விவேகானந்தரின் நறுக்

கடவுள் நாம் விரும்பியதை கொடுப்பவர் அல்ல, நமக்குத் தேவையானதை கொடுப்பவர்...

August 17, 2010

வெட்டி அரட்டை- தேர்ந்த நடிகர் சங்கக்காரா, சட்டம் தன் கடமையை செய்யும்



பொதுவாகவே பதிவுகளில் உருப்படியாக எதுவும் எழுதாவிட்டாலும், ஒரு முழு நீள கட்டுரையாக இல்லாமல் பிட்டு செய்திகள் எழுதுவதை இனி வெட்டி அரட்டை என்ற தலைப்பில் தரலாம் என்று எண்ணி இருக்கிறேன்.


தேர்ந்த நடிகர் சங்கக்காரா...


உப்பு சப்பில்லாத ஒரு படம் கிளைமாக்ஸ் காட்சியில் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தால் எப்படி இருக்கும்? அப்படித்தான் இருந்தது நேற்று நடந்த இந்திய இலங்கை அணிகளுக்கு இடையே நடந்த ஒருநாள் ஆட்டம். இப்படி ஒரு மகா மட்டமான ஆட்டத்தை இரண்டு அணிகளுமே சமீப காலமாக வெளிப்படுத்தி வருகின்றன. அணியில் இருந்த பெருந்தலைகளின் இடங்கள் இன்னும் நிரப்பப்படாமல் இருப்பது கூட காரணமாக இருக்கலாம். தம்புலா மைதானத்தில் இதற்கு முன் பல ஆட்டங்களில் நிறைய அணிகள் முன்னூறுக்கு மேல் எடுத்துள்ளன. வழக்கமாக ஆட்டத்தின் தொடக்கத்திலேயே அவசரப்பட்டு தன் விக்கெட்டை இழந்துவிடும் சேவாக் நேற்று நிதானமாக ஆடினார். 



ஒரு கட்டத்தில் இந்திய அணி வெற்றிபெற முப்பத்தைந்து ரன்களே எடுக்கவேண்டிய கட்டத்தில், சேவாக் சதம் அடிக்க இருபத்தைந்து ரன்கள் தேவை என்ற நிலை வந்ததும், சேவாக் அதிரடியாக ஆடி சதத்தை நெருங்கினார். கடைசியில் வெற்றிபெற ஐந்து ரன்கள் மட்டுமே தேவை, சேவாக் சதம் அடிக்க ஒரே ஒரு ரன் தேவை. ரந்திவ் வீசிய பந்தை அதுவரை அபாரமாக கீப்பிங் செய்து வந்த சங்கக்காரா தவற விட (!!??) பந்து பவுண்டரிக்கு சென்றது. இன்னும் ஒரே ஒரு ரன் தேவை. ரந்திவ் வீசிய பந்தை இறங்கி வந்து வெளியே அனுப்புகிறார் சேவாக். கடைசியில் அது நோ பால் என அறிவிக்கப்பட, சேவாக் அடித்த சிக்சர் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது, நோ பாலில் கிடைத்த ஒரு ரன் மூலம் இந்தியா வென்று விட்டது என்று சொல்லி விட்டார்கள். சேவாக் 99 ரன்களில் ஆட்டமிழக்காமல் ஏமாற்றத்துடன் திரும்புகிறார்.

சர்ச்சையை கிளப்பிய அந்த நோ பால் இதோ கீழே...


இது தெரியாத்தனமாக வீசப்பட்ட நோ பால் அல்ல என்பது டிவி ரீப்ளேயில் தெள்ள தெளிவாக தெரிந்தது. அதாவது பவுலரின் முன்னங்கால் லேசாக கிரீசுக்கு வெளியே சென்று விட்டால் அது தெரியாத்தனமாக நடந்தது என்று சொல்லி விடலாம். ஆனால் அவரின் பின்னங்காலே கிரீசுக்கு வெகு அருகில் இருந்தது. முன்னங்காலோ கிரீசுக்கு வெளியே வெகு தொலைவில். இத்தனைக்கும் அவர் வேகப்பந்து வீச்சாளர் அல்ல. வளர்ந்து வரும் ஒரு கிரிக்கெட் வீரர் இப்படி ஒருவரின் தனி நபர் சாதனையை தடுக்கும் வகையில் செயல்பட்டிருப்பது வருத்தம் அளிக்கிறது. 


இது குறித்து சேவாக் கூறும்போது, "அது வேண்டும் என்றே வீசப்பட்ட நோ பால். யாருக்குமே எதிர் அணியில் ஒருவர் சதம் அடிப்பது பிடிக்காது. ஆகவே இது நடப்பது இயல்புதான்." என்றார். சங்கக்காரா, "எனக்கு எதுவுமே தெரியாது." என்று சொல்லி விட்டார். ஆக பழி மொத்தமும் ரந்திவ் தலையில். சரிதான் சங்கக்காரா அளவுக்கு ரந்திவுக்கு நடிக்க தெரியவில்லை. அவர் எப்படி அந்த பந்தை தவற விடுவது போல பந்தை பவுண்டரி போக விட்டாரோ அதே போல கொஞ்சம் இயல்பாக இருந்திருந்தால் இந்த நோ பாலும் இந்த அளவுக்கு சர்ச்சையை கிளப்பி இருக்காது. மறுநாள் ரணதுங்கா போனில் அழைத்து தனது வீரரின் செயலுக்கு மன்னிப்பு கோரிஉள்ளார்.


சட்டம் தன் கடமையை செய்யும்...


சில நாட்களுக்கு முன்னால் சன் செய்திகள் தொலைக்காட்சியில் ஒரு செய்தியை கண்டு துணுக்குற்றேன். அதாவது சென்னையை சேர்ந்த பிரகாஷ் என்பவர், தன் பெற்றோர் சாவுக்கு காரணமாக இருந்த ஒரு சாமியாரை கருத்தில் கொண்டு, நாட்டில் பல இடங்களில் உள்ள ஆண் சாமியார்களுக்கெல்லாம் இலவசமாக வாகனம் வாங்கி தருவதாகவும், இன்சூரன்ஸ் மற்றும் சில செலவுகளுக்கு மட்டும் பணம் அனுப்புமாறும் செய்தி அனுப்பி பல லட்சம் ரூபாய்களை அபேஸ் செய்துள்ளார். மேலும் தான் அபேஸ் செய்த பணத்தைக்கொண்டு, சில பல நல்ல காரியங்களிலும் ஈடுபட்டுள்ளார். குறிப்பாக ஒரு விதவையை மணமுடித்துள்ளார். இவ்வாறு அந்த செய்தி ஓடிக்கொண்டிருந்தது. "ஆகா! என்னடா சங்கர் படக்கதையை மிஞ்சும் அளவுக்கு இருக்கிறதே!!" என்று ஆச்சர்யப்பட்டேன். இரண்டு நாள் கழித்து நாளிதழில் இது குறித்த செய்து வெளியானபோது, சாமியார்களை ஏமாற்றியது மட்டுமல்லாமல், பல நபர்களை வேலைவாங்கி தருவதாகக்கூறியும் ஏமாற்றியுள்ளார் என்றும் வந்திருந்தது. எனக்கு லேசாக ஒரு சந்தேகம் வந்தது. 


எங்கே இப்படியே விட்டால் இந்த பிரகாஷ் மக்கள் மத்தியில் ஒரு ஹீரோ ஆகி விடுவாரோ என்ற பயத்தில் சட்டம் தன் கடமையை செய்துவிட்டதோ? என்று. ஏனென்றால் சட்டம் நினைத்தால் எது வேண்டுமானாலும் செய்யலாம் என்பதற்கு ஒரு உதாரணம் சொல்கிறேன். சில ஆண்டுகளுக்கு முன்னால் அதிமுக ஆட்சியில் இருக்கும்போது, அதிமுக ஆதரவாளரான கராத்தே தியாகராஜன் ஒரு வாய்த்தகராறில் அதிமுக அரசை திட்டிவிட, உடனே கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். சரியாக இருபத்தி நான்கு மணிநேரத்தில் அவர்மீது இருநூறுக்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அதாவது அவர் ஒரேநாளில் அத்தனை குற்றம் செய்தாரா? இல்லை அதுவரை தூங்கிகொண்டிருந்த சட்டம் திடீரென விழித்துக்கொண்டு, தன் கடமையை செய்ததா என்று எனக்கு இன்றுவரை புரியவில்லை.


உங்களுக்கு பிடிச்சிருந்தா ஓட்டு போடுங்க...
உங்க கருத்துக்களை இங்கே பதிவு பண்ணுங்க...

3 comments:

எப்பூடி.. said...

ரண்டிப் செய்ததை நியாயப்படுத்தவில்லை, ஆனால் கிரிக்கெட்டில் இது ஒன்றும் புதிதில்லை. எதுவுமே திட்டமிட்டு செய்வதில்லை, அந்த கணத்தில் தோன்றுவதுதான், அது சிலவேளைகளில்அவை விமர்சனத்துக்குள்ளாகிவிடும். முன்னரே திட்டமிட்டிருந்தால் நோ பாலுக்கு முதல் இரண்டு பந்துகளை ரண்டீப் ஒழுங்காக வீசியிருக்கவேண்டிய அவசியம் இருந்திருக்காது.

சங்ககார எனக்கு பிடிக்காத இலங்கை வீரர், ஆனால் அந்த பவுண்டரி நிச்சயமாக வேண்டுமென்று விடப்பட்டதில்லை என்பதை என்னால் நிச்சயமாக கூறமுடியும், ஆனால் ரண்டீப் விடயத்தில் என்னை பொருத்தவரை சங்ககார தலையீடு இருந்துமிருக்கலாம் இல்லாமலுமிருக்கலாம், ஏனெனின் ரண்டீப் ஒரு வேரியேசனான பந்துவீச்சாளர், அவர் தனித்தும் இயங்கியிருக்கலாம்.

"ராஜா" said...

இது கிரிக்கெட் விளையாட்டின் மேல் விழுந்துள்ள மற்றும் ஒரு அசிங்கமான கரும்புள்ளி

Unknown said...

உலக அரங்கில் கிரிக்கெட் விளையாடுபவர்களின் இதுபோன்ற செய்கைகள் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது..

உண்மையில பாவம் சேவாக்.. ஒரு சதத்தை அநியாயமா இழந்துட்டார்..

Related Posts Plugin for WordPress, Blogger...