விவேகானந்தரின் நறுக்

கடவுள் நாம் விரும்பியதை கொடுப்பவர் அல்ல, நமக்குத் தேவையானதை கொடுப்பவர்...

February 6, 2012

அவார்டுகளை அள்ளிய ஒரு திரில்லர் படம்....

பிறமொழிப் படங்களை பார்க்கும்போது அந்த படம் நம்மை ஏதேனும் ஒரு வகையில் இம்ப்ரஸ் செய்திருந்தால், உடனே அதைப்பற்றி எழுதத்தோன்றும். ஆனால் உடனே எழுத முடியாமல் போய் விடும். அப்படி வெகு காலத்துக்கு முன்னால் பார்த்து எழுதாமல் விட்ட படத்தை பற்றி இப்போது பகிர்ந்து கொள்கிறேன். இந்த படத்தை பற்றி கிட்டத்தட்ட எல்லா சினிமா பதிவர்களுமே எழுதி இருப்பார்கள். இருந்தாலும் என் பார்வையில் இந்த படத்தை பற்றி சொல்ல வேண்டும் என்ற ஆர்வமே இதை எழுதக்காரணம். 

 பொதுவாக இளைஞர்களைக் கவர்வது காதல் கதைதான். ஆனால் எல்லோரையும் கவரும் படங்கள் த்ரில்லர் படங்கள்தான். ஹாலிவுட்டில் த்ரில்லர் படங்களுக்கு ஒரு பெரிய சரித்திரமே உண்டு. வகை வகையான த்ரில்லர் படங்களை எடுத்து தள்ளி இருக்கிறார்கள். தமிழிலும் அவ்வப்போது சொல்லிக்கொள்ளும்படியாக சில த்ரில்லர் படங்கள் வருவதுண்டு. எனக்கு பிடித்த த்ரில்லர் படங்களாக, நூறாவது நாள், ஊமை விழிகள் ஆகியவற்றை குறிப்பிடலாம்.சமீபத்தில் வெளிவந்த ஈரம் கூட சிறந்த படமாக இருந்தது. ஆனால் ஹாலிவுட்டை பொறுத்தவரை நிறைய த்ரில்லர் படங்கள் வருவதுண்டு. அப்படி வந்த படங்களை வரிசைப்படுத்தினால், எல்லோராலும் முதல் மூன்று இடங்களுக்குள் கண்டிப்பாக குறிப்பிடும் ஒரு படம் உள்ளது அது தான் தி சைலன்ஸ் ஆஃப் தி லாம்ப்ஸ் (The Silence of the Lambs - 1991).




கதையை பற்றி விரிவாக சொல்லி விடுகிறேன். பப்பலோ பில் (Buffalo Bill) என்று செல்லமாக அழைக்கப்படும் மோசமான சைக்கோ கொலையாளி ஒருவன், இளம்பெண்களை கடத்தி கொலை செய்து, அவர்களின் தோலை மட்டும் உரித்து விடும் கொடூரத்தை தொடர்ந்து செய்கிறான். அவனை பற்றி துப்பறிய கிளாரிஸ்  ஸ்டார்லிங்  என்கிற இளம் FBI பெண் அதிகாரியை நியமிக்கிறார்கள். ஒரு குறிப்புமே கிடைக்காத இந்த கேஸில், ஸ்டார்லிங்கின் வேலை என்னவென்றால், சிறையில் அடைபட்டிருக்கும் சீரியல் கில்லர் ஒருவரை சந்தித்து, அவரிடம் பேசி, அதன் மூலம், பப்பலோ பில் பற்றி ஏதாவது துப்பு கிடைக்குமா? என்று ஆராய்வதுதான். (ஒரு கொலைகாரன் மனசு இன்னொரு கொலைகாரனுக்குத்தானே தெரியும் என்கிற ஐடியாதான்). அதன்படி பல ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் ஹன்னிபால் லெக்டர் என்னும் கைதியை சந்திக்க புறப்படுகிறாள் ஸ்டார்லிங். 



ஹன்னிபால் லெக்டர் ஒரு திறமையான மனோதத்துவ டாக்டராக இருந்தவர். மனிதர்களை கொன்று சாப்பிட்ட குற்றத்துக்காக கிட்டத்தட்ட 9 ஆண்டுகளாக சிறையில் இருப்பவர். ஸ்டார்லிங் சிறைக்குள் சென்று பார்க்கும் முன், அவளுக்கு ஏகப்பட்ட கட்டளைகள் மற்றும் குறிப்புகள் தரப்படுகின்றன. அந்த டாக்டர் ஒரு மோசமான ஆள். கொஞ்ச நேரம் அவரது கண்ணை பார்த்து பேசினாலே மயக்கி விடுவான். தேவை இல்லாத பேச்சுக்களை குறைக்க வேண்டும். மிக அருகில் சென்று பேசக்கூடாது. சொந்த விஷயங்களைப் பற்றி பேசக்கூடாது என்று பலவாறு அறிவுறுத்தப்படுகிறாள். கொஞ்சம் அச்ச உணர்வோடு அந்த சிறைக்கூடத்துக்குள் செல்கிறாள் ஸ்டார்லிங். அங்கே இன்னும் சில கைதிகளும் இருக்கிறார்கள். எல்லோரும் தனித்தனி செல்லில். ஒவ்வொருவரும் மிக பயங்கரமாக கத்திக்கொண்டும், திட்டிக்கொண்டும் இருக்கிறார்கள். அதோ....  மூலையில் அவள் சந்திக்கப்போகும் அந்த டாக்டரின் அறை இருக்கிறது. அந்த அறை மற்ற சிறைகள் போல இல்லாமல் வித்தியாசமாக இருக்கிறது. கம்பிகள் இல்லாமல் உடைக்க முடியாத கண்ணாடி சுவர் ஆங்காங்கே சிறு துளைகள் மட்டும். லெக்டரால் விரலைக்கூட வெளியே நீட்ட முடியாது. சிறைக்கு வெளியே ஒரு நாற்காலி போட்டு அமர்ந்து கொண்டே பேட்டியை தொடங்குகிறாள் ஸ்டார்லிங். 



லெக்டர் மிக அமைதியான, வயதான ஒரு டாக்டர். அவன் கண்கள்.... அதில் தெரியும் புத்திசாலித்தனம், அதையும் மீறி வெளிப்படும் கொலைவெறி, ஸ்டார்லிங்கை மேலும் பயமுறுத்துகிறது. கொஞ்சம் அதிகார தோரணையோடு அவள் லெக்டரை விசாரிக்க தொடங்க,  அவள் அறியாமலேயே கொஞ்சம் கொஞ்சமாக லெக்டர் அவளை விசாரிக்க தொடங்குகிறார். சட்டென சுதாரித்து கொள்ளும் ஸ்டார்லிங் கொஞ்சம் அதிகாரத்துடன் நடந்து கொள்ள, அவளை திட்டி அனுப்பி விடுகிறார். மற்றொரு கைதியும் அவளை அவமானப்படுத்தி விடுகிறான். முதன் முதலில் வேலைக்கு வந்திருக்கும் அவளுக்கு இது மிகுந்த சங்கடத்தை ஏற்படுத்தி விடுகிறது. இருந்தாலும் பரவாயில்லை என்று தொடர்ந்து லெக்டரை சந்திக்கிறாள். ஒவ்வொரு முறையும் அவளால் லெக்டரை வழிக்கு கொண்டு வர முடியவில்லை. இவளை விட அவர் புத்திசாலியாக இருக்கிறார். அவரிடம் இருந்து வார்த்தைகளை வாங்க முயன்றால், அவர் இவளிடம் இருந்து வார்த்தைகளை வாங்கி விடுகிறார். அவர் கொடுக்கும் சிறு குறிப்புகள் மூலம் வெளியே பப்பலோ பில்லை தேட தொடங்குகிறார்கள். 



ஒரு கட்டத்தில் செனேட்டரின் மகளையே அவன் கடத்தி விட, அவனை விரைவில் கண்டுபிடித்தே ஆக வேண்டும் என்ற கட்டாயத்துக்கு தள்ளப்படுகிறார்கள். ஆகவே ஸ்டார்லிங் லெக்டரிடம் மன்றாட தொடங்குகிறாள். அவரும், "சரி நான் ஒரு உண்மையை சொன்னால் நீ உன் சொந்த வாழ்க்கையைப்பற்றி ஒரு உண்மையை சொல்லவேண்டும், மேலும் என்னை வேறு ஒரு சிறைக்கு மாற்றவேண்டும்.", என்று டீல் பேசுகிறார். அதுவும் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. ஸ்டார்லிங் கேட்கும் ஒவ்வொரு கேள்விக்கும் புதிர் வடிவில் பதில் கொடுக்கும் லெக்டர், அவளிடம் பெர்சனல் கேள்விகள் கேட்க தொடங்குகிறார். கட்டளைப்படி பெர்சனல் விஷயங்கள் பேசக்கூடாது என்றாலும், வேறு வழி இல்லாததால், இவள் சொல்ல தொடங்குகிறாள். சிறு வயதில் அநாதை ஆனது, அதன் பின் ஆடுகளை அறுக்கும் ஒரு இடத்தில் வாழ்ந்தது, நடு இரவில், ஆடுகள் கதறும் சத்தத்தை கேட்டு அவற்றை காப்பாற்ற முடியாமல் போய், பின் அதுவே கெட்ட கனவாக அவளைத் துரத்துவது என்று எல்லாவற்றையும் சொல்கிறாள். கடைசியில் எதுவும் பேசாத லெக்டர் அவளிடம் கேஸ் பைலை கொடுக்கிறார். அதில், "பப்பலோ பில் கொலை செய்த முதல் பெண் கண்டிப்பாக அவனுக்கு நெருங்கிய தொடர்புடையவளாகத்தான் இருப்பாள்.", என்று குறிப்பிட்டிருக்கிறான். அதனை அடிப்படையாகக்கொண்டு தேடத் தொடங்குகிறார்கள். இந்த இடைப்பட்ட நேரத்தில், சிறையில் இருந்து தப்பிக்கிறார் லெக்டர். தப்பித்து அவர் எங்கே போனார்? அவர் மறுபடியும் ஸ்டார்லிங்கை சந்தித்தாரா? பப்பலோ பில் அகப்பட்டானா? ஸ்டார்லிங்கை துரத்தும் கொடும் கனவை போக்க லெக்டர் சொன்ன வழி என்ன? என்பதை, அட்டகாசமான வசனங்களோடு, த்ரில்லிங்காக சொல்லி இருக்கிறார்கள்.



படத்தில் நடித்திருக்கும் அனைவருமே அருமையாக நடித்திருந்தாலும் பிரதான பாத்திரத்தில் வரும் இருவரை குறிப்பிட்டே ஆக வேண்டும். முதலாமவர் டாக்டர் ஹன்னிபால் லெக்டராக வரும் பழம்பெரும் ஹாலிவுட் நடிகர் அந்தோனி ஹாப்கின்ஸ். இவரது கண்களே பக்கம் பக்கமாக வசனம் பேசுகின்றன. கண்களில் தெரிவது அறிவு முதிர்ச்சியா, கொலை வெறியா, இல்லை கருணையா என்று தெரியாமல், மூன்றும் கலந்து கட்டி நம்மை அச்சுறுத்துகின்றன. சைக்கோ கொலைகாரன் என்றவுடன், கரடு முரடான ஒருவராக இல்லாமல், மிக டீசண்டான, தலையை பாடிய வாரிய ஒரு மிடுக்கான டாக்டராக வருகிறார். அதிலும் ஒவ்வொரு பேச்சிலும் நிதானம், ஒரு முதிர்ச்சி என்று, அசத்துகிறார். இரண்டாமவர் ஸ்டார்லிங்காக நடித்திருக்கும் ஜோடி ஃபாஸ்டர்.  அவார்ட் வாங்குவதையே குறிக்கோளாக கொண்டவர். புதிதாக வேலைக்கு வரும் ஒருவர், அதிலும் ஒரு பெண் அதிகாரி சக மனிதர்களால் எப்படி பார்க்கப்படுவார்?, அதற்கு அவளது ரியாக்ஸன் எப்படி இருக்கும்? என்பதை அப்படியே பிரதிபலித்திருப்பார். ஆண்கள் மட்டுமே சுற்றி இருக்கும் ஒரு இடத்தில், தன் கூச்சத்தை வெளிப்படையாக காட்டாமல் மறைப்பது, முதல்முறை லெக்டரை சந்திக்கப்போகும்போது, போலியாக ஒரு கம்பீரத்தை முகத்தில் வைத்துக்கொண்டு போய், லெக்டருடனான முதல் சந்திப்பிலேயே அது சுக்கு நூறாக உடைவது, ஒவ்வொரு முறையும் லெக்டர் இவளை தோற்கடிக்கும்போது, சிறு குழந்தைபோல சோர்வடைவது என்று கலக்கி இருக்கிறார். சிறு வயதில் தனிமையின் கொடுமையை அனுபவித்து, இவை எல்லாவற்றையும் மீறி சாதிக்க வேண்டும் என்ற துடிப்புள்ள  ஒரு பெண் அதிகாரியை அப்படியே கண்முன் நிறுத்துகிறார். யுத்தம் செய் படத்தில் வரும் சேரன் கதாபாத்திரம் கிட்டத்தட்ட இதே போல உருவாக்கப்பட்டிருக்கும். மேலும் ஸ்டர்லிங்கும், லெக்டரும் சிறையில் சந்தித்துக்கொள்ளும் காட்சி, மொக்கையாக ஆளவந்தானில் பயன்படுத்தப்பட்டிருக்கும். 



தாமஸ் ஹாரிஸ் என்பவர் எழுதிய நாவலைத்தழுவி எடுக்கப்பட இந்த படம் 1991 ஆம் ஆண்டு வெளிவந்தது. இதனை இயக்கியவர் ஜோனதன் டேமே . வசூலை வாரிக்குவித்த இந்த படம் பல அவார்டுகளையும் அள்ளியது. ஆஸ்கர் அவார்டில் பிரதான அவார்டுகள் (சிறந்த நடிகர், நடிகை, இயக்குனர், திரைப்படம், திரைக்கதை) ஐந்தையுமே தட்டிச்சென்ற மூன்றே படங்களில் இதுவும் ஒன்று. த்ரில்லர் படங்களிலேயே இன்றளவும் பெரிதும் விரும்பப்படும் படங்களில் ஒன்றான இது, தவிர்க்க முடியாத படங்களுள் ஒன்று. நேரம் கிடைக்கும்போது தவறாமல் பாருங்கள். 

உங்க கருத்துக்களை இங்கே பதிவு பண்ணுங்க..... 


24 comments:

Mohammed Arafath @ AAA said...

woow nice narration.. kandippa parkanum.. boss :P

Mohammed Arafath @ AAA said...

ithai parka online link kidaikumaa?

NKS.ஹாஜா மைதீன் said...

நல்ல விமர்சனம்....

ஹாலிவுட்ரசிகன் said...

One of the best thriller movies I have seen so far. Thanks for the nice review.

கேரளாக்காரன் said...

Hmmm super review... Its the sequel of hannibal and red dragon... Am i right?

பாலா said...

@Mohammed Arafath @ AAA

எனக்கு எதுவும் லிங்க் தெரியவில்லை நண்பரே. ஆனால் டொரெண்ட் ஈசியாக கிடைக்கும். மிக்க நன்றி நண்பரே.

பாலா said...

@NKS.ஹாஜா மைதீன்

மிக்க நன்றி நண்பரே

பாலா said...

@ஹாலிவுட்ரசிகன்

இது ரிவியு எல்லாம் அல்ல நண்பரே. படம் பார்த்ததும் எனக்கு தோன்றியதை மட்டும் சொல்லி இருக்கிறேன். நன்றி நண்பரே. இந்த படம் எனக்கும் மிகவும் பிடித்த படங்களுள் ஒன்று.

பாலா said...

@மௌனகுரு

இல்லை நண்பரே. இதுதான் முதலில் வெளிவந்தது. இதற்கப்புறம்தான் அந்த இரண்டு படங்களும் வெளிவந்தன. நன்றி நண்பரே.

Thava said...

இந்த படத்தை ஒரு முறை பார்த்திருக்கிறேன்..சிறப்பான முறையில் எடுக்கப்பட்ட அற்புதமான திரில்லர் படைப்பு..
தங்களது விமர்சனங்களை வலைப்பூ தொடங்குவதற்கு முன்னமிருந்தே படித்து வருகிறேன்...என்னுடைய எழுத்துக்கும் தங்களை போன்றவர்களே இன்ஸ்பிரஷன் என்பதில் சந்தேகமில்லை.நன்றி.

சைக்கோ திரை விமர்சனம்..

Thava said...

இந்த படத்தை ஒரு முறை பார்த்திருக்கிறேன்..சிறப்பான முறையில் எடுக்கப்பட்ட அற்புதமான திரில்லர் படைப்பு..
தங்களது விமர்சனங்களை வலைப்பூ தொடங்குவதற்கு முன்னமிருந்தே படித்து வருகிறேன்...என்னுடைய எழுத்துக்கும் தங்களை போன்றவர்களே இன்ஸ்பிரஷன் என்பதில் சந்தேகமில்லை.நன்றி.

சைக்கோ திரை விமர்சனம்..

நம்பிக்கைபாண்டியன் said...

நல்ல விமர்சனம் விரைவில் பார்க்கிறேன்!

K.s.s.Rajh said...

நல்ல விமர்சனம் பாஸ் நான் இன்னும் இந்த படம் பார்க்கவில்லை பார்த்திட்டால் போச்சி பகிர்வுக்கு நன்றி பாஸ்

கிரி said...

// மற்றொரு கைதியும் அவளை அவமானப்படுத்தி விடுகிறான். //

இது ரொம்ப ஓவரான அவமானம் மற்றும் கொடுமையான அனுபவம்.

Riyas said...

அனுபவித்து பார்த்திருக்கிங்க போல.. நல்ல விமர்சனம்.

பாலா said...

@Kumaran

மிக்க நன்றி நண்பரே. உங்கள் எழுத்துக்கள் மிக சிறப்பாக உள்ளன. வாழ்த்துக்கள்.

பாலா said...

@நம்பிக்கைபாண்டியன்

நன்றி நண்பரே. தவற விடக்கூடாத படம்.

பாலா said...

@K.s.s.Rajh

நன்றி நண்பரே. தவறாமல் பாருங்கள்.

பாலா said...

@கிரி

உண்மைதான். அதனால்தான் அதை பற்றி சொல்லாமல் விட்டுவிட்டேன். நன்றி நண்பரே

பாலா said...

@Riyas

ஈடுபாடு இல்லாமல் பார்த்தால் கூட கொஞ்ச நேரத்தில் ஒன்றி விடக்கூடிய படம். நன்றி நண்பரே

முத்துசிவா said...

தல நேத்து தான் இந்த படம் பாத்தேன்.. செம படம்.. அந்த ஹனிபெல் லெக்டார் கேரக்டரு செம கெத்து... :)

பாலா said...

@முத்துசிவா

ஆமாம் அந்த ஆள் நல்லவனா இல்லை கெட்டவனா என்ற குழப்பத்திலேயே படத்தை நகர்த்தி இருப்பார்கள். கருத்துக்கு நன்றி நண்பா.

bandhu said...

அருமையான த்ரில்லர். இதுவரை பத்து முறைக்கு மேல் பார்த்திருப்பேன். வேறு எந்த படமும் நான் இந்த அளவு பார்த்ததில்லை.. ஹாப்கின்ஸின் டயலாக் டெலிவரி அற்புதமாக இருக்கும். வசனங்களும் வெகு கூர்மையாக இருக்கும்.
ஹாரர் படம் என்றால் பக்கெட் பாக்கெட்டாக ரத்தம் கொட்ட வேண்டும் என்பதை உடைத்த படம். ஒரே ஒரு காட்ச்சில் மட்டும் அதிக ரத்தம். மற்றவை எல்லாம் இசை / வசனம் / நடிப்பு மூலமாகவே பயமுறுத்தி இருப்பார்கள்!

Riyas said...

சிறப்பான விமர்சனம்.. படம்பார்க்கும் ஆவலைத்தூண்டுகிறது..

Related Posts Plugin for WordPress, Blogger...