விவேகானந்தரின் நறுக்

கடவுள் நாம் விரும்பியதை கொடுப்பவர் அல்ல, நமக்குத் தேவையானதை கொடுப்பவர்...

இது விளம்பரம் அல்ல....

April 26, 2010

சச்சினை எனக்கு பிடிக்காது...


வரலாறு என்பது நம் நாகரிகத்தின் வளர்ச்சியை மட்டுமல்ல, நம் பரிமாண வளர்ச்சியையும் பதிவு செய்யும் ஒரு பெட்டகம். வரலாறு நமக்கு பல பாடங்களை கற்று கொடுக்கிறது. நம்மால் அனுபவித்து பெற இயலாத விஷயங்களை மற்றவர்களின் வாழ்க்கையில் இருந்து பெற்றுக்கொள்ள உதவுகிறது. வாழ்க்கையில் வெற்றி பெற்ற பல பேரரசர்களையும், தத்துவ ஞானிகளையும், அரசியல்வாதிகளையும், விளையாட்டு வீரகளையும் பற்றி நாம் அறிந்து கொள்ள உதவுகிறது. நன்றாக கவனியுங்கள், வெற்றி பெற்றவர்களை.பெரும்பாலான வரலாற்று ஆசிரியர்கள் வெற்றி பெற்றவர்களின் வாழ்க்கையையே பதிவு செய்கிறார்கள். நாமும் வெற்றி பெற்றவர்களின் வாழ்க்கையையே படிக்க விரும்புகிறோம். தன் வாழ்க்கையில் எவ்வளவோ பெரும் வெற்றிகள் பெற்று,ஒரு சில தவறுகளுக்காக மறக்கப்பட்டவர்கள் சரித்திரத்தில் ஏராளம். சரி ஏன் இந்த நீண்ட லெக்சர்? சும்மா ஒரு பில்டப்புக்குத்தான். எனக்கு நிறைய நேரங்களில் ஒரு சந்தேகம் வரும். அது என்னவென்றால் நம் ரசனை சரி இல்லையோ என்று. ஏன் என்றால் நான் நல்லா இருக்கு என்று சொன்ன எதுவும் பெரும்பாலான மக்களுக்கு பிடிப்பதில்லை. நான் பிடிக்கவில்லை என்று சொன்னவைகளை மற்றவர்கள் கொண்டாடி இருக்கிறார்கள். என்ன நம்ப முடியவில்லையா? எனக்கு பிடிக்காத இரண்டு படங்கள், விண்ணைத் தாண்டி வருவாயா?, காதலுக்கு மரியாதை. இப்போது புரிகிறதா? இது மாதிரிதான். பல விஷயங்கள் உள்ளன. அது கிரிக்கெட்டிலும் உண்டு. உண்மையை சொல்லப்போனால் ஒரு காலத்தில் எனக்கு சச்சின் பிடிக்காது. அதற்கு காரணம் உண்டு. பிறகு சொல்கிறேன். என் நண்பர்கள் வட்டத்தில் எல்லோருக்கும் சச்சின் பிடிக்கும். ஆனால் எனக்கு பிடிக்காது. பிடிக்காது என்பதை விட ஈடுபாடு இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். என்னடா இவன், முந்தாநாள் எல்லோரையும் முந்திக்கொண்டு சச்சினின் பிறந்தநாள் வாழ்த்து பதிவை போட்டுவிட்டு இப்படி சொல்கிறானே என்று நினைக்கிறீர்களா? இந்த பதிவு அதைப்பற்றித்தான். எனக்கு மிகவும் பிடித்து மற்றவர்களால் ஒதுக்கப்பட்ட இரண்டு கிரிக்கெட் வீரர்கள் பற்றியது. (சில கருத்துக்கள் ஒருதலை பட்சமாக இருக்கலாம். அது என் சொந்த கருத்துக்கள்தான்)


நான் கிரிக்கெட் பார்க்க தொடங்கிய ஆண்டு 1991. அப்போது இந்திய அணி ஒரு மொக்கை அணியாக இருந்தது. அப்போது அணியின் தலைவராக இருந்தவர் நம்ம ஸ்ரீகாந்த் அவர்கள். அவரின் தலைமை அவ்வளவாக சரியில்லாததால் பெரும் பரபரப்புக்கிடையே கேப்டன் ஆனவர் நம்ம அசாருதீன். இவர் யார் என்று தெரியாதவர்களுக்கு, 1984 ஆம் ஆண்டு இந்திய அணியில் நுழைந்து, பதினைந்து ஆண்டுகள் விளையாடியவர். கிரிக்கெட் சூதாட்ட புகாரில் சிக்கி வாழ்நாள் தடை பெற்றவர். 


தொடர்ந்து பழைய பெருமைகள், கிழ சிங்கங்கள், அரசியல்வாதிகள் நிறைந்திருந்த ஒரு அணியை சுத்தமாக கழுவ வேண்டிய கால கட்டத்தில் இந்திய அணியின் தலைவர் ஆனவர் அசார். அப்போதெல்லாம் சச்சின் அவ்வளவாக பிரபலம் இல்லை. இப்போது ரைனா இருக்கிறாரே அதே போல் தான் சச்சின் அப்போது இருந்தார். துளியும் அச்சமும் கவலையும் இல்லாத ஒரு வீரராக இருந்தார். மற்றபடி அணியில் இருப்பவர்கள் எல்லாம் பெரிய தலைகள், கபில்தேவ், ரவி சாஸ்திரி, ஸ்ரீகாந்த், கிரண் மோர், சித்து, உள்ளிட்டவர்கள். சொல்லவே வேண்டாம் எவ்வளவு குழப்பம் இருந்திருக்கும் என்று ஆனால் வேறு வழி இல்லை. அனைவரும் ஓய்வு பெரும் நிலையில் இருந்ததால் அசார் காப்டன் ஆனார். பின் உலக கோப்பை போட்டிக்கு புறப்பட்ட இந்திய அணியில் இளைஞர்கள், அனுபவம் இல்லாத வீரர்கள் அதிகம் இருந்தனர். இதனால் உலக கோப்பையில் இந்தியா படு தோல்வி அடைந்தது. இவ்வாறு, தான் காப்டன் ஆனதில் இருந்து சோதனை மேல் சோதனை பல கண்டவர் அசார். இருந்தாலும் தளராத மன உறுதியுடன் அணியை கட்டமைக்கும் முயற்சியில் ஈடுபட்டு அதில் ஓரளவிற்கு வெற்றியும் பெற்றார். அணியில் சேரும்போது அனைவரும் சொங்கி ஆட்டம் ஆடிக்கொண்டிருக்கும் போது அதிரடியாக ஆடி எல்லோரையும் தன் பக்கம் திருப்பியவர் அவர். பின் காப்டன் ஆனதும் தன் பாணியை மாற்றி நிதானமாக ஆட தொடங்கினார். இதைத்தான் நம் டோனி பின்பற்றினார். அதே போல தேவை இல்லாமல் வாய் சவடால் விடுவது, அடுத்தவர்களை விமர்சிப்பது போன்ற செயல்களில் ஈடுபடாத காப்டன். பெரும்பாலும் மௌனமாகவே காட்சியளிப்பார். இன்றும் இந்தியா அசார் தலைமையில்தான் அதிக கோப்பை வாங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது. 


அசார் பற்றி சில சுவாரசியமான செய்திகள்...


கிரிக்கெட்டில் ஒவ்வொரு ஷாட்டுக்கும் ஒரு வீரர் முன்னுதாரணமாக இருப்பார். அதே போல் அசார் என்றல் ஞாபகம் வருவது அவரின் மணிக்கட்டு சுழற்சி. ஆசிய வீரர்களுக்கே உரிய இந்த ஆட்டத்தின் முன்னோடி அசார்தான். பின்னாளில் லட்சுமண் ஓரளவிற்கு இதை பின்பற்றினாலும், இன்றும் இவரது மணிக்கட்டை சுழற்றி மட்டையை வீசும் வேகம் யாருக்கும் வாய்க்கவில்லை. அதே போல, அந்த காலகட்டங்களில் இவரின் டைரக்ட் ஹிட் பிரசித்தம். பந்தை பறந்து தடுப்பது, டைரக்ட் ஹிட் போன்றவை முதலில் அசாருக்கு சொந்தமாக இருந்தது, பின் ஜாண்டி ரோட்ஸ் அவரின் இடத்தை பறித்துக்கொண்டார். இந்திய வீரர்களுக்கே உரிய ரெகார்ட் பட்டியல் இவருக்கும் உண்டு. இந்தியாவுக்கு அதிக ஒருநாள் போட்டிகளில் வெற்றி பெற்று கொடுத்தவர் என்ற சாதனை இன்னும் முறியடிக்கப்படவில்லை.


இந்திய அணிக்கே உரிய ஏற்ற இறக்கங்கள் இருந்தாலும், இவர் காப்டனாக பதவி வகித்த காலகட்டத்தில் இந்திய அணியில் பல மாற்றங்கள் உருவானது மட்டும் உண்மை. சச்சின் என்னும் மாபெரும் சகாப்தம் உருவானது இவர் காப்டனாக இருந்த பத்து ஆண்டுகளில் தான் (இவர்தான் அதிக நாள் காப்டனாக இருந்தவர்). அனில் கும்ப்ளே, ஜவகல் ஸ்ரீநாத், கங்குலி, திராவிட், லட்சுமண், ராபின் சிங் என இந்திய அணி நல்ல வீரர்களை உருவாக்கியதும் இவர் தலைமையில் தான். இந்திய அணி முதன் முதலில் 300 என்ற இலக்கை தொட்டதும் இவர் காப்டனாக இருந்த ஆட்டத்தில் தான். அந்த ஆட்டத்தில் இந்தியா 306 ரன்கள் எடுத்தது. கடைசி ஓவரில், அசார் அடித்த 24 ரன்கள்தான் இந்தியா 300 ஐ கடக்க உதவியது. வழக்கமாக எல்லா காப்டன்கள் மீதும் சுமத்தப்படும் அதே குற்றச்சாட்டு இவர் மீதும் வந்தது. மற்ற வீரர்களை மதிப்பதில்லை. தன்னிச்சையாக செயல்படுகிறார் என்று. மற்ற வீரர்கள் என்று சொன்னது சச்சினை மட்டும்தான். ஆனால் சச்சினை அசார் எப்போதுமே கீழ்த்தரமாக நடத்தியது இல்லை என்பதே உண்மை. ஏனென்றால் தன்னுடைய படைக்கு சச்சின் அர்ஜுனன் மாதிரி என்று அவருக்கு நன்றாக தெரியும். அசார் பெரும்பாலும் விமர்சனங்களுக்கு பதிலளிப்பதில்லை. மெளனமாக இருந்து விட்டார். சச்சினும் வழக்கம்போல் மௌனம் சாதிக்க, சொல்வதெல்லாம் உண்மை என்பது போல ஆகி விட்டது. இதில் அசாரின் அதிருப்தியாளர்களான கவாஸ்கர், ஸ்ரீகாந்த் போன்றோர் இன்னும் கொளுத்திப்போட்டனர். விளைவு கங்குலிக்கும் சச்சினுக்கும் இடையே உருவான அதே இடைவெளி அசாருக்கும் சச்சினுக்கும் இடையே விழுந்து விட்டது. இன்னும் இந்த தொழிலை நம் கவாஸ்கர் திறம்பட செய்து வருகிறார்.மேற்கிந்திய, ஆஸ்திரேலிய வேகங்கள் மிரட்டிய அந்த கால கட்டங்களில், ஹெல்மெட் இல்லாமல் அவர்கள் பந்தை எதிர் கொண்டவர். கணநேரத்தில் ப்ரண்ட் புட், மற்றும் பேக் புட் இரண்டையும் மாற்றி விளையாடுவதில் வல்லவர். சோர்வடையாமல் விளையாடுவது எப்படி என்று இவரிடம் கற்றுக்கொள்ளலாம். நான்கு, நான்கு ரன்களாக ஓடி எடுத்தாலும் அசராமல் விளையாடுவார். இப்படி சென்று கொண்டிருந்த அசார் வாழ்கையில் கரும்புள்ளியாக அமைந்தது மாட்ச் பிக்சிங் புகார். இதில் அசார் ஈடுபட்டதாக குரோனியே சொல்ல அசார் ஒப்புக்கொண்டார். இதனால் ஆயுள் தடை விதிக்கப்பட்டு, பின் நீக்கப்பட்டது. தற்போது பாராளுமன்ற உறுப்பினராக உள்ள அசாரின் கடைசி சில ஆண்டுகளை மட்டும் நீக்கிவிட்டு பார்த்தால் அவரின் கிரிக்கெட் வாழ்க்கை சிறப்பானதாகவே இருந்துள்ளது. 


என்னை முதன் முதலில் கவர்ந்த ஒரு கிரிக்கெட் வீரர் என்றால் அது அசார்தான். நான் சிறுவனாக இருந்த கால கட்டத்தில் அசாரின் பேட்டிங் ஸ்டைல், மேனரிசங்கள் எல்லாம் எனக்கு அத்துப்படி. நான் விளையாடும்போது கூட அசார் மாதிரியான ஸ்டைலையே பின்பற்றுவேன். என் காலகட்டத்தில் சச்சினை பின்பற்றாத ஒருவன் நானாகத்தான் இருக்கும். பீல்டிங்கிலும், அசார் மாதிரியே பந்தை மிதித்து மேலெழுப்பி பிடிப்பது, பந்தை உதைத்து ரன் அவுட் ஆக்குவது என்று அசாரின் ஸ்டைலை பின்பற்றுகிறேன் பேர்வழி என்று வாங்கி கட்டிக்கொண்டதுண்டு. சச்சினை ஆதரிப்பதாக சொல்லிக்கொண்டு அசாருதீனை வசை பாடியவர்கள் ஏராளம். என்னதான் சச்சின் ஒரு சாம்பியன் ஆட்டக்காரர் என்றாலும், அசாரை குறை சொல்ல முடியாது அல்லவா? இத்தனைக்கும் அவர் மீது எந்த பிக்சிங் புகாரும் வந்திருக்கவில்லை. இதனால் சச்சின் மீது ஒரு வகையான வெறுப்பு உருவாகிவிட்டது. இது நானாக வளர்த்துக்கொண்டதல்ல, மற்றவர்களின் செயலால் உருவானது. இதனால்தான் இன்றுவரை சச்சினை இந்திய அணியின் ஒரு வீரராக பார்க்க முடிகிறதே தவிர ஒரு ஆதர்ச நாயகனாக பார்க்க முடியவில்லை. ஆனால் இதில் பெரிய காமெடி என்னவென்றால், சச்சின் மீது என்று வெறுப்பு வர தொடங்கியதோ அன்றில் இருந்து அவர் புகழ் மட மட வென உயர தொடங்கியது. அசார் காணாமல் போனார். மறுபடியும் இரண்டாவது பத்தியை படியுங்கள். இருந்தாலும் அசார் மீது இருக்கும் அபிமானம் கொஞ்சம் கூட குறையவில்லை..அந்த இரண்டாவது வீரர் யாரென்று ஓரளவிற்கு கணித்திருப்பீர்கள், அவர் யார் என்று அடுத்த பதிவில் சொல்கிறேன்...


பிடிச்சிருந்தா ஓட்டு போடுங்க...
உங்க கருத்துக்களை இங்கே பதிவு பண்ணுங்க...

2 comments:

நாடோடித்தோழன் said...

அசார் பீல்டிங் செய்யும் போது அவரின் ஸ்டைலே தனி...
நிச்சயமாக அவர் ஹீரோ தான்...

சரவணகுமரன் said...

சச்சினை விடுங்க. அசார் பத்தி நீங்க சொன்னது எல்லாம் நல்லா இருந்தது.

Related Posts Plugin for WordPress, Blogger...