விவேகானந்தரின் நறுக்

கடவுள் நாம் விரும்பியதை கொடுப்பவர் அல்ல, நமக்குத் தேவையானதை கொடுப்பவர்...

November 15, 2011

காக்க வைப்பது, காத்திருப்பது - எது சுகம்?


இது கண்டிப்பாக காதல் சம்பந்தமான பதிவு அல்ல. சொல்லப்போனால் அதற்கு எதிரான பதிவு. நம்மில் பலருக்கும் ஒரு பழக்கம் உண்டு. அதாவது நம்மிடம் இல்லாத ஒரு நல்ல விஷயத்தை அடுத்தவரிடம் எதிர்பார்ப்போம். சிலருக்கு நம்மிடம் அந்த குணாம்சம் இல்லை என்றே தெரியாது. பலருக்கு  தெரிந்தாலும் அதைப்பற்றி அலட்டிக் கொள்ளாமல், அடுத்தவரை கடிந்து கொள்வோம். சமீபத்தில் படித்த ஒரு பொன்மொழி, "நம்முடைய தவறுகளுக்கு நாமே வக்கீல் ஆகிறோம், அடுத்தவரின் தவறுகளுக்கு நாமே நீதிபதி ஆகிறோம்." இதுதான் எல்லா இடத்திலும் நடக்கிறது. இதில் ஒரே ஒரு குணாம்சத்தை பற்றி மட்டும் எனக்கு தெரிந்ததை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். அது நேரம் தவறாமை. எல்லோரிடமும் இருக்கவேண்டிய, பலரிடம் இல்லாத இந்த குணம்தான் என்னை பொறுத்தவரை ஒருவரிடம் இருக்கவேண்டிய தலையாய குணம். 


தனக்கு வந்தால்தான் தெரியும்.... 


சந்திப்புகள், நிகழ்வுகள், விழாக்கள் ஆகிய பல இடங்களுக்கு நான் செல்வதுண்டு. அப்படி செல்லும்போது தவறாமல் நடக்கும் ஒரு விஷயம் என்னவென்றால், அந்த இடத்தில் நான்தான் முதல் ஆளாக இருந்திருக்கிறேன். குறித்த நேரத்திற்கு சுமார் 5 நிமிடம் முன்னமே சென்று விடுவதால், பத்தில் இருந்து 30 நிமிடம் வரை காத்திருந்த அனுபவம் எனக்கு அதிகம் உண்டு. நம்மில் பலருக்கும் இந்த அனுபவம் உண்டு. லேட்டாக வந்தவர்கள், "உன்னுடைய கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லையா?" என்று நக்கல் விட்டதும் உண்டு. காத்திருத்தல் என்பது எவ்வளவு கடுப்பை கிளப்பும் என்பதை நீங்கள் உணர வேண்டுமானால், ஒரு முறை ஏதாவது செல்போன் சேவையின் கஸ்டமர் கேர் எண்ணை தொடர்பு கொள்ளுங்கள். ஒரு பஸ்ஸோ, ட்ரெயினோ குறித்த நேரத்தில் வரவில்லை என்றால், அந்த வண்டியை ஓட்டுபவரில் இருந்து, அந்த துறை மந்திரி வரை கிழித்தெடுப்போம். காலையில் மனைவி டிபன் ரெடி பண்ண கொஞ்சம் தாமதம் ஆகிவிட்டால் அவளோடு சேர்த்து அவளின் பெற்றோரையும் தாளிப்போம். காத்திருத்தலின் அவஸ்தையை உணரும் நாம், அடுத்தவரை காக்க வைக்கும்போது உணர்வதில்லை. அதுதான் இங்கே பிரச்சனை. கீழே இருக்கும் படத்தை பார்த்தாலே சாஃப்ட்வேர் துறையில் இருக்கும் பலருக்கு பீபி எகிறும். அது போலத்தானே அடுத்தவருக்கும் இருக்கும்?  



கால தாமதம் ஏன்?

என் நண்பர் ஒருவர் பின்லாந்து சென்ற அனுபவத்தை என்னோடு பகிர்ந்து கொண்டார். வெள்ளைக்காரனுக்கும் நமக்கும் உள்ள வித்தியாசத்தை பற்றி கூறினார்.  வெள்ளைக்காரன் இந்த வேலையை நம்மால் குறித்த நேரத்துக்குள் முடிக்க முடியாது என்று நினைத்தால், ஒன்று மறுத்து விடுவான் இல்லை அதற்கான காரணங்களை கூறுவான். நம்மாட்கள் ஒன்றுமே பேசாமல் அதை வாங்கி கொண்டு, பின்னர் தலையை சொறிந்து கொண்டு நிற்பார்கள். "எதையுமே பிளான் பண்ணி பண்ணனும்",னு வடிவேலு காமெடியா சொன்னாலும், அதுதான் உண்மை. தவறான திட்டமிடல்களே கால தாமதத்தின் முக்கிய காரணி. ஒரு செயலை செய்வதற்கு முன்னரே, அதற்கான காலக்கெடு, தேவையான ஆதாரங்கள் ஆகியவை பற்றிய தெளிவான திட்டமிடல் வேண்டும். சரியாக திட்டமிட்டு, அதற்கெற்றார்போல சமயோஜித செயல்பாடுகளால் ஒரு செயலை வெற்றிகரமாக குறித்த காலத்துக்குள் செய்து முடிக்க முடியும். 


கால தாமதத்தின் இன்னொரு காரணம் அலட்சியம். ?கொஞ்சம் லேட்டானா என்ன குடியா முழுகி போயிடும்?", என்ற எண்ணம் பலருக்கு உண்டு. இது பெரும்பாலும் அந்த செயல்களில் சம்பந்தம் இல்லாதவர்களுக்கே வரும். அரசு அலுவலர்கள், உயரதிகாரிகல் ஆகியோர் இந்த மனப்பான்மையோடு செயல் படுவதே எந்த வேலையும் கால தாமதமாக நடப்பதின் முதல் காரணம். இந்த கால தாமதத்தால் தனக்கு எந்த பாதிப்பும் கிடையாது எனும்போது அவர்களுக்கு ஒருவித அலட்சிய மனப்பான்மை உண்டாகிறது. சரியான திட்டமிடல் இல்லாமல் உண்டாகும் கால தாமதம் கூட ஒருவருக்கு மிகச்சிறந்த அனுபவ பாடத்தை கொடுக்கும். ஆகவே அவர்கள் தங்களை திருத்திக்கொள்ள வாய்ப்பு உண்டு. ஆனால் அலட்சியத்தால் கால தாமதம் செய்பவர்கள் திருந்த வாய்ப்பே இல்லை. ஒரு நாள் அதே அலட்சியம் அவர்களை நோக்கி திரும்பும் வரை.... 

காலம் தவறாமல் இருப்பது எப்படி? 


என்னை பொறுத்தவரை காலம் தவறாமை என்பது தலைமை பண்புகளில் மிக முக்கியமானது. ஒரு இடத்துக்கு தலைவன் சரியான நேரத்துக்கு வந்தால்தான், அவனுக்கு கீழே இருப்பவர்களும் வருவார்கள். காலம் தவறாமை என்பது ஒரு விஷயத்தில் ஒருவருக்கு இருக்கும் ஈடுபாட்டின் அளவுகோல். ஆகவே உங்களுக்கு கீழே இருப்பவர்களிடம் சரியாக வேலை வாங்க வேண்டும் என்றால், முதலில் நீங்கள் காலம் தவறாமல் இருக்க பழகி கொள்ளவேண்டும். பிரச்சனை இந்த இடத்தில் இருந்தே தொடங்குவதால், இதை சரி செய்துவிட்டாலே எல்லா வேலைகளும் சிறப்பாக நடைபெறும். 

முக்கியமாக சரியான திட்டமிடல் வேண்டும். அதற்கு கொஞ்சம் காமன் சென்ஸூம், கொஞ்சம் அனுபவ அறிவும் இருந்தாலே போதும். ஆறு மணி வண்டிக்கு, போன தடவை ஐந்து மணிக்கு கிளம்பியதால், வண்டியை தவறவிட்டோம் என்று தெரிகிறது. இந்த முறை கொஞ்சம் முன்கூட்டியே கிளம்ப வேண்டும் என்று உணர்வதற்கு குறந்த பட்ச காமன் சென்ஸ் போதும். 

காலம் தவறாமைக்கு மற்றொரு முக்கிய எதிரி ஒத்தி போடுதல். எந்த ஒரு செயலையுமே தள்ளி போட்டால், கண்டிப்பாக அது காலதாமதத்தில் கொண்டு சேர்த்து விடும். என் நண்பன் கரெக்டாக வண்டிக்கு கிளம்பும்போதுதான், செல்போனுக்கு ரீசார்ஜ் பண்ணனும் என்று சொல்வான். அந்த அவசரத்தில் ரீசார்ஜ் கடையை தேடி அலைந்து, டென்ஷன் ஆவது வேறு கதை. குறைந்த பட்சம் கிளம்பும் முன்னரே ரீசார்ஜ் செய்திருக்கலாம். இதுபோல டாகுமெண்ட் ஜெராக்ஸ் எடுப்பது, சட்டை இஸ்திரி செய்வது என்று சின்ன சின்ன வேலைகளை நாம் ஒத்திப்போடுவதால், அவை எல்லாம் கடைசி நேரத்தில் கியூவில் நின்று நம்மை பயமுறுத்தும். 

அடுத்தவர் இடத்தில் நம்மை பொருத்தி பார்த்தல், ஆங்கிலத்தில் Standing on Others Shoes   என்று சொல்வார்களே. இதற்கு பெரிய மனது வேண்டும். ஆனால் இந்த பண்பு வந்து விட்டால் கண்டிப்பாக காலம் தாழ்த்த மாட்டோம். ஒட்டு மொத்தத்தில் சுறுசுறுப்பு என்கிற மருந்தே தாமதம் என்ற வியாதியை வரவிடாமல் தடுக்கும் தடுப்பூசி. என்னை பொறுத்தவரை நோய்க்கு மருந்து உண்பதை காட்டிலும், தடுப்பூசி போடுவதே புத்திசாலித்தனம். 

உங்க கருத்துக்களையும் இங்கே பதிவு பண்ணுங்க..... 

முழுவதும் படிக்க >>

November 11, 2011

அம்மான்னா சும்மா இல்லடா... பல்லிளிக்கும் பகுத்தறிவு

அம்மான்னா சும்மா இல்லடா....


ஒரு திரைப்படத்தில் மக்கள் நாயகன் அவர்கள் மப்ளர் அணிந்து கொண்டு ஒரு தோப்புக்குள் இந்த பாட்டை பாடிக்கொண்டே வருவார். பொதுவாகவே ராமராஜனுக்கு இளையராஜாவின் குரல் மிகப்பொருத்தமாக இருக்கும். இந்தப்பாடலிலும்தான். பாடல் முழுவதும் தாயின் பெருமைகளை மிக உருகி பாடி இருப்பார் இளையராஜா. அதற்கேற்றார் போலவே லிப்ஸ்டிக் உதடுகளை அசைத்து பாடி இருப்பார் ராமராஜன். சரிதான் "அம்மான்னா சும்மா இல்லடா" பாடல் எல்லா அம்மாக்களுக்கும் பொருந்துகிறதோ இல்லையோ, முதல்வருக்கு நன்றாகவே பொருந்துகிறது. நம்ம மக்கள்கிட்ட இருக்கிற கெட்ட குணமே,  "இவரை விட அவர் நல்லது செய்வார்." என்று மாறி ஓட்டுப்போடுவது, அவர் பதவிக்கு வந்த கொஞ்ச, "நாளில் நாம் செய்தது சரியா?" என்று குழம்புவது, கடைசியில், "அவரே தேவலாம்." என்று அங்கே ஓட்டுப்போடுவது.


ஆனால் தப்பி தவறி கூட வேறு யாருக்கும் ஓட்டுப்போட்டு விட கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார்கள். எனவே தோல்வியை பற்றி எந்த கவலையுமே இல்லாமல், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு ஏதோ விடுமுறை கிடைத்ததை போல, சும்மா அறிக்கை மட்டுமே விட்டுக்கொண்டிருப்பது. பின் அடுத்த முறை ஆட்சிக்கு வந்த பிறகு கடுமையாக 'உழைப்பது' என்று திராவிட கட்சிகள் தமிழகத்தை மாறி மாறி ஆண்டு கொண்டிருக்கின்றன. "கடந்த ஐந்தாண்டுகளில் கலைஞர் பல சாதனைகள் செய்தார்." என்றும், "இதெல்லாம் ஒரு சாதனையா?" என்றும் பலர் வாதாடுகிறார்கள். என்னை பொறுத்தவரை, கலைஞர் தான் செய்த ஒவ்வொன்றையுமே, மிக கவனமாக செய்திருக்கிறார். அதாவது பிற்காலத்தில் தன்னை ஒரு சரித்திர நாயகனாக எல்லோரும் நினைக்க வேண்டும் என்பதற்காக செய்தது போலவே இருந்தது (இருநூறு ஆண்டுகளுக்கு பிறகு வரும் மடையர்களுக்கு என்ன தெரியவா போகிறது?). ஆனால் ஆட்சியில் அமர்ந்த மறுகணமே அம்மா, "இந்த வரலாற்று சுவடுகள் எதிர்கால சந்ததியினருக்கு தெரியக்கூடாது." என்ற முனைப்பில் அனைத்தையுமே அழிக்கும் முனைப்பில் ஈடுபட்டு வருகிறார். அப்போ மக்களுக்கு எதுவுமே செய்ய மாட்டாங்களா? "மக்கள் கெடக்குறாங்க முட்டாபசங்க. என்ன நல்லது பண்ணாலும் அடுத்த தேர்தலில் கட்சி மாறித்தான் ஓட்டு போடுவாங்க. அதுக்குள்ள இவர் பண்ண எல்லாத்தையுமே அழிச்சுடனும்."  அம்மான்னா சும்மா இல்லடா....

 தரம் தாழ்ந்த பகுத்தறிவு


"பகுத்தறிவு என்றால் என்ன?" என்று இன்று யாருக்குமே சரியாக தெரியவில்லை. எனக்கும் தெரியவில்லை. ஆனால் பகுத்தறிவுக்கே பாசறையாய் விளங்கும் ஒரு இயக்கம் பல ஆண்டுகளாக பகுத்தறிவுக்கு பல இலக்கணங்களை கூறி வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் இந்த இலக்கணம் அவர்களாலேயே மாற்றப்படுவதால், தற்போது "பகுத்தறிவு என்றால் என்ன?" என்பதிலேயே எல்லோருக்கும் குழப்பம் ஏற்பட்டு விட்டது. சரி இதெல்லாம் பழைய கதை. கொஞ்ச நாளைக்கு முன்னால் "கலாநிதிமாறன் பின்லாந்துக்கு ஓட்டம்!!" என்று, சில பார்ப்பன ஏடுகள் செய்தி வெளியிட்டிருத்தன அல்லவா?. வழக்கமாக இந்த மாதிரி ஏடுகளில் வரும் செய்திகளுக்கு பாசறையின் போர்வாள் ஏட்டில் பதில் கூறப்பட்டிருக்கும். அது உண்மையோ பொய்யோ என்பது அப்புறம்தான். அதே போல இந்த செய்திக்கும் பதில் கூறப்பட்டிருக்கிறது. வழக்கம்போல பாப்பன ஏடுகளை நடத்துபவர்களை வாங்கு வாங்கென்று வாங்கி இருக்கிறார்கள். கட்டுரையை எழுதியவர் ஒரு படி மேலே சாரி கீழே போயி, அந்த ஏடுகளை நடத்துபவர்களின் தாயின் கற்பின் மீதும் சந்தேகம் தெரிவித்திருக்கிறார்.


கலாநிதி பின்லாந்து சென்றுள்ளார் என ஆதாரமற்ற குற்றச்சாட்டைக் கூறியுள்ள அந்த எழுத்தாளரும், அதனைப் பிரசுரித்த ஏடும், அதனை வெளியிட்ட வெளியீட்டாளரும், அதன் ஆசிரியரும், அதன் தலைவரும் உத்தமி ஒருத்திக்குப் பிற்ந்திருந்தால் - கலாநிதி மாறன் பின்லாந்து சென்றதை நிரூபிக்க வேண்டும்! செய்வார்களா? நிரூபித்துக்காட்டி தாங்கள் உத்தமிக்குப் பிறந்தவர்கள் என்பதை நிலை நிறுத்துவார்களா? பத்திரிகை இருக்கிறது; பேனா இருக்கிறது என்பதற்காக எதையும் எழுதலாம் என்ற ஈனபுத்தியாளர்கள், கலாநிதி மாறன் பின்லாந்து சென்றதை நிரூபித்து - தங்கள் தாயின் பத்தினித் தனத்தை நாடறியச் செய்வார்கள் என நம்புவோமாக!
(Courtesy: www.tamilleader.in)


அப்படியானால் உண்மையிலேயே கலாநிதி வெளிநாடு செல்லவில்லையா? அதுவும் இல்லை. அவர் வெளிநாடு சென்றிருக்கிறார் என்பதையும் ஒத்துக்கொள்கிறார்கள். சரி எங்கே சென்றார்? அது பற்றி எதுவும் கூறவில்லை. இப்போது கலாநிதியை பற்றி செய்தி வெளியிட்டது குற்றமா? இல்லை அவர் பின்லாந்து சென்றார் என்பது குற்றமா? இப்படி செய்தி வெளியிட்டதற்கு சம்பந்தப்பட்டவரின் தாய் எப்படி பொறுப்பாக முடியும்? அப்படியானால் தவறான நடத்தை உள்ள பெண்ணுக்கு பிறந்தவர்கள் எல்லோரும் நாட்டில் தவறு செய்வார்கள். அதற்கு முழுக்காரணமும் அந்த பெண்தான் இல்லையா? இதற்கு பெயர்தான் பட்டர்பிளை எஃப்பெக்டோ? பகுத்தறிவு கொண்டாடும் பெண்ணியம் பல்லிளிக்கிறது.

அஷ்'வின்' நட்சத்திரம் 


டெல்லியில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றிருக்கிறது. முதல் இன்னிங்சில் பேட்டிங்கில் சொதப்பினாலும், ஆசிய அணிகளுக்கே உரிய சுழற்பந்து வீச்சை பயன்படுத்தி மேற்கிந்திய தீவுகள் அணியை வீழ்த்தி இருக்கிறார்கள். இந்த போட்டியில் ஒட்டுமொத்தமாக 9 விக்கெட்டுகளை வீழ்த்தி, தன் முதலாவது போட்டியிலேயே முத்திரை பதித்துள்ளார் அஷ்வின். மீதம் உள்ள போட்டிகளிலும், அடுத்து வரும் ஆஸ்திரேலிய தொடரிலும் சிறப்பாக விளையாடும் பட்சத்தில், ஹர்பஜன் அணிக்குள் வருவது கேள்விக்குறி ஆகி விடும். இரண்டாவது இன்னிங்சில் வழக்கம்போல, "சச்சின் நூறாவது சதம் கடப்பார்." என்று எதிர்பார்த்து ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். ஆனால் அதற்கு பதிலாக 15000 டெஸ்ட் ரன்கள் என்ற இன்னொரு சாதனையை படைத்திருக்கிறார். சாதனைகள் என்பது முறியடிக்கத்தான். ஆனால் இந்த சாதனை நீண்ட நாள் நிலைத்திருக்கும் என்பது என் கருத்து. இப்போதைக்கு சச்சினை டெஸ்ட் போட்டிகளில் நெருங்கி வருபவர் ஜாக் காலிஸ் மட்டுமே (டிராவிட் மற்றும் பாண்டிங் மீது நம்பிக்கை இல்லை). இவர் டெஸ்ட் போட்டிகளில் 12000 ரன்களை நெருங்கி விட்டார். ஆனால் இவருக்கு இப்போதே 36 வயதாகி விட்டதாலும், சச்சின் எப்போது ஓய்வு பெறுவார் என்று சொல்ல முடியாததாலும், காலிஸ் சச்சின் சாதனையை முறியடிப்பது சந்தேகமே...

மண்ணை கவ்வுமா கங்காரு?


நாம் எல்லோரும் இந்த டெஸ்ட் போட்டியை கவனித்து கொண்டிருக்க, மறுபுறம் இதை விட சுவாரசியமான போட்டி ஒன்று நடந்து கொண்டிருக்கிறது. ஆஸ்திரேலியா மற்றும் தென்னாபிரிக்கா இடையிலான கிரிக்கெட் போட்டிகள் நடக்கும்போது பல வினோதமான நிகழ்வுகள் ஏற்படுவது சகஜமாகி விட்டது. 434 ரன்களை விரட்டி பிடித்தது, டெஸ்ட் போட்டிகளில் இரண்டாவது கடின இலக்கான 414ஐ விரட்டி பிடித்தது என்று அவ்வப்போது நடந்து வந்துள்ளன. அந்த வரிசையில் இந்த போட்டியையும் இணைத்துக்கொள்ளலாம். முதலில் ஆடிய ஆஸ்திரேலியா தடுமாறினாலும், கிளார்க் 151ரன் எடுக்க, 284 எடுத்து மூச்சு விட்டுக்கொண்டது. பிறகு ஆடிய தென்னாபிரிக்கா எந்த எதிர்ப்பும் காட்டாமல், 96 ரன்னுக்குள் சுருண்டது. தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலியா மிக தெனாவட்டாக ஆட தொடங்கியது. எடுத்தவுடனே அதிர்ச்சிதான். அதன் பின்னர் 5 ஓவர் வரை விக்கெட் எதுவும் விழவில்லை. பிறகு ஒரு ஓவருக்கு ஒரு விக்கெட் என்ற ரீதியில் விக்கெட் விழ, 12 ஓவர் முடிவில் ஆஸ்திரேலியா 21 ரன்னுக்கு 9 விக்கெட்டுகளை இழந்து விட்டது. டெஸ்ட் போட்டிகளில் மிக குறைந்த ஸ்கோர் 26. அதை தவிர்க்க ஆஸ்திரேலியா போராடியது. கடைசியில் சிடில் வந்து சில பவுண்டரிகள் அடிக்க, 47 ரன்னுக்குள் ஆட்டத்தை முடித்துக்கொண்டது. தற்போது 236 ரன் என்ற இலக்கோடு தென்னாபிரிக்கா ஆடி வருகிறது. அவர்கள் ஜெயிக்கிறார்களா இல்லையா என்று இன்று தெரிந்து விடும். இன்று ஆட்டத்தின் மூன்றாம் நாள் மட்டுமே. இரண்டாம் நாளான நேற்று மட்டும் 23 விக்கெட்டுகள் வீழ்த்தப்பட்டிருக்கின்றன. என்னப்பா ஆச்சு உங்களுக்கு?

உங்க கருத்துக்களை இங்கே பதிவு பண்ணுங்க....

முழுவதும் படிக்க >>

November 9, 2011

மீண்டும் ஒரு பீதியை கிளப்பும் படம் - 18+


டிஸ்க்: இந்த பதிவு கண்டிப்பாக வயது வந்தோர்க்கு மட்டுமே.... 


திகில் படங்கள் இரண்டு வகைப்படும். முதல் வகை, கை, கால், ரத்தம் சதை முதலிய இத்யாதிகளை காட்டி பீதியை கிளப்புவது. இவ்வகை படங்களை ஸ்லாஷர் வகை படங்கள் என்று கூறுகிறார்கள்.  இரண்டாவது வகை, காட்சி அமைப்புகள், வசனம், கதாப்பத்திரங்களின் உணர்வு என்று உளவியல் ரீதியாக பீதியை கிளப்புவது. இதில் இரண்டாவது வகை படங்கள் பார்க்கும்போது ஏற்படும் த்ரில்லிங் அலாதியானது என்றாலும், இவ்வகை படங்களுக்கு மொழி அறிவு ஓரளவுக்கு தேவையாகிறது. இல்லை என்றால், சின்னதம்பி பட கவுண்டமணி போல, "சூப்பரப்பு!!", என்று சும்மா கை தட்டுவதை தவிர வேறு வழி இல்லை. ஆனால் முதல் வகை படங்களுக்கு அவ்வகை அறிவு தேவை இல்லை.  வெறும் காட்சி அமைப்புகள் மற்றும் இசையே முக்கிய பங்கு வகிப்பதால், மொழி தெரியாதவர்கள் கூட இதனை ரசிக்கிறார்கள்.


இப்போது நான் சொல்லப் போகும் படம் கூட மொழி அறிவு தேவை இல்லாத ஒரு படம்தான். இந்த ஹாலிவுட்காரர்களுக்கே உண்டான ஒரு கெட்ட பழக்கம் என்னவென்றால், ஒரு படம் ஓடிவிட்டால், அதனை தொடர்ந்து எத்தனை பாகங்கள் எடுக்கவேண்டுமோ எடுத்து, பார்வையாளர்கள் சலித்து, காறி துப்பும் வரை விடமாட்டார்கள். அந்த வகையில் 2003ஆம் ஆண்டில் வெளிவந்து சக்கை போடு போட்ட ராங் டர்ன் (Wrong Turn) படத்தின் நாலாவது பாகத்தை பற்றித்தான் இப்போது நான் கூறப்போகிறேன். Wrong Turn 4 - Bloody Beginnings. (2011)

முதலில் ராங்க் டர்ன் சீரிஸ் பற்றி தெரியாதவர்களுக்கு அதன் அடிப்படை கதையை கூறி விடுகிறேன். நீங்கள் காட்டு பாதை வழியாக வண்டியில் தனியாக பயணம் செய்து கொண்டிருக்கிறீர்கள். தவிர்க்க முடியாத காரணத்தால் மாற்றுப்பாதையில் செல்ல நேரிடுகிறது. எதிர்பாராத விதமாக நீங்கள் காட்டில் வழி தவறி விடுகிறீர்கள். அதே காட்டுக்குள், இப்படி வழி தவறி வருபவர்களை வேட்டை ஆடி சாப்பிடும் ஒரு மூன்று பேர் கொண்ட குழு இருக்கிறது. எப்படி இருக்கும்? இதுதான் ராங்க் டர்ன் படத்தின் அடிப்படை. அப்படி காட்டுக்குள் வரும் மனிதர்களை மூன்று பேர் கொண்ட குழு ஒன்று கொடூரமாக துரத்தி துரத்தி வேட்டையாடுகிறது. முதல் பாகம் மெகா ஹிட் ஆகி விட, அதனை தொடர்ந்து, இரண்டாம் மற்றும் மூன்றாம் பாகத்தில் முறையே ரியாலிட்டி ஷோவுக்காக வருபவர்களையும், சிறைக்கைதிகளையும் எப்படி அந்த குழு வேட்டையாடுகிறது என்று காட்டி இருப்பார்கள். 


இந்த நாலாவது பாகம், இதுவும் அதே வகைதான். ஆனால் இது ப்ரீக்வலாக வந்திருக்கிறது. அதாவது இந்த மூன்று பாகங்களுக்கும் முன்னால் நடக்கும் கதையாக சொல்லப்பட்டிருக்கிறது. காட்டுக்குள் தன்னந்தனியாக அமைந்திருக்கும் ஒரு மனநல காப்பகத்தில் கதை ஆரம்பிக்கிறது. அங்கே மிருக குணத்துடன், அதாவது தான் உறுப்புகளையே கடித்து சாப்பிடும் அளவுக்கு கொடூரமான குணத்துடன், சிதைந்த முகத்துடன் இருக்கும் சிறுவர்களை தனியே அடைத்து வைத்திருக்கிறார்கள். மிகப்பெரிய அந்த காப்பகத்தில், தனியாக ஒரு சிறையில் இருக்கும் அவர்கள் எதிர்பாராத விதமாக தப்பிவிட, அந்த காப்பகத்தையே துவம்சம் செய்து, அனைவரையும் கொன்று தீர்க்கிறார்கள்.  வெகு காலத்துக்கு அங்கே யாருமே வராமல், கவனிப்பாரற்று போகிறது அந்த மன நலகாப்பகம் .


ஆர்ப்பாட்டமான இளைஞர் குழு ஒன்று, (5 பெண்கள், 4 ஆண்கள்), ஆளுக்கொரு பனிச்சறுக்கு மோட்டார் வண்டியை எடுத்துக்கொண்டு அடர்ந்த பனிப்பிரதேசத்தில் பயணம் மேற்கொள்கிறார்கள். ஒருவரை முந்தி ஒருவர் உற்சாகமாக வண்டியை செலுத்த, ஒரு கட்டத்தில் அனைவரும் வந்த பாதையை மறந்து விடுகின்றனர். எங்கு பார்த்தாலும் பனி. இன்னும் ஒரு மணி நேரத்தில் இருட்டி விடும். மேலும் கடுமையான பனிப்புயல் வேறு வீசத்தொடங்கி விட்டது. இப்படியே இருந்தால் செத்து போய்விடுவோம். என்ன செய்வது என்று தெரியாமல் தவித்துக்கொண்டிருக்கிறார்கள். அப்போது வெகு தூரத்தில் மங்கலான வெளிச்சத்தில் கட்டிடம் ஒன்று தெரிகிறது. அதனை பார்த்தவுடன் அனைவருக்கும் உற்சாகம் தொத்தி கொள்கிறது. எல்லோரும் அந்த கட்டிடத்தை நோக்கி செல்ல்கிறார்கள். அந்த கட்டிடம், வெகு காலமாக யாருமே வராமல் போன அதே மனநல காப்பகம்தான். 


மிகப்பெரிய கட்டிடத்தின் ஒரு அறைக்குள் அனைவரும் தங்குகிறார்கள். முழுவதுமாக இருட்டி விட, வெளியே கடுமையான பனிப்புயல் வீசிக்கொண்டிருக்கிறது. தன்னிலை மறந்த அந்த இளைஞர்கள் குடியும் கும்மாளமுமாக, ஓடிப்பிடித்து விளையாடுவது, ஹாஸ்பிடல் வராண்டாவில் வீல்சேர் ரேஸ் வைப்பது, ஆடிப்படுவது என்று பொழுதை கழிக்கிறார்கள். இவர்களை ஒரு மூன்றுபேர் தூரத்தில் இருந்து கவனித்து கொண்டிருக்கிறார்கள். பிறகென்ன, அந்த மூன்றுபேர் இந்த இளைஞர்களை எப்படி வேட்டை ஆடினார்கள்? அவர்களுள் யார் யார் தப்பி சென்றார்கள்? என்று முகத்தில் ரத்தம் தெறிக்க தெறிக்க சொல்லி இருக்கிறார்கள். முதல் மூன்று பாகங்களைப்போல அல்லாமல், முழுக்க முழுக்க ஒரு கட்டிடத்துக்குள்ளேயே இந்த படத்தை எடுத்திருக்கிறார்கள். ரத்தத்தை பார்த்தால் எனக்கு கண்களை இருட்டிக்கொண்டு வரும் என்று சொல்பவர்கள் இந்த படத்தை தவிர்ப்பது நல்லது. 


முந்தைய பாகங்களைக்காட்டிலும் இதில் வன்முறைக் காட்சிகள் மிக அதிகம்.  பெரும்பாலான காட்சிகள் கிராபிக்ஸ் இல்லாமல் எடுத்திருப்பதால் ஏதோ நிஜமாகவே நடப்பது போல இருக்கிறது. மனிதர்களின் உறுப்புகளை வெட்டி சமைத்து சாப்பிடுவதை ஆற அமர காட்டியிருக்கிறார்கள்.  அதிலும் கட்டிங் பிளேயரை வைத்து, உயிருடன் இருப்பவரின் வயிற்றுக்குள் இருந்து ஈரலை எடுத்து வெட்டி சாப்பிடுவது கொடூரத்தின் உச்சம்.  இந்த படத்தை தயவுசெய்து, சாப்பிடும்போதோ, வயிறு நிறைய சாப்பிட்ட பின்னரோ பார்க்கவேண்டாம். எல்லாம் வெளியே வந்து விடும். மிகப்பெரிய திரில்லிங்கோ, சுவாரசியமோ இல்லாவிட்டாலும், இந்த படத்தை பார்த்து ரசிக்கலாம். சொல்ல மறந்துட்டேன். இந்த படத்தில் சில பலான காட்சிகளும் உண்டு. இத்தனை ஆண் மற்றும் பெண் நடிகர்களை வைத்துக்கொண்டு, பலான காட்சி இல்லா விட்டால் எப்படி? கண்டிப்பாக பெண்களும் குழந்தைகளும் பார்க்க கூடாத படம். நேரமிருந்தால் மற்றவர்கள் பார்க்கலாம். 

உங்க கருத்துக்களை இங்கே பதிவு பண்ணுங்க.... 


முழுவதும் படிக்க >>

November 5, 2011

ஊடகங்கள் வளர்க்கும் குழந்தைகள்


இயக்குனர் சசிக்குமார் ஒரு முறை, "நம்ம நாட்டில் குழந்தைகளுக்காக படம் எடுப்பது மிக மிக குறைவு.", என்று குறைபட்டுக்கொண்டார். அது உண்மைதான். இப்போது நான் சொல்லப்போவது குழந்தைகளுக்கான படங்கள் எடுப்பதை பற்றி அல்ல. அது குறித்து இன்னொரு முறை எழுதுகிறேன். அதனோடு சம்பந்தப்பட்ட வேறு விஷயம். என்னதான் தொழில்நுட்பம், ஊடக வசதிகள் வளர்ந்து விட்டாலும், எல்லோருக்குமே, "அந்த காலம் மாதிரி வருமா?" என்று தங்களின் குழந்தை பருவத்து ஏக்கங்கள் வருவது மறுக்கலாகாது. இந்த மாதிரி நோஸ்டல்ஜிக்காக தோன்றும் சில தருணங்களை நினைத்து பார்க்கும்போது, நாம் பெற்ற சில விஷயங்களையும், நம் அடுத்த சந்ததியினர் இழந்த சில விஷயங்களையும் ஒப்பிட்டதன் விளைவே இந்த பதிவு. 


நான் வளர்ந்த சூழல் என்பது ஒரு கூட்டுக்குடும்பம் மாதிரி. என்னுடைய தெருவில் இருக்கும் அத்தனை பேருமே நான் பிறப்பதற்கு சுமார் முப்பது ஆண்டுகளுக்கு முன்பிருந்தே அங்கே வாழ்பவர்கள். ஆகவே எல்லா வீட்டு பிள்ளைகளும், ஒன்றாக விளையாடுவோம், ஒன்றாக சண்டை போடுவோம், ஒன்றாகவே திட்டு வாங்குவோம். அதே போல எல்லா வீட்டிலேயுமே குறைந்தது ஒரு முதியவராவது இருப்பார். செல்போன்களும், கேபிள் டிவிகளும் ஆக்கிரமிப்பு செய்திராத அந்த நகரத்தின் தெருக்களில், மாலை நேரங்களில் எல்லா பெரியவர்களும் வீட்டு வாசலில் அமர்ந்து கொண்டு கேலியும் கிண்டலும் செய்தபடி, தங்களின் பால்ய காலத்தை நினைவு கூர்வார்கள்.சிறுவர்கள் நாங்கள் அனைவரும் அவர்களின் மத்தியில் அமர்ந்து கொண்டு அவர்களின் உரையாடலை கேட்போம். அவர்கள் உபயோகிக்கும் பல வார்த்தைகள் புரியாது. இருந்தாலும் கேட்போம். சிறுவயது காதல், கலவரம், பிரச்சனைகள், நகைச்சுவைகள் என்று கேட்க கேட்க சுவாரசியம் கூடிக்கொண்டே போகும். அந்த சமயத்தில் தெருவுக்குள் ஏதாவது பால்காரர், போஸ்ட்மேன், பழவியாபாரி என்று வந்து விட்டால் தொலைந்தது. "கலாய்ப்பது என்றால் என்ன?" என்று அப்போதுதான் நான் கற்றுக்கொண்டேன்.

திடீரென திட்டிக்கொள்வார்கள், உடனே ஒட்டிக்கொள்வார்கள். ரஜினி படம், எம்ஜியார் படம் என்றால் உடனே ஒரு தூக்குவாளி நிறைய காபி போட்டு எடுத்துக்கொண்டு, தெருவே தியேட்டருக்கு ஓடும். படம் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, முறுக்கு, மிக்சர், அதிரசம், வடை என்று கைக்கு கை மாறி வந்துகொண்டே இருக்கும். பிறகு காலங்கள் மாறிய பிறகு, ஊருக்கு வெளியே பிளாட்டுகள் போட்டு தனி வீடுகள் வந்தன. எங்கள் தெரு காலியாக தொடங்கியது. இப்போது இன்னும் இருப்பது எங்களையும் சேர்த்து இரண்டே குடும்பங்கள்தான். எங்கள் உலகம் விரிய தொடங்கியது. ஆனால் உள்ளம் குறுகிப்போனது. விடுகதைகள், நக்கல் நையாண்டிகள், ஆரோக்கியமான விவாதங்கள், பழமொழிகள், பழக்க வழக்கங்கள், நம்பிக்கைகள் இன்னும் பல என்று யாரும் எனக்கு கற்று தரவில்லை. அவர்களின் மத்தியில் வளர்ந்ததால் நானே கற்றுக்கொண்டேன். 


ஆனால், "இன்று வளரும் குழந்தைகள் ஒரே அறைக்குள், அதிலும் ஒரே மேஜைக்குள் கூறுகிப்போய்விட்டார்களோ?", என்று தோன்றுகிறது. பணிக்கு செல்லும் பெற்றோர் வீடு திரும்ப மாலை ஆறு மணிக்கு மேல் ஆகிவிடுகிறது. மதியம் மூன்று மணிக்கு வீட்டுக்கு வரும் குழந்தைக்கு, டிவியும் இண்டர்நெட்டுமே பெற்றோர். ஜான்சீனாவும், அண்டர்டேக்கருமே கதை மாந்தர்கள். அவர்கள் பேசுவதே மொழி. இண்டர்நெட்டில் கிடைப்பதே நம்பிக்கைகள், பழக்க வழக்கங்கள். முனைவர் கு.ஞானசம்பந்தம் சொல்வார், "இக்கால குழந்தைகளுக்கு, அண்டார்டிக்காவில் இருக்கும் ஒரு இடத்தை பற்றி தெரியும். ஆனால் பள்ளி விட்டதும், தானாக வீட்டுக்கு வரும் வழி தெரியாது.". ஆமாம் அவர்களுக்கு பேஸ்புக்கில் இருக்கும் நண்பனின், நண்பியின் , நண்பனையை பற்றி எல்லாம் தெரியும். "தன் தாத்தா யார். அவர் எப்படி வாழ்ந்தார்?", என்று தெரியாது. என் பெற்றோருக்கு தெரிந்த அளவுக்கு சொலவடைகள், பழமொழிகள் எனக்கு நினைவில் இல்லை. எனக்கு தெரிந்த அளவுக்கு கூட என் இளையவர்களுக்கு தெரியவில்லை. இனி என் பிள்ளைகளுக்கு சொலவடை என்றால் என்ன? என்று கூட தெரியாமல் போய் விடுமோ? 


ஊடகத்தின் ஆளுமை என்பது தவிர்க்க இயலாதது, தவிர்க்க கூடாதது. இல்லாவிட்டால் கிணற்று தவளையாகவே இருந்து விடவேண்டியதுதான். ஆனால் ஊடகத்தின் கொம்பை பிடித்த வளரும் கொடிகள், தங்களின் வேர்களை மறப்பதுதான் கொடுமை. எனக்கு தெரிந்த நண்பன் ஒருவன், சொந்தங்களின் வீட்டு விசேஷங்களுக்கு வருவதை முற்றிலும் தவிர்ப்பான். கேட்டால், "எனக்கு crowd என்றாலே அலர்ஜி." என்று சொல்வான். ஆனால் வாரம் தவறாமல் பப் மற்றும் டிஸ்கோதே செல்வதை மறப்பதில்லை. அவன் ஊடகம் வளர்த்தெடுத்த குழந்தைக்கு ஒரு மிகச்சிறந்த உதாரணம். எப்படி என் முன்னோர்கள் மத்தியில் அமர்ந்து அவர்களிடம் கதை கேட்டேனோ, அதே போல தற்கால குழந்தைகள் இண்டர்நெட்டிலும், தொலைக்காட்சியிலும், நடப்பவற்றை ஊன்றி கவனிக்கிறார்கள். என்னை அறியாமல் நான் கற்றது போல, அவர்களை அறியாமலேயே அவர்களும் கற்கிறார்கள். ஆனால் நான் கற்றது Real World. அவர்கள் கற்றுக் கொண்டிருப்பது Virtual World. அதையே அவர்கள் உண்மை என்றும் நம்புகிறார்கள். ஊடகங்கள் குழந்தைகளை வளர்ப்பதில் தவறில்லை. ஆனால் பெரும்பாலான குழந்தைகள், சக மனிதர்களை ரத்தமும் சதையுமாக பார்க்காமல், தேவை இல்லை என்றால் அன்இன்ஸ்டால் செய்து கொள்ளும் சாஃப்ட்வேராகத்தானே பார்க்கிறார்கள்? 

உங்களுக்கு பிடிச்சிருந்தா ஓட்டு போடுங்க.... 
உங்க கருத்துக்களை இங்கே பதிவு பண்ணுங்க....
  
முழுவதும் படிக்க >>

November 2, 2011

தெரியாம மாட்டிக்கிட்டா என்ன பண்றது?

ரொம்ப நாளாக ஹாலிவுட் படங்கள் அதிகமாக பார்க்காததால், அந்த படங்களை பற்றி எழுதாமல் இருந்தேன். நேற்று நான் பார்த்த படம் என்னை மிகவும் கவர்ந்ததால் உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். ஹாலிவுட் பட ரசிகர்களிடம், "உங்களுக்கு மிகவும் பிடித்த த்ரில்லர் எது?" என்று கேட்டால் பெரும்பாலானவர்கள் சொல்வது சைக்கோ என்ற படம்தான். ஐம்பதுகளில் வந்தாலும் இன்னும் அது பேசப்படுவது அந்த படத்தின் சிறப்பு. ஆனால் நான் இன்னும் அந்த படத்தை பார்க்கவில்லை. ஏனென்றால் பெரும்பாலானவர்களைப்போல எனக்கும் கருப்பு வெள்ளை படம் என்றால் கொஞ்சம் ஈடுபாடு குறைந்து விடுகிறது. ஆனால் எதேச்சையாக ஆல்ஃபிரட் ஹிச்காக் (Alfred Hitchcock) பற்றி படிக்க நேர்ந்தது. "சரி அப்படி மனிதர் என்னதான் படமெடுத்திருக்கிறார் பார்த்து விடுவோம்.", என்று அவரது படங்களை தரவிறக்க தொடங்கினேன். சைக்கோ பற்றி தெரிந்திருந்தாலும், முதலில் அதை பார்க்க விரும்பவில்லை. "இதுவரை கேள்விப்படாத ஒரு படத்தை எடுத்து பார்ப்போம் அப்போதுதான் எந்த முடிவும் செய்து கொள்ளாமல் ரசிக்க முடியும்.", என்று நான் தேடிப்பிடித்து பார்த்த படம் என்னை வியக்க வைத்தது. அதுதான் தி ராங் மேன் (The Wrong Man - 1956) 



நீங்கள் ஒரு சராசரி குடும்பத்தலைவன். எந்த வம்புதும்புக்கும் போகாதவர். குடும்ப செலவுகளுக்கே பணம் போதாமல் திண்டாடுபவர். கடவுள் புண்ணியத்தில் வண்டி ஓடிக்கொண்டிருக்கிறது. திடீரென்று ஒருநாள் நீங்கள் வேலைக்கு சென்று வீடு திரும்பும்போது, வீட்டு வாசலில் போலீஸ் நிற்கிறது. மனைவியிடம் கூட எதுவும் சொல்ல விடாமல், உங்களை அப்படியே போலீஸ் ஸ்டேஷன் கொண்டு சென்று விடுகிறார்கள். உங்களிடம் சில கேள்விகள் கேட்கப்படுகிறது. நீங்களும் எதையும் மறைக்காமல் உண்மைகளை சொல்கிறீர்கள். கொஞ்ச நேரம் கழித்து, போலீஸ் அதிகாரிகள், உங்களை கைது செய்து ஜெயிலில் அடைத்து விடுகிறார்கள். என்ன நடக்கிறது என்று தெரிந்து கொள்வதற்குள் எல்லாம் முடிந்து விடுகிறது. உங்களுக்கு எப்படி இருக்கும்?


இதுதான் இந்த படத்தின் கதை. கிறிஸ்டோபர் இம்மானுவேல் பாலிஸ்ட்ரோ சுருக்கமாக மேன்னி, ஒரு இரவு விடுதியில் இசைக்குழுவில் பிடில் வாசிக்கும் ஒரு இசைக்கலைஞர்.  அவருக்கு அன்பான மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் என்று அமைதியான குடும்பம். தினமும் இரவு விடுதிக்கு சென்று விட்டு விடியற்காலைதான் வீட்டுக்கு வருவார். தன் வேலையில் கிடைக்கும் சொற்ப வருமானத்தில்தான் குடும்பத்தையே நடத்தியாக வேண்டும். எதிர்பாராமல் வரும் சின்ன சின்ன செலவுகள் கூட அவருக்கு பெரும் சுமைதான். இது குறித்து தினமும் தம்பதிகள் பேசி கவலைப்பட்டுக் கொள்வார்கள். மேன்னியின் மனைவிக்கு தீராத பல்வலி இருக்கிறது. மருத்துவரிடம் சென்றால் அதிகம் செலவாகும் என்பதால் அவள் தவிர்த்து வருகிறாள். மேன்னி அவளை மருத்துவரிடம் அழைத்து செல்ல முடிவெடுக்கிறார். 


கையில் பணமில்லை. ஏற்கனவே தன் பேரில் உள்ள இன்சூரன்ஸ் பாலிசியில் இருந்து நிறைய கடன் வாங்கி விட்டாயிற்று. ஆகவே தன் மனைவி பேரில் உள்ள பாலிசியின் மீது கடன் வாங்க இன்சூரன்ஸ் அலுவலகம் செல்கிறார். அங்கே வேலை பார்க்கும் பெண்கள் இவரைப்பார்த்ததும் பதட்டம் அடைகிறார்கள். பின் இவர் சென்றதும் போலீசுக்கு போன் செய்கிறார்கள். மறுநாள் மேன்னி வழக்கம்போல வீடு திரும்பும் போது வாசலில் போலீஸ் அதிகாரிகள் காத்திருக்கிறார்கள். இவரை அவர்கள் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று விடுகிறார்கள். அங்க சில விசாரணைகள் நடத்தப்படுகிறது. அந்த இன்சூரன்ஸ் கம்பெனி பெண்கள் இவரை அடையாளம் காட்டுகிறார்கள். மேன்னி ஜெயிலில் அடைக்கப்படுகிறார். "வேலைக்கு சென்ற கணவனை காணவில்லை என்று பதட்டத்துடன் தன் மனைவி என்ன செய்கிறாளோ?" என்ற குழப்பத்துடன் மேன்னி ஜெயில் அறைக்குள் செல்கிறார். பின் அவர் எப்படி இந்த பிரச்சனையில் இருந்து வெளிவந்தார் என்பதுதான் மீதிக்கதை. 


மேன்னியாக நடித்திருப்பவர் நடிகர் ஹென்றி ஃபோண்டா (போண்டா அல்ல Fonda). இவர் புகழ் பெற்ற ஹாலிவுட் நடிகை பிரிட்ஜெட் ஃபோண்டாவின் தாத்தா. ஒரு சராசரி குடும்பத்தலைவனாக அசத்தி இருக்கிறார். ஒரு நடுத்தரவர்க்க, ஆண் போலீசை பார்த்ததும் எப்படி பயப்படுவான், கோர்ட்டை  பார்த்ததும் எப்படி மிரளுவான்,  ஜெயிலில் எப்படி கூனி குறுகி போவான் என்பதை அப்படியே செய்திருப்பார். அவரது மனைவியாக சைக்கோ பட புகழ் வேரா மைல்ஸ் நடித்திருக்கிறார். அம்மணி மிக அழகாக இருக்கிறார். அப்பாவித்தனமான மனைவியாக நடித்து அசத்தி இருக்கிறார். இவர்களோடு, போலீஸ், வக்கீல் என்று ஒவ்வொரு கதாபாத்திரங்களும் சிறப்பாக செய்திருக்கிறார்கள். 


கத்தி, ரத்தம் ஏன் குறைந்த பட்சம் ஒரு டுவிஸ்ட் கூட இல்லாமல் ஒரு சஸ்பென்ஸ் படத்தை தரமுடியுமா? முடியும் என்று நிரூபித்திருக்கிறார் ஆல்ஃபிரட் ஹிச்காக். படத்தில் எந்த டுவிஸ்டும் கிடையாது. கொலை கிடையாது. அலறல் கிடையாது. ஆனால் படம் நெடுக சஸ்பென்ஸ்தான். "இது ஒரு உண்மை சம்பவத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்டது.", என்று படத்தின் ஆரம்பத்திலேயே வந்து சொல்லி விடுகிறார். மேலும் உண்மை சம்பவத்தை அப்படியே எந்த வித சினிமாத்தனமும் இல்லாமல் எடுத்திருக்கிறார். பொதுவாக சஸ்பென்ஸ் படங்களில் கிளைமாக்ஸ் காட்சிகளில் எதிர்பாராத திருப்பம் ஒன்று இருக்கும். ஆனால் இதில் அப்படி எதுவும் கிடையாது. ஆனாலும் படத்தின் ஒன்றே முக்கால் மணிநேரமும் உங்களை ஆடாமல் அசையாமல் படத்தோடு ஒன்றி போக செய்து விடுகிறார். ஹிச்காக் படங்களில் நகைச்சுவை உணர்வு தூக்கலாக இருக்குமாம். ஆனால் இதில் அதுவும் மிஸ்ஸிங். அப்படி இருந்திருந்தால் அது படத்தின் மைனஸ் பாயிண்டாகவே இருந்திருக்கும். இந்த படத்தை பார்த்து முடித்ததும் ஒரு நல்ல படத்தை பார்த்த திருப்தி கிடைக்கும். வாய்ப்பு கிடைக்கும்போது தவறாமல் பாருங்கள். 

உங்களுக்கு பிடிச்சிருந்தா ஓட்டு போடுங்க...
உங்க கருத்துக்களை இங்கே பதிவு பண்ணுங்க.... 

முழுவதும் படிக்க >>
Related Posts Plugin for WordPress, Blogger...