"வாயை அடக்கலாம் வாங்க", என்று சொன்னவுடன் ஏதோ டயட் விஷயம் என்று நினைத்து விடாதீர்கள். இது வேற மேட்டர். "உலகத்திலே மோசமான ஆயுதம் எது? மனிதனுடைய நாக்குதானது", என்று எம்ஜியாரும் கலைவாணரும் ஒரு படத்தில் பாடுவார்கள். அது மிகச்சரி. அவசரத்தில் உதிர்த்துவிட்ட வார்த்தைகள், இடம் தெரியாமல் பேசிவிட்ட வார்த்தைகள், நிலைமை தெரியாமல் பேசும் வார்த்தைகள் ஏற்படுத்தும் காயங்களும், பிரச்சனைகளும் ஏராளம். அவற்றை கையாள்வது பற்றி எனக்கு தெரிந்த சில விஷயங்களை சொல்கிறேன்.
கோபத்தில் உதிர்த்து விட்ட வார்த்தைகள்:
ஒரு சிலர் கோபத்தில் என்ன பேசுகிறோம் என்று தெரியாமல் பேசிவிடுவார்கள். பிறகு அப்படி பேசியதை நினைத்து வருத்தப்படுவார்கள். இந்த மாதிரியான வார்த்தைகள் ஏற்படுத்தும் காயங்கள் மிகப்பெரியவை. ஒரு நட்போ உறவோ நிரந்தரமாக பிரிந்து விடும் அளவுக்கு நிலைமை மோசமாகி விடலாம். இதற்கு முதலில் கோபத்தை அடக்கலாம் வாங்க பகுதியை படித்துப்பாருங்கள். மெல்ல மெல்ல கோபத்தை உங்கள் கட்டுக்குள் கொண்டு வந்த பிறகு தாமாகவே அந்த மாதிரி வார்த்தைகளை களைந்து விடலாம்.
இடம் தெரியாமல் அல்லது நிலைமை தெரியாமல் பேசுவது:
இது பொதுவாக நடக்கக்கூடியது. கோபத்தில் பேசும் சொற்களாவது நட்பை பிரித்துவிடும். ஆனால் இடம் தெரியாமல் பேசும் வார்த்தைகள் உறவை பிரிக்காது. ஆனால் எதிரில் இருப்பவருக்கு பெரும் சங்கடத்தை கொடுத்துவிடும். இவ்வகை பேச்சுக்கள்தான் மிக ஆபத்தானவை. இதிலும் இரண்டு பிரிவு உண்டு. தெரியாமல் பேசி விடுவது. அல்லது வேண்டுமென்றே குத்தலாக பேசுவது.
குத்தலாக பேசும் மக்களை ஒன்றும் செய்ய இயலாது. அவர்களின் மனதில் வன்மம் ஊறிக்கிடக்கிறது என்று அர்த்தம். அல்லது ஒரு வகையான சாடிஸ்ட் மனோ நிலையில் இருப்பவர்கள் என்று அர்த்தம். மற்றவர்களை மட்டம் தட்டி விடவேண்டும் அல்லது அவர்களுக்கு ஒருவித சங்கடத்தை கொடுத்து, அவர்கள் தவிப்பதை ரசிக்க வேண்டும். உதாரணமாக ஒரு கல்யாணவீட்டில் வைத்து "சார் உங்க பையன் +2 பெயிலாமே!" என்று வேண்டுமென்றே கேட்டு அவர் அவமானத்தில் நெளிவதை கண்டு ரசிப்பது. இம்மாதிரியான மனநிலை இல்லாமல் இருக்க வேண்டும் என்பதே என் எண்ணம். உங்கள் விரோதியாகவே இருந்தாலும் ஒரு பொது இடத்தில் வைத்து அவர்களை மட்டம் தட்டி பேசி நீங்கள் உங்களை மேதை என்று காட்டிக்கொள்ள நினைக்கலாம். ஆனால் அது ஒருபோதும் நடக்காது. இருபது சதவீதம் மக்கள் வேண்டுமானால் உங்களை நல்லபடி நினைப்பார்கள். மீதி எண்பது சதவீதம் அங்கே அவமானப்படுத்த பட்டவரைத்தான் நல்லவராக நினைப்பார்கள். (வைகோ கதை ஒரு உதாரணம்). மேலும் ஒருவரை அவமானப்படுத்தி விடவேண்டும், அல்லது மட்டம் தட்டி விடவேண்டும் என்ற முனைப்பில் இருப்பவரது முகத்தை உற்று கவனித்தால், அவர் எவ்வளவு அழகாக இருந்தாலும், அதை மீறி ஒரு குரூரம் தென்படும். அதை பார்த்த மாத்திரத்திலேயே அவர்மீது நமக்கு கசப்பான உணர்வு வரும். அதே போல்தானே நம் மீதும் மற்றவருக்கும் இருக்கும்? மேலும் இது ஒரு பசி மாதிரி. அப்போதைக்கு அடங்கி விடும். பின்னர் எப்போதும் அவரை மட்டம்தட்ட வேண்டும் என்ற முனைப்பு உருவாகி, உங்களை ஒரு சைக்கோ ரேஞ்சுக்கு எல்லோர் மனதிலும் உருவகப்படுத்தி விடும்.
இதில் உள்ள மற்றொரு வகை தெரியாமல் பேசி விடுவது. அதாவது நாம் வேறு ஏதோ நோக்கத்தில் பேசியது, வேறு அர்த்தத்தில் புரிந்து கொள்ளப்பட்டுவிடும். இல்லை, இடம் பொருள் தெரியாமல் பேசி அங்குள்ள கலகல சூழ்நிலையை இறுக்கமாக மாற்றிவிடுவோம். உதாரணமாக என் உறவினர் ஒருவர் குழந்தை இல்லாத காரணத்தால் ஒரு பெண் குழந்தையை தத்து எடுத்து வளர்த்து வந்தார். இது அந்த குழந்தைக்கு அரைகுறையாகத்தான் தெரியும். ஒரு பொது நிகழ்ச்சியில் வைத்து, "என்னப்பா உன் தத்து பிள்ளை எப்படி இருக்கா?" என்று ஒருவர் கேட்டுவிட்டார். பெற்றவர்களுக்கோ சங்கடம். அந்த குழந்தை மனதிலோ அவமானம் கலந்த குழப்பம். அந்த இடமே மயான அமைதி ஆகி விட்டது. அடுத்து என்ன பேசுவது என்றே யாருக்கும் தெரியவில்லை. சில நேரங்களில் இப்படியும் நடந்துவிடும். "நான் இயல்பாத்தானே கேட்டேன்? அவர்களை காயப்படுத்தும் நோக்கத்தில் நான் கேட்கவில்லையே?" என்று காரணம் சொன்னாலும், நடந்தது அதுதானே?
ஒரு சிலர் நிலைமை புரியாமல் பேசிக்கொண்டிருப்பர். பொது இடத்தில் ஒரு பெண் அமைதியாக இருப்பாள். "என்னம்மா அமைதியா இருக்க?" என்று கேட்டால், "ஒன்றும் இல்லை." என்று சொல்வாள். விடாமல், "இல்லை நீ இப்படி இருக்கமாட்டியே?" என்று கேட்பார்கள். அவளின் அம்மா முந்திக்கொண்டு, "அவளுக்கு உடம்பு கொஞ்சம் சரியில்லை." என்று சொல்வார். இவர்கள் அத்தோடு விட வேண்டியதுதானே? "உடம்புக்கு என்ன?" என்று நொண்டி நொண்டி கேட்பார்கள். பொது இடத்தில் சொல்ல கூடாத விஷயமாக இருப்பதாலேயே மென்று விழுங்குகிறார்கள். அதைக்கூட புரிந்துகொள்ளாமல் முட்டாள்தனமாக தொடர்ந்து பேசிக்கொண்டிருக்கலாமா?
எப்படித்தான் பேசுவது?
வார்த்தைகளை வடிகட்ட பழகிக்கொள்ளவேண்டும். அதாவது எந்த ஒரு இடத்திலும் தேவை இல்லாமல் ஒருவார்த்தை கூட பேசக்கூடாது என்று முடிவுகட்டிக்கொள்ளுங்கள். படிப்படியாக அதை பழகுங்கள். அதற்காக உம்மணாம் மூஞ்சியாக இருங்கள் என்று அர்த்தம் இல்லை.
ஒரு நாலுபேர் பேசிக்கொண்டிருக்கும் இடத்திற்கு செல்கிறீர்கள் என்றால் அவர்கள் எதைப்பற்றி பேசுகிறார்கள், எந்த மனநிலையில் பேசுகிறார்கள் என்று
புரியும்வரை பேசத்தொடங்காதீர்கள். சில நேரம் காமெடி பீஸ் ஆகிவிடுவீர்கள். சிலநேரம் சிவபூஜை கரடி ஆகி விடுவீர்கள்.
எதிராளிகளின் மனநிலையை புரிந்து கொண்டு பேசுவது கொஞ்சம் கடினமான விஷயம்தான். ஆகவே முதலில் கவனிக்க பழகுங்கள். விவாதமோ அல்லது சாதாரண பேச்சோ முதலில் எதிராளியை பேசவிடுங்கள். பின்னர் அதற்கேற்றார்போல உங்கள் சொற்களை அமைத்துக்கொள்ளலாம். A good speaker is always a good listener.
எதிரில் இருப்பவர் நல்ல மனநிலையில் இருக்கிறாரா அல்லது கவலையுடன் இருக்கிறாரா என்று கண்டுபிடிப்பதும் முக்கியம். நாம் பேசப்போகிறவர் நமக்கு மிக நெருக்கமானவர் என்றால், அவர் நடவடிக்கையில் தெரிந்துவிடும். ஒருவர் குழப்பமாக இருந்தால் கண்களில் உள்ள Pupil சுருங்கி விடும். சரி அவ்வளவு நெருக்கமாக கவனிக்க முடியாதென்றால், அவரது கண்கள் நிலை கொள்ளாமல் அலைபாயும், இல்லை வேறு ஏதாவது திசையை நோக்கி நிலைத்திருக்கும். அதைவைத்து கண்டுபிடித்துவிடலாம்.
தன்னை கவனிக்கும் பழக்கம் வேண்டும். இது மிகவும் கடினமான செயல் ஆனால் பழகிவிட்டால் நீங்கள் நல்ல பண்பாளராக அனைவராலும் போற்றபடுவீர்கள். அதாவது உங்கள் நடவடிக்கையை ஒரு மூன்றாவது மனிதன் போல இருந்து கவனிக்க தொடங்கவேண்டும். நீங்கள் பேசும் வார்த்தைகள், முகபாவனைகள் ஆகியவற்றை கவனிக்க வேண்டும். பிறகு அவற்றை பற்றி சிந்தித்து பார்க்கவேண்டும். நாம் பேசிய தவறான வார்த்தைகளை அடையாளம் கண்டு இனி அவ்வாறு பேசக்கூடாது என்று முடிவுகட்டிக்கொள்ள வேண்டும். நாளடைவில் இந்த கவனிக்கும் பழக்கும் மெருகேறி, பேசும்போதே நல்ல வார்த்தைகளை அந்த மூன்றாவது மனிதன் தேர்ந்தெடுத்து தரும் அளவிற்கு மாறிவிடுவோம். நம் ஒவ்வொரு நடவடிக்கையும் அந்த மூன்றாவது மனிதனின் மேற்பார்வையில் நடப்பதால் தவறு நிகழாது.
நெருக்கமாக உரிமையாக திட்டிக்கொள்பவர்கள், உண்மையிலேயே புரிந்துணர்வு உடையவர்களுக்கு மேலே சொன்னவை ஒத்துவராது. ஆனால் மேலே உள்ளவற்றை பின்பற்றினால் கூடிய சீக்கிரம் அனைவரயும் புரிந்து கொள்ள உதவும்.மனதில் எப்போதும் நல்ல எண்ணங்களையே நினைத்திருந்தால் மேலே கூறி இருக்கும் பயிற்சிகள் எளிதில் வசமாகும்.
உங்களுக்கு பிடிச்சிருந்தா ஓட்டுபோடுங்க..
உங்க கருத்துக்களை இங்கே பதிவு பண்ணுங்க...
23 comments:
first
அருமையான விஷயத்தை பதிவாக்கியதற்கு நன்றிகள்..
அருமையான பதிவு .. நிறைவான பதிவு நண்பரே..
”யாகாவாராயினும் நா காக்க.”
நாவடக்கம் அவசியம் என்பதைக் கூறும் நல்ல பதிவு!
நாவடக்கம் அவசியம் அருமையான பதிவு
@r.v.saravanan
கருத்துக்கு நன்றி நண்பரே...
@!* வேடந்தாங்கல் - கருன் *!
மிக்க நன்றி நண்பரே
@சென்னை பித்தன்
கருத்துக்கு நன்றி நண்பரே
நல்ல கருத்துக்கள்..
"யாகாவராயினும் நாகாக்க...." - வள்ளுவன் வாக்கு
பதிவு நல்லாயிருக்கு.
@Madhavan Srinivasagopalan
வருகைக்கு நன்றி நண்பரே... அடிக்கடி வாங்க.
@Pranavam Ravikumar a.k.a. Kochuravi
நன்றி நண்பரே...
டும்டும்..டும்டும்...
பேசாத வார்த்தைகளுக்கு நாம் எஜமான்...
பேசிய வார்த்தைகள் நமக்கு எஜமான்...
பேச்சினால்தான் நிறைய பிரச்னைகளும்..
இது பற்றிதான் என் இடுகையும் சமீபத்தில்,..
நல்ல பகிர்வு.
எல்லாவற்றையும் சொல்லிட்டு, கடைசியா ஒரு 'பஞ்ச்' வச்சீங்க்க பாருங்க - "மனதில் எப்போதும் நல்ல எண்ணங்களையே நினைத்திருந்தால்..."
அப்போ நாட்டுல பல பேர் நீங்கள் குறிப்பிட்ட விசயங்களைப் பழக திணறுவார்கள். ஹிஹி
நல்ல விசயத்தை எழுதியுள்ளீர். வாழ்த்துகள். :)
@நையாண்டி மேளம்
சரியாக சொல்லி இருக்கிறீர்கள். நன்றி
@எண்ணங்கள் 13189034291840215795
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே...
@சுசி
நன்றி சகோ. அடிக்கடி வாங்க
@Yoganathan.N
கெட்ட எண்ணங்களின் வெளிப்பாடே பெரும்பாலும் வார்த்தைகளாக வருகின்றது. அதை போக்காமல் ஒண்ணும் பண்ண முடியாது.
அருமையான பதிவு நண்பரே.. for effective communication one should need to be good listener..
அருமையான பதிவு .. நிறைவான பதிவு
Post a Comment