எனக்கு எந்த ஒரு தனி நபரையோ, அமைப்பையோ தாக்கி எழுத வேண்டும் என்று எப்போதுமே தோன்றியதில்லை. மனதில் சில ஆதங்கங்கள் யாரிடம் கேட்பது என்று தெரியவில்லை எழுதி தீர்க்கிறேன்.
நம் மக்கள் காட்டு மிராண்டிகள் மாதிரி, இன்னும் பழம் மூடநம்பிக்கைகளில் மூழ்கி கிடக்கின்றனர். உயிர் இல்லாத கல்லையும், ஒன்றுக்கும் உதவாத சாணியையும் கடவுள் என்கின்றனர். அம்மணமாக இருக்கும் மரத்துக்கு மஞ்சள் பாவாடை கட்டி மாரியம்மா என்கின்றனர். தான் படுகுழியில் விழுவதோடு தன் சந்ததியினரையும் படுகுழியில் தள்ளுகின்றனர். இவற்றில் இருந்தெல்லாம் வெளி வரவேண்டும் என்றால் அவர்களுக்கு பகுத்தறிவு வேண்டும். ஆம் எதையும் பகுத்து உண்மையை அறியும் அறிவு வேண்டும். அதுவே நம் இயக்கத்தின் கடமை. இப்படித்தான் தொடங்கி இருக்குமோ பகுத்தறிவாளர்களின் பயணம்..?
எது எப்படியோ எனக்கு தெரிந்தவரை ஒருவனை சுயமாக சிந்திக்க வைப்பதே பகுத்தறிவு. அடுத்தவனுக்காக நாம் சிந்திப்பது போன்ற கேவலமான செயல் எதுவும் இல்லை. அதற்க்கு பதிலாக அவனை கொலை செய்து விடலாம். பகுத்தறிவாளன் பிறரை சிந்திக்க வைப்பானே தவிர குழப்பி லாபம் அடைய மாட்டான்.
எதுக்குடா இவ்வளவு பெரிய வியாக்கியானம் என்கிறீர்களா?
விஜய் டிவியில் குற்றம் நடந்தது என்ன என்ற நிகழ்ச்சி பிரபலம். அதிலும் ரஜினி பாபாஜி குகை சென்ற பயண நிகழ்ச்சியால் அதன் டி ஆர் பி எகிறிவிட்டது. இதனால் கடுப்பான சன் குழுமம் அதே டைப் நிகழ்ச்சிகளை பல கோணங்களில் வெளியிட்டு வருகின்றன. இதென்ன பிரமாதம்? இதுதான் பரவலாக நடக்கிறதே என்கிறீர்களா? என் கேள்வி அதுவல்ல. முதல் இரண்டு பாராவை படித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். எனக்கு பொதுவாக இந்த நிகழ்ச்சிகள் பார்ப்பது பிடிப்பதில்லை. ஏன் என்று அப்புறம் சொல்கிறேன். அவ்வப்போது காதில் விழுந்ததை சொல்கிறேன். கடந்த சில நாட்களாக நிஜம் நிகழ்ச்சியில் ஒளிபரப்பான சம்பவங்களை பாருங்கள்..
சிறுவன் தலையில் விழுந்து மரக்கட்டையாக மாறிய பாம்பு, கல்யாண வரம் தரும் கோவில், பெண்களை சாட்டியால் அடித்து பேய் ஓட்டும் நிகழ்ச்சி, அர்த்த ராத்திரியில் நிர்வாண பூஜை... இன்னும் பல.
எனக்கு தெரிந்து சன்டிவியை பகுத்தறிவில் ஊறிய திரு முரசொலி மாறன் அவர்களில் புதல்வரால் நடத்தப்படுகிறது. இதற்க்கு கலைஞர் அவர்களின் பரிபூரண ஆசியும் உண்டு. ஆகவே ஒரு கட்சியின் செல்வாக்கால், அந்த கட்சியின் புகழ்பாடி மேலே வந்த ஒரு நிறுவனம் ஒளிபரப்பும் நிகழ்ச்சி ஒன்றின் அபத்தம் தான் இது. சரி ஒளிபரப்புவது மக்களிடம் ஒரு விழிப்புணர்வை ஏற்ப்படுத்ததான் என்றால் அதற்க்கு ஏன் அவ்வளவு பில்ட்அப். ஒரு மாதிரி திகில் பட இசை, படப்பதிவுகள் எல்லாம்? சொல்ல வந்ததை ஒரு ஆவணப்படம் மாதிரி காட்டி விட்டு பகுத்தறிவை பறை சாற்றலாமே? முடியாது. அப்படி செய்தால் பெரியார் திரைப்படத்திற்கு நேர்ந்த கதிதான் ஏற்படும். சன் டிவியை பொறுத்தவரை டிவி பார்க்கும் ஒவ்வொரு மனிதனும் சரியான மாங்கா மடையன். நாம் என்ன காட்டினாலும் பார்ப்பார்கள். அவர்களை சிந்திக்க விடாமல் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி அவர்களின் மூளையை மழுங்கடிக்க வேண்டும். இல்லை என்றால் வியாபாரம் நடக்காது. இதுதான் தாரக மந்திரம்.
ஒரு படத்தில் நம்பியார் சொல்வார் "அவன் மிருகமா இருக்கற வரைக்கும் தான் நாம எல்லாம் மனுசனா இருக்க முடியும்" அப்படின்னு..
மறுபடியும் ஞாபகபடுத்துகிறேன்.. எனக்கு தெரிந்தவரை ஒருவனை சுயமாக சிந்திக்க வைப்பதே பகுத்தறிவு. பகுத்தறிவாளன் பிறரை சிந்திக்க வைப்பானே தவிர குழப்பி லாபம் அடைய மாட்டான்.
எனக்கு இந்த மாதிரி நிகழ்ச்சிகள் பிடிப்பதில்லை என்று சொன்னதற்க்கான காரணமும் இதுதான். மக்களின் நலனுக்காக உருவாக்கப்பட்ட ஒரு இயக்கத்தின் கொள்கைகளை பின்பற்றி வரும் ஒரு தொலைக்காட்சி என்று தன்னை அடையாளப்படுத்திக்கொள்ளும் சன்டிவி தனக்கு வியாபாரம் என்று வரும்போது மட்டும் பகுத்தறிவு என்பது ஆள்பவர்களுக்கு மட்டும் இருக்க வேண்டும். மக்களுக்கு இருக்க கூடாது என்று நினைப்பது ஏன்?
அது சரி, பணத்துக்கு முன்னாடி பகுத்தறிவாவது? வெங்காயமாவது?
பிடிச்சிருந்த ஓட்டு போடுங்க
பிடிக்கலைனாலும் உங்க கருத்தை பதிவு பண்ணுங்க
0 comments:
Post a Comment