இது கண்டிப்பாக விமர்சனம் அல்ல. படத்தை பார்த்த பின் என்னுள் தோன்றியவையை எழுதுகிறேன்.
ரங்கநாதன் தெருவில் உள்ள விண்ணை முட்டும் கடைகளில் வேலை பார்க்கும் பணியாளர்கள் நம்மிடம் சிறிது முகம் சுளித்தால் கூட நான் எவ்வளவு
பெரிய ஆள்? உன்னை என்ன செய்கிறேன் பார்? என்று மார் தட்டி, அங்கு உள்ள சூப்பர்வைசரிடம் வத்தி வைப்போம். இனி அம்மாதிரி கடைக்கு செல்லும் போது நம்முடைய பார்வை கண்டிப்பாக அவர்களை ஊடுருவி செல்லும். இவர்களின் சிரிப்பு, கோபம், கண்ணீருக்கு பின் எத்தனை சோகம் உள்ளது என்று நம் மனது தேடும். தெருவோரங்களில், கூவி கூவி விற்கும் ஒவ்வொரு மனிதனிடமும் சொல்வதற்கு ஒரு கதை இருக்கும் என்று நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்? அப்படி வாழ்பவர்களின் கதையை சொல்வதுதான் அங்காடித்தெரு.
இந்த படம், பிழைப்பிற்காக சென்னை வந்து, அங்கு நடக்கும் அநியாயங்கள் பொறுக்காமல், மார்கெட் ரவுடிகளை அடித்து நொறுக்கி, சென்னை நகரத்தையே திருத்தும் ஒரு மாவீரனின் கதை அல்ல. வாழ்க்கை ஓட்டத்தில் எதையும் கவனிக்காமல் பணத்தை மட்டும் தேடி ஓடும் மனிதர்கள், எல்லாவற்றையும் பணமாக பார்த்து பழகிவிட்டார்கள். பெரும் வணிக நிறுவனங்களில் பணி புரியும் கடை நிலை பணியாளர்களின் வாழ்க்கை எப்படி இருக்கும்? அவர்களின் கனவுகள், சோகங்கள், ஆத்திரங்கள் இவை எல்லாம் அந்த கட்டிடத்தின் வண்ணங்களுகுள்ளே கரைந்து போயிருக்கின்றன. பணியாளனை மனிதனாய் பாராமல் மாட்டை விட கேவலமாக நடத்த செய்வது எது? பாழாய்போன பணம். அந்த பணத்தையும் தாண்டி இன்று மறக்கப்பட்டிருக்கும் மனித உணர்வுகளின் மகத்துவத்தை சொல்லும் உன்னதமான படம். படத்தின் கதையை கூறபோவதில்லை. வழக்கமான காதல் கதைதான். ஆனால் கதை சொல்லப்பட்ட களம் தமிழ் சினிமாவுக்கு புதிது. படத்தில் சின்ன சின்ன பாத்திரங்கள் கூட நேர்த்தியாக செதுக்கப்பட்டிருக்கின்றன. கதாநாயகன் முகத்தில் தமிழக தென்மாவட்ட இளைஞனின் கோபம், வறுமை, அப்பாவித்தனம், பாசம் மிளிர்கின்றன. புது முகமாம். தெரியவில்லை. அஞ்சலி வாழ்ந்து காட்டி உள்ளார். பாண்டி நல்ல நண்பனாக வருகிறார். இப்படி படத்தில் எல்லோருமே அவரவர் பாத்திரங்களை திறம்பட செய்திருக்கிறார்கள். படத்தில் சறுக்கல்கள் இல்லை என்று சொல்ல முடியாது. ஆனால், அவற்றை பார்க்க தேவை இல்லை.
படத்தை உலக சினிமா பார்வையில் பார்ப்பது எல்லாம் எனக்கு தெரியாது. வெயில் படம் பார்த்த பின் அதே மாதரியான ட்ரீட்மெண்டுக்கு என்னை தயார் படுத்திக்கொண்டுதான் படம் பார்க்க சென்றேன். நுண்ணரசியல், கலை பார்வை எல்லாம் எனக்கு தெரியாது. நான் ஒரு கடை நிலை ரசிகன் தான். என்னை அறியாமல் ஒரு சில காட்சிகளுக்கு கைதட்டினேன், அஞ்சலி தனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவத்தை மென்று முழுங்கியபடி வாடிக்கையாளரிடம் பேசும் காட்சி, முன்னாள் விபச்சாரி, குள்ளமான கணவனுக்கும் தனக்கும் பிறந்த ஊனமான குழந்தையை பார்த்து "நல்ல வேளை ஊனமா பிறந்தது. இல்லைனா வேற எவனுக்கோ பிறந்ததுன்னு சொல்வாங்க" என்று சொல்லும் காட்சி.
ஒவ்வொரு காட்சியிலும் இயக்குனர் தெரிகிறார். படத்தில் கலை இயக்குனர் பாராட்டப்பட வேண்டியவர். ரங்கநாதன் தெரு உண்மையா பொய்யா என்று தெரியவில்லை. பாடல்கள் மனதை வருடுகின்றன. படத்தில் குறை என்றால் பின்னணி இசை மட்டுமே. பதிவர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள். இந்த படத்தை விமர்சிக்கிறேன் என்று கொத்து பரோட்டா போட்டு விடாதீர்கள். இம்மாதிரி படங்கள் வெற்றி பெறவேண்டும். இல்லையேல், வேட்டைக்காரன்கள் நம் தலை எழுத்தாகி விடும்.
பெருமை பட சொல்லுவேன். வசந்த பாலன் எங்க ஊர்காரர்.
பிடிச்சிருந்தா ஓட்டு போடுங்க..
உங்க கருத்துக்களை இங்கே பதிவு பண்ணுங்க...
3 comments:
விருதுநகர்க்காரரா?
நான் மிகவும் எதிர்பார்த்த படம்.. சீக்கிரம் பாக்கனும்
இப்போதைக்கு நான் இதைப் படிக்கப் போவதில்லை. இருக்குமென ஒரு பயம் தான்.
டிரைலர் என்னை மிகவும் கவர்ந்தது. கண்டிப்பாக பார்க்க வேண்டும். வசந்தபாலன் ஏமாற்ற மாட்டார் என நம்புகிறேன். :)
திருத்தம்:
Spoiler இருக்குமென ஒரு பயம் தான்.
Post a Comment