நெட் இணைப்பு இன்னும் பிரச்சனையாகவே இருப்பதால் இங்கே சரிவர தலைக்காட்ட முடியவில்லை. எப்போது சரியாகும் என்றும் தெரியவில்லை. இந்த தொடர் முடியும் தருவாயில் இருப்பதால், இதை விரைவாக வெளியிடுகிறேன். இதுவரை எனக்கு பிடித்த பிற நாட்டு கிரிக்கெட் வீரர்களை பற்றி கூறினேன். தற்போது இந்திய அணியில் என்னை கவர்ந்தவர்களை பற்றி கூறுகிறேன். பொதுவாக சொந்த அணியில் ஒரு சிலரைத்தவிர எல்லோருமே பிடித்தவர்களாகவே இருப்பார்கள். ஆகவே சட்டென நினைவுக்கு வரும் வீரர்களை பற்றி மட்டும் கூறுகிறேன்.
சவுரவ் கங்குலி
இன்றும் நான் கிரிக்கெட்டை நேசிக்கிறேன் என்பதன் முதல் காரணம் இவர்தான். சர்ச்சைகள் நிறைந்ததாக இருந்த இவரது கிரிக்கெட் வாழ்க்கையில் இவரது ஆட்டத்திறமை மட்டுமல்லாமல், இவரது ஆளுமைக்காகவும் பலர் இவருக்கு ரசிகர்களாக இருக்கிறார்கள், என்னையும் சேர்த்து. இந்தியாவின் தலை சிறந்த கேப்டன்களில் ஒருவர்.
மொஹமது அசாருதீன்
என் முதல் கிரிக்கெட் கதாநாயகன். சிறப்பான ஆட்டக்காரர். இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டாலும், இவர் மீதுள்ள அபிமானம் காரணமாக இவர் மீது எனக்கு கோபம் வரவில்லை. சமீபத்தில் மகனை பறிகொடுத்துள்ளார். இவ்ரது மகனுடைய முகம் இளவயது அசாருதீனை நினைவுபடுத்துகிறது.
சச்சின் டெண்டுல்கர்
கிரிக்கெட் என்று எழுதிய பிறகு, அடுத்து என்ன வார்த்தை எழுதுவது? என்று நினைத்தால், மனதில் வருவது டெண்டுல்கர்தான். தன் வாழ்நாள் முழுவதையுமே கிரிக்கெட்டுக்காக அர்ப்பணித்த ஒப்பற்ற வீரன். இவ்வளவு புகழ், பணம் சம்பாதித்த பிறகும், இன்னமும் மிஸ்டர் க்ளீன் என்ற பெயருடன் வாழ்கிறார். அதிக பெண் ரசிகைகளை பெற்றவர்.
ராகுல் டிராவிட்
"கிரேட் வால் ஆப் இந்தியா" என்று ரசிகர்களாலும், "ஜாமி" என்று சக வீரர்களாலும் அழைக்கப்படும் இவர், கிரிக்கெட் உலகின் ஒப்பற்ற வீரர்களில் ஒருவர். இந்திய அணியின் ஓவர்சீஸ் நாயகன். அரை கிலோமீட்டர் தூரம் ஓடி வந்து அக்தர் பந்தை வீச, அதை அசால்டாக அடிக்க, பந்து அங்கேயே கிடக்கும். அக்தர் வெறுத்து போய் விடுவார்.
அஜய் ஜடேஜா
இவர் உள்ளூர் நாயகன். உள்ளூர் ஆடுகளங்களில் தூள் பறத்தி விடுவார். எப்போதுமே சிரித்தபடியே ஆடுபவர்.
ஹேமாங் பதானி
மிக சிறந்த பேட்ஸ்மேன். பல இந்திய வீரர்கள் மிகுந்த பிரஸ்ஸரோடு ஆடும்போது, இவர் கூலாக ஆடுவார். அதே நேரம் அதிரடியாகவும் ஆடுவார். பிரபலமான வீரராக வர வேண்டியவர், என்ன காரணம் என்று தெரியவில்லை, சோபிக்க முடியாமல் போனது.
கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த்
இந்திய அணியின் அதிரடி ஆட்டத்தை துவக்கி வைத்தவர். இவர் அடிக்கும் பந்துகள் வெகு தொலைவில் சென்று விழாது. மாறாக, செங்குத்தாக மேலே எழும்பி, எல்லை கோட்டை தாண்டி விழும். ஷாட் அடித்த பின் தோள்பட்டையை ஒரு உலுக்கு உலுக்கி, மூக்கை உறிஞ்சுவார் (போக்கிரியில் விஜய் செய்வது போல), இது மிக பிரபலம்.
வீரேந்தர் சேவாக்
இவருக்கு புல்டோசர் என்றுதான் பெயர் சூட்டவேண்டும். யாரைப்பற்றியும் கவலைப்படாமல் இடித்து தள்ளி போய்க்கொண்டே இருப்பார். ஒரு பேட்டியில் "எனக்கு ஆடுகளங்களைப்பற்றி கவலை இல்லை. பந்து வீச ஒரு பவுலர் இருந்தால் போதும்." என்று கூறினார். பல கேப்டன்கள் இவரை வீழ்த்த வியூகங்களை வகுத்து, இவர் அவுட் ஆகி விட்டாலே பெரிய கடமை முடிந்து விட்டதை போல பெருமூச்சு விட்டதுண்டு.
விவிஎஸ் லக்ஷ்மன்
இன்றும் ஆஸ்திரேலியர்களிடம் அதிகம் திட்டு வாங்கும் வீரர் இவராகத்தான் இருக்கும். இவரை ஐந்தாம் நாள் வீரர் என்று அழைக்கிறார்கள். டெஸ்ட் போட்டிகளில் பந்து வீச்சுக்கு சாதகமான ஐந்தாவது நாளில் நிலைத்து ஆடும் திறமை மிக்கவர். டெஸ்ட் போட்டிகளில் தவிர்க்க முடியாத ஒரு வீரர்.
ராபின் சிங்
கடும் உழைப்பாளி. இந்திய அணியின் மோசமான 90களின் இறுதியில், ஒற்றை ஆளாக அணியில் போராடியவர். இடைப்பட்ட ஓவர்களில் பந்து வீச்சிலும் சிறப்பாக பங்களித்தவர். நல்ல பீல்டர்.
சுரேஷ் ரேய்னா
முதலில் அணியில் இடம்பிடித்து, பிறகு நீக்கப்பட்டு, மறுபடியும் இடம்பிடித்தவர். பிறகு வந்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி கொண்டு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்து வருகிறார். பயமறியாத இளம் வீரர். எனவேதான் பவுன்சர்களை அவசரப்பட்டு அடித்து அவுட் ஆகி விடுகிறார். இந்திய அணியின் தற்போதைய நம்பிக்கை நட்சத்திரம்.
யுவராஜ் சிங்
இந்திய அணி உலகக்கோப்பை வென்றதில் முக்கிய பங்காற்றியவர். இந்திய அளவில் பெண் ரசிகைகளை அதிகம் பெற்றவர். ஆகவே சர்ச்சைகளும் அதிகம். கொஞ்சம் திமிர் பிடித்தவர் என்றும் கூறப்படுகிறது.
கபில்தேவ்
உலகின் தலை சிறந்த ஆல்ரவுண்டர்களில் ஒருவர். ஆக்ரோஷம் என்பது பந்து வீச்சில் இருக்கவேண்டும், என்று செய்து காட்டியவர். திலகரத்னேவை வீழ்த்தி அதிக விக்கெட்டுகள் சாதனை நிகழ்த்தியதை லைவாக பார்த்ததை இன்றும் மறக்கவில்லை. "நீங்கள் மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டீர்களா?", என்ற கேள்விக்கு, தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் குமுறி அழுதார்.
இர்பான் பதான்
முதலில் வேகப்பந்து வீச்சாளராக அறிமுகம் ஆகி, அல்ரவுண்டராக மாறியவர். ஒரு காலத்தில், ஒப்பனர்களை வீழ்த்துவதையே குறிக்கோளாக வைத்திருந்தார். இவருக்கும் தோனிக்கும் என்ன பிரச்சனை என்று தெரியவில்லை. இவரை அணியில் சேர்க்கக்கூடாது என்பதில் பிடிவாதமாக இருக்கிறார். காயங்களால் அதிகம் அவதிப்பட்டவர்.
ஜவகல் ஸ்ரீநாத்
கபில்தேவுக்கு அப்புறம் சொல்லிக்கொள்ளும்படியான ஒரு வேகப்பந்து வீச்சாளர். 2003 உலககோப்பை முழுவதும் சிறப்பாக பந்து வீசினார். ஆட்டம் சூடு பிடித்து விட்டால், ஓட்டு மொத்த போட்டியையும் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விடுவார் இந்த கம்ப்யூட்டர் இன்ஜினியர்.
அனில் கும்ப்ளே
90களில் கிரிக்கெட்டை கலக்கிய சுழல்பந்து மும்மூர்த்திகளுள் ஒருவர். கொஞ்சம் டென்ஷன் பார்ட்டி. பல போட்டிகளில் ஒரு அரை மணி நேரத்துக்குள், ஒட்டுமொத்த ஆட்டத்தையுமே தலை கீழாக மாற்றி இருக்கிறார்.
ஹர்பஜன் சிங்
கும்ப்ளேவுக்கு அப்புறம் சொல்லிக்கொள்ளும்படியான ஒரு சுழற்பந்து வீச்சாளர். முரளிதரன் மாதிரி இவரும், "பந்தை எறிகிறார்", என்ற சர்ச்சையில் சிக்கி மீண்டு வந்து சாதித்தவர். இவர் பெயரை சொன்னவுடன், ஸ்ரீசாந்தும், சைமண்ட்சும் நினைவுக்கு வருவதை தவிர்க்க முடியவில்லை.
அஜீத் அகார்க்கார்
வெகு வேகமாக 50 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்தவர். இவரது யார்க்கர்கள் மிக பிரபலம். ரன்களை வாரி வழங்கினாலும், சரியான நேரத்தில் துல்லியமாக வீசி விக்கெட்டுகளை வீழ்த்துவதில் வல்லவர்.
ஜாகீர்கான்
இந்திய பவுலிங்கின் தற்போதைய நம்பிக்கை நட்சத்திரம். இந்திய அணி உலகக்கோப்பை வென்றதில் முக்கிய காரணம் இவரது அதிரடியான பந்துவீச்சுதான். காயங்களால் அதிகம் அவதிப்படுகிறார்.
நயன் மோங்கியா
சொல்லிக்கொள்ளும்படியான ஒரு விக்கெட் கீப்பர். இவர், கலூவிதரானா, மொயின்கான் ஆகிய மூவரும் களத்தில் ஏதாவது கத்திக்கொண்டே இருப்பார்கள். இவரது "ஐகோ... சபா சபா" ஆகிவற்றை அர்த்தம் புரியாமேலேயே நாங்கள் தெருவில் ஆடும்போதும் கத்தி இருக்கிறோம்.
மகேந்திரசிங் தோனி
கேப்டன் கூல் என்று பெயரெடுத்தவர். மிகவும் பிற்படுத்தப்பட்ட ஒரு பகுதியில் இருந்து வந்து கேப்டன் அளவுக்கு உயர்ந்தவர். மிகச்சிறந்த விக்கெட் கீப்பர்களுள் ஒருவர். இவரது குண்டக்க மண்டக்க பேட்டிங் ஸ்டைலே இவரது ஸ்பெஷல். இவை எல்லாவற்றுக்கும் மேலாக, இந்திய அணிக்கு உலகக்கோப்பையை பெற்றுத்தந்தவர்.
-முடிந்தது
உங்களுக்கு பிடிச்சிருந்தா ஓட்டு போடுங்க....
உங்க கருத்துக்களை இங்கே பதிவு பண்ணுங்க....