ஒவ்வொருவரும் தன் வாழ்க்கையில் பலபேரை ஆதர்ச நாயகர்களாக நினைத்திருப்பார்கள். சினிமா அவர்களின் வாழ்க்கையை ஆக்கிரமிப்பதற்கு முன் நிஜ மனிதர்கள்தான் அவர்களின் ஹீரோக்கள். ஒரு குழந்தைக்கு அதன் தந்தைதான் முதல் ஹீரோ. பின் அதன் பள்ளி ஆசிரியர்கள். தன் வாத்தியார் மாதிரி உடுத்தவேண்டும், சைக்கிள் ஓட்ட வேண்டும், சிகரெட் பிடிக்கவேண்டும் என்று கற்பனை வளர்த்தவர்கள் பலபேர்.இந்த ரசனை ஒவ்வொரு கட்டத்திலும் மாறுபடும். வாழ்க்கையில் பல மாற்றங்கள் வந்த பிறகும், தங்களின் ஆசிரியர்கள் மட்டும் மனதில் இருந்து மறைவதில்லை.
நானும் ஒவ்வொரு காலகட்டங்களில் பல ஆசிரியர்களை கடந்து வந்திருக்கிறேன். அவர்களைப்பற்றி கூற வேண்டும் என்று நினைக்கிறேன்.
ஆனந்தராஜ் வாத்தியார். இவர்தான் என் ஒண்ணாங்கிளாஸ் வாத்தியார். நான் பார்த்த முதல் வாத்தியார். (எங்க வீட்ல எல்கேஜி, யுகேஜி பற்றியெல்லாம் அப்போது யாருக்கும் தெரியாது). அவர் கொஞ்சம் இளவயதுக்காரர். அப்போது ரஜினி நடித்த ராஜாதி ராஜா படம் வந்திருந்தது. அதே ஹேர் ஸ்டைல் வைத்திருப்பார். குரல் சிங்கத்தின் கர்ஜனை போல இருக்கும். மாணவர்களை திட்டுவது கூட நக்கலாகத்தான் இருக்கும்.
கந்தசாமி வாத்தியார். இவர் எனக்கு ஐந்தாம் வகுப்பு ஆசிரியர். எங்கள் பள்ளி தலைமை ஆசிரியர். இவரை பார்த்தாலே பாதி மாணவர்கள் கால்சட்டை ஈரமாகிவிடும். பார்ப்பதற்கு காதல் தண்டபாணி போல இருப்பார். வகுப்பறையில் மாணவர்களை துரத்தி துரத்தி அடிப்பார். எனக்கு கணிதத்தை விதைத்தவர். கணிதத்தில் பெயில் ஆனதற்கு அவர் என் முதுகில் கொடுத்த பஞ்ச் இன்னும் ஞாபகம் இருக்கிறது.
ஆண்டவர் சார். எனக்கு ஆறாம் வகுப்பு ஆசிரியர். முதல் முறையாக உயர்நிலை வகுப்புக்கு வந்து பேந்த பேந்த விழித்துக்கொண்டிருந்த என்னை சீர் படுத்தியவர். நான் வாழ்க்கையில் நன்றி சொல்ல வேண்டும் என்று நினைத்தால் அது இவருக்காகத்தான் இருக்கும். இவர் விதைத்த ஆங்கிலம் தான் இன்று நான் பேசும் இலக்கணப்பிழை இல்லாத ஆங்கிலம். இன்றும் பெருமையாக சொல்வேன் நான் பேசும் ஆங்கிலத்தில் சொற்பிழையோ, இலக்கண பிழையோ இல்லை என்பதற்கு இவர்தான் காரணம். நடத்தை முறைகள், பேசும் முறைகள் என்று என் நடை உடை பாவனைகளை மாற்றியவர். செம கெத்தாக இருப்பார். இன்றும் இவரை ரோடில் பார்த்தால் இனம் புரியாத நடுக்கம் மனதில் எழுகிறது. நா குளறுகிறது. கை தானாக வணக்கம் வைக்கிறது.
பழனிச்சாமி சார். இவர் பத்தாம் வகுப்பு கணித ஆசிரியர். சின்சியாரிடியை நான் கற்று கொண்டது இவரிடம்தான். அறுபது வயது முதியவர். இவரின் கடைசி செட் மாணவர்கள் நாங்கள்தான். அதன் பின் ரிட்டையர் ஆகிவிட்டார். பேச்சில் ஒரு கம்பீரம் இருக்கும். எப்பவும் கடுமையாகவே பேசுவார். எல்லா மாணவர்களுக்கும் இவர் மீது வெறுப்பு இருந்தது. ஆனாலும் ஒரு மரியாதை இருந்தது. அதற்கு காரணம் வகுப்பில் இவர் நடந்து கொள்ளும் முறை. ஒரு தடவை மாணவர்கள் பலர் வகுப்பில் செக்சு புத்தகத்தை படித்து மாட்டிக்கொண்டபோது, இவர் நா தளுதளுத்து அறிவுரை வழங்கியதை யாரும் மறக்க மாட்டார்கள். இப்போதும் அதே எளிமையோடு பழைய சைக்கிளில் பவனி வருகிறார்.
ஆனந்த அபூர்வசாமி வாத்தியார். மாணவர்கள் என்றாலே அதிகம் கிண்டல் செய்யப்படுபவர்கள் தமிழாசிரியர்கள்தான். எனக்கு தெரிந்து அதிகம் கிண்டல் செய்யப்படாத ஒரு தமிழாசிரியர் இவராகத்தான் இருக்கும். பேச்சில் ஒரு பெரிய கூட்டத்தையே பலமணிநேரம் கட்டிப்போட முடியும் என்று பலமுறை நிரூபித்தவர். இன்றும் என்னுடைய உடல் மொழியில் பல இவரை ஒத்திருக்கும். எங்கள் பள்ளி ஆண்கள் பள்ளி என்பதால் இயல்பாகவே நிறைய கேட்ட வார்த்தைகள் வந்து விழும். பல கில்மா விஷயங்களை சிறிதும் ஆபாசம் இல்லாமல் மாணவர்களிடம் விளக்கி பக்குவப்படுத்தியவர். கொஞ்சம் முன் கோபம் அதிகம்.
ப்ரொபசர் பழனி செல்வம். எங்கள் கல்லூரி வாழ்க்கையை பற்றி நண்பர்களிடம் பேசும்போது கண்டிப்பாக இவரைப்பற்றி பேசாமல் இருப்பதில்லை. எங்கள் வகுப்பு மாணவர்கள் அனைவரும் சொல்லும் ஒரே வார்த்தை ப்ரொபசரா இருந்தா இவரை மாதிரிதான் இருக்கணும். கோபம் என்றால் கிலோ என்ன விலை என்று கேட்பவர். இவர் கோபப்பட்டு நாங்கள் பார்த்ததே இல்லை. எங்கள் வகுப்பு மாணவர்கள் அடங்காப்பிடாரிகள் என்று பெயர் பெற்றவர்கள். யார் பேச்சையும் கேட்க மாட்டார்கள். இவர் மிகத்தன்மையாக ஆனால் தீர்க்கமாக பேசுவார். அதனால் அவர் சொல்லுக்கு எல்லோரும் கட்டுப்பட்டு விடுவார்கள். எப்படி என்று யாருக்கும் தெரியாது. நான் ஆசிரியனாக பணிபுரிய முடிவெடுத்தபின் இவரை மாதிரிதான் இருக்கவேண்டும் என்று எனக்கு நானே சொல்லிக்கொண்டேன். இன்றும் சொல்லிகொள்கிறேன். மாணவர்கள் செய்யும் சேட்டைகளை பார்த்து கோபம் வரும்போதெல்லாம், "அவ்வளவு ஈசியாடா வாத்தியார் வேலை?" என்று இவர் என் கண்முன் தோன்றி சிரிக்கிறார்.
இப்படி ஒவ்வொரு கட்டத்திலும் ஒரு ஆசிரியர் என்னோடு பயணித்து தன் சுவடுகளை என்மீது விட்டு சென்றிருக்கிறார்கள். அவர்கள் இல்லை என்றால் நான் இல்லை. ஆசிரியர் இல்லை என்றால் யாரும் இல்லை.
அனைவருக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.
அனைவருக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.
பிடிச்சிருந்தா ஓட்டு போடுங்க...
உங்க கருத்துக்களை பதிவு பண்ணுங்க...
7 comments:
நல்ல பகிர்வு...நாம் படித்த ஸ்கூல்...வாத்தியார்...காலேஜ் எல்லாம் யாரும் அவ்வளவு எளிதில் மறக்க முடியுமா. நமது வாழ்க்கைப்பாதையின் பெரும்பங்கு வாத்தியருக்கும் உண்டுத்தான்...நீங்கள் ஒரு நல்லாசிரியராக இருப்பது மகிழ்வே...அதுவும் ஒரு நல்லவிரிஉறையாளரை மனதில் கொண்டு உறுதியுடன் இருப்பது பாராட்டதகுந்தது...வாத்தியார் என்றால் முறைப்புடந்தான் இருக்கனும்..அல்லது மாணவர்களை ஒரு குற்றவாளியாகத்தான் பார்க்கவேண்டும் என்ற மனநிலை மாறவேண்டும்..ஒரு ஆரோக்கியமான உறவு நிலவவேண்டும்..பொன்
உங்களின் கடவுளும் நம்பிக்கையும் கம்யூனிசமும் என்ற பதிவில் பின் ஊட்டம் போட்டதுடன்...உங்கள் மெயில் அட்ரசும் கேட்டு எழுதி இருக்கிறேன். எனது...
ponnakk@gmail.com.
yet to read ur. other articles..
பாலா சார் உங்களுக்கும் என்னோடைய ஆசரியர் தின வாழ்த்துக்கள் ..
Happy teachers day
ஆம் பாலா.
நம் கதையின் நாயகர்களாக
நிறைய பேர்
இருக்கிறார்கள்.
அவர்களை ஞாபகப் படுத்தும்
தருணங்கள் தான்
குறைந்து கோண்டேயிருக்கின்றன
என்பதை
கொஞ்சம்
குற்ற உணர்ச்சியுடனே சொல்கிறேன்.
நல்ல பகிர்வு. பல விஷயங்கள் சுவாரஸ்யமாக எழுதுகிறீர்கள் இன்று முதல் உங்கள் ப்ளாகை தொடர்கிறேன்.
@மோகன் குமார்
மிக்க நன்றி நண்பரே.
Post a Comment