்கு ஏதாவது உதவி செய்து கொடுப்பது, அதிகாரிகளுக்கு ‘ட்ரீட்’ கொடுப்பது ஆகியவை இதற்கு கீழே வரும். காலம்காலமாக மாமியார்கள் தங்களுடைய மருமகள்களை வெறுக்க காரணமாக இருக்கும் தலையணை மந்திரம் இந்த வகைதான். இவை மட்டுமல்லாமல், அளவுக்கதிகமாக புகழ்வது, எதற்கெடுத்தாலும் பாராட்டுவது, மிக நெருக்கமாக இருப்பது போன்றவை கூட இதில் வரலாம். விஸ்வாமித்திரர் உள்பட இதற்கு அடிமையாகாத மனிதனே கிடையாது.
உசுப்பி விடும் வார்த்தைகள்: இதுதான் மிக மிக எளிய வழி. இதற்கு மசியாதவர்களே உலகில் கிடையாது. "சரியான ஆம்பளையா இருந்தா......", என்று தொடங்கி அதன் பின் என்ன சொன்னாலும் சரி, தான் ஆம்பளை என்று நிரூபிப்பதற்காக எதையும் செய்ய தயாராக இருப்பார்கள். நீய்ல்லாம் ஒரு இந்தியானா? நீயெல்லாம் ஒரு தமிழனா? நீயெல்லாம் ஒரு மாணவனா? நீயெல்லாம் குடும்ப பொம்பளயா? இது போன்ற உசுப்பி விடும் வார்த்தைகள் ஒருவரை எளிதில் ஆட்கொண்டு விடும். இதில் எதிலுமே மசியவில்லையா? இருக்கவே இருக்கிறது, "ஒரு அப்பனுக்கு போறந்திருந்தா.........", இதுதான் கடைசி ஆயுதம். "நீங்கள் உங்கள் தாயை உண்மையிலேயே மதிப்பவராக இருந்தால் இந்த எஸ்எம்எஸ்ஐ பார்வர்ட் செய்யவும்!", என்றவுடம் முட்டாள்தனமாக பார்வர்ட் செய்பவர்கள் எத்தனைபேர்? "சச்சினுக்கு நோபல் பரிசு கொடுக்கிறார்கள், தாஜ்மகால் உலக அதிசயமாக வேண்டும் ஒரு இந்தியனாக இருந்தால் கண்டிப்பாக ஓட்டு போடுங்கள்." என்று சொன்னவுடன், பாய்ந்து கொண்டு சச்சினுக்கும், தாஜ்மகாலுக்கும் ஓட்டு போட்டவர்கள் எத்தனை பேர்?
உங்களை யாரும் பயன்படுத்திக்கொள்ள கூடாதா?
நம்மை யாரும் பயன்படுத்திக்கொள்ள கூடாது என்ற எண்ணம் எல்லோருக்குமே கண்டிப்பாக இருக்கும். ஒருவர் நம்மை பயன்படுத்திக்கொள்ள நாமே அனுமதிப்பதின் காரணங்களாக சொல்லப்படுபவை சில உண்டு.
முதலாவதாக தாழ்வுமனப்பான்மை. நம்மை பற்றி நாமே ஏற்படுத்தி கொண்டிருக்கும் தவறான கருத்து அல்லது மதிப்பீடு. இதனால் எப்போதுமே நாம் செய்யும் எதன் மீதும் ஒரு வித பய உணர்வு இருக்கும். இரண்டாவதாக, சார்ந்திருக்கும் தன்மை. "இவரை விட்டால் நமக்கு வேறு நாதியில்லை." என்ற உணர்வே, என்னதான் கொடுமை செய்தாலும் பல பெண்களை கணவனை விட்டு பிரியாமல் இருக்க செய்கிறது. இதே போல எதற்கெடுத்தாலும் அடுத்தவரை சார்ந்திருப்பது, அல்லது அவர்களின் ஆணைப்படியே எல்லாவற்றியும் செய்வது. மூன்றாவதாக, ரொம்ப நல்லவனாக இருப்பது. அதாவது அடுத்தவர் மனம் புண்பட்டு விடக்கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருக்கிறேன் பேர்வழி என்று அவர்களிடம் அடிமை போல இருப்பது. நான்காவது அடுத்தவர்களை இம்ப்ரஸ் செய்ய முயல்வது. "உனக்காக வானத்தையும் வில்லாக வளைப்பேன், நீ சொன்னால் என் உயிரையும் கொடுப்பேன்!!", என்று உட்டாலக்கடி அடிப்பதோடு நிறுத்திக்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் அதையே நம் மீது ஆயுதமாக பிரயோகித்து விடுவார்கள். சிலருக்கு இயல்பிலேயே தயக்க உணர்வு அதிகமாக இருக்கும். யாராவது நம்மிடம் ஒரு வேலை சொன்னால், முடியாது என்று சொல்வதற்கு அதிகம் தயங்குவார்கள். ஆகவே அதனை மறுக்க முடியாமல் ஏற்றுக்கொண்டுவிட்டு, பிறகு கஷ்டப்படுவார்கள். சிலர் மீதான கண்மூடித்தனமான அன்பும் இதற்கு காரணம். “அவன் உன்னை நல்லா ஏமாத்துறான்”, என்று சொன்னாலும், "நான் நம்ப மாட்டேன் அப்படி எல்லாம் இருக்காது." என்று சொல்வார்கள். கஷ்டப்பட்டு அதை நிரூபித்தாலும், "பரவாயில்லை, அவருக்காகத்தானே செய்கிறேன்?", என்று சமாளிப்பார்கள். கடைசி வரை தாங்கள் ஏமாற்றப்படுவதை ஒத்துக்கொள்ளவே மாட்டார்கள்.
சிலர் பழக்கத்துக்காக, நட்புக்காக, பாசத்துக்காக, உறவுக்காக என்று பிறர் தம்மை பயன்படுத்திக்கொள்வதை தெரிந்தே அனுமதிக்கிறார்கள். ஆனால் அதுவே தொடர்கதையாகும்போதும், கண்மூடித்தனமாக அதை ஆதரிப்பது மிகவும் தவறு. சம்பந்தப்பட்டவர் மீது உண்மையிலேயே அன்பிருந்தால், அவர்கள் கேட்காமேலேயே அவர்களுக்காக நாம் எதையும் செய்வோம் என்று உணர்த்தவேண்டும். இது சுயநலத்தின் வெளிப்பாடு என்றும் உணர்த்தவேண்டும். அடுத்தவருக்கு உதவி செய்வதில் தவறே இல்லை, ஆனால் அவர்கள் அதையே அட்வான்டேஜ் ஆக எடுத்துக்கொள்ளும்போது, கழுவுகிற மீனில் நழுவுகிற மீனாக இருப்பதில் தவறே இல்லை. இந்த நழுவுகிற டெக்னிக்கை இன்னொரு பதிவில் விளக்குகிறேன். எக்காரணத்தை கொண்டும் அடுத்தவர் பலவீனத்தை நமக்கு சாதகமாகவோ, நம் பலவீனத்தை அடுத்தவர் தங்களுக்கு சாதகமாகவோ பயன்படுத்த அனுமதிக்க்வோ கூடாது.
உங்கள் கருத்துக்கள் இங்கே பதிவு பண்ணுங்க....
19 comments:
எல்லா மேட்டரிலும் கணவன்,மனைவியை உதாரணம் சொல்கிறீர்களே...அனுபவமோ...!
நல்லாருந்திச்சு!உண்மையிலேயே அப்புடியே புட்டுப் புட்டு வச்சுட்டீங்க!
யம்மாடியோவ்....
கையாளா.... இம்புட்டு விசயம் இருக்கோ
நல்ல கைதேர்ந்த ஆய்வுக் கட்டுரை......
நல்ல ஆய்வு.
@NKS.ஹாஜா மைதீன்
அட நீங்க வேற, எனக்கு இன்னும் திருமணமே ஆகவில்லை நண்பரே
@Yoga.S.FR
மிக்க நன்றி நண்பரே
@மனசாட்சி
ஆமாம் நண்பரே நாம்தான் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டியுள்ளது. நன்றி நண்பரே
@வீடு K.S.சுரேஸ்குமார்
இதற்கு பெரிய பெரிய புத்தகங்களே உள்ளன. நான் சும்மா கொஞ்சமேனும் பகிர்ந்துள்ளேன்
@thirumathi bs sridhar
வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க
ஆளுமை பற்றி அருமையான விளக்கம்.
பாலா ..மிகவும் ரசித்து படித்த பதிவு ...வாழ்த்துகள்
பாத்து சூதானமா நடந்து கொள்ளுவது எப்படி..வாத்தியாரே அசத்தல்!
பொதுவாக சிறந்த கருத்துக்களை பதிவு செயும் பொது சில பிழைகளையும் சேர்த்து செய்வார்கள் அனால் உங்களின் பதிவு சிறந்த வழிகாட்டலை அதும்
இல் வாழ்க்கையில் இருந்தே கட்டியுள்ளமை உண்மையில் பாராட்டுகளுக்கு உரியது பாராட்டுகள் தொடர்க
@சென்னை பித்தன்
நன்றி சார்
@நா.மணிவண்ணன்
மிக்க நன்றி நண்பரே
@விக்கியுலகம்
மாப்ள வாழ்க்கைல நிதானம் சூதானம் ரெண்டும் முக்கியம்.
@மாலதி
உங்கள் மனமார்ந்த பாராட்டுக்களுக்கு மிக்க நன்றிங்க
அற்புதமான கட்டுரை.. மிகவும் உபயோகமான ஒன்றும் கூட.. பலர் வாழ்வில் இதைத் தெரிந்துகொண்டால் சிறப்பாக செயல்படலாம்.
பகிர்வுக்கு மிக்க நன்றி..
http://anubhudhi.blogspot.in/
Post a Comment