விவேகானந்தரின் நறுக்

கடவுள் நாம் விரும்பியதை கொடுப்பவர் அல்ல, நமக்குத் தேவையானதை கொடுப்பவர்...

February 25, 2010

டன் டனா டன் - பணத்துக்கு முன்னாடி பகுத்தறிவாவது? வெங்காயமாவது?


எனக்கு எந்த ஒரு தனி நபரையோ, அமைப்பையோ தாக்கி எழுத வேண்டும் என்று எப்போதுமே தோன்றியதில்லை. மனதில் சில ஆதங்கங்கள் யாரிடம் கேட்பது என்று தெரியவில்லை எழுதி தீர்க்கிறேன். 

நம் மக்கள் காட்டு மிராண்டிகள் மாதிரி, இன்னும் பழம் மூடநம்பிக்கைகளில் மூழ்கி கிடக்கின்றனர். உயிர் இல்லாத கல்லையும், ஒன்றுக்கும் உதவாத சாணியையும் கடவுள் என்கின்றனர். அம்மணமாக இருக்கும் மரத்துக்கு மஞ்சள் பாவாடை கட்டி மாரியம்மா என்கின்றனர். தான் படுகுழியில் விழுவதோடு தன் சந்ததியினரையும் படுகுழியில் தள்ளுகின்றனர். இவற்றில் இருந்தெல்லாம் வெளி வரவேண்டும் என்றால் அவர்களுக்கு பகுத்தறிவு வேண்டும். ஆம் எதையும் பகுத்து உண்மையை அறியும் அறிவு வேண்டும். அதுவே நம் இயக்கத்தின் கடமை. இப்படித்தான் தொடங்கி இருக்குமோ பகுத்தறிவாளர்களின் பயணம்..?

எது எப்படியோ எனக்கு தெரிந்தவரை ஒருவனை சுயமாக சிந்திக்க வைப்பதே பகுத்தறிவு. அடுத்தவனுக்காக நாம் சிந்திப்பது போன்ற கேவலமான செயல் எதுவும் இல்லை. அதற்க்கு பதிலாக அவனை கொலை செய்து விடலாம். பகுத்தறிவாளன் பிறரை சிந்திக்க வைப்பானே தவிர குழப்பி லாபம் அடைய மாட்டான். 

எதுக்குடா இவ்வளவு பெரிய வியாக்கியானம் என்கிறீர்களா?

விஜய் டிவியில் குற்றம் நடந்தது என்ன என்ற நிகழ்ச்சி பிரபலம். அதிலும் ரஜினி பாபாஜி குகை சென்ற பயண நிகழ்ச்சியால் அதன் டி ஆர் பி எகிறிவிட்டது. இதனால் கடுப்பான சன் குழுமம் அதே டைப் நிகழ்ச்சிகளை பல கோணங்களில் வெளியிட்டு வருகின்றன. இதென்ன பிரமாதம்? இதுதான் பரவலாக நடக்கிறதே என்கிறீர்களா? என் கேள்வி அதுவல்ல. முதல் இரண்டு பாராவை  படித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். எனக்கு பொதுவாக இந்த நிகழ்ச்சிகள் பார்ப்பது பிடிப்பதில்லை. ஏன் என்று அப்புறம் சொல்கிறேன். அவ்வப்போது காதில் விழுந்ததை சொல்கிறேன். கடந்த சில நாட்களாக நிஜம் நிகழ்ச்சியில் ஒளிபரப்பான சம்பவங்களை பாருங்கள்..
சிறுவன் தலையில் விழுந்து மரக்கட்டையாக மாறிய பாம்பு, கல்யாண வரம் தரும் கோவில், பெண்களை சாட்டியால் அடித்து பேய் ஓட்டும் நிகழ்ச்சி, அர்த்த ராத்திரியில் நிர்வாண பூஜை... இன்னும் பல. 

எனக்கு தெரிந்து சன்டிவியை பகுத்தறிவில் ஊறிய திரு முரசொலி மாறன் அவர்களில் புதல்வரால் நடத்தப்படுகிறது. இதற்க்கு கலைஞர் அவர்களின் பரிபூரண ஆசியும் உண்டு. ஆகவே ஒரு கட்சியின் செல்வாக்கால், அந்த கட்சியின் புகழ்பாடி மேலே வந்த ஒரு நிறுவனம் ஒளிபரப்பும் நிகழ்ச்சி ஒன்றின் அபத்தம் தான் இது. சரி ஒளிபரப்புவது மக்களிடம் ஒரு விழிப்புணர்வை ஏற்ப்படுத்ததான் என்றால் அதற்க்கு ஏன் அவ்வளவு பில்ட்அப். ஒரு மாதிரி திகில் பட இசை, படப்பதிவுகள் எல்லாம்? சொல்ல வந்ததை ஒரு ஆவணப்படம் மாதிரி காட்டி விட்டு பகுத்தறிவை பறை சாற்றலாமே? முடியாது. அப்படி செய்தால் பெரியார் திரைப்படத்திற்கு நேர்ந்த கதிதான் ஏற்படும். சன் டிவியை பொறுத்தவரை டிவி பார்க்கும் ஒவ்வொரு மனிதனும் சரியான மாங்கா மடையன். நாம் என்ன காட்டினாலும் பார்ப்பார்கள். அவர்களை சிந்திக்க விடாமல் நிகழ்ச்சிகளை  ஒளிபரப்பி அவர்களின் மூளையை மழுங்கடிக்க வேண்டும். இல்லை என்றால் வியாபாரம் நடக்காது. இதுதான் தாரக மந்திரம். 

ஒரு படத்தில் நம்பியார் சொல்வார் "அவன் மிருகமா இருக்கற வரைக்கும் தான் நாம எல்லாம் மனுசனா இருக்க முடியும்" அப்படின்னு.. 

மறுபடியும் ஞாபகபடுத்துகிறேன்.. எனக்கு தெரிந்தவரை ஒருவனை சுயமாக சிந்திக்க வைப்பதே பகுத்தறிவு. பகுத்தறிவாளன் பிறரை சிந்திக்க வைப்பானே தவிர குழப்பி லாபம் அடைய மாட்டான்.

எனக்கு இந்த மாதிரி நிகழ்ச்சிகள் பிடிப்பதில்லை என்று சொன்னதற்க்கான காரணமும் இதுதான். மக்களின் நலனுக்காக உருவாக்கப்பட்ட ஒரு இயக்கத்தின் கொள்கைகளை பின்பற்றி வரும் ஒரு தொலைக்காட்சி என்று தன்னை அடையாளப்படுத்திக்கொள்ளும் சன்டிவி தனக்கு வியாபாரம் என்று வரும்போது மட்டும் பகுத்தறிவு என்பது ஆள்பவர்களுக்கு மட்டும் இருக்க வேண்டும். மக்களுக்கு இருக்க கூடாது என்று நினைப்பது ஏன்?  

அது சரி, பணத்துக்கு முன்னாடி பகுத்தறிவாவது? வெங்காயமாவது?

பிடிச்சிருந்த ஓட்டு போடுங்க 

பிடிக்கலைனாலும் உங்க கருத்தை பதிவு பண்ணுங்க 
முழுவதும் படிக்க >>

February 24, 2010

சினிமாவை விட்டு விலகுகிறேன்- அஜித் பேட்டி

அஜித் பற்றி தொடர்ந்து எழுத வேண்டாம் என்றுதான் இருந்தேன். எனக்கு பதிலாக எழுதுவதற்கு தான் நம்ம புலியூரான் இருக்கிறாரே. ஆனாலும் சொல்ல வேண்டிய செய்திகளை சொல்லாமல் இருக்க முடியவில்லை. 


டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழில் வெளியான அஜித் பேட்டியின் உண்மையான தமிழாக்கம் (நம் பத்திரிக்கைகள் தமிழாக்கம் செய்கிறேன் என்று அர்த்தத்தையே மாற்றி விட்டன.) 

கே: நீங்கள் பேசியது தூண்டுதலின் பேரிலா? இல்லை உங்கள் சொந்த அனுபவத்தாலா?

அஜித்: நான் பேச வேண்டும் என்று எதையும் தயார் செய்யவில்லை. அப்போது தோன்றியதுதான். அது என் அடி மனதில் இருந்து வந்தது. நான் எதையும் தவறாக பேசவில்லை. உண்மையை தான் பேசினேன். சினிமா இண்டஸ்ட்ரி சிலபேர் கைகளில் சிக்கி இருக்கிறது என்பதை அதன் பின் நடந்த நிகழ்ச்சிகள் நிரூபித்துள்ளன..

கே: நடிகர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் சமுதாயத்தால் உயர்ந்த இடத்துக்கு போகிறார்கள். அப்படியானால் அவர்கள் சமுக பிரச்சனைகளில் முன் நிற்பது அவசியம் தானே? 

அஜித்: ஒவ்வொரு குடிமகனுக்கும் அந்த கடமை உள்ளது. ஒரே உணவை பலபேர் சேர்ந்து சமைத்து கெடுப்பதுபோலதான் ஒரு சமுக பிரச்சனையும். நான் நம் அரசியல் மேல் மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளேன். 

கே: நடிகர்களால் ஏன் சுதந்திரமாக கருத்துக்களை பேச முடிவதில்லை? 

அஜித்: ஒரு கூட்டம் நடிகர்கள் பொது பிரச்சனைகளில் தலையிட வேண்டும் என்று சொல்கிறது , மற்றொரு கூட்டம் இது நடிகர்கள் வேலை இல்லை என்று சொல்கிறது.  இடையில் சிக்கியது நாங்கள்தான். சரி பொது பிரச்சனைகளில் முழுமூச்சுடன் இறங்கினால் அவர்கள் கேவலப்படுத்தபடுகிறார்கள். பின் ஏன் அவர்களிடம் பொது பிரச்சனை பற்றி கேள்வி கேட்க வேண்டும்?  அவன் பிறப்பினம், விசுவாசம் முதலியவற்றை விமர்சிக்க வேண்டும்? ஒரு நடிகன் தனக்கு வாய்ஸ் இருக்கும் பட்சத்தில் பொது பிரச்சனைகளில் முழுமூச்சுடன் இறங்கினால் என்ன தவறு? 

கே: நடிகனின் பிறப்பினம் ஒரு பிரச்சனையா?

அஜித்: ஒருவர் சினிமா அல்லது கிரிக்கெட் மேட்ச் பார்க்க டிக்கெட் வாங்கும் பொது தன் அருகில் இருப்பவரின் பிறப்பினம் பற்றி விசாரிப்பதில்லை. அது தான் கலையின் சிறப்பு. நாடு, இனம், மொழி இவற்றை கடந்து மக்களை இணைப்பது கலை. இதனுள் இன பேதத்தை புகுத்துவது கண்டிக்க தக்கது. ரசிகர்களை பாருங்கள், வேறு வேறு இனம், மொழி, பகுதிகள் இருந்தாலும் அவர்கள் சினிமா என்ற ஒன்றால் ஒருங்கிணைந்து உள்ளனர். 

கே: சினிமா பற்றி பேசும்போது, நீங்கள் மனித வெடி குண்டாக, நக்சலைட்டாக நடிப்பீர்களா?

அஜித்: சமீப காலமாக நடந்த பிரச்சனைகளுக்கு பிறகு, காமிராவை பார்ப்பேன் என்றே தோன்ற வில்லை. ஒரு நடிகனுக்கு நடிக்க கூட சுதந்திரம் இல்லை. நடிகன் படத்தில் புகைபிடித்தால், ஒரு சந்ததியினரை பாதிக்கும் என்றால், அவன் அரசியலில் சந்ததியினருக்கு நன்மை செய்ய விரும்பினால் கேட்கும் முதல் கேள்வி "இங்கே உனக்கென்ன வேலை?" 

கே: ஆனால் நீங்கள் 50வது படத்துக்கு ஒப்பந்தம் ஆகி உள்ளீர்களே?

அஜித்: ஆம். திரு தயாநிதி அழகிரி அவர்களுக்கு படம் பண்ணுகிறேன் என்பதில் பெருமையே. ஆனால் என் பிறப்பினம் பற்றி பிரச்சனைகள் எழுந்த பிறகு, பேசாமல் போய் கார் ரேசில் ஈடுபட்டு நம் நாட்டுக்கு பெருமை சேர்க்கலாம் என்று நினைக்கிறேன்....  இப்படியாக போகிறது அந்த பேட்டி.

பேட்டியை படித்தவுடன் மனதில் இனம்புரியாத சோகம் தொற்றி கொண்டது. அஜித் நடிக்க மாட்டேன் என்று சொன்னதால் அல்ல. உண்மை பேசினால் கொடுக்க வேண்டிய விலையைப்பார்த்து.... அஜித்தை திரை உலகை விட்டு போகாதீர்கள் என்று சொல்ல நமக்கு உரிமை இல்லை. ஆனால் சில தரை டிக்கெட்டுகளின் கேவலமான ஸ்டன்ட்களால் அவசரப்பட்டு முடிவெடுத்து, அவர்களை பென்ச் டிக்கெட் ஆக்கி விடாதீர்கள்.

எங்கே எங்கே மனிதன் எங்கே.. 

பிடிச்சிருந்தா ஓட்டு போடுங்க..

உங்க கருத்துகளை இங்க பதிவு பண்ணுங்க..
முழுவதும் படிக்க >>

February 23, 2010

நான் என்ன இளிச்சவாயனா? - பகுதி 2


எந்த வித முன் அனுபவமும் இல்லாமல் வெறும் ப்ளாக் படித்த அனுபவமும் சில புத்தகங்கள் படித்த அனுபவம் மட்டும் கொண்டு ப்ளாக் எழுத தொடங்கிய ஒரு வாரத்துக்குள் 1000 ஹிட்ஸ் தந்து என்னை ஊக்கப்படுத்திய அனைத்து வலையுலக நண்பர்களுக்கும், வாக்குகள் அளித்து டெபாசிட் போகாமல் காப்பாற்றிய நண்பர்களுக்கும், என் வலைப்பக்கத்துக்கும் வந்து படிப்பதற்கு நேரம் ஒதுக்கி கருத்து தெரிவித்த ஜீவதர்ஷன்(எப்புடி..), கார்க்கி, யோகநாதன், காந்தி, அகோரி மற்றும் அனானி(???) அனைவர்க்கும் மனமார்ந்த நன்றி...


பதிவு எழுத தொடங்கி முதல் பதிவாக எழுதிய "நான் என்ன இளிச்சவாயனா?" என் ஆழ் மனதில் தோன்றிய கருத்துக்கள் தாம். ஆனால் உண்மையான கருத்துக்களுக்கு வரவேற்ப்பு உண்டு என்பது நிரூபணமானது. அந்த பதிவின் நீளம் காரணமாக சொல்ல வந்ததை குறைவாகவும் ஒரு நபரை மட்டும் மையமாகவும் கொண்டு சொல்லி விட்டேன். இருந்தாலும் சொல்லாமல் விட்டதையும், பின் தோன்றியதையும் சேர்த்து தர வேண்டும் என்ற எண்ணத்துடன் இந்த இரண்டாம் பாகம் எழுதி இருக்கிறேன். சத்தியமாக இது தொடர் பதிவோ, அதிகமாக ஹிட்ஸ் கிடைக்க வேண்டும் என்றோ எழுதவில்லை. தோன்றியதை எழுதுகிறேன். 
முதல் பாகத்தில் எழுதப்பட்டது பெரும்பாலும் ஆண்களை மையப்படுத்தியே சொல்லியாகி விட்டது (நான் ஆண் என்பதால்). அதனால் இரண்டாம் பாகம் பொதுவாக் இருக்கும் என நம்புகிறேன். 






பிறருக்கு உதவி செய்வதற்கு நல்ல மனம் மற்றும் இருந்தால் போதாது. ஓரளவுக்கு பொருளாதாரமும் அதற்க்கு ஒத்துழைக்க வேண்டும். வெறும் கையை வைத்துக்கொண்டு முழம் போடா முடியுமா. முழம் போடலாம். பதிவும் போடலாம். வேறு ஒன்னும் செய்து விட முடியாது. சரிதானே. 

 நமக்கு நல்ல மனது. பணமும் ஒரு பிரச்சனை இல்லை. ஆனால் நாம் இருப்பது ஒரு வெளி நாடு.  அங்கே ஏற்கனவே அரசியல் குழப்பங்கள் கோடி கட்டி பறக்கின்றன. எந்த பிடி கிடைக்கும் எப்படி உச்சாணி கொம்புக்கு தாவலாம் என்று ஒரு கூட்டம் காத்திருக்கிறது. சிக்கினால் போதும் தரை டிக்கெட் எல்லாம் தடி எடுக்கிற தண்டல் காரன் ஆகிவிடும். (அஜித் விஷயத்தில் நடந்த மாதிரி). போதும்டா சாமி. நல்லது செய்யப்போய் உதை பந்து ஆகி விடுவோம். சும்மா இருப்பதே மேல். பொம்பளதானே என்று ஆளாளுக்கு மட்டம் தட்டுகிறார்கள். எகத்தாளம் வேறு. என்ன செய்வது?

பேசாமல் இப்போது இருப்பதே மேல். தேவை இல்லாமல் மாட்டிக்கொள்ள நான் என்ன இளிச்சவாயனா? (மன்னிக்கவும் பெண்பால் தெரியவில்லை).


சேவை செய்ய போகிறேன் என்று தெருவில் இறங்கி நடக்க தொடங்கியபோது கையில் வெறும் ஐந்து ரூபாய் மட்டுமே இருந்தது அக்னஸ்-இன் கைகளில். தன்னை காப்பாத்தி கொள்ளும் அளவுக்கு கூட பொருள், பின்புலம் இல்லாத நிலையில் அவரிடம் இருந்தது அளவற்ற அன்பும், அசைக்க முடியாத நம்பிக்கையும் மட்டும் தான்.   தனக்காக யாசகம் கேட்கவே தயங்கும் நேரத்தில் பிறருக்காக தெரு தெருவாக யாசகம் கேட்டு அலைந்தவர். யாசகம் கேட்ட கையில் காறி துப்பியவனை பார்த்து "எனக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும் " என்று சொல்லாமல் "இது எனக்கு போதும். என் குழந்தைகளுக்கு எதாவது கொடுங்கள்." என்று கேட்டவர்.  அவரின் அன்புள்ளத்தை அறியாமல் தெரேசா மத மாற்றம் செய்கிறார் என்று சேற்றை வாரி இறைத்தபோதும், புத்தம் புதிய காரை போப் பரிசாக கொடுத்தபோதும், எந்தவித சலனமும் ஏற்படாமல் தன் சேவையே கண்ணாக இருந்தவர். 


வயதான சொந்த தாய் தந்தையரையே தொட்டு பராமரிக்க கூசும் மனிதர்கள் மத்தியில், தொழு நோயாளிகளை எந்த வித தயக்கமும் இல்லாமல் தொட்டு அரவணைத்தவர். தொழு நோயாளிகளை தொடும் போதெல்லாம் கடவுளையே தொடுவது போன்ற உணர்வு ஏற்படுகிறது என்று சொல்வார்.

உலகிலேயே கொடிய நோய் என்று ஒன்று உண்டென்றால் அது உதாசீனம்தான். அதுவும் நோயால் பீடிக்க படும் போது நம் மனம் நம்முடைய உறவுகளை நோக்கித்தான் செல்லும். அப்போது உதாசீனப்படுத்தப்பட்டால் அது நோயின் வேதனையை விட அதிகமாக வலிக்கும். இதை முழுமையாக உணர்ந்தவர். ஒவ்வொருவருக்கும் ஒரு தாய் உண்டு. ஆனால் உலகத்தில் பிறந்த அனைவருக்கும் கிடைத்த ஒரே தாய் .....அன்னை தெரேசா.

இப்போதும் உலக அழகிகள் பட்டம் வெல்ல வேண்டுமா? அவர்கள் சொல்வது "எனக்கு பிடித்த பெண் தெரேசா தான் "
இப்படி பட்டம் வெல்ல மட்டுமே அவர் பெயர் பயன் படக்கூடாது.  

எல்லோராலும் தெரேசா ஆக முடியாது. ஆனால் எல்லோராலும் அன்பு செய்ய முடியும். 

அன்னை அவர்கள் சொன்னது "நீ மனிதர்களை பற்றி மதிப்பீடு  செய்து கொண்டிருந்தால் ஒருக்காலும் அன்பு செய்ய உனக்கு வாய்ப்பிருக்காது"


அன்பு காட்டுவதற்கு பணம் தேவை இல்லை. உள்ளம் நிறைய கருணை இருந்தால் போதும். அன்பு செய்தால் எல்லோரும் தெரேசாவாகலாம் 


பிடிச்சிருந்தா தமிழிஷ்ல ஓட்டு போடுங்க..


உங்க கருத்தை இங்க பதிவு பண்ணுங்க ...

முழுவதும் படிக்க >>

February 22, 2010

தல போல வருமா? - அஜித் என்னும் உழைப்பாளி

ன்றைய தமிழ் திரை உலக ஹாட் டாபிக் அஜித் பற்றிதான் . அதிகம் பேசாமல் இருந்தவர். அடிக்கடி நான் பேச மாட்டேன் என்று சொல்வார். ஏன் என்று இப்போதுதான் புரிகிறது.

தொடக்கத்தில் எனக்கு அஜித் பற்றி அவ்வளவாக எந்த அபிப்ராயமும் இல்லை. நான் சொல்வது காதல் கோட்டை கால கட்டங்கள். அப்போதெல்லாம் பல பெண்களின் கனவு நாயகனாக வலம் வந்தார். அப்போதெல்லாம் அஜித் படங்கள் மீது அவ்வளவாக ஈடுபாடு இல்லாத காரணத்தால் அவர் படங்களை சரியாக பார்த்தது இல்லை.  ஏன் என்றால் ஒரு அஜித் படம் ரிலீஸ் ஆனால் கண்டிப்பாக அந்த படத்தின் நாயகியுடன் சேர்த்து அஜித் பெயர் கிசுகிசுக்கப்படும். இது அவர் மீது எந்த வித மரியாதையையும் ஏற்படுத்த வில்லை . மாறாக ஒரு வித எரிச்சலையே ஏற்படுத்தியது.

இன்று அஜித் பிடிக்காது என்பவர்கள் சொல்லும் காரணம் இதுவாகத்தான் இருக்கும்.  இது அவருக்கும் தெரியும். அந்த காலகட்டங்களில் இப்போது இருப்பது போல அவருக்கு பக்குவம் இல்லாத காரணத்தால் தோன்றியதை பேசினார்.  பத்திரிக்கைகளும் அதை மனம்போல் மாற்றி எழுதின. விளைவு BAD IMPRESSION.

"நான் பாத்து பாத்து வளர்ந்த வீட்டு மரம் அல்ல, தானா வளர்ந்த காட்டு மரம்.
எரிந்து முடித்த சாம்பலில் இருந்து எழுந்து பறக்கும் பீனிக்ஸ் போல"

இந்த வரிகளை பார்க்கும்போது அஜித் மீது ஈடுபாடு இல்லாதவர்களுக்கு மற்றும் அவரை பிடிக்காதவர்களுக்கு எரிச்சல் வரும். ஆனால் இந்த வரிகள் அஜித்தை பொறுத்த வரை எவ்வளவு உண்மை என்று அவர் கடந்து வந்த பாதையை பார்த்தாலே தெரியும். போதும் அஜித் பற்றி புகழ் என்று பெருமூச்சு விடுபவர்களுக்கு, மேலே கூறியவை பொய் இல்லை என்று மட்டும் தெரியும்.

 அஜித்தை பொறுத்தவரை ஒரு அடி எடுத்து வைத்தால் பத்து அடி சறுக்கும். பெற்ற வெற்றிகளை விட வாங்கிய அடிகள் அதிகம். அடி என்றால் சாதாரண அடி அல்ல. எழுந்திருக்கவே  முடியாத அளவுக்கு மரண அடி. சுதாரித்து எழுவதற்குள் இன்னொரு அடி. 

சரி அவர் நடிப்பு career பற்றி பார்க்கலாம். முதலில் அவரை எல்லோரும் அறிய வைத்தது ஆசை. ஆனால் அதற்கு அப்புறம் சரியான வழிகாட்டுதல் இல்லாமல் , ஏனோதானோவென்று  படங்களில் நடித்து வந்தார். அஜித் வாழ்வில் பெற்ற முதல் மிகப்பெரிய வெற்றி என்றால் காதல் கோட்டை தான் . விஜய்க்கு எப்படி பூவே உனக்காகவோ அது மாதிரி அஜித்துக்கு காதல் கோட்டை.

இந்த காலகட்டத்தில் அஜித் இளம்பெண்களின் கனவு நாயகனாக இருந்தார். அப்போது அஜித்தை அடையாள  படுத்தும் விஷயங்கள் இரண்டு. கிசு கிசு மற்றும் அதிகப்பிரசங்கி தனமான பேச்சு. அஜித்துக்கு வாய்க்கொழுப்பு நடிகர் என்ற பெயர் சரியாக பொருந்தியது.

பின்  வரிசையாக படங்கள் ஓட வில்லை. மரண அடி. ஒரு கட்டாய வெற்றியை நோக்கி ஓடி கொண்டிருக்கும் போது தான் வாலி வந்தது.  பின் சில தோல்விகள்.  அவ்வப்போது சில வெற்றிகள் என்று நடித்துக்கொண்டிருந்தார். 
 எல்லாருக்கும் வரும் பிரச்சனை அஜித்துக்கும் வந்தது.  இமேஜ் வட்டம். அந்த வட்டத்துக்குள் சிக்கி வெளிய வர வழி தெரியாமல் மொக்கை படங்களாக நடித்துக் கொண்டிருந்தார் .  வரலாறு போன்ற ஒன்றிரண்டு நல்ல படங்கள் கூட சரியான நேரத்தில் வெளி வராமல் சோதித்தன . இமேஜ் வட்டத்துக்குள் இருந்து வெளி வரும் முதல் முயற்சியாக அஜித் நடித்த படம் பில்லா. இப்போது அசல் படத்தின் மூலம்  இதில் சிறிது  முன்னேற்றம் கண்டுள்ளார். 







SWOT ANALYSIS FOR AJITH:
பலம் 
பெரிய ஒப்பனிங். சரியாக ஓடாத அஜித் படங்கள் கூட வசூல் அதிகம் பெறுவதற்கு இதுதான் காரணம்
நடிப்பு. இந்த விசயத்தில் அண்மைக்காலமாக ஓரளவுக்கு நடிக்க தெரிந்த நடிகர். 

பலவீனம் 
கதை தேர்வில் குழப்பம். இதனால் பல பெரிய இயக்குனர்கள் கூட தோல்வி படங்களாக தந்து விடுகின்றனர். 
நடனம் மற்றும் பிட்நெஸ். ஒவ்வொரு படத்திலும் அஜித் ஒவ்வொரு விதமாக தெரிகிறார். நெடுநாள் எடுத்த படமாக இருந்தால் வெவ்வேறு காட்சிகளில் வெவ்வேறு மாதிரி தெரிகிறார்.( வரலாறு, ஜி)



வாய்ப்புகள்:
இப்போது சிறிதளவு ட்ராக் மாறி இருப்பதால் மக்கள் மத்தியில் ஓரளவுக்கு ஆதரவு கூடி இருக்கிறது.
பெரிய ஒப்பனிங் இருப்பதால் இன்னும் சில ரிஸ்குகள் எடுக்கலாம்.

அச்சுறுத்தல்கள்:
என்னதான் மனதில் பட்டதை பேசினாலும் தாமரை இலை தண்ணீர் போல பட்டும் படாமலும் பேசுவது நல்லது
ஸ்டைல் ஆன படங்கள் நடிக்கிறேன் என்று பில்லா மாதிரி படங்கள் தொடர்வதை தவிர்க்கலாம் 

தோல்விகளோ அவமானங்களோ அஜித்துக்கு புதிதில்லை. 
மீனாவுடன் நடனம் ஆடும்போது, மீனாவின் அம்மாவின் வற்புறுத்தலால் (1995 என்று நினைக்கிறேன். மீனா அப்போது உச்சத்தில் இருந்தார். அஜித் அப்போது புதுமுகம்) வலுக்கட்டாயமாக மேடையில் இருந்து இறக்கி விடப்பட்டார். அப்போதில் இருந்து எந்த மேடையிலும் தோன்றுவதில்லை. இப்போது தான் மேடையில் தல தெரிகிறது. இது மாதிரி எத்தனையோ அவமானங்களை சந்தித்திருக்கிறார் அஜித்.

எனவே சோதனைகளை சாதனைகளாக்கி தொடர்ந்து வெற்றிபெறுவார் என்று நம்புவோம்.


உங்களுக்கு பிடிச்சிருந்தா தமிழிஷ்ல ஓட்டு போடுங்க
உங்க கருத்துக்கள இங்க பதிவு பண்ணுங்க.

முழுவதும் படிக்க >>

February 19, 2010

அஜித் தமிழன் இல்லையா?

பாசத்தலைவனுக்கு பாராட்டு விழாவில் அஜித் குமார் பேசியது கோலிவுட் முழுக்க பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
"அஜித் தன் மனதில் பட்டதை பேசினார். அத்தனை பெரிய கூட்டத்தில் அப்படி பேசுவதற்கு மிகப்பெரிய தைரியம் வேண்டும். அந்த தைரியம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது." என்று சூப்பர் ஸ்டார் ரஜினி கூறியுள்ளார். 
இதைப்பற்றி துக்ளக் பத்திரிகையில் வெளியான செய்தி:

அஜித் பேசிய கருத்துக்கள்தான்  முக்கியமானவை. எதற்க்கெடுத்தாலும் கலைஞர்களை மிரட்டி கலந்து கொள்ள வைத்து விழா, ஆர்ப்பாட்டம், எதிர்ப்பு... எல்லாம் நடத்தப்படுவதை சுட்டிக்காட்டி அஜித் வெளிப்படுத்தி இருப்பது, அசாத்திய துணிச்சல். அதே போல, அவர் பேசியபோது திக்பிரமித்துஇருந்த கூட்டத்தினருக்கு வழிகாட்டுகிற வகையில் ரஜினிகாந்த் எழுந்து நின்று கை தட்டியதும், துணிச்சலான செயலே. அதை தொடர்ந்து கூட்டத்தினரும் அஜித் பேச்சை ஆமோதித்து பெரும் கரகோஷத்தை எழுப்பி இருக்கிறார்கள். 

விழாவிற்கு வராதவர்களுக்கு பெப்சி ஒத்துழைக்காது என்று கூறினீர்களாமே இது மிரட்டல் ஆகாதா? என்று கேட்டதற்கு திரு வீ சி குகநாதன் அவர்கள்,

சில செய்தி தாள்களில் அப்படி வந்ததே தவிர நாங்கள் அப்படி சொல்லவில்லை. விழாவில் கலந்து கொள்ள மாட்டோம் என்று சொல்லும் சில நடிகைகள் ஆந்திராவில் ஒரு விழாவில் அரை குறை ஆடையோடு ஆடுகிறார்கள். முன் வரிசையில் அமர்ந்திருக்கும் நடிகர்கள் மடியில் அமர்கிறார்கள் என்று தன துறையினர் மீதே புழுதியை வாரி இறைத்துள்ளார். நடிகைகளுக்கு வக்காலத்து வாங்கும் விவேக், சத்யாராஜ் அவர்களே, எங்கே போனீர்கள்?

மேலும் பொது பிரச்சனையில் கலந்து கொள்ளா விட்டால் தமிழன் இல்லை என்று புது பிரச்னையை கிளப்பி விடுகிறார்கள் என்று அஜித் கூறியுள்ளது பற்றி கேட்டதற்கு, " அஜித் என்ன சொல்ல வருகிறார்? அவர் தமிழன் இல்லை என்று சொல்கிறாரா?" என்று சம்பந்தம் இல்லாமல் கேள்வியை கேட்டு திசை திருப்பி விட்டார். 

இவர் பதிலில் இருந்து ஒன்று தெளிவாக தெரிகிறது. கொஞ்ச நாள் சும்மா மென்று கொண்டிருந்த வாய்க்கு அவ்வப்போது ரஜினி என்ற அவல் கிடைத்து கொண்டிருந்தது.  இப்போது அஜித் என்ற பபிள்கம் கிடைத்துள்ளது.  மெள்ளாமல் விடுவார்களா? 


ஜாக்குவார் தங்கம் மேலும் ஒரு படி முன்னேறி " கலைஞருக்காகத்தான் பொறுமையாக இருந்தோம். இல்லை என்றால் மேடையிலேயே அஜித்தை புரட்டி எடுத்திருப்போம்" என்று புலம்பி தள்ளி உள்ளார்.

முட்டாள்தனமாக உணர்ச்சி வசப்பட்டு வாய்க்கு வந்ததெல்லாம் பேசும் குகநாதன், ஜாக்குவார் தங்கம் போன்றோர் தமிழர்கள்  என்றால் உண்மையை மட்டும் பேசி உள்ள  அஜித் தமிழன் இல்லைதான் 

படிச்சது பிடிச்சிருந்தா தமிழிஷ்ல ஓட்டு போடுங்க. உங்க கருத்த  இங்க பதிவு பண்ணுங்க. 


முழுவதும் படிக்க >>

February 17, 2010

King of Chennai - விஜய் என்னும் கெட்டிக்காரர்



இன்று பதிவர்கள் மத்தியில் அதிகமாக பேசப்படும் ஒரு நபர் என்றால் அது கண்டிப்பாக விஜய்தான். இது மறுப்பதற்கில்லை. நல்ல விதமாகவோ, கெட்ட விதமாகவோ, வாழ்த்தியோ, பரிகாசம் செய்தோ எதோ வகையில் இவர் பற்றி செய்தி வந்து கொண்டே இருக்கிறது.


 விஜய்யை பிடிக்காதவர்கள் சொல்லும் முதல் காரணம் விஜய் தன் தந்தை மூலம் பின்வாசல் வழியாக சினிமாவிற்கு வந்தவர் என்று. அப்படி சொல்பவர்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். அவர் நடித்த வெற்றிப்படங்கள் எதுவுமே அவருடைய தந்தை இயக்கியது அல்ல. இயக்குனர் பாரதிராஜா கூட தன் மகனான மனோஜை சினிமாவில் நுழைக்க பெரும் முயற்சி எடுத்தார். ஆனால் அவருக்கு வெற்றி கிடைக்கவில்லையே. ஒருவர் சுத்தமாக திறமையே இல்லாமல் இருந்தால் அவரால் வெகு காலம் சினிமாவில் நிலைக்க முடியாது (தந்தை சினிமாகாரராய் இருந்தால் கூட!). உதாரணமாக மனோஜ், சிபிராஜ், துஷ்யந்த்(சிவாஜி பேரன்) இன்னும் பல. விஜய்  கிட்டதட்ட 16 வருடங்கள் சினிமாவில் நிலைத்திருக்கிறார் என்றால் அது சாதாரண விஷயம் அல்ல.


சரி சரி. நீங்கள் உச் கொட்டுவது கேட்கிறது. இது நடிகர் விஜய் அவர்கள் புகழ் பாடும் பதிவு அல்ல. விஜய் பற்றி உண்மையான நடு நிலைமையான என் கருத்துக்களையே பதிவு செய்ய விரும்பினேன். அதன் விளைவே   இந்த பதிவு.


திரு எஸ்.ஏ.சந்திரசேகர் அவர்கள் ஒரு திறமையான மசாலா பட இயக்குனர் என்று பெயர் எடுத்தவர். பெரும்பாலான இயக்குனர்கள் தங்கள் பிள்ளைகளை தன் படங்களில் பயன் படுத்துவதும், அவர்களை நடிகன் ஆக்க விரும்புவதும் இயல்புதான். அந்த நிலையில்தான் திரு எஸ்.ஏ.சி யும் மகனான விஜய்யை தன் பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக பயன்படுத்தினார். சினிமா மோகம் மகனையும் தொற்றிகொள்ள அவரை சினிமாவுக்காகவே உருவாக்க தொடங்கினார். 




தன் மகனின் தோற்றம் காரணமாக (இதெல்லாம் ஒரு மூஞ்சியா என்று பலபேர் கூறியதாக விஜய்யே பேட்டியில் கூறி உள்ளார்) வாய்ப்புகள் அமையாமல் போக, தானே தன் மகனை கதாநாயகன் ஆக்கி நாளைய தீர்ப்பு என்னும் ஒரு மொக்கை படத்தை எடுத்தார். எல்லா தந்தைகளும் செய்யும் ஒரு தவறை இவரும் செய்தார் ( காக்கைக்கும் தன் குஞ்சு பொன்குஞ்சுதானே). தன் மகனின் உருவ அமைப்பு, நடிப்புத்திறன் இவற்றை பற்றி யோசிக்காமல், தன் மகனின் தலையில் அளவுக்கு அதிகமான சுமையை ஏற்றி தோல்வி அடைந்தார் எஸ்.ஏ.சி. (இதே நிலை காதல் அழிவதில்லையில் சிம்புவுக்கும், சக்கரக்கட்டியில் சாந்தனுவுக்கும் ஏற்ப்பட்டது). பிறகு செய்வதறியாது தன் மகனின் முகத்தை மக்களுக்கு பரிச்சயம் ஆக்க வேண்டும் என்று பல படங்கள் இயக்கத் தொடங்கினார். அனைத்தும் அவரின் Trademark கவர்ச்சி, கபடி, சோப்பு புகழ் படங்கள்.


அப்போதுதான் வந்தார் ஆபத்பாந்தவன் விக்ரமன். பெரும்பாலான பெண்களுக்கு பூவே உனக்காக வந்த பிறகுதான் விஜய் என்று ஒருவர் இருக்கிறார் என்றே தெரியும். விஜய் புரிந்து கொண்டார். பெண்களைக்கவரும் நாயகன் தான் நிலைத்து நிற்க முடியும், சோப்பு போடும் நாயகன் கரைந்து விடுவான் என்று. தன் பாதையை மாற்றினார்.


அப்போது எல்லா நடிகர்களையும் ஆட்டிப் படைத்த ஒரு வார்த்தை சூப்பர் ஸ்டார்  நாற்காலி. பல நடிகர்கள் அந்த இடத்தை அடைய பிரயத்தனம் செய்து  கொண்டிருந்தார்கள். அந்த ஆசையால் திரு எஸ்.ஏ.சி. தன் மகனை ரஜினி பாணியில் பெண்கள் விரும்பும் ஆக்ஷன் ஹீரோ ஆக்க  வேண்டி அவ்வப்போது மொக்கை படங்களை தந்து தன் மகனுடைய முன்னேற்றத்தை தடுத்து கொண்டிருந்தார். 


விஜய் என்றவுடன் நினைவுக்கு  வருவது அவருடைய நடனம்தான். இத்தனைக்கும் அந்த கால கட்டத்தில் பிரபுதேவா பிரபலமாக இருந்தார். பிரசாந்த், அருண்விஜய் கூட நன்றாக ஆடுபவர்கள். ஆனால் விஜய்யின் நடனம் அனைவராலும் குறிப்பாக பெண்களால் விரும்பப்பட காரணம், அவர் ஆடும்போது தான் டான்ஸ் ஆடுகிறோம் என்கிற எண்ணம் அவர் முகத்தில் தெரியாது. அதனால் அவர் நடனம் ஆடும்போது மிக இயல்பாக இருக்கும். 


இப்படி ஒழுங்காக போய் கொண்டிருந்த  விஜய் எங்கே சறுக்கினார்? 


இப்படி காதல் படங்களில் நடித்துகொண்டிருந்தால் உன்னையும் ஒரு மோகன் ஆக்கி விடுவார்கள். மக்கள் மனதில் நிரந்தர இடம் பிடிக்க வேண்டுமானால் நீ ஒரு ஆக்ஷன்  ஹீரோ ஆக வேண்டும் என்று அவரை சுற்றி உள்ள சில அறிவு ஜீவிகள் உளற, சூப்பர் ஸ்டார் கனவில் இருந்த விஜய் தன் பாதையை மாற்றி நடிக்க ஆரம்பித்தார்.


இப்போது சன் தொலைக்காட்சி செய்கிறதே அதைப்போல தன் மகன் நடித்த படம் ஓட வேண்டும் என்ற ஆசையில் விஜயை முன் நிறுத்தி அவர் சூப்பர் ஸ்டார் ஆகி விட்டார் என்பது போல ஒரு மாயை உருவாக்கி தன் சொந்த செலவில் விஜய் கட் அவுட்டுக்கு பாலபிஷேகம் செய்ய சொன்னார் அவர் தந்தை. சில திரை அரங்குகளில் அவர் படம் ஓட வைக்கப்பட்டது. இதனால் விஜய் நடித்த சில சுமாரான ஓட கூடிய படங்கள் கூட ஓட வைக்கப்படுகின்றனவோ என்கிற எண்ணம் மக்களிடையே வரத்தொடங்கியது.


மேலும் தன் வெற்றி பட பார்முலாக்களை பிடிவாதமாக தொடர்ந்து கடைப்பிடித்து மக்களிடையே ஒரு  சலிப்பை ஏற்படுத்தி சரிவை நோக்கி பயணிக்க ஆரம்பித்தார்.
சரி எங்கேயோ தொடங்கி எங்கேயோ வந்து விட்டோம். பொதுவாக பெரிய நிறுவனங்களில்  SWOT ANALYSIS செய்வார்கள் அதாவது 


S - STRENGTH - பலம்
W - WEAKNESS - பலவீனம்
O - OPPORTUNITY -  வாய்ப்புகள்
T - THREATS   - அச்சுறுத்தல்கள்.
இவற்றை விஜய்க்கு பொருத்தி பார்க்கலாம்.

பலம்
1. ரசிகர்கள். விஜய்க்கு பெரும் அளவில் ரசிகர் கூட்டம் இருக்கிறது. குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகள்.

2. விஜய் படங்களுக்கு இருக்கும் பெரிய ஒப்பனிங். இதன் மூலம் மவுத் டாக் அதிகம் கிடைக்கும்.

பலவீனம்
1. நடிப்பு. உண்மையிலேயே இது அவரின் பலவீனம்தான். தனுஷ் கூட அனாயசமாக செய்த காதல் கொண்டேன் டைப் கரெக்டர்களை நேர்த்தியாக செய்ய முடிய வில்லை(கண்ணுக்குள் நிலவு)

2. இமேஜ் வட்டம். இது பொதுவாக எல்லா நடிகர்களுக்கும் உண்டு. ஆனால் இவரின் போட்டியாக கருதப்பட்ட அஜித் கூட மெல்ல மெல்ல இந்த வட்டத்தில் இருந்து வெளி வந்து கொண்டிருக்கிறார். ஆனால் விஜய் இதில் இருந்து வெளி வர விரும்பவில்லை.  சமீபத்திய அவரின் நடவடிக்கைகள் இதற்க்கு சான்று. மேலும் தொடக்கப்பாடலில் காமிராவை பார்த்து பாடுவது போன்ற காட்சிகள்.

வாய்ப்புகள்
1. விஜய்க்கு இருக்கும் மினிமம் காரண்டி. இதன் மூலம் விஜய் சில ரிஸ்குகள் எடுக்கலாம். சில முயற்சிகள் பலனளிக்காமல் போனாலும் அவருடைய ரசிகர்கள் நஷ்டத்தை தாங்கி பிடித்து விடுவர். 

2. சில தொலைக்காட்சிகளின் ஆதரவு மற்றும் ஒத்துழைப்பு. இதை சரியாக பயன் படுத்தினால் கண்டிப்பாக ஒரு புதிய வழியில் பயணிக்கலாம். 



அச்சுறுத்தல்கள்

1. ரிஸ்க் எடுக்க தயக்கம். ஒரு பேட்டியில் விஜய் எனக்கு அவார்ட் படங்களில் நடித்து ரிஸ்க் எடுப்பது பிடிக்காது என்று கூறி உள்ளார்.

2. சுப்ரமணியபுரம், நாடோடிகள் என்று வேறு ஒரு ரூட்டில் தமிழ் திரை உலகம் பயணித்து கொண்டிருக்கும் பொது, இன்னும் தமிழ் படங்களை 10 ஆண்டுகள் பின்னிழுத்து பழைய தெலுங்கு பட பார்முலாக்களை இன்னும் பயன்படுத்துவது( இப்பலாம் தெலுங்கில் நிறைய நல்ல படங்கள் வருகின்றன)


இந்த நான்கு விதமான அலசல் என்னுடைய மனதில் பட்டவை. இவற்றில் மேலும் சில பாயிண்டுகள் விடுபட்டிருக்கலாம்.



இவற்றை கண்டுபிடித்து தன் பாணியை மாற்றினால் கண்டிப்பாக இன்னும் சிறப்பான  இடத்தை அடைய முடியும்.


விஜய் கெட்டிக்காரர் என்று நம்புவோம்   



தல போல வருமா - அஜித் என்னும் உழைப்பாளி - வெகு விரைவில்......


முழுவதும் படிக்க >>

February 11, 2010

நான் என்ன இளிச்சவாயனா?

தலைப்பை பார்த்த உடனே இது ஏதோ காமெடி பதிவோ, சுய பச்சாதாப பதிவோ அப்படின்னு நினைக்கலாம் .



நான் என்ன இளிச்சவாயனா? இந்த கேள்விய எப்பல்லாம் கேப்பிங்க?  

பொதுவா நம்மள யாராவது தெரிஞ்சே ஏமாத்துனா (நான் நம்ம  அரசியல்வாதிகள சொல்லல) இந்த கேள்விய கேக்கலாம். ஆனா அப்போதெல்லாம் கேட்பது இல்லை . ஒரு சட்டத்த எல்லாரும் கடை பிடிக்கணும் அப்படின்னு சொல்லும்போது, யாருமே அத செய்யாம, நம்மை மட்டும் கடை பிடிக்க சொன்னா உடனே சொல்கிற வார்த்தை இது. அதாவது ஒருவன் நல்ல விசயங்களை செய்ய வேண்டுமானால் முதலில் அவனை சுற்றி உள்ள எல்லோரும் அதை செய்ய வேண்டும். முதலில் எவன் செய்கிறானோ அவனை அந்த சமூகமே இளிச்சவாயன் என்று அன்போடு அழைக்கும். இல்லை நாமே நம்மை அந்த கேள்வியை கேட்டுக்கொள்வோம். இது நான் சொன்னது அல்ல. நம்ம மாண்புமிகு முன்னால் குடியரசு தலைவர் அப்துல் கலாம் அவர்கள் சொன்ன வேதனைக்குரிய விஷயம். கண்டிப்பாக செய்ய வேண்டிய செயலுக்கே இப்படி ஒரு கேள்வி கேட்டு செய்யாமல் இருக்க வழி தேடும்போது, நாமே மனமுவந்து செய்ய வேண்டிய சில காரியங்களை எப்படி செய்ய முடியும்? சரி நம்மில் சிலருக்கு அப்படி மற்றவர்களுக்கு உதவும் மனம் இருந்தாலும் செய்யாமல் இருப்பதற்கு காரணங்கள் என்ன?

பட்டியலிடுவோம் நியாயமான காரணங்களை: 
1. எனக்கு நிறைய கடமைகள் இருக்கு 
2. என்ன நம்பி ஒரு குடும்பம் இருக்கு. 
3. எனக்கு இப்பதான் கல்யாணம் முடிஞ்சிருக்கு.
4. சின்ன வயசுல இருந்து கஷ்டம் தெரியாம வளந்ததுனால எனக்கு உலகத்த பத்தி தெரியல 
5. என்ன நிறைய செலவு செஞ்சு படிக்க வச்சவங்க ஆசைல மண் போட முடியாது. 
6. எனக்கு சின்ன வயசுல இருந்தே ஆஸ்த்மா(இன்ன பிற நோய்கள்). இந்த நிலைமைல நான் போய் எங்க சேவைல ஈடுபடுறது ? 
7. நான் ஒருத்தன் நினைச்சா என்ன செய்ய முடியும்?
8. எல்லாத்துக்கும் மேல அரசாங்கம், அரசியல்வாதிகள் இருக்காங்க. 
9. அது வேற நாடு. என் நாட்டிலேயே என்னால் ஏதும் செய்ய முடியாது. அந்த நாட்டு மக்களுக்கே அக்கறை இல்லை.
10. அனுபவிக்க வேண்டிய சின்ன வயசு.



இப்படி நமக்கு சொல்வதற்கு ஆயிரம் காரணங்கள் இருக்கும். அவை நியாயமானதும் கூட.

மேற்கூறியவற்றுள் ஒரு காரணம் இருந்தால் கூட நம் செயலை நம்மால் நியாயப்படுத்த முடியும். ஆனால் மேற்கூறிய அனைத்தும் ஒருவனிடம் இருந்தால் அவனை யாரும் குற்றம் சொல்ல முடியாது. அப்படித்தானே?

ஆம் எர்னஸ்டோவிடம் இவை அனைத்தும் உண்டு. 

ஓரளவுக்கு வசதியான குடும்பத்தை சேர்ந்தவர். மருத்துவம் படித்தவர், பெண்களை வசீகரிக்கும் அழகு உடையவர், சாதாரண குடிமகன், இத்தனைக்கும் அவர் போராடிய கியூபா ஒன்றும் அவர் தாய்நாடு அல்ல. வாழ்நாள் முழுவதும் உயிரோடு கொல்லும் ஆஸ்த்மாவால் அவதிப்பட்டவர்.






கை நெறைய சம்பளம்,  கண்ணுக்கு நிறைவான மனைவி, சோபாவில் சாய்ந்து காலாட்டிக்கொண்டே அவர் கேட்டிருக்கலாம் "நான் மட்டும் என்ன இளிச்சவாயனா?" ஆனால் அவர் கேட்கவில்லை. தன்னை சிறை பிடித்து அடைத்து வைத்திருந்த  ஒரு பள்ளி கட்டிடத்தின் நிலையை பார்த்து அங்கிருந்த ஒரு பணிபெண்ணிடம் " இந்த இடம் ஏன் இப்படி இருக்கு? இங்கு எவ்வாறு படிக்க முடியும்? நாம் வெளிய வந்தவுடன் இந்த இடத்தை சீர்படுத்துவேன்" என்று சொன்னாரே ஒழிய "எல்லாம் என் நேரம். நான் இப்போ எங்க எப்படி இருக்க வேண்டியவன்?" என்று கேட்கவில்லை.

எல்லோரும் சே குவேரா ஆக முடியுமா என்று கேட்கலாம். கண்டிப்பாக ஆக முடியாது. 




ஆனால் நம்மளவில் ஒரு காமன்மேனாக ஆகலாம். 

நான் என் வாழ்வில் செய்த ஒரு உருப்படியான காரியம் இந்த பதிவு. இது முதல் பதிவாக வந்தது மகிழ்ச்சி. 

பிறருக்கு உதவி செய்யாமல் இருப்பதற்கு ஆயிரம் காரணம் கூறினால் அவை அனைத்தின் பின்னால் இருப்பது ஒரே ஒரு காரணம்தான். பரந்த மனம் இல்லை.

ஒரு ஜென் குரு சொன்னது "நம்மில் பலர் கோப்பையின் பளபளப்பில் மயங்கி தேநீரை மறந்து விடுகிறோம்."


இன்று பல பேருடைய சட்டையை அலங்கரிப்பது இந்த படம்தான் ஆனால் இவர் ஒரு ஆங்கில திரைப்பட நடிகர் என்றே பலர் கருதுகின்றனர்.  உண்மையான ஒரு ஹீரோவின் உருவம் வெறும் அலங்காரத்திற்கு பயன் படுவது வேதனைக்குரியது. இவரது வாழ்க்கை வரலாற்றை படித்துப்பாருங்கள். திரைப்படங்களை மிஞ்சும் சாகசங்கள் நிறைந்ததாக இருக்கும்.  மேலும் இவர் ஒரு கம்யூனிஸ்ட் தீவிரவாதி ஆக சித்தரிக்கப்பட்டு இன்றைய தலை முறையிடம் இருட்டடிக்கப்படுகிறார். சே குவேரா தன் வாழ்நாள் முழுவதும் ஓடிக்கொண்டிருந்தது, பெயர் புகழுக்காக அல்ல. மானிட குலத்தின் மீது வைத்திருந்த அளவு கடந்த அன்பினால் மட்டுமே. இனி ஒவ்வொரு முறையும் நான் என்ன இளிச்ச வாயனா? என்ற கேள்வி தோன்றும் போது, இவரின் முகம் உங்கள் கண் முன் தோன்றட்டும்.

நம்மால் செய்ய முடியாத சாகசங்கள் எதுவும் நிகழ்த்திகாட்ட வேண்டாம். செய்ய முடிந்த காரியங்களை வாய்ப்பு வரும்போது தட்டி கழிக்காமல் மனமுவந்து செய்தாலே போதும். 
முழுவதும் படிக்க >>

February 10, 2010

நானும்...

நண்பர்களே!! நானும் எழுத தொடங்கிட்டேன்.......
எதை பற்றி எழுதலாம் என்று யோசித்த போது, எதை பற்றி வேண்டுமானாலும் எழுதலாம். ஆனால், எழுதுவதை ஒழுங்காக எழுத வேண்டும் என தோன்றியது. நான் பார்த்தது, கேட்டது, படித்தது, உணர்ந்தது, சிந்தித்தது(பெரிய சாக்ரடீஸ்?!!) பற்றி எழுதலாம். இவை அனைத்தும் என் சொந்த கருத்தே அன்றி வேறொன்றும் இல்லை(மறுபடியும் பார்ரா..)



முழுவதும் படிக்க >>
Related Posts Plugin for WordPress, Blogger...