விவேகானந்தரின் நறுக்

கடவுள் நாம் விரும்பியதை கொடுப்பவர் அல்ல, நமக்குத் தேவையானதை கொடுப்பவர்...

July 20, 2011

என் கிரிக்கெட் வரலாறு - 12


சச்சினா? கங்குலியா?



இதற்கு முன் சச்சினை எனக்கு பிடிக்காது என்று இரண்டு பதிவுகள் எழுதி இருந்தேன். சச்சின் மற்றும் கங்குலி இருவருக்கும் இடையே ஏற்பட்ட உரசல்களை பற்றி எழுதி இருந்தேன். என்னை பொறுத்தவரை ஒரு விளையாட்டு வீரரை இன்னொரு விளையாட்டு வீரரோடு ஒப்பிடுவதே மிகத்தவறு. அவருக்கு அவரே தான் அளவுகோல். அந்த விதத்தில் சச்சின் மற்றும் கங்குலி இருவரும் ஒவ்வொரு வகையில் சிறந்தவர்களாகவே விளங்கி இருக்கிறார்கள். 





இந்திய கிரிக்கெட்டை பொறுத்தவரை அதன் மிகப்பெரிய ஆதாரம் சச்சின்தான். சச்சின் கிரிக்கெட்டை விட்டு ஓய்வு பெறும்போது சுமார் 10 கோடி ரசிகர்களை கிரிக்கெட் இழக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. கிரிக்கெட்டை நேசிக்கும் வீரர்களுக்கு மத்தியில், கிரிக்கெட்டை சுவாசிக்கும் ஒருவராக இருப்பவர் சச்சின். ஆகவே இந்திய கிரிக்கெட்டை பொறுத்தவரை, சச்சின் சம்பந்தப்பட்ட ஏதாவது ஒரு விஷயம் என்றால் நாடே கொந்தளித்து விடும். இந்த நிலைமை கங்குலிக்கும் வந்தது. முன்னமே சொன்னது போல கங்குலி தன் அணி வீரர்கள் அனைவரும் தனக்கு கீழ்படிந்து நடக்க வேண்டும் என்று நினைப்பவர். ஆனால் இதை அவர் சச்சினிடமும் எதிர்பார்த்தார். இது இயல்பானது. ஆனால் அது வேறு கோணத்தில் இருந்து பார்க்கப்பட்டது.  


அதாவது, "சச்சின் மீதுள்ள காழ்புணர்ச்சி காரணமாக இவ்வாறு செய்கிறார்." என்று கூறப்பட்டது. அதே போல, ஓப்பனிங் ஆடிக்கொண்டிருந்த சச்சினை சோதனை முயற்சியாக சில ஆட்டங்களில் ஒன் டவுன் இறக்க, "சச்சின் சாதனை செய்வது கங்குலிக்கு பிடிக்கவில்லை." என்று கூறப்பட்டது. இந்த குற்றம் காலம்காலமாக எல்லா இந்திய கேப்டன்கள் மீதும் சுமத்தப்படும் ஒன்று. சமீபத்தில் தோனி மீது கூட இப்படி ஒரு குற்றச்சாட்டு சொல்லப்பட்டது இதனால் சச்சினின் ரசிகர்களுக்கு கங்குலியை அறவே பிடிக்காமல் போனது. ஆனால் என்னை பொறுத்தவரை அப்படி நடந்திருக்க சாத்தியமே இல்லை என்றுதான் கூறுவேன். ஒரு சில பத்திரிக்கைகள் பரபரப்புக்காகவோ, அல்லது சொந்த விருப்பு வெறுப்பு காரணமாகவோ அப்படி பரப்பி இருக்கலாம். ஆனால் அதில் அவர்கள் வெற்றி பெற்றதுதான் வேதனையான விஷயம். "இந்த தொழிலதிபர்கள் தொல்லை தாங்க முடியலப்பா!!" என்று கவுண்டமணி சொல்வாரே, அதே போல பல நேரங்களில், "இந்த எக்ஸ்பர்டுகள் தொல்லை தாங்க முடியலப்பா!!" என்று சொல்ல தோன்றும்.  இந்திய கேப்டனின் ஒவ்வொரு செயல்பாட்டையும்யும் விமர்சிப்பதற்கென்றே ஒரு எக்ஸ்பர்ட் கூட்டம் இருக்கும் சிலர் ஆதரவாகவும், சிலர் எதிராகவும் இருப்பார்கள். இந்தியாவின் ஒட்டுமொத்த எக்ஸ்பர்டுகளுமே கங்குலிக்கு எதிரியாக இருந்தது துரதிஷ்டம். ஆனால் அவர் பெற்றுதந்த தொடர் வெற்றிகள் அவற்றை காத்து கொண்டிருந்தன. ஒரு கிரிக்கெட் ரசிகனாக, எப்போதுமே நான் கங்குலியை பிடிக்கும் என்பதால் சச்சினை வெறுத்ததே இல்லை. 


கங்குலி தன் மீது சுமத்தப்பட்ட குற்றங்கள் அனைத்தையும் கண்டுகொள்ளாமல், தனது செயல்பாடுகளை தொடர்ந்து கொண்டிருந்தார். அவரது அடுத்த இலக்கு 2003 உலகக்கோப்பையை வெல்வது. நாட்வெஸ்ட் தொடரில் இங்கிலாந்துக்கு எதிராக இந்தியா பெற்ற அபார வெற்றி, இந்திய அணி ஒரு பலமான பேட்டிங் வரிசையை கொண்டிருக்கிறது என்பதற்கு சிறந்த உதாரணமாக விளங்கியது. பீல்டிங்கிலும் ஓரளவிற்கு முன்னேற்றம் காணப்பட்டது.  ஆனால் பவுலிங் அவ்வளவு நம்பிக்கைக்குரியதாக இல்லை. இந்த குறைபாடுகள் விரைவில் களையப்படவேண்டும். 2003 உலகக்கோப்பைக்கு ஒரு முன்னோட்டமாக, எல்லா அணிகளும் தங்கள் பலத்தை பரிட்சித்து பார்க்க ஒரு களமாக அமைந்தது, 2002 ஆம் ஆண்டின் நாக்அவுட் கோப்பை. அணிகளின் எண்ணிக்கை 12 ஆக உயர, நாக் அவுட் முறை மாற்றப்பட்டு, லீக் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. தொடருக்கும் சாம்பியன்ஸ் டிராபி என்று பெயர் மாற்றப்பட்டது. "ஆஸ்திரேலிய அணியால் கோப்பையை வெல்ல முடியாத காரணத்தால் அவர்களின் தலையீடே இவ்வாறு மாற்றம் செய்ய காரணம்." என்று வெகு காலம் நம்பிக்கொண்டிருந்தேன். 


இந்த முறை தொடர், சுழலுக்கு சாதகமான இலங்கையில் நடைபெற்றது. இந்த தொடரை பொறுத்தவரை, இந்தியாவுக்கு எந்த கஷ்டமும் இருக்கவில்லை. ரசிகர்களும் அதிகம் கவலைப்படவில்லை. எல்லாம் இந்திய அணிக்கு சாதகமாகவே நடந்தது. முதல் சுற்றை முடித்துக்கொண்டு, செமிபைனலுக்கு அடி எடுத்து வைத்த அணிகள், ஆஸ்திரேலியா, தென்னாபிரிக்கா, இலங்கை மற்றும் இந்தியா. அந்த காலகட்டத்தில் இந்த நான்கு அணிகளுக்குத்தான் 2003 உலகக்கோப்பையை வாங்கும் வாய்ப்பு இருக்கிறதென்று சொல்லப்பட்டது. அரையிறுதியில் இந்தியா தென்னாப்பிரிக்காவை சந்தித்தது. மிக சுவாரசியமான இந்த போட்டியில், இந்திய வீரர்கள் மீண்டும், சுழற்பந்து வீச்சால் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தினர். கிப்ஸ்ஸும்( 116), காலிஸூம்(97) வெற்றியை உறுதி செய்து கொண்டிருக்க, முக்கியமான கட்டத்தில் கிப்ஸ் டீஹைட்ரேசன்(Dehydration) காரணமாக, வெளியேறினார். இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொண்ட இந்திய பவுலர்கள் விக்கெட்டுகளை சாய்க்க தொடங்கினர். இப்போட்டியில் ஜாண்டி ரோட்ஸுக்கு யுவராஜ் பிடித்த அபார கேட்ச், திருநெல்வேலிக்கே அல்வா கொடுப்பது போலிருந்தது. 1993 ஆம் ஆண்டின் ஹீரோ கோப்பையை போல,  நெருக்கடியான கடைசி ஓவரை வீச அழைக்கப்பட்டார் சேவாக். களத்தில் குளூஸ்னர் நின்று கொண்டிருக்க, அபாரமாக வீசி அந்த ஓவரில் பத்து ரன்களை மட்டுமே வழங்கி, இரண்டு விக்கெட்டுகளை(காலிஸ், குளூஸ்னர்) சாய்த்தார். 


இறுதி போட்டியில் இலங்கையுடன் மோத வேண்டும். முதலில் ஆடிய இலங்கை 244 எடுக்க, அடுத்து விளையாடிய இந்தியா, 2 ஓவருக்கு 14 ரன் எடுத்தபோது மழை வந்து ஆட்டத்தை முடித்து வைத்தது. மறுநாள் மறுபடியும் போட்டி முதலில் இருந்து ஆரம்பிக்க, இந்த முறை இலங்கை எடுத்தது 222 ரன்கள் மட்டுமே. இம்முறை இந்தியா 8 ஓவருக்கு 38 ரன் எடுத்தபோது மழை வந்து ஆட்டத்தை முடித்து வைக்க, கோப்பை இருவருக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டது. "மழை மட்டும் வராமல் இருந்திருந்தால் இந்த கோப்பையை இந்தியாதான் வென்றிருக்க வேண்டியது." என்று புலம்பிக்கொண்டிருந்தோம். அது நடக்கவில்லை. இந்த தொடர் முடிந்த போது, இந்திய அணிக்கு உலகக்கோப்பை வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறதென்று அனைவரும் கூறினார்கள். இத்தொடரில் இந்தியா, மற்றும் இலங்கை இரு அணிகளுமே ஒரு போட்டியில் கூட தோற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 


2003 உலகக்கோப்பைக்கு முன்னதாக இந்திய அணி, நியூசிலாந்து பயணம் மேற்கொண்டது. இந்திய ரசிகர்களின் உலகக்கோப்பை கனவை ஆட்டம் காண செய்யும் விதமாக இத்தொடர் அமைந்தது. அதிலும் ஹாமில்டனில் நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டி வினோதமான ஒன்று. முதல் இன்னிங்சில் இந்தியா 99 ரன்னுக்கு ஆல் அவுட் ஆக, நியூசிலாந்து 94க்கு ஆல் அவுட் ஆனது. இரண்டாவது இன்னிங்சில் இந்தியா 154க்கு ஆல் அவுட் ஆக, நியூசிலாந்து, 6 விக்கெட் இழப்புக்கு 160 எடுத்து ஜெயித்தது. முதல்நாள் மழையில் கட் ஆக, மூன்று நாட்கள் மட்டுமே நடந்த ஆட்டம் நான்காவது நாளில் முடிந்து போனது.  ஒரே நாளில் 22 விக்கெட்டுகள் விழுந்தது குறிப்பிடத்தக்கது. ஒரே இன்னிங்சில் இரண்டு அணிகளுமே 100 ரன்னுக்குள் அவுட் ஆவது இதுவே முதல்முறை. அதே போல, முதல் இன்னிங்சில் 100 ரன்னுக்கு குறைவாக எடுத்தும், முன்னிலை பெற்ற ஒரே அணி இந்திய அணிதான். இந்த ஆடுகளம் கடுமையான விமர்சனத்துக்குள்ளானது.


ஒரு நாள் தொடரிலும் இந்தியா சோபிக்கவில்லை. கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி எடுத்தது வெறும் 122 ரன் மட்டுமே. இதற்கடுத்த போட்டி உலகக்கோப்பையில்தான். "என்னடா இது? உலகக்கோப்பை போட்டிகள் தொடங்கும் நேரத்தில் இப்படி ஒரு சோதனை?" என்று எல்லோரும் கவலை அடைந்தோம். ஆனால் நியூசிலாந்து ஆடுகளம் என்பது ஆனானப்பட்ட ஆஸ்திரேலியாவுக்கே அல்வா கொடுக்கும். இந்த ஆடுகளத்தில் ஒன்றும் நாம் உலகக்கோப்பை ஆடப்போவதில்லையே? இந்திய ஆடுகளங்களை ஒத்த தென்னாப்பிரிக்காவில் அல்லவா ஆடப்போகிறோம்? எப்படியும் ஜெயித்து விடலாம்.... 


கோலாகலமாக தொடங்கியது 2003 உலகக்கோப்பை அடுத்த பதிவில்.... 

உங்களுக்கு பிடிச்சிருந்தா ஓட்டு போடுங்க...
உங்க கருத்துக்களை இங்கே பதிவு பண்ணுங்க.... 


21 comments:

சக்தி கல்வி மையம் said...

தெரியாத பல தகவல்களை தருவதற்கு நன்றிகள் நண்பரே..

கவிதை வீதி... // சௌந்தர் // said...

அழகிய வர்ணை...எடுத்துச்சொல்லும் விதம் அருமை...

படங்களும் அருமை...

Unknown said...

அழகா சொல்லிட்டு வரீங்க...உங்களுடன் நானும் பயணிக்கிறேன் மாப்ள!

arasan said...

கிரிக்கெட் பயணம் அருமை சார் ..
நல்ல முறையில் அழகான நடை

இராஜராஜேஸ்வரி said...

அழகான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.

தமிழ்வாசி பிரகாஷ் said...

கிரிக்கெட் தொடர் அருமையா போகுது... வெயிட்டிங்

Kavin Raja said...

எப்பொழுதுமே நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டிகளில் பட்டையை கிளப்பும் சேவாக் இத்தொடரிலும் அசத்தினார்.. சச்சின், கங்குலி போன்ற ஜாம்பவான்கள் சொதப்பிய போதும், சேவாக் சிறப்பாக விளையாடி இரண்டு சதங்களை அடித்திருந்தார். இவரது சிறப்பான தொடர்களில் இதுவும் ஒன்று...

சிறப்பான கட்டுரை... நினைவில் நிற்பவை... நன்றி!!

Unknown said...

வழமை போல அசத்தல் தலைவா..குறிப்பிட்டு காட்ட வேண்டியதில்லை!

Chennai SEO said...

அசத்தல் பதிவு. நன்றி

Chennai SEO said...

அசத்தல் பதிவு. நன்றி

K.s.s.Rajh said...

கங்குலி மீதுதான் எவ்வளவு விமர்சனங்கள்.குறிப்பாக பாகிஸ்தானுக்கு 2004ல் கங்குலி தலைமையில் இந்திய அணி சுற்றுப்பயனம் செய்த போது.சேவாக் முதன் முதலில் முச்சதம் விளாசிய டெஸ்ட் கங்குலி அந்தப்போட்டியில் சுகயீனம் காரணமாக விளையாடவில்லை என நினைக்கின்றேன் சரியாக ஞாபகம் இல்லை.கங்குலி விளையாடதனால் ராவிட்தான் அந்தப்போட்டியில் அணித்தலைவராக செயல்பட்டார் சச்சின் ஆட்டம் இழக்காமல் 194 ஒட்டங்களைப்பெற்று இருந்த போது ராவிட் டிக்கிளேயர் செய்தார்.அப்போது கடும் விமர்சனங்கள் எழுந்தன வேண்டும் என்றே சச்சினை இரட்டை சதம் அடிக்கவிடாமல் செய்து விட்டதாக கூறப்பட்டது ஆனால் விமர்சனங்கள் அந்த்ப்போட்டியில் தலைவராக செயல்பட்ட ராவிட்டை நோக்கிவரவில்லை.கங்குலி சொல்லித்தான் ராவிட் டிக்கிளேயர் செய்ததாக பரபரப்பாக கங்குலி மீது புகார்கள் கூறப்பட்டது ஆனால் தாதா அதை எல்லாம் கண்டு கொள்ளவில்லை அந்தத் தொடரில் பாகிஸ்தானை அதன் சொந்தமண்ணில் வைத்து தொடரை வென்ற முதலாவது இந்திய அணித்தலைவராக சாதனைபடைத்தார் அல்லவா.

சச்சின்,கங்குலிக்கு இடையில் எப்போதும் ஒப்பீடுகள் நடந்தாலும்.சச்சினும் கங்குலியும் இணைந்து ஒரு நாள் போட்டிகளில் ஆரம்பத்துடுப்பாட்ட வீரர்களாக 6000க்கும் மேல்பட்ட ஒட்டங்களைக் குவித்திருக்கின்றார்கள்.இது உலகசாதனையாகும்.அதைவிட ஒரு நாள்போட்டிகளில் 10000 ஒட்டங்களை குவித்தவர்களில் கங்குலிதான் குறைந்த ஒரு நாள் போடிகளில் 10000ம் ஒட்டங்களைக் கடந்தவர்...சச்சினுடன் கங்குலியை ஒப்பிடுவது பொருத்தமானது இல்லை.ஆனால் சச்சினுக்கு இணையாக கங்குலி என்று பேசப்பட்டாரோ அப்பவே கங்குலி ஒரு சிறந்தவீரர் என்று நிருபனம் ஆகிவிட்டது இல்லையா.சச்சினுடன் ஒப்பிடுவதற்கு இந்திய அணியில் விளையாடிய வீரர்களில் கங்குலி தகுதியானவர் என்றால் அது மிகையாகாது.

பாலா said...

@!* வேடந்தாங்கல் - கருன் *!

மிக்க நன்றி நண்பரே...

பாலா said...

@# கவிதை வீதி # சௌந்தர்

நன்றி நண்பரே. படங்களுக்கு Cricinfoவுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும்.

பாலா said...

@விக்கியுலகம்

நன்றி மாப்ள

பாலா said...

@அரசன்

கருத்துக்கு நன்றி சார்.

பாலா said...

@இராஜராஜேஸ்வரி

ரொம்ப நன்றிங்க.

பாலா said...

@தமிழ்வாசி - Prakash

தொடர்ந்து ஆதரவு கொடுங்க. நன்றி நண்பரே.

பாலா said...

@Kavin Raja

சேவாக் தன்னை அணியில் நிலையாக நிறுத்திக்கொண்ட கால கட்டம். நன்றி நண்பரே.

பாலா said...

@மைந்தன் சிவா

மிக்க நன்றி நண்பரே.

பாலா said...

@Chennai SEO

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

பாலா said...

@Kss.Rajh

சரியாக சொன்னீர்கள். அணியில் எது நடந்தாலும் அதற்கு கங்குலிதான் காரணமாக இருப்பார் என்கிற ரீதியில் பல விமர்சனங்கள் வந்தன. இந்தியாவில் மட்டுமே இந்தமாதிரி பிரச்சனைகள் எல்லாம் கிளப்பபடுகின்றன.

இருவரையும் ஒப்பிடுவது தவறு. ஆனால் தனி நபர் சாதனையில் கங்குலி ஒன்றும் குறைந்தவர் அல்ல.

நன்றி நண்பரே.

Related Posts Plugin for WordPress, Blogger...