விவேகானந்தரின் நறுக்

கடவுள் நாம் விரும்பியதை கொடுப்பவர் அல்ல, நமக்குத் தேவையானதை கொடுப்பவர்...

April 21, 2010

மோடி விளையாடு - ஒரு மோசடியின் கதைஒரு குறுகிய காலகட்டத்தில் மிகப்பெரிய மனிதராக உருவாகி இருக்கும் லலித் மோடி அவர்களுக்கு இது போதாத காலம். மோசடி, பொய், பித்தலாட்டங்களால் அதி விரைவில் உச்சாணி கொம்பில் போய் அமர்ந்த அவர் அதை விட அதி வேகத்தில் கீழே விழுந்து கொண்டிருக்கிறார். கிரிக்கெட் பாஷையில் சொல்வதாக இருந்தால், ஒரு பந்து எவ்வளவு வேகமாக மேலே செல்கிறதோ அதை விட வேகமாக கீழே இறங்கும். இப்போது கிரிக்கெட் தெரிந்த அனைவரும் பேசிக்கொண்டிருக்கும் விவகாரம் லலித் மோடி மற்றும் சசி தரூர் பற்றியதுதான். வெகு நாட்களாகவே யார் இந்த லலித் மோடி? இவரின் பின் புலம் என்ன? என்று செய்திகளை சேகரித்து வெளியிடலாம் என்று எண்ணி இருந்தேன். ஆனால் நம்ம நம்பர் ஒன் நாளிதழ் தினகரன் முந்தி கொண்டு விட்டது. இருந்தாலும் விடலாமா? எனக்கு தெரிந்த சில கருத்துக்களை சொல்லியே ஆக வேண்டும் என்று முடிவு கட்டிவிட்டேன். அதன் விளைவே இந்த பதிவு.


சரி யார் இந்த லலித் மோடி? உங்களில் பெரும்பாலனவர்களுக்கு நினைவிருக்கிறதா என்று தெரியாது. நம் நாட்டில் வெகு காலத்துக்கு முன்பிருந்தே மல்டி லெவல் மார்கெட்டிங் என்று ஒரு விஷயம் ஜரூராக நடை பெற்றது. எனக்கு விவரம் தெரிந்து இதில் அனைவருக்கும் நன்கு அறிமுகமான ஒரு நிறுவனம், ஆம்வே என்னும் அமெரிக்க நிறுவனம்தான். அதே காலகட்டத்தில் அதற்கு நிகரான ஒரு நிறுவனமும் அதே வேலையே செய்து வந்தது. அதுதான் மோடிகேர் (MODICARE) நிறுவனம். இந்த நிறுவனத்தை தொடங்கியவர் நம்ம லலித் மோடியின் தாத்தா. வியாபார ரத்தம் ஓடும் பரம்பரையில் இருந்து வந்ததாலோ என்னவோ லலித் மோடியும் இயல்பாகவே தேர்ந்த வியாபாரியாக இருந்துள்ளார். அமெரிக்காவில் டியுக் பல்கலை கழகத்தில் படித்து வந்த அவர் அங்கேயே ஒரு சிகரெட் கம்பெனியில் வேலை பார்த்துள்ளார். அப்போதே அவர் மீது போதை மருந்து வைத்திருந்தது, ஆள் கடத்தல், கொலை முயற்சி போன்ற புகார்கள் எழுந்துள்ளன. இவற்றை மோடி ஒப்புக்கொண்டதால் கடும் தண்டனையிலிருந்து தப்பி உள்ளார். அப்போது அவருக்கு வயது 22 தான். படித்து முடித்த பின் உடல் நிலை சரியில்லை என்று (பொய்?)காரணம் கூறி இந்தியா திரும்பி உள்ளார்.


பின் இந்தியாவில் இரண்டாவது பெரிய சிகரெட் நிறுவனமான காட்பரே பிலிப்ஸ் நிறுவனத்தில் ஒரு உயர்ந்த பொறுப்பில் வேலை பார்த்துள்ளார். இதுதான் உலக தரம் மிக்க போர் ஸ்கொயர் போன்ற சிகரெட்டுகளை தயாரிக்கும் நிறுவனம். பின் இந்தியாவில் பேஷன் டிவியை ஒளிபரப்பும் ஏஜென்டாக பொறுப்பேற்றார். கூடவே இஎஸ்பிஏன் (ESPN) சேனலுக்கும் ஏஜென்ட் ஆனார். இது அவர் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனை. இதன் மூலம் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் பலர் இவருக்கு அறிமுகம் ஆனார்கள். ஒரு தேர்ந்த வியாபாரி பணம் கொழிக்கும் ஒரு நிறுவனத்தில் நுழைந்தால் என்ன நடக்கும்? ஒட்டகம் கூடாரத்துக்குள் தலையை விட்டால் என்ன ஆகுமோ அதுதான் நடக்கும்? கிரிக்கெட்டில் இருபது ஓவர் போட்டிகளை பிரபலபடுத்த முயன்றிருக்கிறார். ஆனால் அவருக்கு தெரியவில்லை. இந்த கிரிக்கெட் வாரியத்துக்குள் ஏற்கனவே நிறைய ஒட்டகங்கள் முதல் டைனோசர்கள் வரை உள்ளன என்று. பின் ஒருவாறாக உட்கார்ந்து யோசித்து, கிரிக்கெட் மைதானமே இல்லாத இமாச்சல் பிரதேஷ் கிரிக்கெட் சங்க உறுப்பினர் ஆனார். சென்ம புத்தி போகுமா. அங்கேயும் தன் ஒட்டக வேலையை காட்ட, ஆட்சி மாறியதும் தூக்கி எறியப்பட்டார்.


ஒரு வியாபாரி எப்போதுமே தனக்கு விழுந்த அடியினால் வீழ்ந்து விடுவதில்லை. மோடி தன் வித்தையை ராஜஸ்தான் கிரிக்கெட் வாரியத்திடம் காட்டினார். விளைவு, அதன் தலைவர் ஆனார். முறைப்படி இந்திய கிரிக்கெட் வாரியத்தின் (பிசிசிஐ) உறுப்பினர் ஆகி விட்டார். ஊரு ரெண்டு பட்டா கூத்தாடிக்கு கொண்டாட்டம். பிசிசிஐ டால்மியாவா, பவாரா?, மும்பையா, கொல்கட்டாவா? என்று மோதிக்கொண்டிருந்த பொது, நடுவில் டெல்லி இருப்பதை மறந்து விட்டீர்கள் என்று குழம்பிய குட்டையில், இருந்து பிசிசிஐ துணை தலைவர் பதவி என்ற திமிங்கலத்தையே பிடித்துவிட்டார். வந்ததும் மிக திறமையாக செயல் பட்டு, அதிரடி திட்டங்களை வகுத்து, தன் கிரிமினல் மூளையையும் பயன் படுத்தி, பிசிசிஐக்கு இதுவரை அவர்கள் பார்த்திராத அளவுக்கு லாபங்களை ஈட்டி தந்தார். ஆகா ஒரு திறமையான நபரை இவ்வளவு நாள் கண்டுக்காமல் விட்டு விட்டோமே என்று அனைவரும் வருத்தப்பட்டார்கள். மறுபடி இருபது ஓவர் போட்டிகள் குறித்த பேச்சை எடுத்தார்கள். இந்த நேரத்தில்தான் கபில்தேவ் கோபித்துக்கொண்டு தனிக்குடித்தனம் போனார். அவர் இந்தியன் கிரிக்கெட் லீக் என்ற அமைப்பை தொடங்க, மீண்டும் குட்டை குழம்ப தொடங்கியது. இதுதான் தருணம் என்று தன் அத்தனை திறமைகளையும் பயன் படுத்தி ஐபிஎல் என்ற அமைப்பு உருவாக காரணமாக இருந்தார். அதன் தலைவராக அவரே பொறுப்பேற்றுக்கொண்டார். அதன் பின் கிரிக்கெட் சிறப்பு பரிசு போட்டிகள், நடன மங்கைகள், அதிரடி இசை, பாலிவுட் நட்சத்திரங்கள், மது என்று கமர்சியல் வண்ணம் பூசிக்கொண்டது. 


இவரது வளர்ச்சி மும்பை நிழல் உலக தாதாக்களை கூட திரும்பி பார்க்க வைத்துள்ளது. சோட்டா சகீலால் பலமுறை மிரட்டப்பட்டிருக்கிறார்.(சோட்டா சகீல் என்பவர் தாவுத் இப்ராஹிமின் அடியாள். தளபதி படத்தில் ரஜினி, மம்முட்டிக்கு எப்படியோ அப்படி. இப்போது இப்ராஹிமின் இந்திய சந்தையை கவனித்து வருகிறார்). மோடி தன் சாம்ராஜ்யத்துக்குள் ஒருவரும் நுழைந்து விட முடியாத படிக்கு, எல்லா வேலைகளையும் செய்திருக்கிறார், கடத்தல் அடிதடி உள்பட. கொச்சி அணியை தோற்கடித்து, அகமதாபாத்தை ஐபிஎல்லில் நுழைக்க பெரும் முயற்சி செய்திருக்கிறார். ஆனால் முடியவில்லை. இதில் கொச்சி அணி மீது அவருக்கு காழ்புணர்ச்சி அதிகரித்துள்ளது. இந்நேரம் பார்த்து சசி தரூர் தனக்கு தெரிந்த நடிகை ஒருவருக்கு கொச்சி அணி ஏலத்தில் தலையிட்டு உதவி புரிந்திருக்கிறார் என்ற விவகாரம் விவகாரம் வெளிவர கெட்டியாக பிடித்துக்கொண்டார். விளைவு சசி தரூர் பதவி விலகல்.


தான் ஐபிஎல்லின் தலைவர்தான், நாட்டின் தலைவர் அல்ல என்று புரிந்து கொள்ள வில்லை மோடி. விளைவு, சட்டம் தன் கடமையை செய்து விட்டது. 

மோடி மீது கூறப்படும் குற்றச்சாட்டுகள், 
மோடி ரகசியமாக கொல்கட்டா, ராஜஸ்தான், பஞ்சாப் அணிகளின் உரிமையாளராக இருந்துள்ளார். 
தன் குடும்பத்தினர் பலர் ஐபிஎல் அணிகளின் பங்குகளை வாங்க உதவி செய்துள்ளார்.
பல ஆயிரம் கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்துள்ளார்.
ஐபிஎல் போட்டிகளின் போது கிரிக்கெட் சூதாட்டம், மற்றும் மேட்ச் பிக்சிங் போன்றவற்றில் ஈடுபட்டுள்ளார். இது போன்ற அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள். இது தவிர, நடிகைகள், கொலை மிரட்டல், கடத்தல், போதை பொருள் போன்ற பிரச்சனைகளும் வரலாம். ஐபிஎல் போட்டிகளுக்கு பாதுகாப்பு வழங்க முடியாது என்று சொன்னதில் இருந்தே காங்கிரஸ் மீது ஏகப்பட்ட கடுப்பு. அதனால் தான் சசி தரூர் பிரச்சனையில் இவ்வளவு ஆர்வம் காட்டினார் மோடி. ஆனால் அவருக்கு தெரியாது வியாபாரியை விட அரசியல்வாதி மோசமானவன் என்று. இதுவரை பதவி விலக மாட்டேன், குற்றமற்றவன் என்று நிரூபிப்பேன் என்று சொன்ன மோடி, வரும் 25 ஆம் தேதிக்கு பின், அதாவது ஐபிஎல் முடிந்தவுடன் பதவி விலகுவார் என்று தெரிகிறது. 


இதில் மேலும் ஒரு திருப்பமாக மத்திய அமைச்சர் சரத் பவார் மோடி பக்கம் உள்ளார். எனவே காங்கிரஸ் இதை கவனமாகத்தான் கையாளும் என்று சொல்கிறார்கள். மோடிக்கு ஆதரவாக, பட்டோடி, ரவி சாஸ்த்ரி, கவாஸ்கர் ஆகியோர் குரல் கொடுத்துள்ளனர். என்ன பயன், நினைத்ததை நடத்தி முடிப்பதில் காங்கிரசார் கில்லாடி என்று இலங்கை, குவாட்ரோச்சி பிரச்சனையிலே பார்த்தோமே. விளையாட்டு பற்றிய கட்டுரையில் அதிகமாக அரசியல் தான் எழுதி இருக்கிறேன். சூப்பர் ஸ்டார் முன்பு சொன்ன சொற்கள் ஞாபகம் வருகிறது "எங்கே பணம் நிறைய இருக்கிறதோ, அங்கே அரசியல் இருக்கும்". இது எவ்வளவு உண்மை. 


பிடிச்சிருந்தா ஓட்டு போடுங்க..
உங்க கருத்துக்களை பதிவு பண்ணுங்க..

2 comments:

4Tamilmedia said...

தொடர்பு கொள்ளுங்கள் நன்றி

Unknown said...

முதலில் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும்.மோடிகேர் வியாபாம் லலித் மோடியின் சகோதரர் திரு.சமீர் மோடி அவர்களால் 1996ம் ஆண்டில் தான் ஆரம்பிக்கப்பட்டது. லலித் மோடியின் தாத்தா குஜ்ரமோல் மோடி 1933ம் ஆண்டில் 400 ரூபாயில் SUGAR MILLஐ ஆரம்பித்தார். மாண்புமிகு முன்னாள் பாரத பிரதமர் திரு.பண்டித ஜவஹர்லால் நேரு ஐயா அவர்களால் பத்ம பூஷன் விருது பெற்றவர்.இரண்டாம் உலகப் போரின் சமயத்தில் இராணுவ வீரர்களுக்கு சர்க்கரை வழங்கப்பட்டது.பிறகு இவரின் பிள்ளை K.K. MODI அவர்களின் மூலம் காலத்திற்கு ஏற்றாற் போல் 95 நாடுகளுக்கு விஸ்தரிக்கப்பட்டது. 3வது தலைமுறையான திரு. சமீர் மோடி அவர்களால் 1996ல் ஆரம்பித்து சிறந்த முறையில் இந்தியாவில் செய்யகூடிய எளிய வியாபாரம் என்ற சர்டிபிகேட்டும் தரப்பட்டுள்ளது.நேரடி விநியோக முறை என்பது தயாரிக்கப்படும் இடத்திலிருந்து நேரடியாக வியாபார வாய்ப்பில் இணைந்த பிறகு தயாரிக்கப்படும் இடத்திலிருந்து நேரடியாக வழங்கப்படுகிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் மட்டுமே-2,10,000 பேரும்,124 கோடி ரூபாய் வருமானமும் ஈட்டி உள்ளது. மேலும் இதிலிருந்து கிடைக்கும் வருமானத்திற்கு வருமான வரி பிடித்தம் செய்த பிறகு தான் வருமானம் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். இதனால் அரசாங்கத்திற்கு எந்த இழப்பும் ஏற்படுவதில்லை... தயவு செய்து ஒரு நல்ல விஷயத்தை தவறான விஷயமாக மக்கள் மனதில் பதிய வைப்பது தவறு...இணையத்தில் சென்று Modicare company history என்று பார்க்கவும். நன்றி.

Related Posts Plugin for WordPress, Blogger...