தலைப்பை பார்த்த உடனே இது ஏதோ காமெடி பதிவோ, சுய பச்சாதாப பதிவோ அப்படின்னு நினைக்கலாம் .
நான் என்ன இளிச்சவாயனா? இந்த கேள்விய எப்பல்லாம் கேப்பிங்க?
பொதுவா நம்மள யாராவது தெரிஞ்சே ஏமாத்துனா (நான் நம்ம அரசியல்வாதிகள சொல்லல) இந்த கேள்விய கேக்கலாம். ஆனா அப்போதெல்லாம் கேட்பது இல்லை . ஒரு சட்டத்த எல்லாரும் கடை பிடிக்கணும் அப்படின்னு சொல்லும்போது, யாருமே அத செய்யாம, நம்மை மட்டும் கடை பிடிக்க சொன்னா உடனே சொல்கிற வார்த்தை இது. அதாவது ஒருவன் நல்ல விசயங்களை செய்ய வேண்டுமானால் முதலில் அவனை சுற்றி உள்ள எல்லோரும் அதை செய்ய வேண்டும். முதலில் எவன் செய்கிறானோ அவனை அந்த சமூகமே இளிச்சவாயன் என்று அன்போடு அழைக்கும். இல்லை நாமே நம்மை அந்த கேள்வியை கேட்டுக்கொள்வோம். இது நான் சொன்னது அல்ல. நம்ம மாண்புமிகு முன்னால் குடியரசு தலைவர் அப்துல் கலாம் அவர்கள் சொன்ன வேதனைக்குரிய விஷயம். கண்டிப்பாக செய்ய வேண்டிய செயலுக்கே இப்படி ஒரு கேள்வி கேட்டு செய்யாமல் இருக்க வழி தேடும்போது, நாமே மனமுவந்து செய்ய வேண்டிய சில காரியங்களை எப்படி செய்ய முடியும்? சரி நம்மில் சிலருக்கு அப்படி மற்றவர்களுக்கு உதவும் மனம் இருந்தாலும் செய்யாமல் இருப்பதற்கு காரணங்கள் என்ன?
பட்டியலிடுவோம் நியாயமான காரணங்களை:
1. எனக்கு நிறைய கடமைகள் இருக்கு
2. என்ன நம்பி ஒரு குடும்பம் இருக்கு.
3. எனக்கு இப்பதான் கல்யாணம் முடிஞ்சிருக்கு.
4. சின்ன வயசுல இருந்து கஷ்டம் தெரியாம வளந்ததுனால எனக்கு உலகத்த பத்தி தெரியல
5. என்ன நிறைய செலவு செஞ்சு படிக்க வச்சவங்க ஆசைல மண் போட முடியாது.
6. எனக்கு சின்ன வயசுல இருந்தே ஆஸ்த்மா(இன்ன பிற நோய்கள்). இந்த நிலைமைல நான் போய் எங்க சேவைல ஈடுபடுறது ?
7. நான் ஒருத்தன் நினைச்சா என்ன செய்ய முடியும்?
8. எல்லாத்துக்கும் மேல அரசாங்கம், அரசியல்வாதிகள் இருக்காங்க.
9. அது வேற நாடு. என் நாட்டிலேயே என்னால் ஏதும் செய்ய முடியாது. அந்த நாட்டு மக்களுக்கே அக்கறை இல்லை.
10. அனுபவிக்க வேண்டிய சின்ன வயசு.
இப்படி நமக்கு சொல்வதற்கு ஆயிரம் காரணங்கள் இருக்கும். அவை நியாயமானதும் கூட.
மேற்கூறியவற்றுள் ஒரு காரணம் இருந்தால் கூட நம் செயலை நம்மால் நியாயப்படுத்த முடியும். ஆனால் மேற்கூறிய அனைத்தும் ஒருவனிடம் இருந்தால் அவனை யாரும் குற்றம் சொல்ல முடியாது. அப்படித்தானே?
ஆம் எர்னஸ்டோவிடம் இவை அனைத்தும் உண்டு.
ஓரளவுக்கு வசதியான குடும்பத்தை சேர்ந்தவர். மருத்துவம் படித்தவர், பெண்களை வசீகரிக்கும் அழகு உடையவர், சாதாரண குடிமகன், இத்தனைக்கும் அவர் போராடிய கியூபா ஒன்றும் அவர் தாய்நாடு அல்ல. வாழ்நாள் முழுவதும் உயிரோடு கொல்லும் ஆஸ்த்மாவால் அவதிப்பட்டவர்.
கை நெறைய சம்பளம், கண்ணுக்கு நிறைவான மனைவி, சோபாவில் சாய்ந்து காலாட்டிக்கொண்டே அவர் கேட்டிருக்கலாம் "நான் மட்டும் என்ன இளிச்சவாயனா?" ஆனால் அவர் கேட்கவில்லை. தன்னை சிறை பிடித்து அடைத்து வைத்திருந்த ஒரு பள்ளி கட்டிடத்தின் நிலையை பார்த்து அங்கிருந்த ஒரு பணிபெண்ணிடம் " இந்த இடம் ஏன் இப்படி இருக்கு? இங்கு எவ்வாறு படிக்க முடியும்? நாம் வெளிய வந்தவுடன் இந்த இடத்தை சீர்படுத்துவேன்" என்று சொன்னாரே ஒழிய "எல்லாம் என் நேரம். நான் இப்போ எங்க எப்படி இருக்க வேண்டியவன்?" என்று கேட்கவில்லை.
எல்லோரும் சே குவேரா ஆக முடியுமா என்று கேட்கலாம். கண்டிப்பாக ஆக முடியாது.
ஆனால் நம்மளவில் ஒரு காமன்மேனாக ஆகலாம்.
நான் என் வாழ்வில் செய்த ஒரு உருப்படியான காரியம் இந்த பதிவு. இது முதல் பதிவாக வந்தது மகிழ்ச்சி.
பிறருக்கு உதவி செய்யாமல் இருப்பதற்கு ஆயிரம் காரணம் கூறினால் அவை அனைத்தின் பின்னால் இருப்பது ஒரே ஒரு காரணம்தான். பரந்த மனம் இல்லை.
ஒரு ஜென் குரு சொன்னது "நம்மில் பலர் கோப்பையின் பளபளப்பில் மயங்கி தேநீரை மறந்து விடுகிறோம்."
இன்று பல பேருடைய சட்டையை அலங்கரிப்பது இந்த படம்தான் ஆனால் இவர் ஒரு ஆங்கில திரைப்பட நடிகர் என்றே பலர் கருதுகின்றனர். உண்மையான ஒரு ஹீரோவின் உருவம் வெறும் அலங்காரத்திற்கு பயன் படுவது வேதனைக்குரியது. இவரது வாழ்க்கை வரலாற்றை படித்துப்பாருங்கள். திரைப்படங்களை மிஞ்சும் சாகசங்கள் நிறைந்ததாக இருக்கும். மேலும் இவர் ஒரு கம்யூனிஸ்ட் தீவிரவாதி ஆக சித்தரிக்கப்பட்டு இன்றைய தலை முறையிடம் இருட்டடிக்கப்படுகிறார். சே குவேரா தன் வாழ்நாள் முழுவதும் ஓடிக்கொண்டிருந்தது, பெயர் புகழுக்காக அல்ல. மானிட குலத்தின் மீது வைத்திருந்த அளவு கடந்த அன்பினால் மட்டுமே. இனி ஒவ்வொரு முறையும் நான் என்ன இளிச்ச வாயனா? என்ற கேள்வி தோன்றும் போது, இவரின் முகம் உங்கள் கண் முன் தோன்றட்டும்.
நம்மால் செய்ய முடியாத சாகசங்கள் எதுவும் நிகழ்த்திகாட்ட வேண்டாம். செய்ய முடிந்த காரியங்களை வாய்ப்பு வரும்போது தட்டி கழிக்காமல் மனமுவந்து செய்தாலே போதும்.
2 comments:
Hearty wishes mr.Bala,I wish you all success
moulefrite!! Thank you very much for your wishes
Post a Comment