விவேகானந்தரின் நறுக்

கடவுள் நாம் விரும்பியதை கொடுப்பவர் அல்ல, நமக்குத் தேவையானதை கொடுப்பவர்...

March 5, 2012

ஒரு ஆசிரியரின் புலம்பல்

முகு: இது ஒரு நீளமான சீரியஸ் பதிவு. ஆகவே முதலில் சுமாரான ஒரு ஜோக் சொல்கிறேன்.

ஒருவர்: என்னங்க அவர் கவச உடை எல்லாம் மாட்டிக்கிட்டு போறார்?
  சண்டைக்கு போறாரா?

இன்னொருவர்: நீங்க வேற அவர் ஸ்கூல் வாத்தியாருங்க... இப்போ
          ஸ்கூலுக்குத்தான் போறார். 


என்ன சிரிச்சாச்சா?... சிரிப்பு வரலான்னா விடுங்க, கட்டுரைக்குள் செல்வோம். 




ஒவ்வொரு மனிதனுக்கும் தன்னுடைய முதல் ஹீரோ தந்தைதான். தந்தைக்கு அப்புறம் அவர்கள் ஆதர்ச ஹீரோவாக நினைப்பவர்கள், ஆரம்பபள்ளி ஆசிரியர்கள்தான். முதன் முதலில் வெளிஉலகத்தை சுற்றிக்காட்டும் ஒரு வழிகாட்டியாகவே ஆசிரியர்கள் விளங்குகிறார்கள். பிறகு நாட்கள் செல்ல செல்ல, ஆசிரியர்களுடனான உறவு கொஞ்சம் கொஞ்சமாக விரிசல் விடத் தொடங்குகிறது. என்னதான் வாழ்வில் பெரிய நிலைக்கு போனாலும், தன் ஆசிரியர்களை மட்டும் யாரும் மறப்பதில்லை. தன் பள்ளி மற்றும் கல்லூரி வாழ்க்கையில் எல்லா ஆசிரியர்களும் தன்னை கவராவிட்டாலும், கவர்ந்த குறிப்பிட்ட ஒரு சில ஆசிரியர்களுக்கு இன்றும் தன் மனதில் கோவில் கட்டி வைத்திருப்பார்கள். நான் உள்பட. இவை அனைத்தும் போன தலைமுறை மாணவர்களின் நிலை. இப்போது இந்த நிலை கொஞ்சம் கொஞ்சமாக மாறி வருகிறது. என் மாணவ பருவத்தில் இது அழியும் நிலைக்கு வந்து, இப்போது முற்றிலும் அழிந்து விட்டதோ? என்று தோன்றுகிறது. இதற்கு என்ன காரணங்கள் இருக்க முடியும்?


ஆசிரியர்கள் செய்யும் தவறுகள்..... 
இன்றைய சூழலில் பெரும்பாலான ஆசிரியர்கள், இந்த வேலையை விரும்பி ஏற்றுக்கொள்வதில்லை. பெரும்பாலானவர்கள், வேறு ஒரு நல்ல வேலை கிடைக்கும்வரை, அல்லது நல்ல வேலை கிடைக்காததாலேயே இந்த பணிக்கு வருகிறார்கள். பெண்களோ திருமணம் நடக்கும்வரையிலான குறைந்த கால இடைவெளியை நிரப்பவே இந்த பணிக்கு வருகிறார்கள். இப்படிப்பட்டவர்களால் தங்களின் பணியை சிறப்பாக இல்லை, சுமாராக கூட செய்ய இயலாது. மாணவரை பொறுத்தவரை, "ஆசிரியர் என்பவர், எல்லாம் தெரிந்த ஒருவர்." என்று நம்புகிறார். அந்த நம்பிக்கையை காப்பாற்றும் வரைதான் அவருக்கு மரியாதை இருக்கும். அதை காப்பாற்ற வேண்டியது சம்பந்தப்பட்ட ஆசிரியரின் கடமை. முதலில் கொஞ்சம் தயக்கம் மற்றும் நடுக்கம் இருந்தாலும் அதை கொஞ்சம் கொஞ்சமாக களைவதிலேயே திறமை அடங்கி இருக்கிறது. பிற வேலைகளைக்காட்டிலும் இதில் சவால் கொஞ்சம் அதிகம். ஏனென்றால் இங்கே கையாளப்படுவது உயிரற்ற பொருட்கள் அல்ல. மனிதர்கள். அதிலும் எதிர்கால கனவோடு அமர்ந்திருக்கும் குழந்தைகள். இவ்வகை வேலைக்கு மிக அதிக பக்குவம் தேவை. இந்த பக்குவம் இல்லாதவர்கள் ஆசிரியர் பணிக்கே லாயக்கில்லாதவர்கள் என்பது என் கருத்து. 



அடுத்ததாக ஆசிரியர்களின் வக்கிர குணங்களின் வெளிப்பாடு. பாலியல் தொந்தரவு என்பது எல்லா துறைகளிலும் இருந்தாலும், இங்கே செய்யப்படுவது மிக கண்டனத்துக்குரியது. ஏனென்றால் இது சமுதாயத்தில் மிகப்பெரிய அளவில் பிரதிபலிக்கும்.  பாலியல் தொந்தரவு மட்டுமல்ல, மனரீதியான தொல்லைகள், உணர்வு ரீதியான அச்சங்கள் ஆகியவையும் மிக கண்டனத்துக்குரியதே... 

பிறர் செய்யும் தவறுகள்.... 
எதற்கெடுத்தாலும் சமுதாயத்தின் மீது குற்றம் சொல்வது வாடிக்கையாகி விட்டது. ஆனால் அந்த சமுதாயம் நாம்தான் என்பது யாருக்கும் புரிவதில்லை.  பெரும்பாலான பெற்றோர்கள் பள்ளிகளை, கல்லூரிகளை தங்களின் குழந்தைக்கு நல்ல வேலை வாங்கி கொடுக்கும் ஏஜெண்டுகளாகவே பார்க்கிறார்கள். அதே எண்ணத்தை குழந்தைகள் மனதிலும் பதிய வைக்கிறார்கள். "எனக்கு பணம் இருக்கிறது. என்னால் என்ன வேண்டுமானாலும் செய்ய முடியும்." என்ற எண்ணம், பெற்றோர்களிடம் இருந்து குழந்தைகளுக்கு தாவுகிறது. விளைவு, "ஆசிரியருக்கே தான்தான் சம்பளம் கொடுக்கிறோம்." என்று உணர்வு மாணவர்களுக்கு வருகிறது. இது ஒரு வித ஈகோவை கொடுக்க, கொஞ்ச நஞ்ச மரியாதையும் போய்விடுகிறது. 

மறுபக்கம்,  "முதல் இடம் மட்டுமே வாழ்வில் உயர்ந்த இடம்!", என்று குழந்தைகள் மூளைச்சளவை செய்யப்படுகின்றார்கள். விளைவாக, தன் பிள்ளை தோல்வியையே சந்தித்து விடக்கூடாது என்பதில் பெற்றோர்கள் மிக கவனமாக இருக்கிறார்கள். இது குழந்தைகளை மன அளவில் பாதிக்கிறது. ஒரு சிறு அவமானமோ, பின்னடைவோ அவர்களுக்கு மிகப்பெரிய தோல்வியாக தெரிகிறது. இதை தாங்கி கொள்ள முடியாத அவர்கள், இதில் இருந்து வெளியே வர தெரியாத அவர்கள், எடுப்பது விபரீத முடிவுகள். அந்த விபரீத முடிவு முன்பு தற்கொலையாக இருந்தது. இப்போது கொலையாக அடுத்த பரிமாணத்துக்கு தாவி உள்ளது.   வாழ்க்கை எனபது ஒரு ஒட்டப்பந்தயம் என்ற எண்ணத்தில் இருந்து எப்போது நாம் வெளிவருகிறோமோ அப்போதுதான், இதற்கு மாற்றம் பிறக்கும். 



ஊடகங்கள். இந்த சமுதாயத்தை சீரழிப்பதில் முக்கிய பங்கு இவர்களுக்கே இருக்கிறது. ஒரு காலத்தில் தொலைக்காட்சியில் ரத்தத்தை காட்டவே தயங்கினார்கள். ஆனால் இப்போதோ சர்வசாதாரணமாக எல்லா வன்முறைகளும் அரங்கேறுகின்றன. அதே போல மோசமான பாலியல் காட்சிகள், தொலைக்காட்சி தொடர்களில் தெளிவாக அரங்கேறுகின்றன. தொலைக்காட்சிகளில் வரும் தொகுப்பாளர்களில் இருந்து, பங்கேற்பாளர்கள் வரை, மிக கவர்ச்சியான உடைகளை அணிந்தே வருகிறார்கள். குறிப்பிட்ட சேனலில், சமையல் நிகழ்ச்சியில் கூட மிக லோகட் ஆடை அணிந்தது, டி‌ஆர்‌பியை ஏற்றுகிறார்கள். "இளைஞன் இப்படித்தான் இருக்கவேண்டும், இப்படி இல்லாதவர்கள் இளைஞர்கள் அல்ல.", என்பது மாதிரியான, புது இலக்கணங்களை கற்று கொடுக்கிறார்கள்.

என்ன பாவம் செய்தோம்?
ஒரு சில நாதாரிகள் செய்யும் கேவலமான சில செய்கைகள், ஒட்டுமொத்த ஆசிரிய இனத்தையே தவறாக பார்க்க வைக்கிறது. இந்த சமூகத்தில், ஆசிரியர்கள் செய்யும் தவறுகள் மட்டுமே மிகபெரிதாகக்கப்படுகிறது. ஆனால் இதற்கு இன்னொரு கோணமும் உண்டு. எத்தனை பேர், ஆசிரியர்கள் படும் அவஸ்தைகளை உணருகிறார்கள்? ஒரே ஒரு ஆசிரியர் பாலியல் தொந்தரவு கொடுத்தார், என்று தினசரியில் படித்து விட்டு, "இந்த வாத்தியானுங்க எல்லோரையும் செருப்பால அடிக்கணும். சும்மா உக்காந்துட்டு சம்பளம் வாங்குறானுங்க" என்று திட்டுபவர்களுக்கு, மறுபக்கம் எத்தனை ஆசிரியர்கள், மாணவர்களால் பாலியல் தொல்லைகளுக்கு ஆளாகிறார்கள் என்று தெரியுமா? பெண் ஆசிரியர்களுக்கு மட்டுமல்ல, ஆண் ஆசிரியர்களுக்கும் இது நடக்கிறது. இதை எங்கே போய் சொல்வது என்று தெரியாமலேயே மனதுக்குள் புளுங்கும் ஆசிரியர்கள் ஏராளம். வெளியே சொன்னாலும், "நீ இப்படி மினுக்கிகிட்டு வந்தா, சின்ன பையன் என்ன பண்ணுவான்?", என்றும், "ஏதோ விடலைப்பையன் வயசுக்கோளாறு அவனது எதிர்காலத்தையும் பார்க்கணும் இல்லையா?"என்றும் மழுப்பப்படுகிறதே. மாணவிகளால் தொந்தரவை அனுபவிக்கும் ஆசிரியர்கள் எப்படி வெளியே சொல்வார்கள்? சொன்னால் சமூகம் நம்புமா? ஆசிரியைகள் பாடம் நடத்தும்போது, செல்போனில் ஆபாசமாக படமெடுக்கும் மாணவர்கள் எத்தனை பேர் தெரியுமா?

என்னதான் ஆசிரியர் பணி அறப்பணி என்று கூறினாலும், அவர்கள் ஒன்றும் உணர்ச்சி இல்லாத மரக்கட்டை இல்லையே? ஊடகங்களில் சித்தரிக்கும், மனோபாலா, வெண்ணிறஆடை மூர்த்தி, ஷர்மிலி, ஷகீலா போன்ற ஆசிரியர்களை கண்டு பழகிய மாணவர்கள், அதே எண்ணத்தில் வகுப்பிற்கு வந்து தன் ஆசிரியரிடமும் அப்படி நடந்து கொள்வதை என்னவென்று சொல்வது? அவருக்கும் தன்மானம் உண்டல்லவா? அறுபது பெரும் சேர்ந்து ஒரே நேரத்தில் கொடுக்கும் அவமானத்தை தாங்கி கொண்டு இருப்பது எவ்வளவு கஷ்டம் என்பது அனுபவித்தவர்களுக்கே தெரியும். இது மட்டுமல்லாமல் சம்பந்தப்பட்ட பள்ளி மற்றும் கல்லூரிகள் கொடுக்கும் தொல்லைகள் அளவில்லாதது. கல்வி என்பது இப்போது முழுவதும் வியாபாரம் ஆகி விட்ட நிலையில், எல்லா கல்லூரிகளும் மளிகைக்கடை, சூப்பர் மார்க்கெட், ஹோட்டல் என்ற ரேஞ்சுக்கே செயல்பட்டு வருகின்றன. அதில் மாணவர்கள் என்பவர்கள் கஸ்டமர்கள். ஆசிரியர்கள் சர்வர் வேலை பார்ப்பவர்கள்.  கஸ்டமர்  மனம் கோணாமல் நடந்து கொள்வதே சர்வரின் கடமை. அதே நேரம் வியாபாரத்தையும் பெருக்கவேண்டும்.  கஸ்டமர்  தவறு செய்தாலும், அதற்கு சர்வர்தான் பொறுப்பு. இல்லை என்றால், முதலாளி கஸ்டமர் முன்னால் வைத்தே சர்வரை கேவலமாக திட்டுவார். இதுதான் இன்றைய ஆசிரியர்களின் நிலை. இதை விட கேவலமான இன்னொரு விஷயம், சில கல்லூரிகள், அழகான பெண்களை மட்டுமே ஆசிரியர் பணியில் அமர்த்துகிறது. இதன் காரணம் சொல்லி தெரியவேண்டியதில்லை. 



இது எனக்கு நடந்த ஒரு நிகழ்ச்சி. என் மாணவன் ஒருவன் படிப்பதில் சுத்தமாக ஆர்வம் இல்லாதவன். ஒரு கட்டத்தில் அவனிடம்,  "உனக்குத்தான் படிக்க இஷ்டமில்லையே? பிறகு ஏன் கல்லூரிக்கு வருகிறாய்?" என்று கேட்டு விட்டேன். மறுநாள் அந்த பையனுடைய அப்பா ஆஜர். அவர் பேச்சை தொடங்குபோதே, "நான் ஒரு பிரபல கிரிமினல் லாயர். என்னை பற்றி உனக்கு(மரியாதை?!) என்ன தெரியும்? நான் நினைத்தால் எதை வேண்டுமானாலும் செய்வேன். என் பையனுக்கு அறிவுரை கூற நீ யார்? இந்த கல்லூரியில் என் ஷேர் எவ்வளவென்று உனக்கு தெரியுமா? உங்க சேர்மேனும் நானும் எவ்வளவு குளோஸ் என்று தெரியுமா?" என்று கேட்டார். இத்தனையும் அந்த பையன் முன்னாலேயே நடந்தது. என்னால் எதுவும் செய்ய முடியவில்லை. அதன் பிறகு அந்த பையன் மட்டுமல்ல, அவனது வகுப்பை சேர்ந்த எல்லோருமே என்னை கேவலமான பிறவியாகவே பார்த்தார்கள். ஒரு குறிப்பிட்ட ஆசிரியர்கள் தவிர, எல்லா ஆசிரியர்களுமே தங்கள் மாணவர்களின் மீது தெரிந்தோ தெரியாமலோ அளவு கடந்த பாசம் வைத்திருக்கிறார்கள். அதன் வெளிப்பாடே கண்டிப்பதும், அடிப்பதும். ஆனால் அதற்கு வேறு அர்த்தம் கற்பிக்க படும்போதும், அது வேறு விளைவை ஏற்படுத்தும்போதும் அந்த ஆசிரியர் அடையும் துயரத்துக்கு அளவே இல்லை. ஒரு மாணவரின் தந்தை, "நாங்கள் தாழ்ந்த ஜாதி என்பதால் நீங்கள் பாரபட்சம் பார்க்கிறீர்கள்." என்று, தன் மகனை திருத்த முடியாத விரக்தியில் ஆசிரியர்கள் மீது பாய்ந்தார். இது இன்றுவரை என் மனதில் இருந்து நீங்கவில்லை.

புலம்பியது போதும் என்று நினைக்கிறேன். எல்லோரும் ஒரு நிமிடம். தாங்கள் கிண்டல் செய்த, கேவலப்படுத்திய, மோசமாக திட்டிய ஆசிரியர்களை, அவர்களின் மைனஸ்களை நீக்கிவிட்டு அவர்களும் மனிதர்கள்தானே? என்ற எண்ணத்தில் நினைத்து பாருங்கள். என் புலம்பலில் உள்ள நியாயங்கள் மற்றும் ஆதங்கங்கள் புரியும். 

பி.கு: இது முற்றிலும் நல்ல ஆசிரியர்களை மட்டுமே மையப்படுத்தி எழுதப்பட்டது. 

உங்க கருத்துக்களை இங்கே பதிவு பண்ணுங்க....  

27 comments:

Unknown said...

மாப்ள நீங்க சொல்லும் பல விஷயங்களில் உள்ள உண்மை புரிகிறது...நீங்கள் சொல்வது பலரையா அல்லது சிலரையா என்பதை பார்க்கும்போது உங்கள் டிஸ்கி பய முறுத்துகிறது.

நான் சொல்ல வருவது அரசு சார் ஆசிரியர்களில் பலரை:

1. எனக்கு இந்த விஷயம் புரியல என்று சொல்லும் எத்தனயோ மாணவர்களை தாங்கள் மாலையில் நடத்தும் டியூசனுக்கு வந்தால் தான் விளக்குவேன் என்பவர்களை பார்த்து அனுபவித்து இருக்கிரறேன்(அப்போதும் புரியாது தனிக்கதை!)

2.எப்படியும் சம்பளம் வந்துடும் இந்த பயலுங்க படிச்சா என்னா படிக்கட்டா என்ன என்று சேலை பிசனஸ் செய்யும் பல ஆசிரியர்களை எனக்கு தெரியும்!

என்ன செய்வது இங்கு ஆசிரியர்களில் யார் நல்லவர்களோ அவர்கள் மட்டுமே தண்டிக்கப்படுகிறார்கள்..இதற்க்கு பெயர் என்ன..?

பாலா said...

@விக்கியுலகம்

கரெக்தான் மாப்ள. இந்த பதிவு முழுவதும் ஆசிரியர்களுக்கு வக்காலத்து வாங்கும் பதிவு அல்ல. ஆசிரியர்கள் பக்கம் இருக்கும் ஆதங்கங்களை சொல்லும் பதிவு. அப்புறம் நல்லவர்கள்தான் தண்டிக்கப்படுகிறார்கள். இது குறித்து இரண்டொரு நாளில் ஒரு பதிவிடுகிறேன்.

பாலா said...

@விக்கியுலகம்

தமிழ்மணத்துல நட்சத்திர பதிவர் லிஸ்டில் இந்த பதிவு தெரிய மாட்டேங்குதே? என்ன காரணமா இருக்கும்?

Unknown said...

மாப்ள அந்த மணம் மேட்டர் வந்தேமாதரம் சசி கிட்ட கேளுங்க..எனக்கு டெக்னிக்கல் மூளை கிடையாது ஹிஹி!

தமிழ் உதயம் said...

நல்ல பதிவு. ஆசிரியர்கள் மாணவர்களிடம் காட்டும் அக்கறையை அழுத்தமாக பார்க்கக்கூடாது. நல்ல ஆசிரியர்கள் - தம் குடும்பத்தை விட பள்ளியையே அதிகமாய் நேசிப்பார்கள். நல்ல மாணவர்கள் - பெற்றோர்களை விட ஆசிரியர்களையே அதிகமாய் மதிப்பார்கள். ஆனால் அப்படியான ஆசிரியர்கள், மாணவர்கள் வெகு குறைவு என்பது தான் பிரச்சனை.

ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மி said...

சங்கடமாகத்தான் இருக்கிறது - முன்பெல்லாம் ஆசிரியரென்றால் அவ்வளவு மரியாதை, ஆரம்பப் பள்ளில் போதித்த ஆசிரியர்கள் இன்னமும் நமக்கு(எனக்கு) நல்ல வழிகாட்டியாக நண்பராக, ஆனால் இன்றைய நிலை...!!!??

Sankar Gurusamy said...

பிரச்சினை பல இடங்களில் இருக்கிறது... எல்லோருக்கும் வாழ்க்கை என்ற ஓட்டப்பந்தயத்தில் கடைசியில் வரக்கூடாது என்ற எண்ணம்தான் இதற்கு முக்கிய காரணம்.

இப்போதைய ஆசிரியர்களில் பெரும்பாலானோர் நிச்சயம் பரிதாபத்துகுறியவர்கள்தான். ஆனால் சில ஆசிரியர்கள் செய்யும் தவறான காரியங்களால் இவர்கள்தான் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள்.

இன்றைய மாணவர்களை பெரும்பாலும் டிவியும் சினிமாவும் கேடுகெட்ட நணப்ர்களும்தான் வளர்க்கிறார்கள். அதனால் அவர்களும் அவ்வளவு சுத்தமில்லை. ஒரு வகுப்பில் நல்ல மாணவர்களை இப்போது விரல்விட்டு எண்ணி விடலாம். அந்த லட்சணத்தில்தான் இருக்கிறது.

ஆசிரியர்கள் பக்கத்து நியாயத்தைப்பற்றி விளக்கும் இந்த பதிவு அருமை.

பகிர்வுக்கு மிக்க நன்றி..

http://anubhudhi.blogspot.in/

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஆசிரியகர்கள் தரப்பு பார்வையை ரொம்ப அருமையா முன்வெச்சிருக்கீங்க. உங்கள் கருத்தை ஆதரிக்கிறேன்!

சென்னை பித்தன் said...

இன்றைய கால கட்டத்தில் மிக அவசியமான பதிவு.சிநப்பான பார்வை.நன்று.

பாலா said...

@விக்கியுலகம்

நன்றி மாப்ள

பாலா said...

@Sankar Gurusamy

மிக்க நன்றி நண்பரே. வாழ்க்கை என்பது ஒட்டப்பந்தயமே அல்ல என்பதுதான் என்னுடைய கருத்து.

பாலா said...

@பன்னிக்குட்டி ராம்சாமி

ரொம்ப நன்றி தல

பாலா said...

@சென்னை பித்தன்

நன்றி சார்

இராஜராஜேஸ்வரி said...

என்னதான் வாழ்வில் பெரிய நிலைக்கு போனாலும், தன் ஆசிரியர்களை மட்டும் யாரும் மறப்பதில்லை. தன் பள்ளி மற்றும் கல்லூரி வாழ்க்கையில் எல்லா ஆசிரியர்களும் தன்னை கவராவிட்டாலும், கவர்ந்த குறிப்பிட்ட ஒரு சில ஆசிரியர்களுக்கு இன்றும் தன் மனதில் கோவில் கட்டி வைத்திருப்பார்கள்.

நிதர்சனப் பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..

துளசி கோபால் said...

நியாயமான புலம்பல். நானும் ஒரு காலத்தில் ஆசிரியர்தான்.

இதுக்கு என்ன தீர்வு?

தன் பிள்ளைகள் நல்லவர்களாக இருக்கணும் என்ற எண்ணம் போய் இப்போ வேற எண்ணம் வந்துருச்சு பெற்றோர்களுக்கு:(

ப்ச்.......

bandhu said...

நல்ல பதிவு. (நல்ல) ஆசிரியர்களுக்கு இன்று நேரும் பல பிரச்சனைகளை அழகாக விளக்கியிருக்கிறீர்கள்..

ப.கந்தசாமி said...

உண்மை.

பாலா said...

@இராஜராஜேஸ்வரி

வருகைகக்கும் கருத்துக்கும் ரொம்ப நன்றிங்க....

பாலா said...

@துளசி கோபால்

இப்போதெல்லாம் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் பணம் சம்பாதித்தாள் போதும் என்றே நினைக்கிறார்கள். வருகைக்கு நன்றி.

பாலா said...

@bandhu

உங்க வருகைக்கும் கருத்துக்கும் ரொம்ப நன்றிங்க.... அடிக்கடி வாங்க

பாலா said...

@பழனி.கந்தசாமி

கருத்துக்கு நன்றி சார்

அன்புடன் அருணா said...

/எல்லா ஆசிரியர்களுமே தங்கள் மாணவர்களின் மீது தெரிந்தோ தெரியாமலோ அளவு கடந்த பாசம் வைத்திருக்கிறார்கள். /
இது புரிஞ்சா போதுமே சார்!!!

yeskha said...

நான் ஆசிரியராக பணியைத்துவக்கியவன் தான்.. இப்போது ஆசிரியர்களுக்கு ஆசிரியர் போல் பாடமெடுக்கும் வேலையைச் செய்து வருகிறேன்... பல மனக்குமுறல்கள் எனக்கும் உண்டு...

தருமி said...

உங்கள் பதிவுக்குக் ஒட்டியோ .. ஒட்டாமலோ எனது பதிவு ஒன்று

பாலா said...

@அன்புடன் அருணா

புரிந்து கொள்வதற்கு மானவர்களோ, பெற்றோர்களோ தயாராக இல்லையே. உங்கள் கருத்துக்கு நன்றி நண்பரே

பாலா said...

@yeskha

மிக்க மகிழ்ச்சி நண்பரே. இந்த பதிவு ஆசிரியர்களுக்கு வக்காலத்து வாங்குவதற்காக எழுதவில்லை. ஏதோ உள்ளக்குமுறல்களை வெளிப்படுத்தும் நோக்கத்தில் மட்டுமே எழுதினேன். உங்கள் கருத்துக்கு நன்றி. அடிக்கடி வாங்க

பாலா said...

@தருமி

படித்து அங்கேயே கமெண்ட் போட்டுவிட்டேன். உங்க அனுபவத்துக்கு முன்னாடி நான் எல்லாம் சும்மா சார். அடிக்கடி வாங்க

Related Posts Plugin for WordPress, Blogger...