பொதுவாக ஆங்கில படங்களில் நகைச்சுவை படங்கள் என்றால் மிகைபடுத்த பட்ட பாலியல் காட்சிகள், மற்ற படங்களை கிண்டல் செய்து எடுக்கப்பட்ட காட்சிகள், நம்பமுடியாத காட்சிகள் என்று நிறைய இருக்கும் உதாரணமாக, நெகட் கன், அமெரிக்கன் பை, ஸ்கேரி மூவி,ஏஸ் வென்சுரா போன்ற படங்களை குறிப்பிடலாம். இவை எல்லாம் இல்லாமல் மிக சாதாரணமாக காட்சி அமைப்புகளிலேய நகைச்சுவையை புகுத்தும் படங்கள் மிக சொற்பமே. அவற்றுள் ஒன்று தான் இந்த படம்.
இந்த படம் ஏற்கனவே பல பதிவர்களால் எழுதப்பட்ட படம்தான். இப்படி ஒரு படம் வந்ததே பலருக்கு தெரியால் போயிருக்கலாம். ஆனால் இந்த படம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்ததற்கு முக்கிய காராணம் சமீபத்தில் வந்து மாபெரும்(??) வெற்றி அடைந்த கோவா திரைப்படம். கோவா திரைப்படம் இந்த படத்தின் தழுவல்(காப்பி?) என்று ஒரு செய்தி பரவியதும் அனைவரும் முந்திக்கொண்டு இந்த படத்தை பார்த்தனர். பின் இதனை அறிந்த வெங்கட்பிரபு கோவா படத்தின் கதையை மாற்றி விட்டதாகவும் கூறப்படுகிறது. ஒருவேளை அவர் கதையை மாற்றாமல் Hangover படத்தையே கோவாவாக எடுத்திருந்தால் நிச்சயமாக சென்னை 600028 படத்தை விட பலமடங்கு வெற்றி அடைந்திருக்கும். விதி யாரை விட்டது? இதே மாதிரி ஒரு படம் சில ஆண்டுகளுக்கு முன் தமிழில் வந்துள்ளது. அது பஞ்ச தந்திரம்.
சுற்றுலா சென்ற இடத்தில் நீங்கள் உங்கள் நண்பர்களுடன் தண்ணி அடித்து கொண்டிருக்கிறீர்கள். போதை தலைக்கேறி மயங்கி விட்டீர்கள். காலையில் எழுந்து பார்த்தால் உங்கள் அறையே அலங்கோலமாக உள்ளது. உங்கள் நண்பர்களுள் ஒருவரை காணவில்லை. எவ்வளவு யோசித்து பார்த்தும் இரவில் என்ன நடந்தது என்று நினைவில்லை. உங்களுக்கு எப்படி இருக்கும்? இதுதான் படத்தின் கதை. தனக்கு திருமணம் நடக்கபோவதால் டாக் தன் நண்பர்கள் இருவர் மற்றும் தன் மச்சான் (திருமணம் செய்து கொள்ள போகும் பெண்ணின் சகோதரன்) என நால்வரும் பேச்சிலர் பார்ட்டி கொண்டாட திருமணத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன்பாக லாஸ் வேகாஸ் செல்கிறார்கள். அங்கே இரவில் மதுபானத்தில் மச்சான் ஏதோ ஒரு போதை மருந்தை கலந்து விட எல்லோரும் மட்டை ஆகி விடுகிறார்கள்.
விடிந்ததும் ஒவ்வொருவராக கண் விழிக்கிறார்கள். கல்யாண மாப்பிள்ளையை காணவில்லை. அவர்களின் ஓட்டல் அறை அலங்கோலமாக கிடக்கிறது, சோபாவில் ஒரு குழந்தை கிடக்கிறது, பாத்ரூமில் ஒரு புலி உறங்கி கொண்டிருக்கிறது, ஒருவருக்கு ஒரு பல்லை காணவில்லை. கையில் மருத்துவமனை சென்று வந்து அடையாள சீட்டு வேறு. என்ன நடந்தது என்று தெரியவில்லை. டாக்கை எங்கே தேடியும் காணவில்லை. இவர்களுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. இன்னும் இரண்டு நாளில் திருமணம். தெரியாத ஊரில் எங்கே போய், யாரை கேட்பது என்று தெரியவில்லை. ஓடுகிறார்கள், ஓடுகிறார்கள் ஓடிக்கொண்டே இருக்கிறார்கள். திடுக்கிடும் பல விஷயங்கள் வெளிவருகின்றன. கடைசியில் டாக்கை கண்டு பிடித்தார்களா? அவருக்கு திருமணம் நடந்ததா? முன்னிரவு என்னென்ன நடந்தன? என்பதை வயிறு வலிக்க சிரிக்க வைத்து சொல்லி இருக்கிறார்கள்.
அண்மை காலமாக நான் பார்த்த ஆங்கில படங்களிலேயே இயல்பான நகைச்சுவை படம் இது. நகைச்சுவை படங்களுக்கே உரிய கெட்ட வார்த்தைகள், சில வரம்பு மீறிய காட்சிகள் இதிலும் உண்டு. ஆனால் அவை பெரிதாக எந்த பாதிப்பும் ஏற்படுத்தவில்லை. படத்தில் குபீர் சிரிப்பை வரவழைக்கும் காட்சிகள் ஏராளம். உதாரணமாக ஏற்கனவே திருமணம் ஆன பல் டாக்டர் தன்னுடைய கல்யாண மோதிரம் ஆடை அவிழ்ப்பு நடனம் (stripper) ஆடும் பெண்ணின் விரலில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைவதும், அதன் பின் வரும் வசனமும், மைக் டைசன் வீட்டுக்கு சென்று அவர் வளர்க்கும் புலியை கடத்தும் காட்சிகளும் நம் வயிற்றை பதம் பார்ப்பவை. முந்தைய நாள் இரவில் நடந்த நிகழ்ச்சிகளை காட்சிகளாக காட்டாமல், வெறும் வசனங்களாலேயே அவற்றை விளக்கி இருப்பதும், படத்தின் இறுதியில் ஒரு டிஜிடல் காமிராவில் அனைத்து காட்சிகளும் எடுக்க பட்டிருப்பதாக கூறி அனைத்து காட்சிகளையும் புகைப்படங்களாக காட்டி இருப்பதும் அருமை.
இந்த படம் வெளிவந்த ஆண்டு 2009. படத்தில் டாக்காக நடித்திருப்பவர் பார்த்தா. நண்பர்களாக பிராட்லி மற்றும் எட் ஹேல்ம்ஸ். இதில் எட் ஹேல்ம்ஸ் பல் டாக்டர். திருமணமானவர். மனைவிக்கு பயந்தவர். பஞ்ச தந்திரம் படத்தில் ஜெயராம் வருவாரே அது போல. இவருக்கு உண்மையிலேயே ஒரு பல் கிடையாது. அதனை இந்த படத்தில் பயன் படுத்தி கொண்டார்களாம். அதே போல் டாக்கின் மச்சானாக நடித்திருப்பவர் ஜாக் கலிபியானகிஸ். இவருடைய தாடியுடன் கூடிய குண்டான உருவமும், வசன உச்சரிப்பும் உடனே சிரிப்பை வரவழைப்பவை. தமிழில் எடுத்திருந்தால் இந்த பாத்திரத்தில் நிச்சயம் பிரேம்ஜிதான் நடித்திருப்பார்.
படத்தின் தயாரிப்பாளரின் நண்பர் ஒருவரின் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவங்களை வைத்து எழுத்தப்பட்ட கதை என்று படத்தின் இயக்குனர் டோட் பிலிப்ஸ் கூறி உள்ளார். பார்ட்டி சம்பந்தமான படம் என்பதால் இசை தாளம் போட வைக்கிறது. குறுகிய காலத்தில் எடுக்கப்பட்ட இந்த படம் மிகபெரிய வெற்றி அடைந்துள்ளது. இந்த படத்தின் இரண்டாம் பாகம் 2011 ஆம் ஆண்டு வெளி வரும் என்று எதிர்பார்க்க படுகிறது.
நேரம் கிடைத்தால் கண்டிப்பாக பார்க்கலாம்.
பிடிச்சிருந்தா ஓட்டு போடுங்க..
உங்க கருத்துக்களை இங்கே பதிவு பண்ணுங்க...
3 comments:
ரொம்ப நல்ல விமர்சனம். அவசியம் பார்க்கணும்.
ரொம்ப அருமையான படம் ... ஒவ்வொரு காட்சியும் கண்டிப்பாய் விழுந்து விழுந்து சிரிக்கலாம்..... அதும் கார்ல அந்த புலிய கொண்டு போற காட்சி ரொம்ப சூப்பெரா இருக்கும் ....
நீங்க சொன்ன மாதிரி கோவா படத்துக்கு இந்த கதையை சுட்டிருந்தாருணா கண்டிப்பா பெரிய ஹிட்டுதான் படம் ....
ஒரு ஐந்து ஆறு மாதங்களுக்கு முன்பு இந்த படத்தைப் பார்த்தேன். இதை தான் வெண்கட் பிரபு 'சுட' போவதாக பிற்பாடு கேள்வியுற்றேன். ஹிந்தியில் இதன் உரிமையை ஒருவர் வாங்கிவிட்டதாகவும் அதனால் வெண்கட் பிரபு இதனை ரீமேக் செய்ய தடை விதிக்கப் பட்டதாகவும் அறிந்தேன். தமிழில் எடுத்திருந்தால் நன்றாகத் தான் இருந்திருக்கும்.
//இந்த படத்தின் இரண்டாம் பாகம் 2011 ஆம் ஆண்டு வெளி வரும் என்று எதிர்பார்க்க படுகிறது.//
தகவலுக்கு நன்றி. கண்டிப்பாக 'வெய்டிங்'... :)
நல்ல தெளிவான விமர்சனம். வாழ்த்துகள். :)
Post a Comment