விவேகானந்தரின் நறுக்

கடவுள் நாம் விரும்பியதை கொடுப்பவர் அல்ல, நமக்குத் தேவையானதை கொடுப்பவர்...

இது விளம்பரம் அல்ல....

October 4, 2011

பொது தரிசனம்... 'சிறப்பு' தரிசனம்

இந்த ஆண்டு எங்கள் மாவட்டத்தில் பருவமழை சிறப்பாக பெய்து வருகிறது. அதிலும் கடமுடா என்று இடி மின்னல் வேறு. கடந்த வாரம் விழுந்த ஒரு இடியில் என் மோடம் உயிரிழந்து விட, எனது லேப்டாப் கோமா ஸ்டேஜுக்கு போய்விட்டது. இப்போது சரியாகி விட்டாலும் மோடம் பிரச்சனை தீர்ந்த பாடில்லை. மேலும் பணியிடத்தில் வேலை அதிகம் என்பதால், சுத்தமாக பதிவுலகம் பக்கம் தலைக்காட்டவே முடியவில்லை. பிற நண்பர்களின் பதிவுகளையும் படிக்க முடியவில்லை. நண்பர்கள் மன்னிப்பார்களாக. 


பிறப்பால் ஒரு இந்து என்பதால் இந்து கோயில்களுக்கு அதிகம் செல்லும் வாய்ப்பை பெற்றிருக்கிறேன். மேலும், பிற மத வழிபாட்டு தலங்களுக்கு அதிகம் சென்றதில்லை. ஆகவே இந்து கோயில்களை வைத்தே இந்த பதிவை எழுதுகிறேன். ஒரு காலத்தில் திருப்பதி கோவிலில் மட்டுமே இருந்த முறை, தற்போது பெரும்பாலான கோயில்களில் வந்துவிட்டது. அது சாமி தரிசனத்துக்கு வரும் பக்தர்களின் கூட்டத்தை கட்டுப்படுத்த, விதவிதமான வரிசைகளை அமைத்து, ஒவ்வொரு வரிசைக்கும் ஒரு கட்டணத்தை நிர்ணயித்து, அவரவர் வசதிக்கேற்ப விரைவாகவோ, சாவகாசமாகவோ சாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்திருக்கும் முறை. 


சமீபகாலமாக இந்த முறை, மதுரை மீனாட்சி அம்மன் கோவிலிலும், திருச்செந்தூர் முருகன் கோவிலிலும் கூட நடைமுறைக்கு வந்து விட்டது. ஒரு காலத்தில், திருச்செந்தூர் சென்றால் ஒரே நாளில் மூன்று அல்லது நான்கு முறை சாமி தரிசனம் செய்து விடலாம். இப்போதெல்லாம் ஒரு முறை சாமி தரிசனம் செய்வதற்கே வெகு நேரம் ஆகி விடுகிறது. இதன் முக்கிய காரணமாக, ஒரு குறிப்பிட்ட தினத்தில், நிறைய மக்கள் கோவிலுக்கு வருவதால், அந்த கூட்டத்தை சமாளிக்கும் விதமாக இந்த மாதிரி நீண்ட வரிசைகளை அமைத்து, அதற்கு கட்டணம் வசூலிப்பதாக நாம் நினைத்து கொண்டிருக்கிறோம் அல்லவா.  அது ஓரளவுக்கு உண்மைதான். விசேச நாட்கள் மட்டுமல்லாது, இப்போதெல்லாம் எல்லா தினங்களிலுமே கோவில்களில் கூட்டம் பெருகி விட்டது. 


ஆனால் இந்த ஆண்டு, ஒரு கோவில்களில் நான் கண்ட விஷயத்தை சொல்கிறேன். கோவிலுக்குள் நுழைந்தவுடனேயே மூன்று விதமான வரிசைகள் தென்பட்டன. பொது தரிசன வரிசை, பத்து ரூபாய் வரிசை மற்றும் 100 ரூபாய் வரிசை. இதில் 100 ரூபாய் வரிசையில் கூட்டம் அவ்வளவாக இல்லை. ஆனால் முதல் இரண்டு வரிசைகளில் சம அளவிலான கூட்டம் இருந்தது. ஆனால் வரிசையின் நீளத்தை வைத்து பார்த்தால், பத்து ரூபாய் வரிசை சீக்கிரம் 'கடவுளை' அடைந்து விடும் தோன்றியதால் அதில் சேர்ந்து கொண்டோம். இரண்டு வரிசைகளும் ஒரு வளைவில் திரும்பின. திரும்பியவுடன்தான் தெரிந்தது, கோவில் நிர்வாக எவ்வளவு பெரிய தில்லாலங்கடி வேலை செய்திருக்கிறது என்று. அந்த வளைவுக்கு அப்பால் நீளும் வரிசையில், பொது தரிசன வரிசையில் சென்றவர்கள், எங்களைவிட 15 நிமிடம் முன்பாகவே தரிசனம் செய்து விட்டார்கள். எங்கள் வரிசை பாம்பு போல வளைந்து வளைந்து சென்று இறைவனை அடைந்தது. 


தொடக்கத்தில் பொது தரிசன வரிசை மிக பெரியதாக இருப்பது போல ஒரு மாயையை ஏற்படுத்தி, எல்லோரையும் பத்து ரூபாய் வரிசைக்கு வர வைத்திருக்கிறார்கள். நாமும் "பத்து ரூபாய்தானே?" என்று கடவுளை சீக்கிரம் பார்க்கவேண்டும் என்ற ஆவலில் இந்த வரிசையில் வந்து ஏமாந்து விடுகிறோம். எவ்வளவு பெரிய வியாபார தந்திரம் பாருங்கள். பிறகு, "சரி நாம கொடுத்த காசு சாமிக்குத்தானே போய் சேர்ந்திருக்கு" என்று மனதை தேற்றிக்கொண்டு வெளியே வந்தோம். இந்த மாதிரி தலங்களுக்கு செல்லும்போது என் மனதை அரிக்கும் ஒரு கேள்வி. அதென்ன, பொது தரிசனம், சிறப்பு தரிசனம்? அவசர தரிசனம் என்றுதானே இருக்கவேண்டும்? காசு கொடுத்தால் அவருக்கென்ன கடவுளே நேரில் வந்து ஸ்பெஷல் தரிசனம் கொடுத்து விடப்போகிறாரா? அவருக்கு வேறு வேலை இருப்பதால், காசு கொடுத்து கடவுளை அவசரமாக பார்த்து விட்டு செல்கிறார். அதை அவசர தரிசனம் என்று சொல்வதுதானே சரி? இப்போதெல்லாம் பல கோவில்களில் பொது தரிசனமே குறைந்த பட்சம் 5 ரூபாய் கொடுத்தால்தான் கிடைக்கிறது. 


என்னை பொறுத்தவரை, கோவிலுக்கு செல்வதானால், முதலில் கால அட்டவணை போட்டு கொண்டு செல்லக்கூடாது. அவசரமாக கடவுளை பார்ப்பதற்கு, பார்க்காமலேயே இருந்து விடலாம். இல்லை என்றால், கூட்டம் இல்லாத தினமாக பார்த்து, கூட்டம் இல்லாத நேரங்களில் கோவிலுக்கு செல்லலாம். மேலும் பலர், படித்தவர்களாக இருந்தாலும், குறுக்கே புகுவதை பெரிய சாகசமாக நினைப்பார்கள். கோவிலுக்கு செல்வது என்பது, முண்டி அடித்துக்கொண்டு, கடவுளை பார்ப்பதல்ல. நிதானமாக சென்று, மன பாரங்களை இறக்கி வைத்துவிட்டு, நிம்மதியாக வீடு திரும்புவது. கடவுள் முன் அனைவரும் சமம் என்பதை நிலைநாட்டும் விதமாக இந்தமாதிரி வரிசை முறைகளை கோவில் நிர்வாகங்கள் நீக்கி விடுவதே சிறந்தது. ஏனென்றால் எவ்வளவு பணம் இருந்தாலும், இந்த மாதிரி அவசர தரிசன வரிசை இல்லாவிட்டால் பண வசதி படைத்தவர்களும், பொது தரிசன வரிசைக்கு வந்து விடுவார்கள். மாறாக, மாற்று திறனாளிகள், முதியவர்கள், கர்ப்பிணி பெண்கள் ஆகியோர் விரைவாக தரிசனம் செய்வதற்கு, தனி வரிசைகள் அமைக்கலாம். இவை என் கருத்துக்கள் மட்டுமே. இது குறித்து உங்களுக்கு தோன்றுவதை சொல்லுங்கள். 

உங்களுக்கு பிடிச்சிருந்தா ஓட்டு போடுங்க... 
உங்க கருத்துக்களை இங்கே பதிவு பண்ணுங்க. 

19 comments:

MANO நாஞ்சில் மனோ said...

மாற்று திறனாளிகள், முதியவர்கள், கர்ப்பிணி பெண்கள் ஆகியோர் விரைவாக தரிசனம் செய்வதற்கு, தனி வரிசைகள் அமைக்கலாம். இவை என் கருத்துக்கள் மட்டுமே. இது குறித்து உங்களுக்கு தோன்றுவதை சொல்லுங்கள். //

உங்கள் மேலான கருத்துதான் எனது கருத்தும்.

MANO நாஞ்சில் மனோ said...

முதல் தரிசனம் நானே....

vedanthaangal said...
This comment has been removed by the author.
K.s.s.Rajh said...

என்ன கொடுமை சார் காசு கொடுத்துதான் கடவுளையே தரிசிக்கனுமா?

vedanthaangal said...
This comment has been removed by the author.
!* வேடந்தாங்கல் - கருன் *! said...

பொது தரிசன வரிசைக்கு வந்து விடுவார்கள். மாறாக, மாற்று திறனாளிகள், முதியவர்கள், கர்ப்பிணி பெண்கள் ஆகியோர் விரைவாக தரிசனம் செய்வதற்கு, தனி வரிசைகள் அமைக்கலாம்.// இது மாதி செய்தால் முகனும் நன்றாக இருக்கும்..

மாய உலகம் said...

மாற்று திறனாளிகள், முதியவர்கள், கர்ப்பிணி பெண்கள் ஆகியோர் விரைவாக தரிசனம் செய்வதற்கு, தனி வரிசைகள் அமைக்கலாம்//

இதை அமைத்தால் நல்லது தான் நண்பா

அவசரமாக கடவுளை பார்ப்பதற்கு, பார்க்காமலேயே இருந்து விடலாம். //

ஆண்டவர் என்ன அரசியல்வாதியா லஞ்சம் கொடுத்துவிட்டு.. உடனே சென்று பார்க்க... அனைவரும் சமம் என்பது போல் இது போல் கட்டண வசூல் முறையை முதலில் நீக்க வேண்டும்.. மட்டுமல்லாமல் கோவிலில் வரும் பெரும்பாண்மை பணம் கோவிலுக்கே செலவு செய்து.. இது போல் இட நெருக்கடியை சீர் செய்ய செலவு செய்யலாம்... மக்களுக்கும் ஆண்டவரை தரிசிக்க வந்து..மன நிம்மதியுடன் செல்லும் திருப்தி ஏற்படும்...எல்லாம் அரசாங்கமே எடுத்துக்கொண்டால் என்ன சொல்வது. கருவரையை நோக்கி தரிசிக்க செல்லும் வரிசையை திட்டம் போட்டு மக்களுக்கு ஏதுவாக அமைவது போல் முறைபடுத்த முயலலாம் அரசு.. செய்யுமா வருமானத்திலயே குறியாக இருக்கும்.. மக்கள் எண்ணத்திற்கு என்னைக்கு செவி சாய்ப்பார்கள்... மனதில் தோன்றும் ஆலயம் பற்றிய ஆதங்கத்தை அழகாக பகிர்ந்தமைக்கு நன்றி நண்பா

r.v.saravanan said...

மாறாக, மாற்று திறனாளிகள், முதியவர்கள், கர்ப்பிணி பெண்கள் ஆகியோர் விரைவாக தரிசனம் செய்வதற்கு, தனி வரிசைகள் அமைக்கலாம்.


கண்டிப்பாக நண்பரே

Nirosh said...

ம்ம்ம் நல்ல பயனுள்ள பதிவு..!

செங்கோவி said...

ஆமாம், அவசர தரிசனம் - விரைவு தரிசனம் என்பதே சரியான வார்த்தைகளாக இருக்கும்..

நல்ல மனக்குமுறல்!

இரவு வானம் said...

கடவுளை பார்க்ககூட காசு வசூல் பண்ணுறத என்னன்னு சொல்ல, நீங்க சொன்ன மாதிரி மாற்று திறனாளிகள் முதியோர்களுக்கு மட்டும் வேணா தனி வரிசை செய்து கொடுக்கலாம்

Karthikeyan said...

//மாற்று திறனாளிகள், முதியவர்கள், கர்ப்பிணி பெண்கள் ஆகியோர் விரைவாக தரிசனம் செய்வதற்கு, தனி வரிசைகள் அமைக்கலாம்// இது நல்ல யோசனைதான்.. ஆனால் காசு மட்டுமே பிரதானம் என நினைக்கும் அறநிலயத்துறை அறமின்றி நடந்து வருகின்றனவே நண்பரே.. அறுபடை வீடுகளுலும் கூட்டம் அள்ளுகிறது.. மாற்று யோசனைகள் செய்ய வேண்டிய காலம் இது. நல்ல பதிவு

ரெவெரி said...

ஆலயம் பற்றிய ஆதங்கத்தை பகிர்ந்தமை நன்று...

’’சோதிடம்’’ சதீஷ்குமார் said...

எந்த கோயிலுக்கு போனாலும் வரிசையா நிக்க வெச்செ கொல்றானுக..இனிமே கோயிலுக்கு வருவியாங்கிற மாதிரி..இனிமே நாமே கோயில் கட்டி கும்பிட்டுக்க வேண்டியதுதான்..

Dr. Butti Paul said...

என்ன செய்ய, இதுதான் நிதர்சனம்.. நல்ல பகிர்வு நண்பரே.

செவிலியன் said...

கொடும...கொடும...ன்னு கோயிலுக்கு போனா....அங்க இவ்வளோ கொடுமயா..???
உங்கள் கருத்து செயல்படுத்த வேண்டிய ஒன்று....செயல்படுத்தக்கூடிய ஒன்று...

பாலா said...

தங்களது மேலான கருத்துக்களை தெரிவித்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

அபிமன்யு said...

http://abimanyuonline.blogspot.com/2011/03/blog-post_16.html

விஜயன் said...

நல்ல சிந்தனை தோழா
கடவுள் காசுக்கு காட்சிப்பொருள் ஆகி விட்டார்...

Related Posts Plugin for WordPress, Blogger...