விவேகானந்தரின் நறுக்

கடவுள் நாம் விரும்பியதை கொடுப்பவர் அல்ல, நமக்குத் தேவையானதை கொடுப்பவர்...

April 8, 2010

நெஞ்சு பொறுக்குதில்லையே....


நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலை கேட்ட மனிதரை நினைந்து விட்டாலே... என்று பாரதியார் பாடினார். சொல்ல முடியாத வேதனையை இந்த பாடல் மூலமாக வெளிப்படுத்தி இருப்பார். அப்படித்தான் இருந்தது எனக்கும் நக்சலைட்டுகளின் கொலைவெறி தாக்குதல்களை அறிந்தவுடன். கடந்த இரண்டாண்டுகளில் கிட்டத்தட்ட இருநூறுக்கும் மேற்பட்ட அப்பாவிகள் கொல்ல பட்டிருக்கிறார்கள்.


புரட்சியாளர்களை பார்த்து நாம் சிலாகிப்பது உண்டு. அவர்களின் வீரம் தீரம் இளைஞர்களின் மனதில் ஒரு வித எழுச்சியை ஏற்படுத்தி விடுகிறது. சே குவேராவின் வரலாறை படித்தபின் அவரது அபிமானி ஆகாதவர்கள் வெகு சிலரே இருக்க முடியும். ஏனென்றால் அவரின் போராட்ட நோக்கம் அப்படி. அவரிடம் ஒரு வித ஒழுக்கம் இருந்தது. நேர்மை இருந்தது. எனக்கு புரட்சியாளர்களின் செயல்களை பார்க்கும்போது அதன் பின்னால் இருக்கும் சோகம் கண்ணில் நிழலாடும். ஆனால் புரட்சி என்பது மக்களின் வாழ்கையை புரட்டி போட வேண்டும். ஆனால் அதற்க்கு பதிலாக மக்களை ஒரு பகடை காயாக, பணயமாக பயன் படுத்துவது புரட்சி ஆகாது. 

என்னதான் சமூக மாற்றம், மறுமலர்ச்சி, எழுச்சி, என்று வாய் கிழிய பேசினாலும், முடிவில் சமூகம் என்றால் என்ன என்று அறியாமலே முட்டாள்தனமாக நடந்து கொள்பவன் எப்படி புரட்சியாளனாவான்? சமூகம் என்றால் மக்கள் கூட்டம். அந்த மக்கள் கூட்டத்தை கொத்து கொத்தாக கொன்று குவித்து விட்டு, ஊனமாக்கி விட்டு, எந்த சமூகத்தை வாழ வைக்க போகிறீர்கள்? அன்று மாவோ ஒரு செம்படையை வழி நடத்தி சென்றார், வன்முறையை கையில் எடுத்தார் என்று கண்மூடி தனமாக அப்படியே பின்பற்றுவது அறிவுள்ள செயலா? உலக சரித்திரத்தை உற்று கவனித்தால், வாளை கையில் எடுத்து ரத்த சகதியில் நடந்து வந்து அரியணை ஏறிய எந்த அரசாங்கமும் சிறிது காலம் கூட நிலைத்து நின்றதில்லை. உணவுக்காக மானை ஒற்றுமையாக அடித்து கொன்று விட்டு பின் அந்த மானை உண்பதற்காக தனக்குள் அடித்துக்கொள்ளும் கழுதை புலிகளின் நிலைதான் உங்களுக்கும் ஏற்படும் என்பதை ஏன் உணர மறுக்கிறீர்கள்?

உன்னை சார்ந்தவர்கள் மட்டும்தான் மனிதர்களா? அவர்கள்தான் சமுதாயமா? உனக்கு மட்டும்தான் உறவுகள், உணர்ச்சிகள், கண்ணீர் இவையெல்லாம் உண்டா? நீ கொன்று குவித்தாயே அந்த காவல்துறை சகோதரனும் உன் மனித சமூகம்தானே? அவனுக்கும் மனைவி, மக்கள் எல்லாம் உண்டே? அவர்களுக்கும் உன்னை போல், உன் உறவினர்கள் போல் வாழ உரிமை உள்ளதே? சக உயிரினங்களிடம் இருப்பதை பிடுங்கி தின்று வாழும் மிருகத்துக்கும் உனக்கும் என்ன வேறுபாடு காண முடியும்? சுயநலவாதிகளிடம் இருந்து சமூகத்தை காப்பதற்காகவே அவதரித்த கடவுள்களே, உன் சமூகம் மட்டுமே தழைக்க வேண்டும் என்று நினைக்கும் உன்னைவிட பெரிய சுயநலவாதியை எங்கு காண முடியும்? முதலாளிகளிடம் இருந்து பாட்டாளிகளை காக்க  சிவப்பு சட்டை போட்ட உன்னை பார்த்து கேட்கிறேன், நீ கொன்றவர்களில் எத்தனை பேர் முதலாளிகள்? எதிர்க்க திராணி இல்லாமல் கோழை போல அப்பாவி மக்களை கொலை செய்வது எந்த வகையில் நியாயம்?  

அன்று அர்ஜுனன் போர்க்களத்தில் சோர்ந்து அமர்ந்ததின் காரணம், போரில்  ஜெயிப்பது தன் இனத்துக்காக. ஆனால் இங்கு தன் இனத்தையே அழித்து ஜெயிக்க வேண்டுமா? அப்படி ஜெயித்தால் யாருக்கு லாபம் என்ற எண்ணத்தில்தான். இதை எப்போது உணர்ந்து கொள்ள போகிறீர்கள்?

நமது அரசியல்வாதிகளையும் சும்மா சொல்லக்கூடாது. குழந்தைகளை பயமுறுத்த பூச்சாண்டி காட்டுவது போல, நக்சல்களை ஒழிப்போம் என்று வாய்சவடால் வேறு. முடிவெடுப்பதில் ஆமைவேகம், குளறுபடிகள் எல்லாம் சேர்ந்து நக்சலைட்டுகளுக்கு சாதகமாகி விடுகிறது. அவர்களுக்கென்ன ம...ரா போச்சு. குளிர் சாதன அறைக்குள் அமர்ந்து கொண்டு அறிக்கை விடலாம். இதுவே அந்த பகுதிகளில் தேர்தல் என்றால் சும்மா உட்கார்ந்து கொண்டிருப்பார்களா? சூறாவளி பிரச்சாரம், சுனாமி பிரச்சாரம் என்று கிளம்பி விடுவார்கள். அய்யா சாமிகளா! உங்கப்பன் பாட்டன் எல்லாம் செத்தால் ஒரு வாரம் லீவு விட்டு அரைக்கம்பத்தில்  உங்க கொடிய பறக்க விடுறீங்களே இப்ப செத்தவனும் உங்கள போல ஒரு மனுஷன்தான். அவனுக்கும் குடும்பம் இருக்கு. அவன் செய்த ஒரே தப்பு அரசாங்க வேலைக்கு ஆசைப்பட்டு காவல் துறைக்கு வந்தது. அதுக்கு நல்ல பலன் கிடைச்சிருக்கு.

உங்கள் இரங்கல்களும், கண்டனங்களும், அறிக்கைகளும் எந்த பலனும் அளிக்க போவதில்லை. தேவை உடனடி நடவடிக்கை மட்டுமே... 

பிடிச்சிருந்தா ஒட்டு போடுங்க..
உங்க கருத்துக்களை இங்கே பதிவு பண்ணுங்க..

2 comments:

ஹுஸைனம்மா said...

செய்தி கேட்டவுடனே ரொம்ப வருத்தமா இருந்தது. நல்ல கருத்துக்கள் எழுதியிருக்கீங்க. அம்பை விடுத்து எய்பவனை நோவதே இந்த ஸோ-கால்ட் புரட்சியாளர்களின் வேலையாக இருக்கிறது.

பாலா said...

@ஹுஸைனம்மா

என் வருத்தத்தின் வெளிப்பாடே இந்த பதிவு.

நன்றி ஹுஸைனம்மா

Related Posts Plugin for WordPress, Blogger...