பொதுவாக எனக்கு த்ரில்லர் படங்கள் மிகவும் பிடிக்கும். அந்த வகையில் இரண்டு வித்தியாசமான படங்களைப்பற்றி உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். முதலில் ஒரு ஹிச்காக் படம். மற்றொன்று தமிழில் டப் செய்யப்பட்ட ஒரு தெலுங்கு படம்.
ஆல்பிரட் ஹிச்காக். இந்த மனிதரை பற்றி முன்பே நான் கேள்விபட்டிருந்தாலும், சமீபத்திலேயே இவரது படங்களை நான் பார்க்க தொடங்கி இருக்கிறேன். கொஞ்சம் கொஞ்சமாக என்னையும் அறியாமல் இவரது ரசிகனாக மாறிக்கொண்டிருக்கிறேன். இவரது படங்கள் அனைத்தும், சஸ்பென்ஸ் படங்கள் எத்தனை வகையில் எல்லாம் எடுக்கலாம் என்பதற்கு உதாரணங்கள். ஒவ்வொரு படமும் ஒரு வித அனுபவம். சஸ்பென்ஸ் படத்தில் கொலையை காட்டவேண்டுமா? அதெல்லாம் தேவை இல்லை என்று கொலையே இல்லாமல் ஒரு சஸ்பென்ஸ் படம் எடுப்பார். சஸ்பென்ஸ் படத்தில் நகைச்சுவையே இருக்கக்கூடாதா? அடுத்த படம் நெடுக நகைச்சுவை காட்சிகள் இருக்கும். சஸ்பென்ஸ் படத்தில் கண்டிப்பாக எதிர்பாராத திருப்பம் இருக்க வேண்டுமா? திருப்பமே இல்லாமல் உங்களுக்கு ஒரு சஸ்பென்ஸ் படம் என்று அடுத்த படத்தை எடுத்து காட்டுவார். அந்த வகையில் மிக எளிமையான, திருப்பங்கள் இல்லாத, வித்தியாசமான சஸ்பென்ஸ் படம்தான் தி ரியர் விண்டோ (The Rear Window - 1954).
படத்தின் கதை மிகவும் சிறியதுதான். ஜெஃப் ஒரு புகைப்படக்கலைஞர். புகைப்படம் எடுக்க சென்ற இடத்தில் விபத்தில் சிக்கிவிட, இடுப்பில் இருந்து ஒரு கால் முழுவதும் மாவுக்கட்டு. காலை மடக்க கூட முடியாது. நடமாட வேண்டுமானால் வீல் சேர்தான். தினமும் இவர் வீட்டுக்கு வரும் நர்ஸ் ஒருவர், இவர் உடலை சுத்தம் செய்துவிட்டு, சில உதவிகள் செய்துவிட்டு சென்று விடுவார். மீதி நேரம் முழுவதும் இவருக்கு என்ன செய்வது என்றே தெரியாது. மெதுவாக நடந்து சென்று தன் அறையில் இருக்கும் பின் பக்க ஜன்னல் வழியாக கவனிக்க தொடங்குகிறார். அந்த ஜன்னல் வழியாக அவர் கண்களுக்கு ஒரு அப்பார்ட்மெண்டில் உள்ள அத்தனை வீடுகளும், அங்கே நடக்கும் நிகழ்ச்சிகளும் அரைகுறையாக தெரிகின்றன. ஒவ்வொருவரின் வாழ்க்கையும் வினோதமாக தோன்றுகிறது. ஜாலியான ஒரு நடன நங்கை, குடிகார பேச்சிலர் இசைக்கலைஞர், சிற்ப கலைஞரான பெண்மணி, நடுத்தர தம்பதிகள், புதிதாக திருமணமான இளம்ஜோடிகள், நோய்வாய்ப்பட்ட மனைவியுடன் ஒரு சேல்ஸ்மேன் என்று பல சுவாரசியமான மனிதர்கள். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பட்டப்பெயர் வைத்து அவர்களை பார்த்தபடி தினமும் பொழுதை போக்குகிறார்.
தினமும் தான் பார்த்த நிகழ்ச்சிகளை அந்த நர்சிடமும், அவ்வப்போது வீட்டுக்கு வரும் காதலியிடமும் பகிர்ந்து கொள்கிறார். ஒருநாள் நோய்வாய்ப்பட்ட பெண்ணுக்கும், அவளது சேல்ஸ்மேன் கணவனுக்கும் சண்டை நடப்பதை பார்க்கிறார். பின்னர் நடு இரவில் அந்த சேல்ஸ்மேன் அடிக்கடி போவதும், வருவதுமாக இருக்க, இவருக்கு சந்தேகம் பிறக்கிறது. ஒருவேளை அவன் தன் மனைவியை கொலைசெய்திருப்பானோ? என்று நினைத்த இவர், பைனாகுலர் மூலம் கவனிக்க தொடங்குகிறார். இதை நர்சிடமும், காதலியிடமும் சொல்கிறார். அவர்கள் இவரிடம், "இது உங்கள் மன பிரமை" என்று சொல்கிறார்கள். மேலும் அவரது காதலி, "அடுத்தவர் அந்தரங்க விஷயங்களில் தலையிடுவது சட்டத்துக்கு புறம்பானது.", என்றும் கூறுகிறாள். இருந்தாலும் அடக்க முடியாத ஆர்வத்தால் ஜெஃப் தன் காவல்துறை நண்பர் ஒருவருக்கு போன் செய்து, விஷயத்தை சொல்ல, அவரும் அங்கே சென்று விசாரித்து விட்டு, "அதெல்லாம் ஒண்ணுமில்லை. அவர்கள் வீட்டை காலி செய்து போகிறார்கள், மனைவி முந்தின நாள் இரவே புறப்பட்டு போய்விட்டாள்." என்று கூறுகிறார். ஆனால் தான் சந்தேகப்படுவது உண்மை என்று முற்றிலும் நம்பும், ஜெஃப் தொடர்ந்து ஆராய தொடங்குகிறார். உண்மையில் அங்கே நடந்தது என்ன? ஜெஃப்பின் கூற்று உண்மையா? என்பதை சுவாரசியமாக சொல்லி இருக்கிறார் ஹிச்காக்.
படத்தின் பெரும்பாலான காட்சிகள், ஜன்னலில் இருந்து ஒரு மனிதர் பார்ப்பது போலவே எடுத்திருக்கிறார்கள். ஒரு ஜன்னலுக்கு பின்னால் நடக்கும் காட்சிகளை வைத்து த்ரில்லர் கொடுக்க முடியுமா? அது ஹிச்காக்குக்கு மட்டுமே சாத்தியம். குறைந்த செலவில், அப்பார்மெண்ட் செட் போட்டு எடுத்திருக்கிறார்கள். படத்தில் ஜெஃப் ஆக நடித்திருப்பவர் புகழ்பெற்ற ஜேம்ஸ் ஸ்டூவர்ட். இவரது குரலே மிக வித்தியாசமாக, கம்பீரமாக இருக்கிறது. ஒரு படத்தில் கதாநாயகன் படம் நெடுக உட்கார்ந்து கொண்டே படத்தில் ஆளுமை செலுத்துவது எவ்வளவு கடினம்? அதை செய்து காட்டி இருக்கிறார் ஸ்டூவர்ட். அதே போல பெரிய ஜேம்ஸ்பாண்ட் ரேஞ்சுக்கு எல்லாம் நடிக்கவில்லை. ஒரு சாதாரண மனிதன், ஜன்னல் வழியாக எப்படி பயந்து பயந்து பார்ப்பானோ அப்படித்தான் நடித்திருக்கிறார். இந்த படத்தின் மூலம் அவர் உச்ச நட்சத்திரமாக மாறிப்போனார். அவரது காதலியாக நடித்திருப்பவர், கிரேஸ் கெல்லி. ஹிச்காக்கின் ஆஸ்தான கதாநாயகி. மிக அழகாக இருக்கிறார். இயல்பாக நடித்து மனதை கொள்ளை கொள்கிறார். வெளியான காலத்தில் மிகப்பெரிய ஹிட் ஆன இந்தப்படம், அருமையான பொழுது போக்குப்படம். இன்னொரு படத்தை பற்றி அடுத்த பதிவில் சொல்கிறேன்
உங்க கருத்துக்களை இங்கே பதிவு பண்ணுங்க....
21 comments:
ஹிட்ச்காக் படங்களில் என்னை வெகுவாக கவர்ந்த ரியர் விண்டோவை சிறப்பாக அலசி விமர்சனம் செய்துள்ளீர்கள் பாஸ்..ஹிட்ச்காக்
எப்போதும் புது புது யுக்திகளை சஸ்பென்ஸ் படங்களில் புகுத்த முயற்சி செய்பவர்.ரோப், லைவ் போட் படங்களை உதாரணமாக கூறலாம்.
ஹிட்ச்காக் படங்களை பற்றி பலரும் வ்மர்சனம் செய்து படித்துள்ளேன்..தங்களது பாணியில் அழகாக எழுதியுள்ளீர்கள்.மிக்க நன்றி.அடுத்த பதிவுக்காக காத்திருக்கிறேன்.
முடிவு சொல்லாமல்..! அவ்வ்வ்.. எங்கே போய் படமெல்லாம் பார்ப்பது, அதுவும் இங்லீஷ் படம்.! நமக்குத்தமிழ் படங்கள் தான் கதி.
நீங்கள் கதை சொன்ன விதம் அற்புதம் பாலா. எனக்கும் ஆசை வந்து விட்டது,ஆங்கில திரைப்படங்களைப் பார்க்க.
அருமையான விமர்சனம் .. முன்பு கொஞ்சம் பார்த்தேன் ..
இன்றய பதிவில்
உங்கள் கணினியில் அழிந்த பைல்களை மீட்க சிறந்த மென்பொருள்கள்- இலவசமாக (FILE RECOVER SOFTWARES)
ஒரு நல்ல படத்தை பற்றி குறிப்பிட்டுள்ளீர்கள் பாஸ் படம் பார்க்கவேண்டும் போல் உள்ளது பார்த்திட்டால் போச்சி
நட்சத்திர வாழ்த்துக்கள்
விமர்சனம் அருமை எனக்கும் படம் பார்க்க ஆசை வந்துவிட்டது
கட்டாயமாக பார்ப்பேன். விமர்சனம் மிக நன்றாக கச்சிதமாக இருக்கிறது.
@Kumaran
மிக்க நன்றி நண்பரே
@ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மி
விமர்சனம் என்ற பேரில் படத்தின் முழுக்கதையையும் சொல்வதில் எனக்கு உடன்பாடு இல்லீங்க.. தாராளமாக டிவிடி யில் பார்க்கலாம்.
@"என் ராஜபாட்டை"- ராஜா
கருத்துக்கு நன்றி நண்பரே
@K.s.s.Rajh
நிச்சயமாக ஒரு புதுவித அனுபவம் கிடைக்கும். கண்டிப்பாக பாருங்கள். நன்றி நண்பரே
@சிட்டுக்குருவி
கண்டிப்பாக பார்க்கவேண்டிய படம்தான் நண்பரே
@ஹாலிவுட்ரசிகன்
நன்றி நண்பரே பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களை கூட பதிவாக எழுதுங்கள்
@சமுத்ரா
வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பரே
ரியர் விண்டோ இது வரை பலமுறை பார்த்து விட்டேன்.அலுக்காத படம்.நல்ல விமரிசனம்
உங்க பதிவைப் படித்ததும் பார்க்க தூண்டியது தேடிப் பிடித்து பார்த்தேன்.
இந்த மாதிரி வித்தியாசமான படங்களின் விமர்சனத்தை அவலுடன் எதிர்பார்க்கிறேன் உங்களிடமிருந்து. நன்றிகள்.
படம் பார்த்து விட்டு படிக்கிறேன் :-) நான் த்ரில்லர் ஹாரர் பட ரசிகன்
@சென்னை பித்தன்
நன்றி சார்
@EniyavaiKooral
நன்றி நண்பரே. என்னால் முடிந்த அளவுக்கு இன்னும் பல படங்களை பற்றி எழுத முயற்சிக்கிறேன்.
@கிரி
கண்டிப்பாக ரசிக்க கூடிய படம்தான்.
Post a Comment