விவேகானந்தரின் நறுக்

கடவுள் நாம் விரும்பியதை கொடுப்பவர் அல்ல, நமக்குத் தேவையானதை கொடுப்பவர்...

September 16, 2010

எரிகிற வீட்டில்...

முன் குறிப்பு: கொஞ்சம் பெரிய பதிவுதான். முழுவதும் படித்து விடுங்கள்...

"எரிகிற வீட்டில் பிடுங்கியது எல்லாம் லாபம்!" என்று ஒரு பழமொழி சொல்வார்கள். அதாவது ஒரு வீடு எரிந்து கொண்டிருக்கிறது என்றால் அந்த வீட்டில் இருக்கும் பொருட்களை யார் வேண்டுமானாலும் கொள்ளை அடிக்கலாம். அது லாபம் என்று பொருள். இப்படித்தான் இன்று நடந்து கொண்டிருக்கிறது. நான் ஸ்பெக்ட்ரம் ஊழல் பற்றியோ, போபார்ஸ் ஊழல் பற்றியோ, அணு ஆயுத ஒப்பந்தம் பற்றியோ சொல்லவில்லை. இவற்றை பற்றி எல்லாம் சொல்லி ஒன்றும் ஆகப்போவதில்லை. சொல்லப்போனால் இது எல்லாம் நம்மை எரிக்கும் பெரும் நெருப்புகள். நம்நாட்டை முற்றிலும் சாம்பல் ஆக்காமல் அணையாது. ஆனால் இந்த நெருப்புக்கு நடுவே ஆங்காங்கே கிடைத்த வரை லாபம் என்று பலரும் மொள்ளமாரித்தனம் செய்கிறார்கள். 



எப்படியும் எரிந்து சாம்பல் ஆகப்போகிறது, நாமே கொள்ளை அடித்தால் என்ன? என்ற எண்ணம்தான் காரணம். ஒரு சிறு உதாரணம் சொல்கிறேன். சென்னை மற்றும் பெங்களூரு முதலிய பெருநகரங்களில் வசிக்கும் தென் தமிழக நண்பர்கள் அனைவருக்கும் இருக்கும் முக்கிய பிரச்சனை, பண்டிகை மற்றும் விடுமுறை நாட்களில் சொந்த ஊருக்கு டிக்கெட் மற்றும் திரும்பி வர ரிட்டன் டிக்கெட் எடுப்பது. இதற்கு பெரும் அடிதடியே நடக்கிறது. முன்பெல்லாம் பண்டிகை மற்றும் கோடை விடுமுறை காலங்களில்தான் ரயில்கள் நிரம்பி வழியும். ஆனால் தற்போது எல்லா நாளும் திருநாள் போல ரயில்கள் கூட்டமாகவே வருகின்றன, கூட்டமாகவே போகின்றன. ஏஜெண்டுகளை முடக்க அரசு புது திட்டம் அறிவித்தது என்னவோ உண்மைதான். ஆனால் அது ஒழுங்காக நடக்கிறதா என்றால் அதுதான் இல்லை. எனவே மக்கள் அடுத்த சேவையான பேருந்து பயணத்தை தேர்ந்தெடுக்கிறார்கள்.


இதற்கான முன் பதிவுக்கும் மக்களிடையே பலத்த போட்டி ஏற்படுகிறது. அதனால் மக்கள் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. உதாரணமாக பண்டிகை காலங்களில் மதுரையில் இருந்து மட்டும் சுமார் அறுபதுக்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மற்ற நாட்களில் கூட சில சமயம் சிறப்பு பேருந்துகள் விடப்படும். ஆனால் குறைந்த எண்ணிக்கையில் அதுவும் யாருக்கும் அது சிறப்பு பேருந்து என்று தெரியாத வகையில் விடப்படும். ஏன் என்று அப்புறம் சொல்கிறேன். பண்டிகை காலங்களில் இயக்கப்படும் சிறப்பு பேருந்துகளில் இடம்பிடிக்க மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் பெரிய ரகளையே நடக்கும்.


ஆகவே அவர்களாக முடிவு செய்து ஒரு திட்டத்தை ஏற்படுத்தினார்கள். அதாவது பேருந்தில் செல்ல விரும்புபவர்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டும். ஒரு சிறப்பு பேருந்து வந்தவுடன் வரிசையில் இருக்கும் முப்பத்தைந்து பேருக்கு மட்டும் கவுண்டரில் டோக்கன் கொடுப்பார்கள் அதன் விலை ஐந்து ரூபாய். அதிக லாபம் காரணமாக பிற்காலத்தில் பத்து ரூபாயாக உயர்த்தப்பட்டது. அதான் பேருந்தில் போகிறவனே டிக்கெட் எடுப்பானே? அப்புறம் என்னத்துக்கு இந்த பத்து ரூபாய்? சரி இடம் பிடித்து தருவதற்கு கூலி என்று வைத்துக்கொள்ளலாம். இந்த மாதிரி சிறப்பு பேருந்துகளில் மற்ற பேருந்துகளை விட டிக்கெட் விலை சுமார் நூறு ரூபாய் வரை அதிகம் இருக்கும். சிறப்பு பேருந்துகளோ பெயருக்கேற்றார்போல இல்லாமல் சுந்தரா டிராவல்ஸ்சை மிஞ்சும் வகையில் இருக்கும். இந்த சிறப்பு பேருந்தில் வரும் கண்டக்டர் பண்ணும் அலும்பை பார்த்தால் ஏதோ பஸ் ஓனர் போல இருக்கும்.


தான் சொந்த பேருந்தை இலவசமாக அளிப்பது போல முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்கும். ஒரு டிக்கெட்டின் விலை 340 ரூபாய் என்று வைத்துக்கொள்ளுங்கள், ஒருவர் 350 ரூபாய் கொடுத்துவிட்டால் அவ்வளவுதான். குதிக்க ஆரம்பித்து விடுவார். அதுவும் அவரிடம் மீதி சில்லறையான(?!) பத்து ரூபாய்யை கேட்டு விட்டால் ஏதோ ஒரு பிச்சைக்காரனை பார்ப்பதுபோல பார்ப்பார். அதன் அர்த்தம் அந்த பத்து ரூபாய் அவருக்கு சொந்தம் என்று அர்த்தம். இது பற்றி பொதுமக்கள் யாரும் கேட்கமாட்டார்கள். ஏனென்றால் அவர்களுக்கு எப்படியாவது ஊருக்கு போய் சேர வேண்டும் அவ்வளவுதான். பெரும்பாலும் இளைஞர்கள் என்பதால் மீதி சில்லறை கேட்பதை ஒரு கவுரவ குறைச்சலாக நினைக்கிறார்கள். ஆனால் மற்றவர்களை நினைத்து பாருங்கள். ஒரு பெரியவர் தான் வைத்திருந்த 500 ரூபாயில், 150 ரூபாய்க்கு சரக்கடித்து விட்டு, மீதி 350 ரூபாயை கண்டக்டரிடம் கொடுத்துவிட்டு விழித்ததை பார்த்திருக்கிறேன்.


சரி மற்ற நாட்களில் விடப்படும் முன்பதிவு இல்லாத பேருந்துகளின் கதை இன்னும் மோசம். பேருந்து நிலையத்துக்குள் நுழையும்போது வேகம் பிடித்து வந்து நிற்கும். கண்டக்டர் கலெக்டர் போல கம்பீரமாக இறங்கி வருவார். யாரிடமும் எதுவும் சொல்லமாட்டார். கூட்டம் அது முன்பதிவுக்கான பேருந்தா? இல்லையா? என்று குழம்பி விடுவார். தூரமாக தனியாக நின்று கொள்வார். யாராவது ஒருவர் மெதுவாக கண்டக்டரிடம் பேச்சுக்கொடுப்பார். “சார் ஏதாவது சீட்டு காலியா இருக்கா?” என்று. உடனே அவர், "ஒண்ணே ஒண்ணுதான் காலியா இருக்கு. ஒரு அம்பது ரூபா அதிகம் ஆகும் பரவாயில்லயா?" என்று கேட்பார். ஆகா இடம் கிடைத்து விட்டது! என்று பேருந்தில் போய் அமர்ந்து கொள்வார். பேருந்து கிளம்பி டிக்கெட் எல்லாம் வாங்கி முடித்தபின் அருகில் இருப்பவரிடம் மெதுவாக பேச்சுக்கொடுத்தால், அங்கேயும் அதே கதையைத்தான் கண்டக்டர் விட்டிருப்பார். பேருந்தில் எல்லோருக்கும் இதே நிலைதான். எதற்கு இந்த எச்ச பொழப்பு?


சரி அரசுபேருந்து என்றாலே இப்படித்தான் என்று தனியாரிடம் சென்றால் இதைவிட மோசம். சாதாரணமாகவே ஒரு டிக்கெட்டின் விலை 300க்கு மேலேதான் ஆரம்பிக்கும். அதுவே பண்டிகை காலங்கள் என்றால் 500தான் ஆரம்ப விலை. ஒரு பேருந்துக்கு ஐந்து சீட்டுகள் வீதம் நிறுத்தி வைத்திருப்பார்கள். கடைசி கட்டத்தில் யாராவது அவசரமாக வருவார்கள். அப்போது சொன்ன விலைக்கு வாங்கி விடுவார்கள் என்று. இப்போது அப்படி எல்லாம் கிடையாது. முதலில் அனைத்து டிக்கெட்டுகளையும் விற்று விடுகிறார்கள். பின் வருபவர்களுக்கு டிக்கெட் இல்லை என்று சொல்லாமல் கொஞ்சம் விலை அதிகமாக வைத்து விற்கிறார்கள். இந்த எண்ணிக்கை ஐம்பதுக்கும் மேலே இருக்கும். இப்படித்தான் போன வாரம் என் நண்பன் எடுத்த டிக்கெட்டின் விலை 700 ரூபாய். அவன் அதற்கு கவலைப்படவே இல்லை. டிக்கெட் கிடைத்ததே பெரிய விஷயம் என்றான். பேருந்தில் ஏறுவதற்கு காத்திருந்தபோது வந்தது அதிர்ச்சி. அந்த டிராவல்ஸ் நிறுவனம், நான்கைந்து டெம்போ வேன்களை வாடகைக்கு எடுத்து அதில் பயணிகளை ஏற்றினார்கள். அதாவது திரையரங்குகளில் எக்ஸ்ட்ரா சீட்டு போடுவார்களே அதுபோல. நண்பனும் அதே மாதிரி ஒரு வேனில் ஏற்றப்பட்டான். அந்த வேனுக்கு முறையான பெர்மிட் இருக்கிறதா? ஓட்டுனர் திறமையானவார்தானா? என்று யாரும் கவலைப்பட்டதாகவே தெரியவில்லை. வேன் டிரைவரை பார்த்தால் பள்ளி மாணவர் போல இருந்தார். இதுபற்றி யாரும் அலட்டிக்கொள்ளவில்லை. எல்லோருக்கும் ஊர் போய் சேரவேண்டும் அவ்வளவுதான்.


யார் சொன்னது பணத்துக்கு மதிப்பு குறைந்து வருகிறது என்று? அதைவிட வேகமாக மனிதர்களின் மதிப்புதான் குறைந்து வருகிறது. பொதுமக்களின் அவசர நிலையை எப்படியெல்லாம் இந்த போறம்போக்குகள் சாதகமாக பயன்படுத்திக்கொள்கிறார்கள் பாருங்கள். அது சரி எரிகிற வீட்டில் பிடுங்கியதெல்லாம் லாபம்தானே?


பி.கு: அம்பானி திருடுறான், கொக்ககோலாகாரன் திருடுறான், இதை எல்லாம் கேட்க யோக்யத இல்லை. பாவம் பாட்டாளி ஏதோ பணக்கஷ்டத்துல இப்படி பண்றான் என்று எல்லாம் பின்னூட்டம் இடாதீர்கள். இவனை கேட்கவே யோக்யதை இல்லாத போது அம்பானியை எப்போது கேட்பது? 


உங்களுக்கு பிடிச்சிருந்தா ஓட்டு போடுங்க... 

உங்க கருத்துக்களை இங்கே பதிவு பண்ணுங்க... 


10 comments:

எண்ணங்கள் 13189034291840215795 said...

சிறப்பு அலசல்..

சமூக நோக்கமுள்ள இது போன்ற பல பதிவுகள் வரணும்..

ஹுஸைனம்மா said...

ரொம்பக் கொடுமைங்க, இந்த பஸ், ரயில் பயணங்கள்!! ஒட்டும் பராமரிப்பு இல்லாதபோதே இவ்வளவு டிமாண்ட் இருக்கிறது. இதில எப்படி நஷ்டத்தில ஓடுதுன்னு சொல்றாங்களோ? கொஞ்சமே கொஞ்சம் பராமரித்தாலும் போது இத்துறையை - லாபம் கொழிக்க வைக்கவும், நுகர்வோர்களும் மகிழ்ச்சியடையவும்!!

S Maharajan said...

Good Post

"ராஜா" said...

நண்பரே கூட்டம் இல்லாத நாட்களில் இந்த பேருந்துகளில் பயணம் செய்துள்ளீர்களா? அவணுக நம்மகிட்ட பிச்ச எடுப்பாணுக ... நான் ஒருமுறை சென்னையில் இருந்து ஒரு தனியார் A/C பேருந்தில் வெறும் 200ரூபாய் கொடுத்து மட்டுமே வந்துள்ளேன்... அதுவும் அவன் மிகவும் கெஞ்சி என்னை அவன் பேருந்தில் ஏற்றினான் ... உள்ளே வெறும் பத்து பேர் மட்டுமே ....


supply should increases when demand increases... otherwise price sholud increased dramatically ... this is the default one in any business...

அதிகப்படியான பேருந்துகளை இயக்காதது அரசாங்கத்தின் தவறே ...

Unknown said...

நல்ல பகிர்வு

பாலா said...

@ புன்னகை தேசம்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே...

@ ஹுஸைனம்மா
எளிதில் லாபம் சம்பாதிக்க கூடிய எந்த துறையும் இப்படி ஒழுங்கான பராமரிப்பு இல்லாமல்தான் கிடக்கிறது.
தங்களின் கருத்துக்கு நன்றி

@ S Maharajan
Thank you.

@ "ராஜா"
எனக்கு அந்த அனுபவமும் உண்டு நண்பரே...

@ முகிலன்
கருத்திட்டமைக்கு நன்றி நண்பரே...

velji said...

அநீதிக்கு எதிரான குரல் மட்டும் அல்ல. நிகழ்வுகளை நுணுக்கமாய் கவனித்திருக்கிறீர்கள்.அருமை!

shafi-Sabiudeen said...

ரொம்ப தெளிவான தேவையான பகிர்வு, இது கண்டிப்பாக சம்பந்தப்பட்ட அமைச்சகங்களுக்கு எட்ட வேண்டும்.

Yoganathan.N said...

தம்மாதுண்டு மலேசியாவிலே பண்டிகை நாட்களில் ரயில், பேருந்து டிக்கெட்டுகள் கிடைப்பது அரிது.
உங்க இடத்தில் எப்படி என்று என்னால் நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை. :(

ஆனால், இங்கு நீங்கள் சொன்ன ஊழல்கள் நடக்காது. அனைத்து டிக்கெட்டுகளும் முன்பதிவில் விற்கப்படுகின்றன. So, first come first seve basis.
கண்டக்டர் எல்லாம் 'local' பேருந்தில் மட்டுமே இருப்பார்கள். அவர்கள், டிக்கெட் விலையை ஏற்றவோ இல்லை வேண்டுமென்றே அதிக விலையில் விற்கவோ கூடாது.

மறுபடியும் சொல்கிறேன், இந்தியாவில் 'transportation' நிலமை மிகவும் கவலைகிடமாக உள்ளது.

பாலா said...

@ velji

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே...

@ shafi

கருத்திட்டமைக்கு நன்றி நண்பரே...

@ Yoganathan.N

நண்பரே இந்தியாவின் மக்கள் தொகை நெருக்கடியும் ஒரு பெரிய காரணம். என்ன செய்வது?

Related Posts Plugin for WordPress, Blogger...