விவேகானந்தரின் நறுக்

கடவுள் நாம் விரும்பியதை கொடுப்பவர் அல்ல, நமக்குத் தேவையானதை கொடுப்பவர்...

July 26, 2011

என் கிரிக்கெட் வரலாறு - 13


சரித்திர புகழ் வாய்ந்த 2000ஆவது டெஸ்ட் போட்டியில், அபாரமாக ஆடி தன் திறமையை வெளிப்படுத்தி வெற்றி கொடி நாட்டியுள்ளது இங்கிலாந்து. இந்திய அணிக்கு இதெல்லாம் புதிதில்லை. 1983 உலகக்கோப்பையை வென்று முடித்த கையோடு மேற்கிந்திய தீவுகள் அணியியிடம் உள்ளூரிலேயே படுதோல்வி அடைந்திருக்கிறது. மேலும் தோனி அணிக்கு உள்ள ஒரு குணாதிசயம், தோல்வியில் தொடங்கி, மீண்டு வந்து கோப்பையை வெல்வது. பார்க்கலாம். இந்தியானாக, இந்திய அணி ஜெயிக்க வாழ்த்துக்கள். அப்புறம் சச்சின் பாவம்பா... நாம எல்லாம் சும்மா இருந்தாலே அவர் சதம் அடிப்பாரு. அவர் உடனடியாக 100ஆவது சதம் அடித்தே ஆகவேண்டும் என்ற கட்டாயம் இல்லை. ஆகவே அவர் மீது அதிக எதிர்பார்ப்பு வைப்பது தேவையற்றது.



சஃபாரியில் களமிறங்கியது கங்குலி அணி.... 

எந்த ஆண்டும் இல்லாத வகையில் 2003 உலகக்கோப்பைக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ஏறக்குறைய, "யார் உலகக்கோப்பையை வெல்வார்கள்?" என்று பெரிய குழப்பமே நீடித்தது. ஆஸ்திரேலியா அசுர பலத்துடன் களமிறங்கியது. துடிப்பான அணியுடன், இந்தியாவும், இலங்கையும் களமிறங்கின. வழக்கம்போல எந்த நேரத்தில் எப்படி ஆடுவார்கள் என்று தெரியாத அபாயகரமான அணிகளாக தென்னாபிரிக்கா, பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் களமிறங்கின. கிரிக்கெட்டின் தாயகம், நிறைய முறை இறுதிப்போட்டிக்கு சென்று கோப்பையை தவறவிட்ட அணி, கடந்த இரண்டு உலகக்கோப்பைகளாக, அரையிறுதிக்கு கூட தகுதி பெற முடியாத நிலையில், சாதித்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கியது இங்கிலாந்து. தொடக்கமே இந்தியாவுக்கு கலக்கம்தான். இந்திய அணி இருந்த பிரிவில், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகளும் இருந்தன. இதில் எதேனும் ஒரு பெரிய அணி முதல் சுற்றில் வெளியேறியே ஆக வேண்டும். கொஞ்சம் பயமாகத்தான் இருந்தது. 


ஒளிபரப்பை இந்த முறை சோனி மேக்ஸ் கைப்பற்றி இருந்தது. என்ன காரணம் என்று தெரியவில்லை. ஆனால் ஒவ்வொரு பவுண்டரி மற்றும் சிக்சருக்கும் ஒரு கார்ட்டூன் புலி வந்து கெட்ட ஆட்டம் போடும் பாருங்கள், மிகவும் பிரபலமான கார்ட்டூன் அது. ஆனால் அதை விட மிக பிரபலமானது, ஒவ்வொரு போட்டிகளுக்கும் முன்னோட்டம் அளிக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மந்திரா பேடியும் அவரது ப்ரீ ஷோ உடைகளும். இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையே போட்டி நடந்த அன்று இவர் கட்டி இருந்த சேலை மிகுந்த சர்ச்சையை கிளப்பியது. மேலும் ஒவ்வொரு உலகக்கோப்பைக்கும் பெப்சி நிறுவனத்தினர் ஒரு ஸ்பெஷல் விளம்பரம் போடுவார்கள். இந்த முறை தென்னாபிரிக்க காட்டுக்குள் கிரிக்கெட் ஆடும்போது பந்து, ஒரு சிங்கத்திடம் விழ அதில் இருந்து பிழைப்பது போன்ற ஒரு விளம்பரம். மேலும் எல்லாம் விளம்பரத்திலும் ஏதாவது ஒரு வீரர் சிக்சராக விளாசுவதாக இருக்கும். கொண்டாட்டத்துடன் தொடங்கியது 2003 உலகக்கோப்பை. தொடக்கவிழாவில் ஆப்பிரிக்கா பழங்குடியினர் நடனத்தை ஆடிய ஒரு பெண்கள் குழு, மேலாடை இல்லாமல் ஆடியது குறிப்பிடத்தக்கது. 



இந்திய அணிக்கு முதல் போட்டி நெதர்லாந்துடன். சும்மா ஊதி தள்ளி விடலாம் என்று நினைத்தால், பேட்டிங் மிக சொதப்பல். தட்டு தடுமாறி 204 ரன்கள் எடுக்க, நெதர்லாந்து வீரர்களை அவுட் ஆக்க முடியாமல் அவர்கள் 49 ஓவர் வரை ஆட்டத்தை இழுத்து சென்று விட்டார்கள். "என்னடா இது? சின்ன அணியிடமே பேட்டிங், பவுலிங் இரண்டிலும் இப்படி சொதப்புகிறார்கள்?", என்று யோசித்துக் கொண்டிருக்கும் வேளையில், அடுத்த போட்டி, ஆஸ்திரேலியாவுடன். அந்த நேரத்தில் இந்திய அணியை ஆஸ்திரேலிய அணிக்கு ஒப்பிட்டு பேசிக்கொண்டிருந்ததால், இந்த போட்டியில் வெல்லும் அணிக்கு, உலகக்கோப்பையை தட்டி செல்லும் வாய்ப்பு அதிகம் என்று கூறப்பட்டது. இதே மாதிரி 2011 இல் நடந்த இந்திய இங்கிலாந்து லீக் போட்டியிலும் சொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது. பரபரப்பாக தொடங்கிய இந்த ஆட்டத்தை முழுவதுமாக கையில் எடுத்துக்கொண்டது ஆஸ்திரேலியா. இந்திய அணி 125க்கு ஆல் அவுட். டெண்டுல்கர் மட்டுமே 36 ரன். ஆஸ்திரேலியா 23 ஓவரில் வெற்றி பெற, உலகக்கோப்பையை வெல்லும் என்று கணிக்கப்பட்ட இந்திய அணிக்கு செருப்படி கொடுத்தது போல இருந்தது. 


நிஜ போட்டியில் வீரர்கள் டக் அடித்து கொண்டிருக்க, விளம்பரங்களில் எல்லாம் வீரர்கள் சிக்சர் அடிப்பது போல காட்டிக்கொண்டிருந்தது வேடிக்கையாக இருந்தது. ஒவ்வொரு ஓவர் முடிவிலும் இப்படி விளம்பரம் வர, ரசிகர்கள் உள்ளிட்ட எல்லோரும் மிகுந்த ஆத்திரம் அடைந்தனர். விளைவாக இந்திய அணியினருக்கு எதிராக கொடும்பாவி எரிப்பு, ஆர்ப்பாட்டம் எல்லாம் நடக்க ஆரம்பித்தது. சேவாக் உள்ளிட்ட சில வீரர்களின் வீடுகள் தாக்கப்பட்டன. இந்திய கிரிக்கெட் வல்லுனர்கள், "ரசிகர்கள் இப்படி செய்வதால், வீரர்களுக்கு பிரஷ்ஷர் அதிகரிக்கும். ஆகவே இப்படி செய்ய கூடாது." என்று கூறினார்கள். கங்குலியும் ரசிகர்களை பொறுமை காக்குமாறு அறிவுறுத்தினார். அதற்கேற்றாற்போல அடுத்த போட்டிகளில் ஜிம்பாப்வே மற்றும் நமீபியா அணிகளை துவைத்து எடுத்தது இந்தியா. இந்த தொடரில் ஏறக்குறைய எல்லா போட்டிகளிலும் சச்சின் வெளுத்து வாங்கினார். நமீபியாவுடன் 152 ரன்கள் சேர்த்தார். அடுத்ததாக இங்கிலாந்துடன் மோத வேண்டும். 

கேடிக் ஓவரில் சச்சின் அடித்த மிகப்பெரிய சிக்சர்

சச்சினிடம் நிறைய வீரர்கள் வாயை கொடுத்து வாங்கி கட்டிக்கொள்வதுண்டு. இந்த முறை இங்கிலாந்தின் ஆண்டி கேடிக், "சச்சின் ஒன்றும் வீழ்த்த முடியாதவர் அல்ல, நான் சச்சினை இந்த முறை வீழ்த்துவேன்." என்று கூறினார். அந்த ஆட்டத்தில் சச்சின் ருத்ர தாண்டவம் ஆடினார். கேடிக் பந்துகளை நொறுக்கி தள்ளினார். கேடிக் ஓவரில் அவர் அடித்த இமாலய சிக்சர் மிக பிரசித்தம். முதலில் சிறப்பாக ஆடினாலும், கடைசி ஓவரில் இந்திய அணி நான்கு விக்கெட்டுகளை இழக்க, 250 ரன் மட்டுமே எடுக்க முடிந்தது. அடுத்து களமிறங்கிய இங்கிலாந்து முதலில் நிதானமாக ஆடினாலும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழக்க தொடங்கியது. ஒரு கட்டத்தில் தாறுமாறாக விக்கெட்டுகள் விழ நிலைமை படுமோசமானது. இங்கிலாந்தின் இந்த நிலைக்கு காரணம், அணியில் புதிதாய் சேர்க்கப்பட்ட வேகப்பந்துவீச்சாளர் ஆஷிஷ் நெஹ்ரா. இந்த போட்டியில் அவர் 6 விக்கெட்டுகளை சாய்த்து வெற்றிக்கு வித்திட்டார். இங்கிலாந்து 168 ரன்னுக்குள் சுருண்டது. இந்த உலகக்கோப்பையில் ஒரு சில போட்டிகளைத்தவிர எல்லா போட்டிகளிலும், இந்திய வீரர்கள் எதிரணியை 200க்குள் சுருட்டியது குறிப்பிடத்தக்கது. 


பந்துவீச்சு சிறப்பாக இருப்பதால் உலகக்கோப்பை நம்பிக்கை பல மடங்கு அதிகரித்தது. அடுத்ததாக எப்போதுமே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் இந்திய பாகிஸ்தான் ஆட்டம். இரு அணிகளும் சம நிலையில் இருக்க, போட்டி பரபரப்பாக தொடங்கியது. இந்த ஆட்டம் நடந்த அன்று என் ஆசிரியர் செய்த சதியால், கல்லூரிக்கு செல்ல வேண்டியதாயிற்று. ஆகவே, இந்திய பேட்டிங் மட்டுமே பார்க்க முடிந்தது. பாகிஸ்தான் வீரர்களால் இந்திய ஸ்கோரிங்கை கட்டுப்படுத்த முடியாததால், பரிதாபமாக தோற்றது பாகிஸ்தான். இந்திய அணி சூப்பர் சிக்க்சுக்கு தகுதி பெற்றது. ஜிம்பாப்வேக்கு எதிராக பாதுகாப்பு கருதி இங்கிலாந்து விளையாடாமல் போக, பாகிஸ்தானுக்கு மழை வந்து ஆப்பு வைக்க, எதிர்பாராத விதமாக பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து ஆகிய இரண்டு பெரிய அணிகள் தொடரை விட்டு வெளியேறின. அதாவது இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் ஜிம்பாப்வே ஆகிய அணிகள் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றன. 


மற்றொரு பிரிவில் இதை விட அதிர்ச்சி.  பாதுகாப்பு காரணங்களுக்காக கென்யாவுடன் ஆட்டத்தை நியூசிலாந்து கைவிட, மற்றொரு போட்டியில் இலங்கை கென்யாவிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்தது. ஒபுயா ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இந்த வாய்ப்பை நன்கு பயன் படுத்தி கொண்ட கென்யா சிறிய அணிகளை வீழ்த்தி முதல் முறையாக அடுத்த சுற்றுக்கு முன்னேறியது. மோசமான பார்மில் இருந்த வெஸ்ட் இண்டீஸ் ஏற்கனவே வெளியேறி விட்ட நிலையில், அடுத்து வெளியேறப்போவது இலங்கையா? இல்லை தென்னாப்பிரிக்காவா? என்ற நிலைமை. இது நாக் அவுட் மாதிரி இருப்பதாலோ என்னவோ மறுபடியும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக விதி விளையாடியது. 268 ரன்னை துரத்திய தென்னாப்பிரிக்காவுக்கு மறுபடியும் மழை வடிவில் சோதனை வந்தது. ஏற்கனவே மழை வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இரு அணிகளின் கேப்டன்களும் கையில் பிட்டு வைத்திருப்பதை போல, ஒவ்வொரு ஓவருக்கும் டக்வோர்த் முறைப்படி எத்தனை ரன் இருக்க வேண்டும் என்று பார்த்து கொண்டே இருந்தனர். கடைசியில் மழை வந்துவிடவே, மேலும் போட்டியை தொடரமுடியாத நிலை. 

கடைசியில் அம்பயர்கள் முடிவை அறிவிக்க அனைவருக்கும் அதிர்ச்சி. அதாவது 45 ஓவரில் தென்னாபிரிக்கா 230 எடுத்திருந்தால் ஜெயித்திருக்கும். அவர்கள் எடுத்தது 229. இதை கேப்டன் பொல்லாக் செய்த சின்ன தப்பு கணக்கு என்று அப்போது கூறப்பட்டது. அதாவது 44ஆவது ஓவர் முடிவில் களத்தில் நின்ற பவுச்சரிடம், "அடுத்த ஓவருக்குள் விக்கெட்டை இழக்காமல் 229 ரன்னை எட்டிவிடவேண்டும்." என்ற செய்தி தரப்பட்டிருக்கிறது. பவுச்சர் படாத பாடு பட்டு அந்த ஓவரில் சிக்சர் எல்லாம் அடித்து 229 ரன்னை எட்ட செய்தார். ஆனால் தவறாக கணக்கிடப்பட்ட அந்த ஒரு ரன்னில் ஆட்டம் டிரா ஆக, இலங்கை சூப்பர் சிக்சில் நுழைய, மண்ணின் மைந்தர்களான தென்னாபிரிக்கா வெளியேறியது. 

அக்தர் ஓவரில் ஆஃப் சைடில் சிக்சர்

முதல் சுற்று ஆட்டங்களே மிக சுவாரசியமாக இருந்தது. ஆஸ்திரேலிய வீரர்களான மெக்ராத் மற்றும் ஆண்டி பிக்கல் இருவருமே 7 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினர். ஆண்டி பிக்கல் இங்கிலாந்து எதிராக அதை செய்தார். அதிலும் கடைசி ஓவரில் அவரே ஒரு சிக்சர் மற்றும் பவுண்டரி அடித்து ஆஸ்திரேலியாவை தோல்வியில் இருந்து காப்பாற்றினார். இப்போட்டியில் இங்கிலாந்து வென்றிருந்தால் அடுத்த சுற்று வேறு மாதிரி இருந்திருக்கும். அதே போல கனடா பங்களாதேஷ் அணியை வீழ்த்தி ஆச்சர்யம் அளித்தது. எல்லா உலகக்கோப்பை போட்டிகளிலும் என்னதான் பல சுவாரசியங்கள் இருந்தாலும் அவற்றை எல்லாம் தூக்கி சாப்பிடும் அளவிற்கு சுவாரசியமாக இருப்பது இந்தியா பாகிஸ்தான் போட்டிகள்தான். இந்தியாவின் சச்சின் மற்றும் சேவாக் களத்தில் நிற்க, முறையே அக்ரம், அக்தர், வாக்கர் யூனிஸ், ஆகியோரால் வீசப்பட்ட முதல் ஆறு ஓவர்களை யாரும் மறக்க மாட்டார்கள். புயல் வேக பந்துவீச்சால் சச்சினை சாய்ப்பேன் என்று சொன்ன அக்தர் வேகமாக பந்துவீச, அதை அசால்ட்டாக சிக்சராக மாற்றினார் சச்சின். இது இன்று வரையிலும் ஒரு மறக்கமுடியாத நிகழ்வாக பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த ஓவரில் செமத்தியாக உதை வாங்கிய அக்தர், அடுத்த ஓவர் வீசமாட்டேன் என்று சொல்ல, பின்னர் யூனிஸ் பந்து வீசினார். இது குறித்து அக்ரம் கூறுகையில், "எங்கள் இருவரின் காலத்துக்கு பின், பாகிஸ்தான் பந்துவீச்சின் ஆதாரம் என்று அக்தரை நான் நினைத்தேன். ஆனால் அவர் பயந்து பின் வாங்கியதை பார்த்தபோது எனக்கு மிகுந்த அதிர்ச்சி ஆகி விட்டது. அந்த கணமே அந்த ஆட்டத்தில் தோற்று விட்டதைப்போல உணர்ந்தேன்." என்று அவர் சொன்னது போலவே, மீண்டும் ஒரு முறை வரலாற்றை உடைக்க முடியாமல் பாகிஸ்தான் தோற்றது.

இப்போது சூப்பர் சிக்ஸ் சுற்றில் ஒரு பக்கம் ஆஸ்திரேலியா, இந்தியா மற்றும் ஜிம்பாப்வே. மறுபக்கம் நியூசிலாந்து, இலங்கை மற்றும் கென்யா. இந்தியாவை பொறுத்தவரை ஏற்கனவே இரண்டு புள்ளிகளுடன் இருந்ததால் அதிகம் பிரச்சனை இல்லை. கென்யாவை வீழ்த்தினாலே அரையிறுதி வாய்ப்பு ஏறக்குறைய உறுதி ஆகிவிடும். ஆகவே மிக நம்பிக்கையோடு ஆடத்தொடங்கினார்கள். நாங்கள் எல்லோரும் மிகுந்த உற்சாகத்தோடு ஆட்டங்களை கவனிக்க தொடங்கினோம். 

வாய்ப்பை தவற விட்ட இலங்கை, பாண்டிங் அடித்த மரண அடி.....
அடுத்த பதிவில். 

உங்களுக்கு பிடிச்சிருந்தா ஓட்டு போடுங்க...
உங்க கருத்துக்களை இங்கே பதிவு பண்ணுங்க.... 


19 comments:

r.v.saravanan said...

நான் கிரிக்கெட் அவ்வளவாக பார்ப்பதில்லை இருந்தும்
எனக்கு தெரியாத பல விஷயங்கள் இந்த கிரிக்கெட் பதிவின் மூலம் தெரிந்து கொள்ள முடிகிறது தொடர்ந்து கலக்குங்கள் பாலா வாழ்த்துக்கள்

சக்தி கல்வி மையம் said...

மீண்டும் பல அறிய தகவல்கள்..
கிரிக்கெட்டின் பிரிட்டானிகா ..

தமிழ் உதயம் said...

2000 டெஸட் போட்டியில், தோனி தேவையில்லாமல், தொடவே அவசியம் இல்லாத அந்த பந்தை தொட்டு ஆட்டமிழந்தார். தோனி நின்று இருந்தால் மாட்சை டிரா செய்திருக்கலாம்.

Mohammed Arafath @ AAA said...

en cricket life fa thirumbi parpathu pola ullathu. valithukal..adutha pathivai viraivil ethirparkiren.

K.s.s.Rajh said...

இந்த உலகக்கோப்பையை மறக்கமுடியுமா.பல பிரபலமான வீரர்கள் இந்த உலகக்கோப்பையுடன் ஓய்வு பெற்றார்கள் அல்லவா.அதிஸ்டம் இல்லை என்ற விடயம் உண்மையில் தென்னாபிரிக்க அணியிடம் ஒவ்வொறு உலகக்கோப்பை போட்டிகளிலும் நிரூபனம் ஆகின்றது என்ன அது இன்றுவரை 2011 உலகக்கோப்பை போட்டிகளிலும் தொடர்ந்ததுதான் கவலைக்குறிய விடயம்

சென்னை பித்தன் said...

எப்படித்தான் இப்படி விவரமாக எழுதுகிறீர்களோ!
உங்கள் அன்புக் கட்டளையை நிறைவேற்றி விட்டேன் .

Unknown said...

இன்று முடியவில்லை...அடுத்த பதிவுக்கு கட்டாயம் நாளை வருகிறேன்....மன்னிச்சு...

தமிழ்வாசி பிரகாஷ் said...

நிறைய விஷயங்கள். மலரும் நினைவுகள். பகிர்வுக்கு நன்றி.

மாய உலகம் said...

கிரிக்கெட் அவ்வளவாக பார்க்கவில்லையென்றாலும் பதிவை படிக்கிறேன்... கிரிக்கெட் பற்றி செய்திகளை தெரிந்துகொள்வோமே... பகிர்வுக்கு பாராட்டுக்கள்

பாலா said...

@r.v.saravanan

தங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி நண்பரே.

பாலா said...

@!* வேடந்தாங்கல் - கருன் *!

அவ்வளவு பெரிய வார்த்தை எல்லாம் எதற்கு.
மிக்க நன்றி நண்பரே.

பாலா said...

@தமிழ் உதயம்

சரி விடுங்கள். நடந்து முடிந்து விட்டது. அதை பற்றி பேசி என்ன பயன். இனி வரும் போட்டிகளில் சிறப்பாக ஆட வேண்டும் என்று வேண்டுவோம். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே.

பாலா said...

@Mohammed Arafath @ AAA

தொடர்ந்து ஆதரவு கொடுங்கள் நண்பரே.

பாலா said...

@Kss.Rajh

தங்கள் கருத்துக்கு நன்றி நண்பரே.

பாலா said...

@சென்னை பித்தன்

நிறைவேத்தியாச்சா? ரொம்ப ரொம்ப நன்றி சார்

பாலா said...

@மைந்தன் சிவா

மன்னிச்சாச்சு

பாலா said...

@தமிழ்வாசி - Prakash

மேலான கருத்துக்களுக்கு நன்றி நண்பரே

பாலா said...

@மாய உலகம்

தங்களின் ஆதரவுக்கு மிக்க நன்றி நண்பரே.

arasan said...

அருமையா இருக்குங்க நண்பரே..

Related Posts Plugin for WordPress, Blogger...