விவேகானந்தரின் நறுக்

கடவுள் நாம் விரும்பியதை கொடுப்பவர் அல்ல, நமக்குத் தேவையானதை கொடுப்பவர்...

July 5, 2010

கனவுகளை காவு கேட்கும் கல்லூரிகள்....





பொறியியல் கல்லூரிகளுக்கான கலந்தாய்வுகள் நடைபெற்று வருகின்றன. வழக்கம்போல் சர்ச்சைகள், குழப்பங்களுக்கு குறைவில்லை என்றாலும் கன ஜோராக கல்வி வியாபாரம் தொடங்கி விட்டது. பொறியியல் கல்லூரிகளை பற்றி எனக்கு தெரிந்த சில செய்திகளை சொல்லி ஒரு சில நபர்களையாவது விழிப்படைய செய்வதுதான் என் நோக்கம். கல்லூரிகளைப்பற்றி அவதூறு பரப்புவதல்ல.தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கை சுமார் ஐநூறை தாண்டி விட்டது. இதில் போதிய வசதி இல்லாத கல்லூரிகள் நூற்றுக்கணக்கில் இருக்கின்றன என்று ஏற்கனவே சொல்லி இருக்கிறேன். பெற்றோர்கள் தன் பிள்ளைகளை கல்லூரிகளில் சேர்க்கும்போது அவர்கள் மனதில் ஆயிரம் எதிர்பார்ப்புகள் இருக்கும். சேரும் மாணவரிடம் கண் நிறைய கனவுகள் இருக்கும். கல்லூரியில் சேர்ந்த இரண்டாவது நாளே தன் கனவுகள் அனைத்தும் நொறுங்கிப்போவதுதான் வேதனைக்குரிய விஷயம்.


இந்த பதிவை எழுத தொடங்கும்போது ஒரு உதாரணத்துக்காக இரண்டு கல்லூரிகளை பற்றி எழுத நினைத்தேன். என்ன ஒரு அதிசயம்? நான் எழுத நினைத்தது வெள்ளி அன்று மதியம். சனிகிழமை காலையில் ஒரு கல்லூரியின் பெயரை எல்லா செய்தி சேனல்களும் ஒளிபரப்பின.


இந்த கல்லூரி பற்றி இப்போதுதான் தோண்ட ஆரம்பித்திருக்கிறார்கள். சென்னையின் அருகாமையில் இருந்தாலும் தனக்கென தனி சிறப்புகள் பெற்ற ஊரில் இருக்கும் மிக செல்வ செழிப்புடன் வீற்றிருக்கும் ஒரு கல்லூரி. ஒரு உலகப்புகழ் பெற்ற கோவிலின் வரும்படியை வைத்து தெய்வீக நோக்கத்துடன் செயல்பட்டுவரும் இந்த கல்லூரியை யாராலும் எளிதில் நெருங்க முடியாது. எனவே இவ்வளவு நாட்களாக புலனாய்வு கண்களில் இருந்து லாவகமாக தப்பி வந்தது இந்த கல்லூரி. கட்டமைப்பு வசதிகள் முழுமையாக இல்லாவிட்டாலும் குறை ஒன்றும் சொல்லிவிட முடியாது. இந்த கல்லூரியில் நடக்கும், நடப்பதாகக்கூறப்படும் அராஜகங்கள்தான் முக்கியம். வருடத்திற்கு குறைந்தது இரண்டு அல்லது மூன்று மாணவ மாணவிகள் தற்கொலை செய்து கொள்கிறார்கள். பெரும்பாலான நிர்வாகிகள் மாணவிகளிடம் அத்துமீறி நடந்து கொள்கிறார்கள். உரையாடிக்கொண்டிருக்கும் ஒரு மாணவன் மற்றும் மாணவி சகோதர சகோதரியாய் இருந்தாலும், விசாரிக்காமல் எடுத்த எடுப்பிலேயே நீங்கள் இருவரும் எத்தனை நாள் தொடர்பு வைத்திருக்கிறீர்கள்? என்பது மாதிரியான சாட்டையடி கேள்விகள் பறக்கும். மாற்று மதத்தவரும் இக்கல்லூரியில் பின்பற்றப்படும் மத அடையாளங்களை பின்பற்றவேண்டும். இம்மாதிரியான அடுக்கடுக்கான பல புகார்கள் அந்த கல்லூரியில் பயிலும் மாணவர்கள் மற்றும் சில ஆசிரியர்களிடம் இருந்து வருகிறது.



இதை எதிர்த்து புகார் செய்ய யாரும் முன் வருவதில்லை. கல்லூரி வளாகத்தில் நடக்கும் தற்கொலைகள் ஒரு பெட்டி செய்தியாக கூட வெளி வருவதில்லை. தட்டிக்கேட்கும் மாணவர் மற்றும் பெற்றோர்கள் தகுந்த முறையில் கவனிக்கப்படுகிறார்கள். படித்து முடித்து வெளிவரும் மாணவர்களும் தத்தமது வேலைகளை கவனிக்க சென்றுவிடுவது வேதனைக்குரியது. இக்கல்லூரியில் பயிலும் ஒரு மாணவன் சொன்னது, "இரவு பத்து மணிக்கு மேல் யாரும் ஹாஸ்டலை விட்டு வெளியே வர முடியாது. கதவை கூட திறக்கக்கூடாது. கல்லூரி வளாகம் முழுவதும் சைரன் வைத்த வாகனம் ஒன்று(போலீஸ் வாகனம் அல்ல) அடியாட்களுடன் சுற்றி வரும். உள்ளே என்ன நடக்கிறதென்றே தெரியவில்லை." வலுவான மத பின்னணியாலும், பொதுமக்களிடம் அமோக செல்வாக்கு இருப்பதனாலும் இவர்கள் மீது எந்த ஒரு நடவடிக்கையும் அரசால் எடுக்க இயலவில்லை. அந்த கல்லூரிக்குள் என்ன நடக்கிறது என்பது அந்த அருள்மிகு ஆதி பராசக்திக்கே வெளிச்சம்.




நான் சொல்லப்போகும் இன்னொரு கல்லூரி கண்டிப்பாக மாட்டிக்கொள்ளாது. சென்னையில் உள்ள மென்பொருள் நிறுவனங்கள் மிகுந்த ஒரு சாலையில் உள்ளது இக்கல்லூரி. பார்ப்பதற்கு ஒரே கல்லூரி போல இருந்தாலும் உடல் முழுவதும் ஒட்டி, தலை மட்டும் வேறாய் இருக்கும் குழந்தைகள் போல ஒரே கட்டிடத்தில் மூன்று கல்லூரிகள் இயங்குகின்றன. சேலம் மாவட்டத்தில் பிறந்த தங்கமான காங்கிரஸ் பிரமுகருக்கு சொந்தமான கல்லூரி(கள்). அதனால்தான் சொன்னேன் மாட்டிக்கொள்ளாது என்று. முன்பு சொன்ன கல்லூரி போல இது அடாவடி கல்லூரி அல்ல. கல்லூரியில் மாணவர்களை யாரும் கண்டிப்பதில்லை. ஏன் என்றால் கல்லூரிக்கு உள்ளே சென்று பாருங்கள். குடிக்க தண்ணீர் கூட கிடைக்காது. அந்தளவிற்கு அடிப்படை கட்டமைப்பு எதுவும் இல்லாத கல்லூரி. இத்தனைக்கும் இக்கல்லூரி துவங்கி சுமார் பதினாறு ஆண்டுகள் ஆகி விட்டன. இதற்கு பின் தொடங்கிய கல்லூரிகள் எல்லாம் கட்டமைப்பில் எங்கோ போய்விட்டன.

நல்ல ஒழுக்கத்துடன் வரும் மாணவன் எல்லா கெட்ட பழக்கங்களையும் பழக்கங்களும் எளிதில் கற்றுக்கொள்ளலாம். அந்தளவிற்கு இந்த கல்லூரிகளில் போதை வஸ்த்துக்கள் உலவுகின்றன. ஆசிரியர்களுக்கு சரியாக ஊதியம் தரப்படாததால் யாரும் பொறுப்புடன் செயல் படுவதில்லை. அதனால் மாணவர்களே யாருக்கும் அடங்குவதில்லை. ஒரு மாணவர் கல்லூரி முதல்வரை வராண்டாவில் வைத்து அறைந்ததேல்லாம் சரித்திரம்.



செமஸ்டர் தேர்வு எழுத குறிப்பிட்ட அளவு வருகை இருக்கவேண்டும் என்பது பல்கலைக்கழகம் வைத்த சட்டம். அந்த சட்டத்தை இவர்கள் சிறிது மாற்றி உள்ளார்கள். இருபதாயிரம் ருபாய் அபராதம் செலுத்தினால் தேர்வு எழுதலாம். அதாவது கல்லூரிக்கே வராமல். இக்கல்லூரியில் நல்ல மாணவர்களும் படிக்கிறார்கள். மாணவர்கள் கல்லூரியில் சேரும்போதே நிர்வாகத்துக்கு எதிராக எந்த செயலிலும் ஈடுபடமாட்டோம் என்று எழுதி வாங்கிக் கொள்கிறார்கள். மீறி ஏதாவது போராட்டம் வெடித்தால் கல்லூரி சேர்மன் அதாங்க நம்ம காங்கிரஸ் பிரமுகர் மாணவர்களிடம் நேரில் வந்து பேசுவார். பெரும்பாலும் கையால்தான் பேசுவார். வருட முடிவில் ஸ்ட்ரைக் நடந்ததை முன்னிட்டு பொருட்சேதம், ஒழுக்கக்கேடு என்று இவர்களாக ஒரு கணக்கு போட்டு குறைந்த பட்சம் பத்தாயிரம் ரூபாயாவது பிடுங்கி விடுவார்கள். இவை எதுவுமே வெளிவருவதில்லை.


மேலே சொன்ன எல்லா செய்திகளும் அந்த கல்லூரிகளில் படித்த, வேலை செய்த நபர்கள் சொன்னது, மற்றும் நான் நேரில் கண்டவற்றை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்டது. இதற்கு எந்த ஆதாரமும் கிடையாது. ஆகவேதான் கல்லூரிகளின் பெயரை சொல்லவில்லை(யூகித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்). இது எனக்குதெரிந்த ஒரு உதாரணம்தான். இதே போல தமிழகம் எங்கும் பல கல்லூரிகள் இயங்கி வருகின்றன. பெரும்பாலான கல்லூரிகள் அரசியல்வாதிகளின் கையில் உள்ளது. ஆகவே இக்கல்லூரிகளில் நடக்கும் அராஜகங்கள் மற்றும் அசம்பாவிதங்கள் வெளிச்சத்துக்கு வருவதே இல்லை. 



சரி கல்லூரி பிடிக்கவில்லை என்றால் வெளியே வந்து விடலாமே என்கிறீர்களா? அந்த வசதி கலந்தாய்வில் (Counselling) கல்லூரியில் சேரும் மாணவருக்குத்தான். நிர்வாக ஒதுக்கீட்டில் சேரும் மாணவருக்கு எளிதில் டி சி கொடுத்து விடமாட்டார்கள். இப்படி சேரும் மாணவர்கள் எந்த பருவத்தில் கல்லூரியை விட்டு விலகினாலும் நான்காண்டுகளுக்கும் சேர்த்து பணம் கட்டி விட்டுத்தான் வெளியே வர முடியும். இது சுயநிதி கல்லூரிகள் கூட்டமைப்பு வைத்திருக்கும் ஒரு சட்டம். கலந்தாய்வு மூலம் சேரும் மாணவர்கள் எளிதில் டி சி வாங்கி இன்னொரு கல்லூரியில் சேர்ந்து விட முடியும். அப்படி சேர்ந்திருக்கும் உங்களுக்கு தெரிந்த மாணவர்கள் இருந்தால் விசாரித்து பாருங்கள். ஒரு மாணவர் கல்லூரியை விட்டு விலகப்போகிறார் என்றால் அவருடைய Internal Mark இல் சும்மா குத்து குத்தென்று குத்தி இருப்பார்கள். மேலும் அத்தனை செய்முறை தேர்வுகளிலும் தோல்வி அடைய செய்து விடுவார்கள். 



எனவே பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை ஒரு கல்லூரியில் சேர்க்கும் முன் இம்மாதிரியான கோணங்களிலும் விசாரிப்பது நல்லது. கல்லூரியில் சேர்ந்து விட்ட பிறகு ஒன்றுமே செய்ய இயலாது. உண்டியலில் போட்ட காசுதான். திரும்ப வரவே வராது. இந்த கல்லூரிகளை அடக்கி ஒடுக்கும் அதிகாரம் மிக்கவர்களே இம்மாதிரியான கல்லூரிகளை நடத்துகிறார்கள். ஆகவே இந்த கல்லூரிகள் ஒருபோதும் மாட்டிக்கொள்வதே இல்லை. மாட்டினாலும் சப்பை கட்டு கட்டி எப்போதும் போல தங்களின் சேவையை தொடர்கின்றன. எனவே இம்மாதிரியான கல்லூரிகளை தண்டிப்பது என்பது புறக்கணிப்பதன் மூலமே சாத்தியம்.

பிடிச்சிருந்தா ஒட்டு போடுங்க ...இந்த பதிவு நிறைய பேருக்கு போய் சேரனும்கிறது என்னுடைய விருப்பம்...    
உங்க கருத்துக்களையும் இங்கே பதிவு செய்யுங்கள்...

5 comments:

Yoganathan.N said...

சென்ற வாரம் ஊருக்கு போன போது, செய்தியில் இந்த பிரச்சனையைக் கண நேர்ந்தது. அதற்கு அதிகம் கவனம் செலுத்தாததை எண்ணி வருத்தப்படுகிறேன்.

முதல் கல்லூரியில் நடக்கும் அநியாயங்களைக் கண்டு இப்படி எல்லாமா நடக்கும் என்றூ வியந்தேன்.

அடிப்படை வசதிகளை பற்றிய பரிதோதனைகள் நடத்தாமலா அரசாங்கம் இது போன்ற கல்லூரிகளை அனுமதிக்கின்றது? பகல் கொள்ளையாவுல இருக்கு.

//இருபதாயிரம் ருபாய் அபராதம் செலுத்தினால் தேர்வு எழுதலாம்.//

பணப் பேய்களாக இருக்கிறார்களே...

Yoganathan.N said...

கலந்தாய்வு கல்லூரி என்றால் என்ன? இது போனற விசயங்கள் எனக்குத் தெரிந்து மலேசியாவில் இல்லை.

//இப்படி சேரும் மாணவர்கள் எந்த பருவத்தில் கல்லூரியை விட்டு விலகினாலும் நான்காண்டுகளுக்கும் சேர்த்து பணம் கட்டி விட்டுத்தான் வெளியே வர முடியும்.//

இது கண்டிப்பாக மலேசியாவில் இல்லை. மாணவர்கள் செமெஸ்டர் ஏற்ரவாறு பணம் செலுத்தி, பிடிக்கவில்லையேல், வேறொறு கல்லூரியில் சேர்ந்து விடலாம். முந்தய கல்லூரியில் எடுத்த பாடங்களுக்கு 'excemption' வழங்கப் படும்.

இந்தியாவில் கல்வித் திட்டம் படு மோசமாக இருக்கும் போலும். :(

Yoganathan.N said...

தங்கமகன் விருதிற்காக எனது மனமார்ந்த வாழ்த்துகள். என்னைப் பொருத்தவரை நீங்கள் தகுதியானவரே. இது போன்ற விருதுகள் மேலும் உங்களை ஊக்குவிக்கும் என நம்புகிறேன். எழுதுவதை நிடுத்தாதீர்கள். :)

பி.கு தயவு செய்து 'Follower' வசதியை தளத்தில் சேருங்கள். உங்கள் எழுத்துக்களைப் படிக்க நிறைய பதிவர்கள் இருக்கிறார்கள் என்பது தெரிகிறது.

பாலா said...

நண்பரே பொறியியல் கல்லூரிகளில் 55 சதவிகிதத்தை அரசாங்கமும், மீதி இடத்தை கல்லூரி நிர்வாகமும் நிரப்பும். இந்த 55 சதவீதம் என்பது மதிப்பெண் அடிப்படையில் மாணவர்களை வரிசைப்படுத்தி பொதுவான ஒரு இடத்துக்கு ஒரு நாளில் வரசெய்து அவர்களுக்கு விருப்பமான கல்லூரிகளை தேர்ந்தெடுக்கும் வசதியை கொண்டது. அதாவது அதிக மதிப்பெண் எடுக்கும் மாணவர்க்கு முதல் வாய்ப்பு. நூறாவது இடம் பிடிக்கும் மாணவருக்கு மீதி கடைசியாக காலியாக உள்ள இடம்தான் கிடைக்கும். இதற்கு பெயர்தான் கலந்தாய்வு.

பாலா said...

தங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி நண்பரே..
நான் என்ன மாட்டேன் என்றா சொல்கிறேன். என்ன பிரச்சனையோ தெரியவில்லை. பாலோயர் இணைப்பை என் வலைப்பக்கத்தில் இணைக்கவே முடியவில்லை.

Related Posts Plugin for WordPress, Blogger...