விவேகானந்தரின் நறுக்

கடவுள் நாம் விரும்பியதை கொடுப்பவர் அல்ல, நமக்குத் தேவையானதை கொடுப்பவர்...

May 7, 2012

மதவெறியன் பேசுகிறேன்.....

பதிவுலகம் ஒவ்வொரு சீசனுக்கும் ஏற்றவாறு ஒரு பிரச்சனையில் சிக்கி கொள்வது வாடிக்கை. ஆனால் ஒரு சில பிரச்சனைகளுக்கு வருடம் முழுவதும் சீசன்தான். அதில் முக்கியமானது மதங்களைப் பற்றிய பிரச்சனை. முதலில் ஒன்றை நான் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். இந்த பதிவில் கூறி இருக்கும் கருத்துக்கள் அனைத்தும் என் எண்ணங்களின் வெளிப்பாடே. இந்த கருத்துக்களை ஏதோ மற்றவர்களுக்கு நாட்டாமை பண்ணுவதற்காக  நான் எழுதி இருக்கிறேன் என்று நினைத்துக் கொண்டால் அதற்கு நான் பொறுப்பாக முடியாது. சொல்லப்போனால் படித்தவர்களுக்கு நாட்டாமை செய்ய யாராலும் முடியாது. ஏனென்றால் பிறர் சொல்வதை காது கொடுத்து கேட்கும் அளவிற்கு தற்கால படித்தவர்களுக்கு பொறுமை கிடையாது என்பதுதான் உண்மை. 


இன உணர்வு குறித்து இதற்கு முன் எழுதிய கட்டுரையில் நான் சில கருத்துக்கள் குறிப்பிட்டிருந்தேன். எந்த உயிரினமுமே இன உணர்வு இல்லாமல் வாழ்ந்து விட முடியாது. சிந்திக்கும் திறன் குன்றிய விலங்குகளே இப்படி என்றால், மனிதன் மட்டும் இதற்கு எப்படி விதி விலக்காக முடியும்? எல்லா மனிதனுக்குமே அவனது அறிவிற்கு ஏற்றபடி இன உணர்வு இருக்கவே செய்யும். இன உணர்வு என்பது, சாதி, மத, இன, மொழி அடிப்படையில் இருக்கவேண்டும் என்று கூட அவசியம் இல்லை. மிக சிறிய விஷயங்களில் கூட இன உணர்வு தோன்றும். நான் மதுரைக்காரன், நான் பொறியியல் படித்தவன், நான் நாத்திகன் என்று ஏதாவது ஒரு இனத்தோடு நம்மை பொருத்திக்கொள்ளவே நாம் விரும்புகிறோம். இது இல்லாமல் வாழவே முடியாது என்பதே உண்மை. 

இது இப்படியே இருக்கும் வரை பிரச்சனை இல்லை. ஆனால் அவன் வேறு ஒரு இனத்தை எப்போது சந்திக்கிறானோ அப்போதே பிரச்சனை தொடங்குகிறது. சமயம் வரும்போது அவனை மட்டம் தட்ட காத்துக் கொண்டிருக்கிறான். சரி விஷயத்துக்கு வருவோம். நடக்கும் விஷயம்  ஒன்றே ஒன்றுதான். ஆனால் அதை பார்க்கும் கண்கள்தான் வித விதமான கலர் கண்ணாடிகளை அணிந்து கொள்கின்றன. பிரச்சனை இங்கேதான் தொடங்குகிறது. நான் பள்ளியில் படித்து கொண்டிருக்கும் போது ஒரு ஆசிரியர் சொன்ன விஷயம். "உன் மதம் சிறந்தது என்று சொல்ல உனக்கு உரிமை உண்டு. ஆனால் அடுத்தவரின் மதம் மட்டமானது என்று சொல்ல உரிமை கிடையாது." இந்த வார்த்தைகள் என் மனதில் ஆழமாக பதிந்து விட்டன. 

மதத்துக்கும் கடவுளுக்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு. மதங்கள் கடவுளை உருவாக்கவில்லை. கடவுளும் மதத்தை உருவாக்கவில்லை. கடவுளுக்காக மனிதன் மதத்தை உருவாக்கினான். பின்னர் மனிதனுக்காக மதங்கள் கடவுள்களை உருவாக்கி கொண்டது. என்னை பொறுத்தவரை இருப்பது ஒரே கடவுள்தான். ஆனால் அதை வழிபடும் முறைதான் வெவ்வேறு. அந்த வழிபடும் முறையை தொகுத்து உருவாக்கப்பட்ட வழிமுறைதான் மதம். ஆக கடவுளை வணங்கும் முறையைதான் மதம் என்று சொல்கிறோம். சில மதங்களில் கடவுளை மட்டும் வணங்குகிறார்கள். சில மதங்களில் கடவுளோடு சேர்த்து கடவுளின் அம்சங்களாக கருதப்படும் தூதர்களையும் வணங்குகிறார்கள். அவ்வளவே வித்தியாசம். 


எப்படி ஒரு சில நித்தியானந்தாக்களால் ஒட்டுமொத்த இந்துக்களுமே அயோக்கியர்கள் என்று மதிப்பிட முடியாதோ அதே போல ஒரு சில கசாப்களால் ஒட்டுமொத்த இசுலாமியத்தையும் மதிப்பிட முடியாது. ஆனால் இன்று நடப்பது அதுதான். அடுத்த மதத்தில் ஏதாவது தவறு நடந்து விடாதா? எவனாவது ஒரு அயோக்கியன் மாட்டிக்கொள்ள மாட்டானா? அதை வைத்து அந்த மதத்தில் இருப்பவர்களை இழித்தும், பழித்தும் பரிகாசம் செய்தும் அத்தனை நாள் தனக்குள் இருந்த அந்த மதவெறி பிடித்த மிருகத்தின் பசியை தற்காலிகமாக போக்கி கொள்ள மாட்டோமா? என்று வெறி பிடித்த மிருகமாக அலைகிறார்கள்.  இப்படி செய்பவர்கள் கண்டிப்பாக ஒரு உண்மையான இந்துவாகவோ அல்லது முஸ்லிமாகவோ அல்லது வேறு எந்த கடவுளையும் நம்புபவராகவோ இருக்க முடியாது. அடுத்தவனின் பலவீனத்தையும் அவனது இக்கட்டான சூழ்நிலையையும் பயன்படுத்தி, அவனை பரிகாசம் செய்து, நம் கடவுளை வணங்க செய்வது விபசாரத்தை விட கேவலமான ஒரு செய்கை. இப்படி செய்பவர்களும், செய்பவர்களுக்கு வக்காலத்து வாங்குபவர்களும் இதை புரிந்து கொள்ள வேண்டும். 

தன்னுடைய கடவுளின் மீதோ, அல்லது தன்னுடைய மதத்தின், மீதோ தீவிர நம்பிக்கை உள்ளவர்கள் இப்படி அடித்துக்கொள்ள மாட்டார்கள். உண்மையான இறை நம்பிக்கையாளர்களுக்கு இருக்க வேண்டியது அன்பு மற்றும் பொறுமை.இவர்களை ஒப்பிடுகையில் நாத்திகர்கள் எவ்வளவோ மேல். தங்களின் சித்தாந்ததை தாங்களே காக்க வேண்டும் என்ற முனைப்பில் இருக்கிறார்கள். ஆனால் இறை நம்பிக்கையாளர்கள் அப்படியல்ல. தங்கள் கடவுள்தான் உலகத்திலேயே சிறந்தது, உயர்ந்தது, சக்தி வாய்ந்தது என்று நம்புகிறார்கள் அல்லவா? அந்த சக்தி வாய்ந்த கடவுளை மீறி உங்கள் மதத்தை யார் என்ன செய்து விட முடியும்? அப்படி இருக்க, நம் மதத்துக்கு நாம் ஏன் வக்கீலாக மாற வேண்டும்? மதத்தை காக்கும் வீரனாக மாற வேண்டும்? அப்படியானால் நம் கடவுள் மீதே நமக்கு நம்பிக்கை இல்லை என்றுதானே அர்த்தம்?

மதம் என்பது ஒரு கட்சியோ அல்லது சங்கமோ அல்ல. அது ஒரு வழி. கடவுளை அடையும் வழி. அதை ஒரு சங்கமாக மாற்றிய பெருமை ஆறறிவு படைத்த, உலகிலேயே மிக அறிவாளியான மிருகமான மனிதனுக்கு உண்டு. நல்ல ஆன்மிகவாதி, படித்தவன், இறைநம்பிக்கையாளன், நல்ல மனிதன் இவர்கள் எல்லோருக்கும் ஒரு பொதுவான பண்பு இருக்கிறது. அது எல்லோருக்கும் சம அளவில் மரியாதை கொடுப்பது மற்றும் இன வேறுபாடு இல்லாமல் அன்பு செலுத்துவது. அப்படி இல்லாத எவனும் தன்னை ஒரு ஆன்மீகவாதி என்றோ, படித்தவன் என்றோ, இறை நம்பிக்கையாளன் என்றோ, நல்ல மனிதன் என்று சொல்லிக்கொள்ள தகுதி இல்லை. அடுத்தவர் மனம் புண்படாமல் உங்கள் கருத்தை உங்களால் ஆணித்தரமாக சொல்ல முடிந்தால் மார்தட்டிக் கொள்ளலாம், "நான் படித்தவன்", என்று. இல்லை என்றால் மன்னித்து விடுங்கள் அந்த தகுதி நமக்கில்லை.  

எங்கோ படித்த ஒரு கதை. கடவுள் மனிதனை படைத்து, தன்னைப்பற்றிய உண்மையை சிறு துண்டுகளாக உடைத்து உலகமெங்கும் போட்டு மனிதன் தன் வாழ்நாள் முழுவதும் அதை தேடும்படி செய்தாராம். மனிதர்களும் அதை தேடி அலைந்தார்களாம். அவ்வப்போது தங்களுக்குள் அடித்து கொண்டார்களாம். ஒரு நாள் உண்மையின் ஒரு துண்டை ஒரு மனிதன் கண்டுபிடித்து விட்டானாம். உடனே கடவுளின் உதவியாளர் பதறினாராம். "மனிதனுக்கு உண்மை கிடைத்து விட்டது. இனி உங்களை கண்டு பிடித்து விடுவார்கள்.".  அதற்கு கடவுள் சொன்னாராம், "கவலைப்படாதே, இந்த உண்மையை கண்டு பிடித்தவன் கடவுள் ஆகி விடுவான், அவன் பின்னே ஒரு கூட்டம் சேரும், எல்லோரும் மறுபடியும் தங்களுக்குள் அடித்து கொள்வார்கள்."

இதுதான் நடக்கிறது. அந்த உண்மை என்ன என்பதை யாரும் கேட்பதில்லை. கேட்க தயாராகவும் இல்லை. அதை கண்டு பிடித்து சொன்னவரை கடவுளாக்கி நமக்குள்அடித்து கொள்கிறோம். கொஞ்சம் காது கொடுத்து கேட்டால் தெரியும் அனைத்து தூதர்கள் சொன்னதும் ஒரே உண்மையின் வெவ்வேறு துண்டுகள்தான் என்று. 

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு பண்ணுங்க.... 

52 comments:

கோவை நேரம் said...

"உன் மதம் சிறந்தது என்று சொல்ல உனக்கு உரிமை உண்டு. ஆனால் அடுத்தவரின் மதம் மட்டமானது என்று சொல்ல உரிமை கிடையாது." //

உண்மையைச் சொல்லி இருக்கிறார்,,,உங்கள் ஆசிரியர்...

K said...

வணக்கம் பாலா! கமெண்ட் மாடரேஷன் இருக்கான்னு செக் பண்ண இந்தக் கமெண்டைப் போடுகிறேன்! அப்படி இல்லைன்னா சில கருத்துக்கள் சொல்ல விருப்பம் :-))

K said...

அட, கமெண்ட் மாடரேஷன் இல்லை! இட்ஸ் குட் :-)), இப்போ சில விஷயங்கள் சொல்றேன்!

வேழமுகன் said...

பொறுப்பான பதிவு பாலா.

 

இணையத்தில் நடக்கும் பல விவாதங்களும் மேம்போக்கானவையே. ஆனால் மதம் போன்ற விஷயங்கள் விவாதமாக ஆரம்பித்தாலும் விவகாரமாகக் கூடியவை, ஏனென்றால் ஒரு விவாதத்தின் முடிவில் யாரும் தங்கள் மதங்களை மாற்றிக் கொள்ளப்போவதில்லை.

K said...

இந்தப் பதிவு மிக அருமையானதும் நடுநிலைமையோடு கூடியதுமாகும்! அதில் எந்த மாற்றுக் கருத்துக்கும் இடமேயில்லை! பட், என்னால உங்கள் கருத்துக்கள் எதையுமே ஏற்க முடியல! அது ஏன்னு கீழே எழுதறேன்!

01. முதலில் உலகில் பல மதங்கள் இருந்தாலும், நான் சார்ந்த என்னோட மதம் மட்டுமே சிறந்தது அப்டீன்னு நான் நம்பறேன்!

02. ஒரு மனுஷன் ஹாஸ்பிட்டல்ல பொறந்ததுல இருந்து, கட்டையில போகும் வரைக்கும் எப்படி வாழணும்? எப்படி வாழக் கூடாது அப்டீங்கறத மிகத் தெளிவாகவும், துல்லியமாகவும் என்னோட மதம் சொல்லுது! - இதையும் நான் நம்புறேன்!

03. மேலும் என்னோட மதம் சார்ந்த நூல்களில், இற்றைக்கு பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே, தற்காலத்தில் நடப்பதையெல்லாம் சொல்லி வைச்சிருக்காய்ங்க! அதுல சொல்லியிருக்கிறதெல்லாம் இப்ப நடந்துக்கிட்டுத்தான் இருக்கு :-))

04. அப்புறம் பெண்களுக்கு மிகச் சிறந்த பாதுக்காப்பும், கௌரவமும் என்னோட மதத்துல தான் சொல்லப் பட்டிருக்கு!

05. சுருக்கமாச் சொன்னா, என்னோட மதம் மட்டுமே உலகில் மிகச் சிறந்த மதம் அப்டீன்னு என்னால நிரூபிக்க முடியும்!

இப்ப மேட்டர் என்னான்னா, என்னோட மதமே மனித வாழ்க்கைக்கு மிகச் சிறந்த வழிகாட்டி அப்டீன்னு நான் நம்புறதோட, ஏனைய மதங்களைப் பின்பற்றி தீய வழியில் போறவங்களைப் பார்க்க எனக்கு கவலை கவலையா வருது :-)))

என்னோட நண்பன் ஒருத்தன், இன்னொரு மதத்தைப் பின் பற்றி தவறான வழியில் போவதை என்னால் பொறுக்க முடியல! அவன் மேல இருக்குற அன்பினால, அவனைக் காப்பாத்த வேண்டி, அவனையும் என் பக்கம் / என் மதத்துக்கு கொண்டு வர நான் முயற்சி எடுப்பது தப்பா?? :-)))

நான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் அப்டீன்னு பெரியவா சொல்லுவா! அதைத்தான் நானும் செய்கிறேன்! இது தப்பா?

மேலும் நான் பார்த்த ஒரு நீர் வீழ்ச்சி பற்றியோ / ஒரு சிறந்த சினிமா பற்றியோ ஒரு பதிவு போட்டு, அதை ஏனையவர்களோடு பகிர்ந்து கொள்ளும் போது எல்லோரும் சந்தோசமா ஏத்துக்கறாங்க! ஆனா என்னோட மதத்தில இருக்குற நல்ல விஷயங்களைச் சொன்னா மட்டும், என்னை “ மதவாதி, மத வெறியன்” அப்டீன்னு திட்டுறாங்க! இது எந்த வகையில் நியாயம்?

பாலா, யூ டியூப்புல ஒரு சூப்பர் டான்ஸ் வீடியோ இருக்கு, இந்த லிங்குல போயி பாருங்க அப்டீன்னு சொல்லி நான் ஒரு லிங்கு குடுத்தா, மறு பேச்சே இல்லாம ஓடிப் போயி பார்க்குறீங்க!

ஆனா, என்னோட மதத்துல இருக்குற ஒரு நல்ல விஷயம் பத்தி ஒரு லிங்கைப் போட்டு அதைப் போயி பாருங்க அப்டீன்னு சொன்ன மட்டும், டென்சன் ஆவுறீய! இது என்ன நியாயம்??

ஜெயச்சந்திரன் டெக்ஸ்டைல்ல புதுஷா ஒரு சுடிதார் வந்திருக்கு! போய்ப் பாருங்க அப்டீன்னு நான் சஜஸ்ட் பண்ணும் போது, அதை நீங்க ஆர்வமா கேக்குறீங்க! ஆனா, என்னோட மத நூலில் 475 வது பக்கத்தில் ஒரு நல்ல விஷயம் இருக்குன்னு சொல்றப்போ மட்டும், உங்களுக்கு கோபம் கோபமா வருது! இப்ப சொல்லுங்க, தப்பு என் மேலயா? உங்க மேலயா? :-)))

பாலா இது நக்கல் கமெண்டோ / நையாண்டிக் கமெண்டோ அல்ல:-))இது சீரியஸ் கமெண்டாக்கும்!!!!!!

ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மி said...

பாலா.. இவ்வளவு சீரியசா கூட பேசுவீங்களா! பயமா இருக்கே வாத்தியாரே.
அற்புதமான ஒரு பதிவு. பாலா. இறை சிந்தனை, சமயம், ஆன்மிகம், சித்தாந்தம், வேதாந்தம், மறைஞானம், விஞ்ஞானம், மெய்ஞானம் போன்ற விவரங்களைத் தாங்கி மலரும் கட்டுரைகளை வாசிக்கும் போது, லேசாக கொட்டாவி வரும், ஆனால் இங்கே, இக்கட்டுரையை முழுமையாக வாசித்த போது, `அது’ வரவில்லை. வாழ்த்துகள் பாலா சார்.

Unknown said...

மாப்ள...விழலுக்கு இறைத்த நீர்.....!

K said...

பாலா, உங்களிடம் இன்னொரு கேள்வி!

கோலார் தங்க வயல்ல தங்கம் இருக்கு! ஆனா சென்னை மவுண்ட் ரோடுல தங்கம் இருக்கா? இல்லைத்தானே!

இப்போ கோலார் தங்க வயல்ல தங்கம் இருக்குறது நமக்கு கன்ஃபோர்மா தெரியறப்போ, நாம என்ன பண்ணணும்?
அதைப் பாதுகாக்கணுமா இல்லையா?

வர்ரவைங்க, போறவைங்க எல்லாரும் தங்கத்தை அள்ளிட்டுப் போங்கடான்னு விட்டுடலாமா? இல்லைத்தானே?

அது மாதிரிதான், என்னோட மதத்தை இழிவு படுத்தி, அழிக்க நினைக்கும் சிலரை நான் எதிர்க்கிறேன்! இது தப்பா?

நல்ல விஷயம் ஒன்றைப் பாதுக்காக்க, குண்டு வைப்பது கூட தவறாகாது! என்ன சொல்றீங்க பாலா? :-))))

தனிமரம் said...

முதலில் வாழ்த்துக்கள் பாலா நல்ல அறிவுரைக்கு!

முத்தரசு said...

//மதவெறியன் பேசுகிறேன்//

தலைப்பே....சர்தான் பேசுங்க பாலா பேசுங்க - மாம்ஸ் கருத்து ரீப்பீட்டு

தனிமரம் said...

உன் மதம் சிறந்தது என்று சொல்ல உனக்கு உரிமை உண்டு. ஆனால் அடுத்தவரின் மதம் மட்டமானது என்று சொல்ல உரிமை கிடையாது." இந்த வார்த்தைகள் // படித்தவர்கள் என்று சொல்லுவோர் ஏன் மறந்தார்கள்!

தனிமரம் said...

இருந்த அந்த மதவெறி பிடித்த மிருகத்தின் பசியை தற்காலிகமாக போக்கி கொள்ள மாட்டோமா? என்று வெறி பிடித்த மிருகமாக அலைகிறார்கள்.// 100/ வீகிதம் உண்மை பாலா அதுவும் அவர்கள் மதம் தாண்டி சீ எவ்வளவு நித்தியானந்தாவுக்கு கொடுக்கும் அல்லா சகிக்கமுடியாது!

தனிமரம் said...

நல்ல மனிதன் என்று சொல்லிக்கொள்ள தகுதி இல்லை. அடுத்தவர் மனம் புண்படாமல் உங்கள் கருத்தை உங்களால் ஆணித்தரமாக சொல்ல முடிந்தால் மார்தட்டிக் கொள்ளலாம், "நான் படித்தவன்", என்று. இல்லை என்றால் மன்னித்து விடுங்கள் அந்த தகுதி நமக்கில்லை. // சில வாழ்பிடி பிரச்சார்களுக்கு இது இல்லாமல் போன தன் விளைவு இந்த வாரம் பார்த்தோமே அமைதி நிலவுதாக!

தனிமரம் said...

கவலைப்படாதே, இந்த உண்மையை கண்டு பிடித்தவன் கடவுள் ஆகி விடுவான், அவன் பின்னே ஒரு கூட்டம் சேரும், எல்லோரும் மறுபடியும் தங்களுக்//உண்மை தெரிந்தவன் சண்டை போட மாட்டான் லிங்கு கொடுக்க மாட்டான். கேவலம் இவனுங்க கூட்டாக் ஓட்டுப்போட ,கூடும்கூட்டம் .சகிப்புத்தன்மை இல்லாத மிருகங்கள்!

Thava said...

அருமை..அற்புதம் பாலா சார்..இன்றைய சூழலில் தேவையான பகிர்வு.
மதம் பற்றி நீங்க சொன்ன அத்தனையும் உண்மை..சிந்திக்கிறேன்..மிக்க நன்றி..

கலாகுமரன் said...

மதம் குறித்து சண்டையிடும் பட்சத்தில் ஆத்திகர்களை விட நாத்திகர்கள் பரவாயில்லை.

நாத்திகர்கள் தம் மதத்தை மட்டுமே கேள்வி கேட்கிறான். அடுத்த மதத்தை பற்றிய அக்கரை அவனுக்கு இல்லை. இங்கே இன்னொரு கேள்வியை முன் வைக்கிறேன். அடுத்தவரின் மதம் மட்டமானது என்று சொல்ல உரிமையில்லை சரி நீங்கள் சார்ந்திராத மதத்தை விடுத்து மற்ற மதத்தின் நல்ல கருத்துக்களை காது கொடுத்து கேட்கிறீர்களா ? இந்த தத்துவம் என் மதத்தின் கரு என்று சொல்லாமல் இருப்பீர்களா ?

பிறக்கும் எவனொருவனும் அந்த மதத்தில் திணிக்கப்படுகிறான்.

அனாதையாக பிறந்த ஒருவனுக்கு எந்த மதம் ஆதரவு அளிக்கிறதோ அதை சார்ந்து வாழ்கிறான் என்பது நிதர்சனமான உண்மை.

எவன் ஒருவனும் எம்மத்தையும் சாராமல் வாழ முடியும் என்பதும் நிரூபிக்கப்ட்ட உண்மை.

எவன் ஒருவன் எம் மதத்தையும் சாரமல் இருக்கும் போது எம் மதத்தையும் கேள்வி கேட்கும் உரிமை இல்லை என மறுக்க முடியாது.
ஆனால் அம்மதங்கள் குறித்த கேள்வியை நீ அந்த மதத்தில் சேர்ந்த பிறகே கேட்க முழு உரிமையும் அளிக்கப்படுகிறது. சரியா?

மதம் குறித்த எந்த பதிவும் சர்சைக்குறியவையே.






கலாகுமரன்

'பசி'பரமசிவம் said...

நண்பரே,
இன்றுவரை நான் கடவுளை நம்பாதவன் என்பதைத் தவிர, பதிவில் இடம்பெற்றுள்ள அனைத்துக் கருத்துகளும் எனக்கு உடன்பாடுதான்.

//அறிவாளி மிருகமான மனிதன்//
மிகச் சரியாகச் சொன்னீர்கள்.

//சக்தி வாய்ந்த இவர்களின் கடவுளை யார் என்ன செய்ய முடியும்? இவர்கள் ஏன் வக்கீலாகவும் போரிடும் வீரனாகவும் மாறுகிறார்கள்?//

இந்த உண்மையை அனைத்து மதவாதிகளும் உணரத் தவறியதால், அல்லது உணர்ந்தும் ஆதிக்க மனப்பான்மை காரணமாக ஏற்கத் தவறியதால் எத்தனை எத்தனை உயிர்ப்பலிகள்! பொருட்சேதங்கள்1 பேரழிவுகள்!

இவ்வாறு குறிப்பிட்டுச் சொல்லிப் பாராட்டும்படி பல உண்மைகளை எடுத்து வைத்திருக்கிறீர்கள்.

பலரும் படித்துச் சிந்தித்தால், மிகப் பல நன்மைகளைப் பெறலாம்.

நண்பர் மாத்தியோசி மணி, தன் மதத்தை மட்டுமே நம்புவதாகவும், அதுவே சிறந்தது என்றும், இன்று நிகழ்வதையெல்லாம் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே அவரின் மதம் சொல்லியிருப்பதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

இங்கே நான் பணிவுடன் சொல்ல விரும்புவது.............

யாரும் உணர்ச்சி வசப்பட்டு அவருக்கு மறுப்புச் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. அவரிடம் ஒரு வேண்டுகோள் மட்டும் வைக்கலாம்.

நண்பர் இப்படிச் சொல்லுவதோடு நில்லாமல், தம் கருத்துகளை உண்மை என நிரூபிக்கும் வகையில், தமக்குரிய வலைப் பக்கத்தில் தொடர் பதிவுகள் வெளியிடலாம்; நூலாகவும் வெளிக் கொணரலாம்.

மாறுபட்ட கருத்துள்ளவர்கள் இதே முறையில் அவருக்கு மறுப்புத் தெரிவிக்கலாம்.

இயலுமென்றால்,விவாதம் செய்யும்போது பின்பற்ற வேண்டிய விதிமுறைகளை மீறாமல் இங்கேயே விவாதிக்கலாம்.

கருத்து வெளிப்பாடு என்பது சுமுகமான முறையில் வெளிப்படுவது வரவேற்கத் தக்கது.

வரம்பு கடந்து எழுதியதற்கு மிக வருந்துகிறேன்.
நன்றி.

arasan said...

தெளிவான சிந்தனையுடன் எழுதிய நல்ல பதிவு .. என் வாழ்த்துக்கள் நண்பரே

Unknown said...

பாலா சார்! இது நல்ல கட்டுரை...சிந்திக்கதெரிந்தவனுக்கு...

Unknown said...

// கொஞ்சம் காது கொடுத்து கேட்டால் தெரியும் அனைத்து தூதர்கள் சொன்னதும் ஒரே உண்மையின் வெவ்வேறு துண்டுகள்தான் என்று. //

மிகவும் சரி, ஆனால் இதனை காது கொடுத்து ஏற்றிக் கொள்வதற்காகவாவது காதுகள் திறக்க வேண்டுமே மதம் பிடிப்பவர்களுக்கு, நான் பார்த்து அறிந்த வகையில் ஒன்றை மட்டுமே உணர்ந்து கொண்டேன், ஒவ்வொரு காலகட்டத்திலும் இது போன்ற பிரச்சனைகள் வரும் போது இது போன்ற நல்ல சிந்தனைகள் உடன் கட்டுரைகள் எழுதி யாராவது ஒருத்தர் சொல்லிக் கொண்டுதான் இருக்கிறார்கள், ஆனால் அதனை ஏற்க யாரும் தயாராயில்லை என்பதே உண்மை, உங்கள் கருத்துகளில் வரிக்கு வரி உடன்படுகிறேன், என்னுடைய மதம் சம்பந்தமான எண்ணங்களில் தவறு இருக்கிறதா என சிந்திக்கிறேன், இந்த கட்டுரையும் விழலுக்கு இரைத்த நீராகாமல் இருக்கட்டும், அருமை பாலா

சென்னை பித்தன் said...

நீங்கள் சொல்லியிருக்கும் கதை அருமை

பாலா said...

@கோவை நேரம்

உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி நண்பரே

பாலா said...

@வேழமுகன்

நீங்கள் சொலவது சரிதான் நண்பரே. ஆனால் என் எண்ணத்தை பதிவு செய்யவே இதை எழுதினேன். நன்றி நண்பரே

பாலா said...

@மாத்தியோசி - மணி

வெகு நாட்களுக்கு பிறகு வருகை புரிந்ததற்கு நன்றி நண்பரே. மாடரேஷன் வைக்கும் அளவுக்கு இது சர்ச்சைக்குரிய பதிவாக நான் கருதவில்லை.

நீங்கள் சொன்ன ஐந்து பாயிண்டுகளையும் நான் ஏற்றுக்கொள்கிறேன்.

ஆனால் அந்த ஐந்து கருத்துக்களிலுமே தான், மட்டுமே என்ற வார்த்தைகள் எப்படி வந்தது? உங்கள் மதம் பற்றிய சில கருத்துக்களை நீங்கள் நம்புவதாக சொல்லி இருக்கிறீர்களே அப்படித்தானே பிற மதத்தவரும் நினைப்பார்கள்.

நான் மெத்த படித்த மேதாவியோ இல்லை பெரிய ஆன்மிகவாதியோ கிடையாது. ஆகவே எனக்கு தெரிந்த அரைகுறை விஷயங்களை பற்றி கூறுகிறேன்.

பாலா said...

@மாத்தியோசி

தான், மட்டுமே போன்றவை அகங்காரத்தின் வெளிப்பாடான வார்த்தைகள். நம் பேச்சை அடுத்தவர் கேட்க வேண்டுமானால் இவற்றை முதலில் களைய வேண்டும். உங்கள் மதம் சிறந்தது என்று சொல்வதற்கு உங்களிடம் ஆதாரங்கள் இருக்கலாம். ஆனால் அடுத்த மதங்கள் அப்படி இல்லை என்பதை எப்படி எடை போடுகிறீர்கள்? இவை உங்களின் கருத்துக்கள்தானே? கற்றது கை அளவு என்பது உங்களுக்கு தெரியாதா?

உண்மையிலேயே உங்கள் நண்பர் மீது உங்களுக்கு பாசம் இருந்தால் அவரை பரிகாசம் செய்யும் வார்த்தைகளையோ ஸ்மைலிகளையோ பயன்படுத்த மாட்டீர்கள். ஒரு விஷயத்தை கேட்பவனை விட, சொல்பவனுக்கு பக்குவமும், பொறுமையும் வேண்டும். உங்களை மதவாதி என்று சொன்னவுடன் நீங்கள் மதவாதி ஆகி விடுவீர்களா? நீங்கள் மதவாதி இல்லை என்பதை அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் நிரூபிப்பது கடமையாயிற்றே?

பாலா said...

@மாத்தியோசி

எல்லா மதத்திலும் நல்லவர்களும் உண்டு, விஷமக்காரர்களும் உண்டு. நீங்கள் ஒரு நல்ல விஷயத்தை சொல்லும்போது, அதை கேட்க நினைக்கும் நல்லவர்கள் மனதை கூட சில விஷமக்காரர்கள் தடம் புரள செய்ய முயற்சிப்பார்கள். அவற்றை எல்லாம் தாண்டி தன் கருத்துக்கள் எந்த விட உள்நோக்கமும் அற்றது என்பதை கொண்டு சேர்ப்பது நம் கடமை அல்லவா. அதிலும் நீங்கள் மனோ தத்துவம் படித்தவர். உங்களுக்கு நான் சொல்ல வேண்டியதில்லையே?

மதத்தையும் கோலார் தங்கத்தையும் ஒப்பிட்டிருக்கிறீர்கள். தங்கம் எங்கே கிடைத்தாலும் அது தங்கம்தான். எல்லோரும் சேர்ந்து அது தகரம் என்று கத்தினால் அது பெயரால் வேண்டுமானால் தகரம் ஆகும் ஆனால் பண்பால் தங்கம்தான்.

உன் எதிரிக்கும் அன்பு செய் என்றே மதங்கள் சொல்கின்றன. குண்டு வைக்க சொல்லி எந்த மதம் சொல்கிறது? இப்படித்தாங்க காலப்போக்கில் நிறைய கருத்துக்கள் மதங்களோடு ஒட்டிக்கொள்கின்றன.

பாலா said...

@மனசாட்சி™

உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி நண்பரே

பாலா said...

@தனிமரம்

தன் மதத்தின் கோட்பாடுகளை மறந்து, வரட்டு கவுரவத்துக்காக கூப்பாடு போடுபவர்கள் எந்த மதத்தை சேர்ந்தவர் ஆனாலும் அவர்கள் மிருகமே. கருத்துக்கு நன்றி நண்பரே

பாலா said...

@kalakumaran

நான் நாத்திகர்கள் என்று சொல்வது நம்மூர் நாத்திகர்களை அல்ல. பொதுவாக எல்லா கடவுள்களையுமே நம்பாதவர்களை. மற்றவர்கள் எல்லோரும் நாத்திகர்களே அல்ல. சந்தர்ப்பவாதிகள்.

//சரி நீங்கள் சார்ந்திராத மதத்தை விடுத்து மற்ற மதத்தின் நல்ல கருத்துக்களை காது கொடுத்து கேட்கிறீர்களா ?

இது என்னைப்பார்த்து கேட்கிறீர்களா என்று தெரியவில்லை. என்னைப்பார்த்து என்றால் ஆம் என்பதுதான் என் பதில். இல்லை பொதுவாக கேட்கிறீர்கள் என்றால், எல்லோரும் அப்படி இருக்க வேண்டும் என்பதே என் விருப்பமும்.

//பிறக்கும் எவனொருவனும் அந்த மதத்தில் திணிக்கப்படுகிறான்.

சாத்தியமான உண்மை.

//எவன் ஒருவனும் எம்மத்தையும் சாராமல் வாழ முடியும் என்பதும் நிரூபிக்கப்ட்ட உண்மை.

நீங்களே சொல்லிவிட்டீர்கள் இதுவும் உண்மை என்று.

//கேள்வி கேட்கும் உரிமை இல்லை என மறுக்க முடியாது.

கண்டிப்பாக மறுக்க முடியாது. ஆனால் கேட்கும் நோக்கம் என்று ஒன்று இருக்கிறது. அந்த மதத்தை பற்றி ஆராய்வதற்காக என்றால் தவறே இல்லை. ஆனால் அந்த மதத்தினரை இழிவு செய்யும் நோக்கில் கேட்கப்படும் விஷமத்தனமான கேள்விகள் கூடாது என்பதுதான் என் கருத்து.

//கேள்வியை நீ அந்த மதத்தில் சேர்ந்த பிறகே கேட்க முழு உரிமையும் அளிக்கப்படுகிறது. சரியா?

மிக சரி

கேள்வி கேட்கும் உரிமை யாருக்கும் இல்லை என்று நான் சொல்லவே இல்லை. இழிவுபடுத்தும் உரிமை இல்லை என்றே சொல்கிறேன்.

உங்களின் வெளிப்படையான கருத்துக்களுக்கு நன்றி நண்பரே

பாலா said...

@முனைவர் பரமசிவம்

உங்கள் கருத்துக்களை வெளிப்படையாக கூறியதற்கு மிக்க நன்றி நண்பரே. உங்கள் கருத்துக்களுடன் நானும் ஒத்து போகிறேன். இந்த கருத்துக்களைத்தான் இந்த பதிவில் நான் சொல்ல நினைத்தேன்.
நீங்கள் வரம்பு கடந்து எழுதியதாக நான் நினைக்கவில்லை (உங்கள் கமெண்டைதானே சொல்கிறீர்கள்?)

பாலா said...

@அரசன் சே

மிக்க நன்றி நண்பரே

பாலா said...

@வீடு சுரேஸ்குமார்

என்னுடைய நோக்கமும் அதுதான் நண்பரே. ஒரே ஒரு நபரையாவது சிந்திக்க வைக்க வேண்டும். நன்றி நண்பரே

பாலா said...

@விக்கியுலகம்

நன்றி மாப்ள. கடமையை செய்வது மட்டும்தானே நம் வேலை?

பாலா said...

@இரவு வானம்

மிக்க நன்றி நண்பரே. கடமையை செய்வது மட்டும்தானே நம் வேலை. பலன் கிடைப்பது நம் கையில் இல்லை.

பாலா said...

@ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மி

நன்றி மேடம். இது ஆன்மிக பதிவு அல்ல. ஆகவேதான் உங்களுக்கு போராடிக்கவில்லை போலிருக்கிறது. பாராட்டியதற்கு நன்றிங்க

பாலா said...

@Kumaran
உங்கள் கருத்துக்கு நன்றி நண்பரே

பாலா said...

@சென்னை பித்தன்

கருத்துக்கு நன்றி சார்

Rathnavel Natarajan said...

அருமையான பதிவு.
நீங்கள் இவ்வளவு சீரியஸாக எழுதுவீர்களா? உங்கள் கிரிக்கெட் பதிவு எனக்கு மிகவும் பிடிக்கும்.
எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
உங்கள் பதிவை தனியாக எடுத்து வைத்திருக்கிறேன். நாளை இன்னும் ஆழ்ந்து படிக்க வேண்டும்.
நன்றி. வாழ்த்துகள்.

Yoga.S. said...

வணக்கம்,பாலா!உண்மைகள் சொல்லப்பட்டிருக்கின்றன,முழுமை இல்லாவிட்டாலும்!முழுமை என்றால் தொடர் பதிவு போட வேண்டி இருந்திருக்கும்.சில "படித்தவர்களின்"கருத்து?!க்களும் உள் வாங்கப்பட்டிருப்பது ...................ஹ!ஹ!ஹா!!!!

K said...

பாலா..... என்னோட கமெண்டுகளைப் படித்து பதில் சொன்னதுக்கு நன்றி! ஹா ஹா ஹா நானே கஷ்டப்பட்டு, பல்லைக் கடித்துக்கொண்டு, சிரிப்பை அடக்கிக் கொண்டு போட்ட கமெண்டுகள் அவை :-))

என்ன பாலா, நான் எந்த அடிப்டையில் அந்தக் கமெண்டுகளைப் போட்டேன் என்பதை இன்னுமா நீங்கள் புரிந்துகொள்ளவில்லை? :-))

சரி சரி இப்போது உண்மையைச் சொல்கிறேன்! முதல்வன் படத்தில் அர்ஜுன் “ ஒருநாள் முதல்வனாக” இருந்தது போல, நானும் “ ஒருநாள் மதவெறியனாக” இருந்து பார்த்தேன்! :-))

ஸப்பா, என்னாலேயே தாங்க முடியல! சில பேர் எப்புடித்தான் ஆயுசு பூரா மத வெறியோட இருக்காய்ங்களோ? :-))

சரி சரி நாடகம் முடிந்தது பாலா! இப்போது சீரியஸாகச் சொல்கிறேன்!

உண்மையிலேயே அருமையான, மிகவும் நடுவுநிலைமையான பதிவு!

வாழ்த்துக்கள்!

எப்பூடி.. said...

மதம் மனிதனின் போதை மருந்து - கார்ல் மார்க்ஸ்; இதை உண்மை என நிரூபிக்க கடுமையாக போராடுகிறார்கள்!!!

Anonymous said...

// சொல்லப்போனால் படித்தவர்களுக்கு நாட்டாமை செய்ய யாராலும் முடியாது. // மிக மிக உண்மை பாலா சார்.

//அதை வைத்து அந்த மதத்தில் இருப்பவர்களை இழித்தும், பழித்தும் பரிகாசம் செய்தும் அத்தனை நாள் தனக்குள் இருந்த அந்த மதவெறி பிடித்த மிருகத்தின் பசியை தற்காலிகமாக போக்கி கொள்ள மாட்டோமா? என்று வெறி பிடித்த மிருகமாக அலைகிறார்கள்.// இவர்களைக் கண்டால் எனக்கு வரும் கோபம் உங்களிடம் இருப்பது மகிழ்ச்சி.

எனக்கு மிகவும் பிடித்திருந்ததது இப்பதிவு. அருமையாக எளிய நடையில் இருந்த சிந்தனை ஓட்டங்கள் படிக்கச் படிக்கச் அருமையாக இருந்ததது.



சென்னை சிங்காரச் சென்னை

பாலா said...

@Rathnavel Natarajan

உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி சார்

பாலா said...

@Yoga.S.FR

மிக்க நன்றி நண்பரே

பாலா said...

@மாத்தியோசி - மணி

நான் நல்லா பண்றேனோ இல்லையோ நீங்க நல்ல்லா பண்றீங்க....

நீங்கல்லாம் நல்லா வருவீங்க.... :)

பாலா said...

@எப்பூடி..

நன்றி தலைவரே

பாலா said...

@seenuguru

உங்கள் பாராட்டுகளுக்கு மிக்க நன்றி நண்பரே

மாலதி said...

உங்களின் மிகவும் சிறப்பான இடுகை வாசித்தேன் மிகவும் சிறப்பு பாராட்டுக்கு உரியவை இர்ந்தாலும் நித்தியானந்தா குறித்த உங்களின் விமர்சனங்ககளில் முற்றிலும் மாறுபடுகிறேன் இதற்க்கு மூகமையான காரணம் இல்லாமல் இல்லை கடவுள் மறுப்பு கொள்கை கொண்டு இருந்தும் நித்தியானந்தா நமக்கு தேவை இதற்கு பருண்மையான காரணங்களை நான் அடுக்க ஆயத்தமாக இருக்கிறேன் இடுகைக்கு பாராட்டுகள் .

K said...

நான் நல்லா பண்றேனோ இல்லையோ நீங்க நல்ல்லா பண்றீங்க....

நீங்கல்லாம் நல்லா வருவீங்க.... :) //////

ஹா ஹா ஹா ஹா!

“ நான் நல்லாப் பண்றேனோ இல்லையோ நீ நல்ல்லாப் பண்றடா

நீயெல்லாம் நல்லா வருவடா....”

அப்டின்னு, ஒருமையில், சந்தானம் சொன்னது போலவே சொலியிருக்கலாம்! நான் ஒன்றும் கோபப்படமாட்டேன்! ஹா ஹா ஹா !!

தேங்க்ஸ் டூ பாலா :-))

பாலா said...

@மாலதி

உங்க கருத்துக்கு ரொம்ப நன்றிங்க

இனியன் பாலாஜி said...

இது திரு "மணி"க்காக‌

உங்கள் மதம் தான் சிறந்தது என்று நீங்கள் நம்புவதில் எந்த ஒரு தவறும் இல்லை. உங்கள் மதத்தில் மட்டும் தான் பிறந்தது முதல் கட்டையில் போகும் வரை விஷயங்கள் இருக்கின்றது என்பதிலும் எந்த ஒரு தவறும் இல்லை. ஆனால் மற்ற மதங்களில் இவையெல்லாம் இல்லை என்று சொல்லுவதில் தான் தவறு இருக்கின்றது. உங்கள் மதத்தில் நீங்கள் வணங்கும் அந்த கடவுளே உங்களது அறியாமையை கண்டு இப்போது சிரித்துக் கொண்டிருக்கின்றான் என்பது தான் உண்மை.
மேலும், மற்ற மதங்களில் ஒன்றுமே இல்லை என்றால் அந்த மதமே தோன்றி இருக்காது என்பது தான் உண்மை.
எப்போது மக்கள் அதிகமாக துயரத்தில் இருக்கின்றார்களோ நமக்கு ஒரு வழி கிடைக்காதா என்று ஏங்கும் போது அங்கு ஒருவரை கீழே அனுப்புகிறார் . அது கூட உங்கள் கடவுள் தான் என்பதில் எனக்கு நம்பிக்கை இருக்கின்றது. எல்லா மதங்களை தோற்றுவித்ததும் கூட உங்கள் கடவுள் தான் ( நீங்கள் எந்த மதத்தினராயிருந்தாலும் கூட கவலையில்லை.) என்பதை ஆணித்தரமாக நான் நம்புகின்றேன். ஏனெனில் இருப்பது ஒரே கடவுள்தான்.

முதலில் உங்கள் மதம் தான் சிறந்தது என்று நீங்கள் நினைத்தீர்களென்றால் மற்ற மதங்கள் எல்லாம் முட்டாள் தனமானது என்று நீங்கள் நினைத்தீர்களென்றால் மற்ற மதத்தினருடைய வழிபாடுகளையும் அவர்களது மத நூல்களையும் ஒரு 2வருடமாவது முழுவதுமாக கடை பிடியுங்கள். பிறகுதான் உங்களுக்கு தெரியும் எல்லா மதங்களிலுமேயே விஷயம் இருக்கின்றது என்ற்

இதை பற்றி பேசுவதென்றால் வருடக் கணக்காகும் என்பதினால் இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன்.

நானும் கூட என்னுடைய மதம் சிறந்தது என்று தான் இப்போதும் நினைக்கின்றேன்.

ஆனால் அதற்காக மற்ற மதங்களை குறை கூறினேன் என்றால் என்னுடைய கடவுளை நான் குறை கூறுகின்றேன் என்று பொருள். எனக்கு எது பிடிக்குமோ அதை நான் கடைபிடிக்கின்றேன் அவ்வளவுதான் .

இந்த பூமியில் மனிதர்கள் ஒற்றுமையாகவும் நல்ல நெறிகளுடன் வாழவேண்டும் என்பதற்காகத்தான் மதங்களே தவிர
அது நமது சகோதரத்துவத்தை துக்கமயமாக்குகிறது என்றால் எனக்கு எனக்கு என்னுடைய மதமும் வேண்டாம்/. அந்த கடவுளும் வேண்டாம். என்னோடு பூமியில் வாழ்பவர்களே எனக்கு கடவுள் கள்

இதை தங்கள் மனதை புண்படுத்தவேண்டும் என்று எழுதவில்லை. மனங்கள் பண்பட வேண்டும் என்று தான் எழுதுகின்றேன்.


நன்றி
என்றும்
தங்கள் அன்பு நண்பன்
இனியன் பாலாஜி

( நல்ல நடு நிலையுடன் இந்த பதிவை எழுதிய பாலா அவர்களுக்கு நன்றி. எல்லோரும் தங்களை போலிருந்தால் இவ்வுலகில் சண்டையோ சச்சரவோ இல்லை.)

பாலா said...

@இனியன் பாலாஜி

உங்களின் வெளிப்படையான கருத்துக்களுக்கு மனமார்ந்த நன்றி நண்பரே. அடிக்கடி வாங்க

Related Posts Plugin for WordPress, Blogger...