விவேகானந்தரின் நறுக்

கடவுள் நாம் விரும்பியதை கொடுப்பவர் அல்ல, நமக்குத் தேவையானதை கொடுப்பவர்...

April 15, 2010

சாம் ஆண்டர்சன் Vs கமலஹாசன்...


ஒரு வழியாக விக்ருதி பிறந்து விட்டது. என்னது நேற்று தமிழ் புத்தாண்டு இல்லையா? யார் என்ன வேண்டுமானாலும் சொல்லி கொள்ளட்டும். எனக்கு நேற்றுதான் புத்தாண்டு. அதில் எந்த மாற்றமும் இல்லை.


சரி சொல்ல வந்த விஷயம் அதுவல்ல. பொதுவாக விடுமுறை நாட்களில் திரையரங்குகளை நோக்கி படை எடுக்கும் நான் நேற்று நல்ல பிள்ளையாக வீட்டில் உட்கார்ந்து புத்தாண்டு, சித்திரை திருநாள், 17 ஆம் ஆண்டு நிறைவுவிழா என்று எல்லா சிறப்பு நிகழ்ச்சிகளையும் (வேறு வழியில்லாமல்) பார்த்தேன். வழக்கம்போல் தமிழ் தமிழ் என்று சொல்லிக்கொண்டு ஒரே மாதிரியான நிகழ்ச்சிகளை ஒளிபரப்பும் நிகழ்வுகள் நடந்தன. இதில் எப்போதுமே வித்தியாசம் காட்டும் விஜய் டிவியின் சிறப்பு காப்பி வித் அனு நிகழ்ச்சியில் முத்தையா முரளிதரன் பங்கேற்றார்.


எனக்கு முரளிதரனை தனிப்பட்ட முறையில் மிகவும் பிடிக்கும் (அவர் தமிழர் என்று தெரிவதற்கு முன்பே). அதற்கு முக்கிய காரணம் அவரின் செய்கைகளில் ஒரு குழந்தைத்தனம் இருக்கும். அவர் தமிழ் பேசி கேட்டதே இல்லை. இதற்கு முன் பெப்சி உங்கள் சாய்ஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார் என்று நினைக்கிறேன். அப்போது பார்க்க வாய்ப்பு கிடைக்க வில்லை. நேற்று அவரின் பேட்டியை கேட்டவுடன் முரளிதரன் மீதுள்ள அபிமானம் இன்னும் அதிகரித்துவிட்டது. தோல்வியில் சோர்ந்து கிடக்கும் யாரையும் அவரின் பேச்சு உற்சாக படுத்திவிடும். தன் பேட்டியில் ஒரு முறை கூட அவர் யாரையும் குறை சொல்லவில்லை. பந்தை எறிகிறார் என்று இன்றும் குற்றம் சாட்டுகிறார்கள். அவர்களுக்கு வாய் வலிக்கும் என்று சிறு குழந்தை போல கூறினார். ஒரு ஆட்டத்தில் தோற்றால் அதோடு முடிவதில்லை. அடுத்து ஒரு ஆட்டம் வரும். அது போலத்தான் வாழ்க்கையும். ஒரு முயற்சியில் தோற்றால் அதோடு நின்று விட கூடாது என்றார். அவர் பேசிய பேச்சில் செந்தமிழ் வார்த்தைகள் அதிகமிருந்தன. பிழை, கணக்காய், இயலாது போன்ற சொற்களை அதிகம் பயன் படுத்தினார். ஹெய்டனுக்கு நாமக்கல் ஆஞ்சநேயர் என்று பெயர் வைத்தது, பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதலுக்கு ஆளானது, சுனாமி அனுபவங்கள் என பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.. அவரை பார்த்தபோது நம் பக்கத்து வீட்டில் இருக்கும் ஒரு சராசரி மனிதனை போலவே தோன்றியது. ஆனால் இரண்டு நிமிடங்களுக்கு ஒருமுறை என்று விளம்பரம் ஒளிபரப்பிய (சத்தியமா) விஜய் டிவி மீதுதான் பயங்கர கடுப்பு.


நேற்று மதியம் சிறப்பு நீயா நானா நிகழ்ச்சியும் ஒளிபரப்பினார்கள். தலைப்பு, எந்த வட்டார தமிழ் மொழி அழகானது, சிறப்பானது என்று விவாதம் நடந்தது. தமிழ் புத்தாண்டு அன்று தமிழ் சம்பந்தமாக நிகழ்ச்சி ஒளிபரப்புவதில் எப்போதுமே விஜய் டிவி முன்னால் நிற்கிறது. கோபிநாத் ஒவ்வொரு ஊரிலும் எப்படி திட்டுவார்கள் என்று கேட்டார். பங்கேற்பாளர்கள் பொளந்து கட்டி விட்டார்கள். ஆண்களே பேச கூசிய இடத்தில் ஒரு இல்லத்தரசி மோசமான கேட்ட வார்த்தை ஒன்றை சரளமாக சொல்ல எல்லோருக்கும் என்னவோ போலாகிவிட்டது. அதை சென்சார் செய்துவிட்டார்கள். இருந்தாலும் நல்ல நாள் அதுவுமா இவ்வளவு அமங்கலமான வார்த்தைகளை கேட்க வேண்டியதாகிவிட்டது. ஒரு மொழியில் திட்டும் போது கூட கலாச்சாரம் வெளிப்படும் என்று கோபிநாத் காரணம் கூறினால் கூட, விடுமுறை நாட்களில் குழந்தைகளுக்கு இலவசமாக கெட்ட வார்த்தைகளை கற்றுகொடுத்த விஜய் டிவியை என்ன சொல்வது? ஏற்கனவே எங்கள் தெருவில் இருக்கும் ஒரு மூன்று வயது குழந்தை சில நாட்களுக்கு முன் "காண்டம், காண்டம், காண்டம் " என்று சொல்லி கொண்டே அலைந்து அனைவரையும் சங்கட படுத்தியது. எல்லாம் தொலைகாட்சிகளின் கைங்கர்யம்.


வர வர சன் தொலைக்காட்சியின் நிகழ்சிகளை கண்டாலே எரிச்சலாக வருகிறது. ஏற்கனவே ஆயிரம் முறை ட்ரைலர், ஐநூறு முறை திரைதுளிகள் என்று எல்லா காட்சிகளையும் ஒளிபரப்பிய படத்தை மனசாட்சியே இல்லாமல் இந்திய தொலைக்காட்சிகளில் முதல் முறையாக என்று ஒளிபரப்பினார்கள். சூப்பர் ஹிட் என்று அடைமொழி வேறு. சரி கலைஞர் டிவி பக்கம் போகலாம் என்றால் தசாவதாரத்தை தசாவது தடவையாக எப்படி பார்ப்பது? சரி மாலை அருந்ததி படமாவது பார்க்கலாம் என்றால், ஏதோ திரைத்துளிகள் பார்த்தது போல இருந்தது. படத்தில் ஏகப்பட்ட காட்சிகள் வெட்ட பட்டு விட்டன. இதே வேலையை இந்த இரண்டு தொலைக்காட்சிகளும் செய்து வருகின்றன. கேட்டால் குழந்தைகளும் எங்கள் சேனலை பார்க்கின்றன என்று சொல்கிறார்கள். அடப்பாவிகளா? இந்த அறிவு மானாட மயிலாட, ஆடவரல்லாம் ஆடவரலாம் போன்ற நிகழ்ச்சிகளை ஒளிபரப்பும் போது எங்கே போனது? போனவாரம் திருமதி செல்வம் என்ற தொடரில், வெகு நாட்களாக ஒன்றுமே 'செய்யாமல்' இருக்கும் தம்பதி இருவரின் காமம் கலந்த பார்வை பரிமாற்றங்களை இருபது நிமிடமாக காட்டி கொண்டிருந்தார்கள். அப்போதெல்லாம் எங்கே போனது உங்கள் அறிவு? ஒரே ஆறுதல் இறையன்பு அவர்களின் பட்டிமன்ற பேச்சு. சில கருத்துக்கள் நச்சென்று இருந்தன. 




சோர்ந்து போய் இருக்கும்போது நண்பர் ஒருவரிடம் இருந்து ஒரு குறுந்தகவல். இன்று மாலை மூன்று மணி அளவில் ஜி-தமிழ் தொலைக்காட்சியில் அகில உலக சூப்பர் ஸ்டார் சாம் ஆண்டர்சன் அவர்கள் நடித்த யாருக்கு யாரோ ஸ்டெப் நீ என்ற படம் போடுகிறார்கள் என்று. அப்பாடா புத்தாண்டுக்கு உருப்படியா ஒரு உலக படம் பார்க்க போகிறோம் என்று நிம்மதி அடைந்தேன். படம் பார்த்து கொண்டிருக்கும் போதே ஏகப்பட்ட நண்பர்களிடம் இருந்து தகவல். அநேகமாக நேற்று யாரும் தசாவதாரம் பார்த்திருக்க மாட்டார்கள். இந்த விஷயம் தெரிந்து கலைஞர் டிவி வட்டாரம் மிகுந்த வருத்தம் அடைந்திருக்கும். சாம் ஆண்டர்சன் படம் போடுகிறார்கள் என்று தெரிந்திருந்தால் கண்டிப்பாக அவர்கள் கமலஹாசன் படத்தை போட்டிருக்க மாட்டார்கள். பின்னே? சாம் ஆண்டர்சன் நடிப்புக்கு முன்னால் கமல் எம்மாத்திரம்? சீரியசாக ஜீ தமிழின் டீஆர்ப்பி எகிறி இருக்கும். கமலும், சாம் ஆண்டர்சனும் ஒரு விஷயத்தில் ஒத்து போகிறார்கள். இருவரின் படமும் தியேட்டர்களில் சரியாக ஓடுவதில்லை. ஆனால் தொலைக்காட்சியில் பெரிய வரவேற்ப்பை பெறுகின்றன. ஹி ஹி...



யாருக்கு யாரோ படம் விரைவில் முடிந்து விட்டதால் என்ன செய்வது என்று தெரியாமல் விழித்தேன். சரி ஐபிஎல் பக்கம் போகலாம் என்று பார்த்தால், ராஜஸ்தான் ஆட்டம் படு சொதப்பல். எனக்கு ஈடுபாடே இல்லாத இரண்டு அணிகள் விளையாடியதால் ஆட்டம் என்னை ஈர்க்கவில்லை. சாவதானமாக சேனல்களை மாற்றி கொண்டே வந்தேன். ஒரு பக்கம் தமன்னா தமிழை பாடாய் படுத்தி கொண்டிருந்தார் (அம்மணி அந்த உடையில் கொள்ளை அழகு). புத்தாண்டு முதல் நாளை பயனுள்ள(!!) வகையில் கழித்த மனநிறைவோடு சன் நியுஸ் பக்கம் சென்றேன். அம்பேத்கர் சுடர் விருது பெற்ற கலைஞர் உரை. நமுட்டு சிரிப்பு சிரித்துக்கொண்டே டிவியை அணைத்தேன்.

புத்தாண்டு சிறப்பு பரிசுப்போட்டி:
கீழே கொடுக்கப்பட்டுள்ள கேள்விகளுக்கு பதில் அளித்து அதிசய பரிசை வெல்லுங்கள். 

1. மேலே  சாம் ஆண்டர்சன் பக்கத்தில் இருக்கும் நபர் யார்? 
2. கமல், சாம் ஆண்டர்சன் இருவரில் யாருக்கு முத்த காட்சிகளில் நடிக்கும் திறமை அதிகம்?
3. இன்னும் தனக்கென்று ஒரு பட்டம் சூட்டி கொள்ளாத  சாம் ஆண்டர்சன் அவர்களுக்கு என்ன பட்டம் வைத்தால் நன்றாக இருக்கும்? 

சரியான பதில் எழுதி சாம் ஆண்டர்சன் அவர்கள் கையெழுத்திட்ட அவரின்  ஆளுயர படத்தை வெல்லுங்கள்.... 

பிடிச்சிருந்தா ஓட்டு போடுங்க..
உங்க கருத்துக்களை இங்கே பதிவு பண்ணுங்க..

5 comments:

RaveePandian said...

Super

Chitra said...

அருமையான எழுத்து நடையில், ஒரு நல்ல அலசல். பாராட்டுக்கள்!

Bala said...

@RaveePandian

நன்றிகள் ரவி

@Chitra
ஏதோ இருக்கும் கொஞ்ச அறிவை வைத்து எழுதுகிறேன். மனமார பாராட்டியதற்கு நன்றி சித்ரா அவர்களே.

shan said...

poda looosu ...kamal universal hero

Bala said...

@shan

நீங்கள் யாருக்கு யாரோ படம் பார்க்கவில்லையா?

Related Posts Plugin for WordPress, Blogger...