எந்த வயது மனிதனாக இருந்தாலும், தன் மனதில் தான் பெரிய ஹீரோ என்ற நினைப்பு இருக்கும். குறைந்தபட்சம் பாத்ரூம் கண்ணாடியிலாவது ஹீரோ மாதிரி மேனரிசங்கள் செய்து மகிழ்ந்து கொள்வான். எப்போதும் அதே போல தான் செய்யவேண்டும் என்று ஒத்திகை பார்த்துக்கொள்வான். சரியாக தெருவில் இறங்கி நடக்கும்போது கூச்சம் காரணமாக எல்லாவற்றையும் மறந்துவிட்டு தன்னுடைய கேணத்தனமான மேனரிசங்களையே தொடர்வான். எல்லா பெண்களும் தன்னை பார்க்கவேண்டும், பேசவேண்டும் என்று எண்ணுவான். ஆனால் ஏதாவது ஒரு பெண் டைம் என்ன என்று கேட்டால் மென்று முழுங்குவான். பின் அந்த பெண் சென்றவுடன் தன் தலையில் தட்டிக்கொள்வான். இது வேறு யாருமல்ல நான்தான். நான் மட்டுமல்ல. சமூகத்தில் நிறையபேர் இப்படித்தான் இருக்கிறார்கள். தன் காதலைக்கூட எப்படி வெளிப்படுத்துவது என்று தெரியாமல் தவிப்பவர்கள். ஹீரோ என்றால் இப்படி இருக்கவேண்டும் என்று மனதுக்குள் கற்பனை செய்து கொண்டிருப்பவர்கள். ஆனால் இவர்கள் அனைவருக்குள்ளேயும் ஒரு ஹீரோ இருக்கிறான். ஆஹா நம்மள மாதிரியே ஒரு ஹீரோ என்று நினைக்க வைக்கும் படம்தான் நான் இப்போது சொல்லப்போகும் படம்.
நான் ஹிந்தி மொழியில் புலவர் எல்லாம் கிடையாது. எக் காவ் மே எக் கிசான் ரகுதாத்தா என்ற அளவுக்குத்தான் ஹிந்தி தெரியும். அதனால் சப்டைட்டிலே துணை என்று படம் பார்ப்பவன்.ஒரு சில படங்கள்தான் சப்டைட்டில் இல்லாமல் பார்த்தாலும் புரியும். இது அந்த வகையை சேர்ந்த படம். ஷாருக் மீது இருக்கும் நன்மதிப்பை மேலும் ஒரு படி உயர்த்திய படம். படத்தின் பெயர் ரப் னே பனா தி ஜோடி (கடவுள் அமைத்துக்கொடுத்த ஜோடி). இந்த படம் வந்து இரண்டாண்டுகள் ஆகிவிட்டாலும், நண்பன் ஒருவனின் வற்புறுத்தலால் நேற்றுதான் பார்க்கும் வாய்ப்பு கிட்டியது. படத்தின் கதை இதுதான்.
சுரிந்தர் அல்லது சூரி ஒரு நல்ல மாணவன். ஒழுக்கமானவன். நன்கு படித்து பஞ்சாப் மின்வாரியத்தில்(சரிதானே?) வேலைபார்ப்பவன். தானுண்டு தன் வேலை உண்டு என்று இருப்பவன். மொத்தத்தில் சரியான பழம். ஒருநாள் தன் ஆசிரியரின் மகள் தானி திருமணத்துக்கு செல்கிறான். அந்த ஆசிரியருக்கு சூரியை மிகப்பிடிக்கும். ஆனால் அவரது மகள் தானியோ நேர்மார். ஜாலி பேர்வழி. சந்தோசம் என்றால் நடுரோடு என்று கூட பார்க்காமல் துள்ளி குதித்து விடுவாள். அவளுக்கு இயல்பாகவே சூரி மீது ஒரு வெறுப்பு இருக்கிறது. அவன் சரியான பழம் என்று. கிட்டத்தட்ட அந்நியன் சதா மாதிரி. திருமணத்துக்கு போன இடத்தில் எதிர்பாராதவிதமாக மாப்பிள்ளை விபத்தில் சிக்கி இறக்க, திருமணம் நின்றுபோன அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டு படுத்த படுக்கை ஆகிறார் ஆசிரியர். கடைசியாக தானியை தன் செல்ல மாணவன் சூரி கையில் பிடித்து கொடுத்துவிட்டு இறக்கிறார். ஏற்கனவே காதலன் மற்றும் தந்தை இறந்த சோகத்தில் இருக்கும் தானி எதுவும் பேசாமல் கம்மென்று சூரியை திருமணம் செய்து அமிர்தசரசில் குடியேறுகிறாள்.
அவள் மனதில் சோகத்தை தவிர எதுவும் இல்லை. உங்களுக்கு நல்ல மனைவியாக இருக்க முயற்சி செய்கிறேன். ஆனால் என்னால் உங்களை காதலிக்க முடியாது. என்னுள் காதல் இல்லை. உங்களுக்காக என்னை நான் மாற்றிக்கொள்கிறேன். கொஞ்சம் அவகாசம் தாங்க என்று சொல்கிறாள். சூரி உடைந்து போகிறான். அவன் விரும்புவது ஜாலியான தானியை. ஆனால் தானியோ சுத்தமாக மாறிவிட்டாள். சிரிப்பது கூட கிடையாது. என்ன செய்வது?
தன் மனைவியின் எந்த விஷயத்திலும் குறுக்கிடாமல் தள்ளியே இருக்கிறான். அவளும் இவனுக்கு சமையல் செய்து, பணிவிடை செய்து கடனே என்று வாழ்கிறாள்.. ஒரு நாள் நடனப்பள்ளி ஒன்றில் சேர விரும்புவதாக தானி சொல்கிறாள். அவள் ஆசைப்பட்டு கேட்டதால் உடனே சம்மதிக்கிறான் சூரி. ஆனால் தன் மனைவி நடனமாடுவதை பார்ப்பதற்கு, நண்பன் ஒருவன் உதவியுடன் கலாட்டாவான ஒரு இளைஞனாக மாறுவேடத்தில் நடனப்பள்ளிக்கு செல்கிறான். அங்கே எல்லோருடைய கைகளிலும் ஒரு எண் தரப்படுகிறது. அதே எண் யாரிடம் இருக்கிறதோ அவர்கள் இருவரும் ஜோடி. இருவரும் பயிற்சி செய்து இறுதிபோட்டியில் பரிசு வெல்லவேண்டும். சூரி கையில் இருப்பது எண் 21. தானி கையில் இருப்பதும் அதுவே. சூரி தன் மனைவி தன்னை அடையாளம் கண்டு கொள்வாள் என்று பயப்படுகிறான். ஆனால் அவளுக்கு சூரியை அடையாளம் தெரியவில்லை. எனவே ராஜ்கபூர் என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொள்கிறான்.
கொஞ்சம் கொஞ்சமாக இருவரின் நட்பும் வளர்கிறது. ஒரு கட்டத்தில் தானி ராஜ்கபூரை காதலிக்க தொடங்குகிறாள் அவன் சூரி என்பதை அறியாமலேயே. ராஜ்கபூர் தானியை ஊரை விட்டு ஓடிவிடலாம் என்று அழைக்கிறான். அவள் என்ன பதில் சொல்வாள் என்று ராஜ்கபூராக ஆர்வத்துடனும், சூரியாக கண்ணீருடனும் காத்திருக்கிறான். தானி என்ன பதில் சொன்னாள்? ராஜ்கபூர் ஜெயித்தானா இல்லை சூரி ஜெயித்தானா என்றுகொஞ்சம் கண்ணீர் நிறைய காமெடி என்று சொல்லி இருக்கிறார்கள்.
இந்த படத்தை கொஞ்சம் உற்று நோக்கினால் அந்நியனில் வரும் அம்பி ரெமோ கான்செப்ட் மாதிரி இருக்கும். ஆனால் இதன் பாதிப்பு வேறு. சூரியாகவும், ராஜ்ஆகவும் ஷாரூக் கலக்கி இருக்கிறார். சூரியாக வரும்போது அப்பாவியான, ஒரு சராசரி குடும்பத்தலைவனை நினைவு படுத்துகிறார். ராஜ்கபூராக வரும்போது நவநாகரிக மாணவனை கண்முன் நிறுத்துகிறார். தானியாக வரும் அனுஷ்கா ஷர்மா முகத்தில் அவ்வப்போது ஆயிரம் எக்ச்ப்ரசன்கள். கணவனை காதலிக்கவும் முடியாமல், ஒரு பாவமும் அறியாத அவனை வெறுக்கவும் முடியாமல், தன்னை சந்தோசப்படுத்தும் ராஜ்கபூரின் காதலை ஏற்கவும் முடியாமல், விடவும் முடியாமல் அவர் தவிக்கும் தவிப்பு எந்த ஒரு பெண்ணுக்கும் இயல்பாக இருப்பது.
படத்தில் சுவாரசியமான, நெகிழவைக்கும் காட்சிகள் ஏராளம். உதாரணமாக ராஜ்கபூர் தானியுடன் போட்டி போட்டு வயிறு முட்ட பானிபூரி தின்று விட்டு, சூரியாக மாறி வீட்டுக்கு வருவார். வீட்டில் தானி இவருக்கு சுட சுட சிக்கன் பிரியாணி செய்து வைத்து காத்திருப்பாள். சொல்லமுடியாமல் அதையும் சாப்பிட்டு விட்டு இரவில் வயிற்று வலியுடன் புலம்புவது சுவாரசியமான காட்சி. அதே போல ரக்ஷா பந்தன் அன்று எங்கே தன் மனைவி தனக்கே ராக்கி கட்டி விடுவாளோ என்று ஓடி ஒளியும் காட்சியும் ரசிக்கத்தக்கது. கடைசி நாள் இரவு ராஜ்கபூரிடம் என்னை ஊரை விட்டு கூட்டிட்டு போய்டு என்று சொல்லிவிட்டு வீட்டுக்கு வரும் தானியை கட்டிக்கொண்டு சூரியாக இருக்கும் ஷாரூக் அழும் காட்சி, தான் ஒரு கையாலாகதவன் தன் மனைவியாவது சந்தோசமாக இருக்கட்டும் என்று அவரின் எண்ணத்தை கண்ணில் கொண்டு வரும்.
அதே போல நான் ஓடி வரமாட்டேன் என்று சொல்லிவிட்டு சென்றபின் உருவத்தில் ராஜ்கபூராக இருக்கும் சூரி ஆனந்தகண்ணீர் வடிப்பார். என மனைவி நல்லவள். என்னை நேசிக்கிறாள் என்ற மமதை அதில் தெரியும். இறுதி காட்சியில் சூரி, ராஜ்கபூர் இருவரும் ஒன்றுதான் என்று தெரியும்போது, அதற்கு முன் நடந்த அனைத்தும் தானி கண்ணில் காட்சிகளாக ஓடும் காட்சி கண்டிப்பாக நெஞ்சை தொடும். துஜ் மே ரப் திக்தா ஹை (உன்னில் கடவுளை காண்கிறேன்) என்ற ஷ்ரேயா கோஷல் பாடும் பாடல் கேட்டால் கண்ணில் நீர் முட்டுகிறது. படத்தில் இந்த பாடல் வரும் இடம் அப்படி. படத்தை பார்த்தால் கண்டிப்பாக இதன் நீளம் தெரியாது. படத்தில் சில லாஜிக் ஓட்டைகள் இருந்தாலும் அவை எனக்கு பெரிதாக படவில்லை. படம் மெகா ஹிட் ஆகியது என்பது சொல்லி தெரியவேண்டியதில்லை. திரும்ப திரும்ப பார்க்க தூண்டும் படங்களில் இதுவும் ஒன்று. வாய்ப்பு கிடைத்தால் பாருங்கள்.
பிடிச்சிருந்தா ஓட்டு போடுங்க...
உங்க கருத்துக்களை இங்கே பதிவு பண்ணுங்க...
10 comments:
அட்டகாசமான ஒரு படம் குறிப்பாக திடீர் திருமணமான புதிதில் இருவருக்கும் இடையில் இருக்கும் காட்சி அமைப்புகள் அருமை.
போன வாரம் பார்த்தேன், உணமையில் படம் ஓகே
மிக நேர்த்தியான விமர்சனம் பாலா!
உங்கள் விமர்சனம் நன்றாக வந்திருக்கிறது.சிடி கையில் இருந்தும்
இன்னும் பார்க்கவில்லை.
பார்க்கிறேன்.
@ சிங்கக்குட்டி
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே...
@ Vijay Anand
வாங்க வாங்க
@Balaji saravana
மிக்க நன்றி நண்பரே
@ santhanakrishnan
ஒவ்வொருமுறையும் இந்த மாதிரி படங்கள் பார்க்கும்போது தமிழிலில் இந்த மாதிரி படங்கள் ஏன் வருவதில்லை என்ற ஆதங்கம் எழுகின்றது. நன்றி நண்பரே...
விமர்சனம் நல்லாருக்கு... தமிழ்ல டப்பிங் வராதா?
இப்படம் வெளிவந்த சமயம், திரையரங்கில் பார்த்தேன். அதிக ஹிந்தி படங்கள் பார்பதால், இது 'மற்றுமொறு' ஹிந்தி படம் என்றே என்ன தோன்றியது.
படத்தை விட உங்கள் விமர்சனம் சூப்பர். :)
@ விந்தைமனிதன்
//தமிழ்ல டப்பிங் வராதா?
அந்த மாதிரி எதுவும் நடந்துட கூடாதுன்னு கடவுள வேண்டிக்குறேன்.
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே...
@ Yoganathan.N
நன்றி தல...
semma padam thala sharuk sharuk than
SUPERB MOVIE EXCEPT FEW LOGIC MISSINGS.... துஜ் மே ரப் திக்தா ஹை (உன்னில் கடவுளை காண்கிறேன்) என்ற ஷ்ரேயா கோஷல் பாடும் பாடல் கேட்டால் கண்ணில் நீர் முட்டுகிறது.
EXACTLY... AVLO SUPERB SONG
Post a Comment