விவேகானந்தரின் நறுக்

கடவுள் நாம் விரும்பியதை கொடுப்பவர் அல்ல, நமக்குத் தேவையானதை கொடுப்பவர்...

July 17, 2010

காணாமல் போன காமராசர்...


இந்த வாரம் பெருந்தலைவர் காமராசர் அவர்களின் பிறந்தநாள் எங்கள் ஊரில் கொண்டாடப்பட்டது அவர் பிறந்த ஊர் என்ற ஒரே காரணத்துக்காக. இந்த ஒரு நாளில் மட்டும்தான் கட்சி பாகுபாடின்றி எல்லா அரசியல்வாதிகளையும் எங்கள் ஊரில் பார்க்க முடியும். ஜூலை 15 அன்று மட்டுமல்ல. இந்த ஜூலை மாதம் முழுவதும் ஊரில் ஆங்காங்கே காமராஜர் பெயரை சொல்லி ஏதாவது ஒரு விழா நடந்து கொண்டே இருக்கும். இந்த வருடமும் நடந்து கொண்டே இருக்கிறது. இன்று கூட மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் அவர்கள் தலைமையில் ஒரு விழா நடக்கவுள்ளது. இந்த ஒரு வாரத்தில் இது மூன்றாவது விழா. முதலில் நடந்தது நாடாளுமன்ற உறுப்பினர் புரந்தேஸ்வரி அவர்கள் தலைமையில் ஒரு விழா. பின் சாத்தூர் ராமச்சந்திரன்(திமுக அமைச்சர்) தலைமையில் ஒரு விழா. இன்று சிதம்பரம் தலைமையில் ஒரு விழா. இவை அனைத்தும் என்னவோ காமராஜரின் புகழை பரப்ப என்று யாரும் தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம். அந்தந்த வட்டாரத்தில் யார் பெரியவன் என்று தன் பலத்தை நிரூபிப்பதற்காக நடத்தும் விழா. விழாவுக்காக ஊர் முழுவதும் பேனர்கள் போஸ்டர்கள் கொடிகள் என்று அமர்க்களப்படுகின்றன. பேனர்களிலும் போஸ்டர்களிலும் ஆக்கிரமித்திருப்பது பெரிய தலையில் இருந்து சின்ன வட்டம் வரை இருப்போரின் புன்னகை திருமுகங்கள். காமராசரின் படத்தைத்தான் காணவில்லை. சில போஸ்டர்களில் போனால் போகிறதென்று தபால் கார்டில் ஸ்டாம்ப் ஓட்டுவது போல ஒரு ஓரத்தில் பரிதாபமாக சிரிக்கிறார் காமராசர்.


விழாவுக்கு வருபவர்களும் காமராசரை பற்றி ஒரு வார்த்தை கூட பேசாமல், அன்னை, அய்யா என்று ஜல் ஜல் என்று நன்றாக வாசிக்கிறார்கள். ஆனால் கடைசியில் காமராசர் ஆட்சி அமைப்போம் என்று காங்கிரசாரும், நடப்பது காமராசர் ஆட்சிதான் என்று திமுகவினரும் உரக்க சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். பொதுமக்களும் புரியாமல் கை தட்டி கொண்டிருக்கிறார்கள். இதில் கொடுமை என்னவென்றால் இதில் பல பன்னாடைகள் காமராசர் உயிரோடு இருந்த காலத்தில் அவருக்கு எதிராக அவரை தோற்கடிப்பதற்காக பல வேலைகளில் ஈடுபட்டவர்கள். அப்போது இவர்களின் தில்லாலங்கடி வேலைகளுக்கு தடையாக இருந்தவர் காமராசர். இப்போது அதே வேலைகளை செய்ய இவர்களுக்கு காமராசர் தேவைப்படுகிறார். இது விருதுநகரின் நிலை.


இதே போல ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு சாதிக்கும் அடையாளமாக ஒரு பெரிய மனிதர் இருக்கிறார். இந்த பெரிய மனிதர்களின் பெயர் போஸ்டர்களிலும் பேனர்களிலும் மட்டுமே பயன்படுகிறது. இவர்களின் பெயரை பயன்படுத்தி மக்களை அடிமுட்டாளாக்கி பல மானங்கெட்ட ஜென்மங்கள் பொழப்பு நடத்தி வருகின்றன. மதுரை விமான நிலையத்துக்கு முத்துராமலிங்க தேவர் பெயரை வைக்க வேண்டும் என்று உசிலம்பட்டியில் பேருந்துகளை எல்லாம் அடித்து நொறுக்கி இருக்கிறார்கள். இந்த வன்முறையில் ஈடுபட்ட யாருக்குமே விமான நிலையத்துக்கு அவரின் பெயர் வைப்பதால் என்ன பயன் என்று கேட்டால் தெரியாது. எவனோ சொன்னான், "தலைவர் பெயரை வைக்கலேன்னா பஸ்ஸுகளை அடித்து நொறுக்கு!!!" என்று. உடனே இவன் கிளம்பி விட்டான். சமீபத்தில் பத்தில் இருந்து பதினைந்து வயதுக்குள் இருக்கும் சில சிறுவர்கள் தங்களுடைய செல்போனில் வீரன் சுந்தரலிங்கம் அவர்களை போற்றி பாடும் ஒரு பாடலை சத்தமாக வைத்து ஆர்வமாக கேட்டு கொண்டிருந்தார்கள். அவர்கள் யாருக்குமே வீரன் சுந்தரலிங்கம் என்றால் யார் என்று தெரியாது. அவர்களுக்கு சுந்தரலிங்கத்தின் தியாகம் விதிக்கப்படவில்லை, அவர் சார்ந்த சாதி வெறிதான் விதைக்க பட்டுள்ளது.


எல்லாம் கல்வி அறிவு இல்லாததால்தான் என்று சொல்கிறார்கள். மெத்த படித்த படிப்பாளிகள் கூட ஊர்ப்பக்கம் வரும்போது தன் ஜாதியின் அடையாளத்தோடுதான் திரிகிறார்கள். என்னுடன் கல்லூரியில் வேலை பார்க்கும் பேராசிரியர் ஒருவர், தன்னிடம் அடாவடி செய்த ஒருவரிடம் "டேய் நான் தஞ்சாவூர் கள்ளர்டா" என்று சாதியை சொல்லி மிரட்டினார். ராவணன் படம் ஓடும் தியேட்டரில் விக்ரம் ரசிகர்களுக்கும், கார்த்திக் ரசிகர்களுக்கும் பெரிய அடிதடியே நடந்தது. இவை எல்லாவற்றுக்கும் அடிப்படை காரணம், ஒரு குழந்தை வளரும்போதே அதன் சாதியின் பெருமைகளையும் அதைவிட அதிகமாக அடுத்த சாதியின் குறைகளையும் சொல்லி வன்மத்தை விதைக்கிறார்கள். நாளடைவில் அவனுடன் வளர்ந்து எவ்வளவு படித்து பெரிய பதவிக்கு போனாலும் இந்த வன்மம் மட்டும் நிலைத்து விடுகிறது. அந்த வன்மத்தை நேரம் கிடைக்கும்போதெல்லாம் காட்டுகிறான். எங்கள் ஊர்பக்கம் தீப்பெட்டி தொழிற்சாலைகள் அதிகம். அதில் பெண்கள்தான் அதிகம் வேலை செய்வார்கள். அங்கு வேலை பார்க்கும் பெண் ஒருத்திக்கு உடன் வேலை பார்க்கும் ஒருவன் காதல் கடிதம் கொடுத்து விட்டான். பிரச்சனை பெரிதாகி அடிதடி வரை சென்று போலிஸ் வந்துவிட்டது. புகார் கொடுத்தது பெண்ணின் தகப்பனார்.


அந்த ஏரியா சப் இன்ஸ்பெக்டர் அதே ஜாதி. அவர் நேரே வந்து அந்த தொழிற்சாலையின் மேனேஜரின் சட்டையை பிடித்து வாய்க்கு வந்தபடி திட்ட ஆரம்பித்தார். அவர் என்னவோ அந்த பெண்ணுக்கு ஆதரவாக திட்டுவது போல தெரியவில்லை. ரொம்ப நாளாக அந்த ஜாதியின் மீதுள்ள வன்மத்தை கொட்டுவது போலவே இருந்தது. வார்த்தைக்கு வார்த்தை அந்த ஜாதி பெயரை சேர்த்து உடன் நாயையும் சேர்த்து கொண்டார்." ஏண்டா .......நாய்களா? உங்களுக்கு வேற வேலையே இல்லையா? உங்க ............களுக்கெல்லாம் இததான் பொழப்பா? தெரியும்டா உங்க ..................களைப்பற்றி" என்று அடுக்கிகொண்டே போனார்.

இது நம்ம பதிவுலகத்திலும் நடக்கிறது என்பது அனைவரும் அறிந்ததே. ஒரு சின்ன கிண்டல் வார்த்தையை வைத்து வேற்று சாதிக்காரன் நம் சாதியை திட்டுகிறான் என்று கண்டுபிடிக்கும் நாம் இந்த சாதி உணர்வை வைத்து எங்கோ ஒருவன் வியாபாரம் செய்து கொண்டிருக்கிறான் என்பதை மட்டும் உணர்ந்து கொள்வதே இல்லை. தேநீரின் சுவையை விட்டுவிட்டு கோப்பையை கொண்டாடி கொண்டிருக்கிறோம். பெரிய மனிதர்களின் கருத்துக்களை விட்டுவிட்டு அவரின் சாதியை கொண்டாடி கொண்டிருக்கிறோம்.....

உங்களுக்கு பிடிச்சிருந்தா ஒட்டு போடுங்க...
உங்க கருத்துக்களை இங்கே பதிவு பண்ணுங்க...7 comments:

Anonymous said...

அன்பரே ....
ரொம்ப நாளா அலே காணும்........
அனைத்தும் மறுக்க முடியாத மற்றும் மாற்ற முடியாத உண்மை
ஒன்னும் செய்யமுடியாது
எல்லாம் நம்ம நேரம் .......

Unknown said...

நல்ல பதிவு

எப்பூடி.. said...

அருமையான கட்டுரை

//விழாவுக்கு வருபவர்களும் காமராசரை பற்றி ஒரு வார்த்தை கூட பேசாமல், அன்னை, அய்யா என்று ஜல் ஜல் என்று நன்றாக வாசிக்கிறார்கள். //

இது சூப்பரு

Yoganathan.N said...

சோ சேட்... :(

பாலா said...

@thiru

கொஞ்சம் வேலை அதிகம்...வேறொன்றும் இல்லை. நண்பரே...

@ ஆண்டாள்மகன்

நன்றி நண்பரே...

@எப்பூடி..

வருகைக்கு நன்றி நண்பரே...

@Yoganathan
:(

"ராஜா" said...

ஜாதியா அப்படின்னா என்னங்கண்ணா?

Unknown said...

arumaiana katturai
nalla karuthai mattum edupom

Related Posts Plugin for WordPress, Blogger...