சச்சின் என்ற ஒருவரை நம்பி....
இடை விடாத வேலைப்பளு(?) காரணமாக தொடர்ந்து பதிவிட முடியவில்லை. நண்பர்கள் பொறுத்துக்கொள்வார்களாக...
சச்சின், கங்குலி, ஜடேஜா என்று ஓரளவிற்கு நன்கு ஆடக்கூடிய வீரர்கள் இருந்தாலும், இந்திய அணி ஒரு முழுமை பெறாத அணியாகவே இருந்தது. அதிலும் பவுலிங்கை கேட்கவே வேண்டாம். ஸ்ரீநாத் மற்றும் கும்ப்ளே தவிர உருப்படியாக வேறு யாரும் அணியில் இல்லை. இந்த அணியை வைத்துக்கொண்டு உலகக்கோப்பையை ஜெயிக்க முடியாது என்று எளிதாக சொல்லிவிட முடியும். இருந்தாலும் என் மனதில் நம்பிக்கை அப்படியே இருந்தது. அதற்கு முக்கிய காரணம் உலகக்கோப்பை தொடர் தொடங்குவதற்கு முன் நடந்த சில தொடர்கள்.
1998 ஆண்டு ஷார்ஜாவில் நடந்த கிரிக்கெட் தொடர். இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடந்த அந்த தொடர் ஆரம்பத்தில் சொதப்பலாக இருந்தாலும், கிளைமாக்ஸில் சுவாரசியமாகி விட்டது. சச்சின் தலைமையில் தொடர் தோல்விகளால் அவதிப்பட்டு வந்த இந்திய அணிக்கு வேறு வழியே இல்லாமல் மறுபடியும் அசாரே கேப்டனாக நியமிக்கப்பட்டார். சச்சின் தற்போது எந்த பிரஸ்ஸரும் இல்லாமல் ஆடத்தொடங்கினார். தொடர் முடியும் தருவாயில் கடைசி போட்டியில் வெற்றி அல்லது அதிக ரன்ரேட் பெற்றால் மட்டுமே இறுதிக்கு தகுதி பெறமுடியும் என்ற நிலைமை. ஆஸ்திரேலியா ஏற்கனவே தகுதி பெற்று விட்ட நிலையில், மிகவும் ரிலாக்ஸாக ஆடினார்கள். இந்தியர்களின் ‘திறமையான’ பந்துவீச்சினால் அவர்களை கட்டுப்படுத்த முடியாத காரணத்தால், 284 ரன்களை குவித்து, இந்திய அணியின் இறுதி போட்டி கனவுக்கு முடிவு கட்டினார்கள். பிறகு ஆடத்தொடங்கிய இந்திய அணி வழக்கம்போல தடுமாறியது.
29 ஓவர்கள் முடிந்த நிலையில் 138 ரன்கள் எடுத்து நான்கு முக்கிய விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது. 20 ஓவர் மீதமிருக்க இன்னும் 150 ரன் தேவை. களத்தில் இருக்கும் ஒரே நம்பிக்கை சச்சின் மட்டுமே. ஆனால் இந்திய அணியின் பேட்டிங் வரிசை, இரவுநேர ஆடுகளத்தின் நிலை ஆகியவற்றை வைத்து பார்க்கும்போது இந்தியா தோற்பது உறுதி ஆனது. குறைந்தது 254 எடுத்தால் மட்டுமே இறுதி போட்டிக்கு போக முடியும். திடீரென்று மணல் புயல் வீசத்தொடங்கியது. நான் இதுவரை எந்த போட்டியிலும் இதை பார்த்ததில்லை. இதன் காரணமாக அரைமணி நேரம் ஆட்டம் தடைபட இலக்கு மாற்றி அமைக்கப்பட்டது. 46 ஓவரில் 274 எடுக்கவேண்டும். “கிழிந்தது, தோத்தே போய்ட்டோம்.” என்று நினைத்தோம். 234 எடுத்தால் ரன்ரேட் அடிப்படையில் தகுதி பெறலாம்.
மணல் புயல் ஓய்ந்து முடிந்த மறுநிமிடமே கிரிக்கெட்டின் புயல் வீசத்தொடங்கியது. அதுவரை சாந்தமாக ஆடிக்கொண்டிருந்த சச்சின் ஆவேசமாக ஆடத்தொடங்கினார். ஆஸ்திரேலியர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் கையை பிசைந்தனர். பவுண்டரி மழை பொழியத்தொடங்கியது. அவர்களின் முன்னணி பவுலர்களுக்கெல்லாம் தர்ம அடி கொடுத்தார் சச்சின். அவர்களின் பிரம்மாஸ்திரமான ஷேன் வார்னே பந்து வீச அழைக்கப்பட்டார். ஆனால் சச்சின் அவரை புரட்டி எடுத்துவிட்டார். சச்சினின் வேகத்துக்கு மறுபுறம் இருந்த லக்ஷ்மண் ஈடுகொடுக்கமுடியாமல் திணறினார். பலமுறை சச்சினிடம் திட்டும் வாங்கினார். இப்படி ஒரு சச்சினை இதுவரை யாரும் பார்த்ததில்லை. இறுதியில் சச்சின் 143 ரன்களுக்கு ஒரு குழப்பமான முறையில் அவுட் ஆக, இந்திய அணியால் 250 ரன் மட்டுமே எடுக்க முடிந்தது. இறுதி போட்டிக்கு தகுதி பெற்று விட்டாயிற்று. இந்த போட்டி முடிந்தவுடன் ஆஸ்திரேலியாவின் புதிய கேப்டன் ஸ்டீவ் வாக், "இந்த போட்டியில் நாங்கள் வென்றதாக அறிவிக்கப்பட்டாலும், வெற்றி பெற்றதேன்னவோ இந்தியாதான்.” என்று கூறினார்.
இறுதி போட்டி ஆஸ்திரேலியாவுடன், அதே இலக்கோடு. இந்த முறை ஆஸ்திரேலியர்களின் பந்துவீச்சில் தயக்கம் இருந்தது. அதனை நன்கு பயன்படுத்திக்கொண்ட சச்சின் முந்தைய ஆட்டத்தை மறுபடியும் நினைவு படுத்தும் வகையில் பட்டையை கிளப்பிவிட்டார். அன்றைய தினம் அவரது பிறந்தநாள் என்பதால் ரசிகர்களுக்கு பிறந்தநாள் விருந்தை அவர் பாணியில் படைத்து மகிழ்வித்தார். சச்சின் 134 எடுத்து ஆட்டமிழக்க, இந்திய அணி எளிதாக வென்றது. சச்சினின் அடியால் அதிகம் பாதிக்கப்பட்டது, மைக் காஸ்ப்ரோவீச்சும், ஷேன்வார்னேவும்தான். காஸ்ப்ரோவிச், “சச்சின் என் மனஉறுதியை குலைத்து விட்டார். அவருக்கு பந்துவீச பயமாக உள்ளது.” என்று கூறினார். வார்னேயோ, “சச்சின் நான் கையை சுழற்றும் முன்னரே எப்படி வீசப்போகிறேன் என்று கணித்து விடுகிறார். கனவில் கூட நிம்மதியாக உறங்க விடாமல் பயமுறுத்துகிறார்.” என்று கூறினார். இந்த தொடரில் ஆஸ்திரேலியாவில் புதிதாக அணிக்கு வந்து வெகு நாட்களாக கண்டுகொள்ளப்படாமல் இருந்த விக்கெட் கீப்பர் ஆடம் கில்கிறிஸ்ட் சிறப்பாக ஆடி புகழ்பெற தொடங்கினார்.
அதே ஆண்டு இறுதியில் புதிதாக ஒரு தொடர் அறிமுகப்படுத்தப்பட்டது. இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை நடத்தலாம் என்று திட்டமிட்டு மினி உலகக்கோப்பை என்று அழைக்கப்பட்ட அத்தொடரில், நாக் அவுட் முறையில் போட்டிகள் நடத்தப்பட்டன. முதல் ஆட்டமே காலிறுதிதான். இந்திய அணிக்கு முதல் போட்டி ஆஸ்திரேலியாவுடன் நடந்தது. ஏற்கனவே ஷார்ஜாவில் வாங்கிய அடியை மறக்காத ஆஸ்திரேலியா அதே மன நிலையில் ஆட, இந்தியா ஆஸ்திரேலியாவை துவைத்து எடுத்து விட்டது. வார்னே களத்தில் இறங்காத நிலையில் சச்சின் மறுபடியும் துவைத்து எடுத்து, ஆஸ்திரேலியாவை வீட்டுக்கு அனுப்பி வைத்தார். 1998 மற்றும் 2000 ஆண்டுகளில் நடந்த இரண்டு நாக் அவுட் போட்டிகளிலும் ஆஸ்திரேலியா இந்தியாவால் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதன் பின் 2002 முதல் நாக்அவுட் முறை மாற்றி அமைக்கப்பட்ட பின்னரே அதனால் அடுத்த சுற்றுக்கு முன்னேற முடிந்தது குறிப்பிடத்தக்கது. அடுத்த சுற்றில் பிலோ வாலஸ் என்ற மேற்கிந்திய தீவுகள் அணியின் புது வீரரின் அதிரடியால் இந்தியா வெளியேற, இறுதிபோட்டியில் தென்னாபிரிக்கா வெஸ்ட்இண்டீசை தோற்கடித்தது.
பேட்டிங்கோ, பவுலிங்கோ அவ்வளவாக சரியில்லாத நிலையில், சச்சின் என்ற ஒரே வீரனை நம்பி இந்திய அணி 1999 உலகக்கோப்பையை எதிர்கொண்டது. இந்த முறை உலகக்கோப்பை இங்கிலாந்தில் நடைபெற்றது. இங்கிலாந்தில் போட்டிகள் நடந்தாலே, இயக்குனர்கள் ஜீவா, பாசில் படம் பார்ப்பது போல ஒரே பசுமையாக, குளுமையாக இருக்கும். ஆனால் அவர்களின் படம் போலவே ஏதோ ஒரு மந்தமான சூழ்நிலை இருந்து கொண்டே இருக்கும். முதல் ஆட்டம் இங்கிலாந்து மற்றும் இலங்கைக்கு இடையே நடந்தது. “கடந்த சில ஆண்டுகளாக கிரிக்கெட் உலகையே அச்சுறுத்தி வந்த இலங்கையா இது?” என்ற ரீதியில் மட்டமாக ஆடியது இலங்கை. மறுபுறம் இந்தியா தனது வழக்கமாக தடுமாற்றத்துடனே ஆடி வந்தது. எதிர்பாராத விதமாக சச்சினின் தந்தை ரமேஷ் டெண்டுல்கர் காலமாகி விட, சச்சின் அவசரமாக இந்தியா திரும்பினார். அடுத்த போட்டியில் சச்சின் இல்லாமல் களமிறங்கிய அணி ஜிம்பாப்வேயுடன் தோல்வி அடைந்தது. என் தலையில் இடியே விழுந்தது போலிருந்தது. வேறு வழி இல்லாமல் சச்சின் மறுபடியும் வந்து அணியில் இணைத்து கொள்ள, மெல்ல முதல் சுற்றை முடித்துக்கொண்டு அடுத்த சுற்று, அதாவது சூப்பர் சிக்ஸ் சுற்றுக்கு தகுதி பெற்றது.
முதல் சுற்றில் ஜிம்பாப்வே, தென்னாப்பிரிக்க அணிகளிடம் தோற்றாலும், இங்கிலாந்து, இலங்கை, கென்யா ஆகிய அணிகளோட இந்தியா வென்றது. அதிலும் இலங்கைக்கு எதிராக இந்தியா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. 1996 உலகக்கோப்பை தோல்விக்கு பழிவாங்கும் விதமாக, முதலில் ஆடிய இந்திய அணி 373 ரன்கள் குவித்தது. கங்குலியும் (183), டிராவிட்டும்(145) சேர்ந்து இரண்டாவது விக்கெட்டுக்கு 314 ரன் சேர்த்து சாதனை படைத்தார்கள். பின்னர் ஆடிய இலங்கை அணி 213 ரன்களுக்குள் சுருண்டு பரிதாபமாக, தொடரை விட்டு வெளியேறியது. சூப்பர் சிக்ஸ் சுற்றுக்கு முன்னேறிய இந்திய அணிக்கு அடுத்த சோதனை காத்திருந்தது. இந்திய அணி, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், நியூசிலாந்து ஆகிய அணிகளோடு மோதவேண்டும். புது வேகத்தோடு விளையாடிய ஆஸ்திரேலியா இந்தியாவை எளிதில் வென்றது. உலகக்கோப்பை வரலாற்றை உடைக்க முடியாமல் மறுபடியும் பாகிஸ்தான் இந்தியாவிடம் தோற்றது. ஆனால் அடுத்த போட்டியில் ஜெயித்தால் மட்டுமே அறையிறுதி வாய்ப்பு என்ற நிலையில் இந்தியா நியூசிலாந்திடம் தோல்வி அடைந்து வெளியேறியது. என் உலகக்கோப்பை கனவு இன்னும் நான்கு ஆண்டுகளுக்கு தள்ளி போடப்பட்டது. 1999 இல் இந்தியா கோப்பை வெல்லும் என்ற எதிர்பார்ப்பு எனக்கே கொஞ்சம் குறைவாகத்தான் இருந்தது.
அதன் பின்னர் வழக்கம் போல ஆட்டங்களில் எனக்கு ஈடுபாடு குறைந்து போனது. இந்த உலகக்கோப்பை தொடரில் அனைவரும் கோப்பை வெல்லும் வாய்ப்பு தென்னாப்பிரிக்க அணிக்குத்தான் இருக்கிறது என்று நம்பினார்கள். ஆஸ்திரேலிய அணியில் நிலவிய குழப்பம் அவர்கள் மீது யாருக்கும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தவில்லை. கடைசி வரை தென்னாப்பிரிக்காதான் கோப்பை வெல்லும் என்று எல்லோரும் நினைத்தார்கள். அந்த முக்கிய ஆட்டம் வரை. ஆஸ்திரேலிய, தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையே நடந்த அரையிறுதிக்கு முந்தைய சூப்பர் சிக்ஸ் ஆட்டம் அது. இரு அணிகளுமே தேர்வு பெற்று விட்ட நிலையில் சம்பிரதாயமாக நடந்தது. 271 ரன்னை துரத்திய ஆஸ்திரேலியா 48 ரன்னுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாற, களத்தில் இறங்கினார் கேப்டன் ஸ்டீவ் வாக்.
போட்டிக்கு முந்தைய நாள் இரவில் ஷேன் வார்னே தன் அணி வீரர்களிடம், “கிப்ஸிடம் கேட்ச் கொடுத்துவிட்டால் உடனே களத்தை விட்டு வெளியேறி விடாதீர்கள். கிப்ஸிடம் ஒரு பழக்கம் உண்டு. அதாவது கேட்ச் சரியாக பிடிக்கும் முன்பே பந்தை மேலே எறிய முற்படுவார்.” என்று கூறி இருக்கிறார். 56 ரன் அடித்த நிலையில் ஸ்டீவ் வாக் கொடுத்த கேட்சை பிடித்த கிப்ஸ் அதை சரியாக பிடிக்கும் முன்னரே அதை மேலே எறிய முற்பட, பந்து தவறி கீழே விழுந்து விட்டது. கேட்ச் தவற விடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அந்த ஆட்டத்தில் ஸ்டீவ் வாக் நிலைத்து ஆடி 120 ரன் சேர்த்து வெற்றிக்கு வித்திட்டார். மறுபடியும் இரு அணிகளுக்கும் இடையே நடந்த, பரபரப்பான அரையிறுதி ஆட்டம் டிரா ஆகி விட, முந்தைய வெற்றியை வைத்து ஆஸ்திரேலியா இறுதி போட்டிக்கு தகுதி பெற்றதாக அறிவித்து விட்டார்கள். பரிதாபமாக வெளியேறியது தென்னாபிரிக்கா. கிப்ஸ் செய்த ஒரு சிறு தவறு அவர்களின் உலகக்கோப்பை கனவுக்கே ஆப்பு வைத்து விட்டது.
இறுதி போட்டியில் பாகிஸ்தானை எளிதில் வென்ற ஆஸ்திரேலியா, தனது ஹாட்ரிக் வெற்றிக்கான முதல் படியில் ஏறியது. இந்த உலகக்கோப்பை போட்டியில் நட்சத்திரமாக ஜொலித்தவர் ஆஸ்திரேலியாவின் ஷேன் வார்னே. அதே போல மிரட்டும் வேக பவுலராக அறிமுகமானவர் ஜெஃப் ஆலட் என்ற நியூசிலாந்து வீரர். இந்த உலகக்கோப்பையில் குறிப்பிடத்தக்க வீரர்கள் என்றால் பாக்கிஸ்தானின் புயல்வேக வீரர் சோயிப் அக்தர் மற்றும் ஜிம்பாப்வேஇன் அல்ரவுண்டர் ஜான்சன் ஆகியோரை கூறலாம். இந்த உலககோப்பையில் உண்மையான ஹீரோ என்றால் அது தென்னாப்பிரிக்காவின் லான்ஸ் குளூஸ்னர்தான். வேகப்பந்து வீச்சாளராக மிளிர்ந்த இவர், தலை சிறந்த ஆல்ரவுண்டராகவும் மிளிர்ந்தார். ஒன்பது விக்கெட்டுகள் வீழ்ந்து விட்டாலும், களத்தில் குளூஸ்னர் இருந்தால், எதிரணியின் வெற்றியை உறுதியாக கூற முடியாது. பல முறை ஒற்றை ஆளாக இருந்து அணியை காப்பாற்றியவர். குளூஸ்னரும், ஜெஃப் ஆலட்டும், திடீரென்று கிரிக்கெட் உலகில் இருந்து காணாமல் போய் விட்டார்கள். ஆனால் 90களின் இறுதியில் கிரிக்கெட்டில் மறக்க முடியாத ஒரு வீரர் என்றால் அது குளூஸ்னர்தான்.
இந்திய அணியை பொறுத்தவரை, சச்சினை மட்டுமே நம்பி இருந்த நேரத்தில் நானும் இருக்கிறேன் என்று நம்பிக்கை அளித்தவர் கங்குலி. அதே போல சத்தமில்லாமல் சாதித்து வந்தார் டிராவிட். இந்த மூவரும் இந்திய அணியின் மும்மூர்த்திகள் ஆயினர். ஒருமாதிரி நல்ல அணியாக உருவாகிக்கொண்டிருந்தது இந்திய அணி. அப்போது சற்றும் எதிர்பாராமல் இந்திய கிரிக்கெட்டை மட்டுமல்ல, உலக கிரிக்கெட்டையே அதிர்ச்சி அடைய வைத்த அந்த சம்பவம் நடந்தது.....
இந்திய அணியின் மறுபிறப்பு... அடுத்த பதிவில்
படங்கள் நன்றி: cricinfo.com
படங்கள் நன்றி: cricinfo.com
உங்களுக்கு பிடிச்சிருந்தா ஓட்டு போடுங்க...
உங்க கருத்துக்களை இங்கே பதிவு பண்ணுங்க...
உங்க கருத்துக்களை இங்கே பதிவு பண்ணுங்க...
28 comments:
பெரிய பதிவு..
வந்தேன்..
அருமையான கட்டுரை பாலா, இந்திய கிரிக்கெட் அணியை கடந்தகாலங்களை நினைவு கூர்ந்தால் உங்கள் கட்டுரையே போதும், அருமையான கட்டுரை மீண்டும் ஒருமுறை பழைய மேட்சுகளை எல்லாம் பார்ப்பது போல ஒரு பீலீங்..
பல அறிய தகவல்கள் ...
நன்றி..
வாழ்த்துக்கள்..
@ # கவிதை வீதி # சௌந்தர்
வருகைக்கு நன்றி நண்பரே
@இரவு வானம்
மிக்க நன்றி நண்பரே.. எல்லா ஆட்டங்களை பற்றியும் எழுத வேண்டும் என்று நினைத்தாலும் நீளம் கருதி எழுத முடியவில்லை.
@!* வேடந்தாங்கல் - கருன் *!
வருகைக்கு நன்றி நண்பரே...
முழு விவரங்ளுடன் அருமையான படங்களும் கொண்ட பதிவு!
@சென்னை பித்தன்
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே...
///இந்திய அணியை பொறுத்தவரை, சச்சினை மட்டுமே நம்பி இருந்த நேரத்தில் நானும் இருக்கிறேன் என்று நம்பிக்கை அளித்தவர் கங்குலி. அதே போல சத்தமில்லாமல் சாதித்து வந்தார் டிராவிட். இந்த மூவரும் இந்திய அணியின் மும்மூர்த்திகள் ஆயினர்.///
அருமையான பதிவு.
கங்குலி 183 ஒட்டங்கள் குவித்த அந்த போட்டியை மறக்கமுடியுமா.அப்போது நான் மிகவும் சின்ன பையன் ஆனாலும் அப்பவே கங்குலியின் ரசிகன்.
பதிவு அருமை ஆழமான தேவையான குறிப்புகள் நன்றி சகோ
உங்க கிரிக்கட் தொடர்பதிவை தொடர்ந்து படிச்சிகிட்டுத்தான் இருக்கிறன், நல்லாயிருக்கு, சூப்பர் என்று டெம்ப்ளேட் கமன்ட் போடுவதில் எனக்கு இஸ்டமில்லை என்பதால் கமன்ட் போடவில்லை, சிறப்பாக இருக்கிறது, முழுமையாக எழுதி முடியுங்கள்.
இந்த லிங்கில் http://www.envazhi.com/?p=26833 சென்று பாருங்கள் உங்கள் போட்டோ கமன்ஸ் என்வழி.காம் இல் வந்திருக்கிறது.
@Kss.Rajh
மிக்க நன்றி நண்பரே... கங்குலியின் இடத்தில் இதுவரை யாரையும் பொருத்திப்பார்க்க மனம் ஒப்பவில்லை.
@கிருபா
மிக்க நன்றி நண்பரே...
@எப்பூடி..
தலைவரே நீங்க தொடர்ந்து படிச்சுட்டு வருவதே பெரிய விஷயம். கமெண்ட் போடாவிட்டாலும் உங்கள் ஆதரவு உண்டு என்று தெரியும்.நன்றி தலைவரே. என்வழி டாட் காமில் என் போட்டோ கமெண்ட் வந்திருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.
நிறைய தகவல்களோட நல்லா எழுதறீங்க பாலா பதிவு போட்டு ரொம்ப நாளாச்சே கொஞ்சம் பிஸி யோ
சிறப்பான பதிவு சகோ...உங்கள் கிரிக்கட் அறிவின் ஆழம் வியக்க வைக்கிறது.
தென்னாபிரிக்காவே அந்த உலக கிண்ணத்தை வெற்றி பெரும் அளவுக்கு பலமாக இருந்தது...பாவம் அவர்களை இன்று மட்டும் துரதிர்ஷ்டம் துரத்துகிறது!!
2003 வரை எனது கிரிக்கெட் விருப்பம் உங்களுடையது போலத்தான்., இந்த இடுக்கையில் வரும் அனைத்து விசயங்களும் எனக்கு நன்கு தெரிந்தது, படிக்க படிக்க 1998 க்கு போனது போல இருந்தது. நன்றி!
நன்றி.
வாழ்த்துக்கள்.
@r.v.saravanan
ஆமாம் நண்பரே கொஞ்சம் பிஸிதான். அதனால்தான் கிடைக்கிற நேரத்தில் கொஞ்சம் நீளமாகவே பதிவிட்டு விடுகிறேன். நன்றி நண்பரே...
@மைந்தன் சிவா
நமக்கு கிரிக்கெட் அறிவு எல்லாம் கம்மி நண்பரே. கொஞ்சம் ஞாபகத்தில் இருப்பதை வைத்து எழுதுகிறேன். தென்னாப்பிரிக்கவை இன்னும் அந்த சோதனை துரத்திக்கொண்டுதான் இருக்கிறது.
@ஷர்புதீன்
நன்றி நண்பரே... தொடர்ந்து ஆதரவு கொடுங்கள்...
@நாடோடிப் பையன்
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே...
கலக்குங்க நண்பரே ,...
நல்ல எழுத்து நடை ...
வாழ்த்துக்கள் ..
@அரசன்
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே...
உங்கள் கிரிக்கெட் வரலாறு படிப்பது, அதிலும் நான் கண்டு ரசித்த சில போட்டிகளைப் பற்றி படிக்கும் போது, அந்த காட்சிகள் என் கண் முன்னே வந்து நிற்கிறது. வாழ்த்துக்கள். 2011 உலக கோப்பை வரை எழுதுவீர்கள் என்று ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
/*சச்சினின் அடியால் அதிகம் பாதிக்கப்பட்டது, மைக் காஸ்ப்ரோவீச்சும், ஷேன்வார்னேவும்தான். */ டாம் மூடியை விட்டு விட்டீர்களே?
/*கிப்ஸ் செய்த ஒரு சிறு தவறு அவர்களின் உலகக்கோப்பை கனவுக்கே ஆப்பு வைத்து விட்டது*/ அது மட்டுமல்ல, அரை இருதி ஆட்டத்தில், நான்கு பந்து மீதம் உள்ள வேளையில், ஒரே ஒரு ரன் எடுத்தால் வெற்றி. அவ்வளவு நேரம் மிக அருமையாக ஆடி வந்த குளூஸ்னர், அவசரப்பட்டு ஒரு ரன் ஓடி அவுட் ஆனது, இன்று வரையும் என்னால் ஜீரனிக்க முடியவில்லை. இதுவும் அவர்களின் உலகக்கோப்பை கனவுக்கு ஆப்பு வைப்பதற்கு ஒரு முக்கிய காரணம்தானே ?
மாப்ள நல்ல விலாவாரியா இருக்குங்க பதிவு!
@Sundar
என்ன நண்பரே... தோனி அணிக்கு வந்தவரை எழுதி முடித்து விடலாம் என்று நினைத்தேன். சரி விடுங்க 2011 வரை எழுத முயற்சிக்கிறேன்.
அந்த கூட்டத்தில் அடிபட்டது டாம் மூடியும்தான். ஆனால் வேதனையோடு பேட்டி கொடுத்தது இந்த இருவர்.
கடைசி நேரத்தில் குளூஸ்னர் தேவை இல்லாமல் ரன் அவுட் ஆனது ஒரு மிகப்பெரிய காரணம். ஆனால் அதற்கு முன்பாக இரண்டு பந்துகளில் எதிரில் இருக்கும் டொனால்ட் அவுட் ஆவதில் இருந்து மயிரிழையில் தப்பி இருப்பார். அந்த டென்சனில் தான் குளூஸ்னர் அவசரப்பட்டு ஓடி விட்டார்.
மேலான கருத்துக்களுக்கு நன்றி நண்பரே...
@விக்கியுலகம்
ரொம்ப நன்றி மச்சி...
Post a Comment