விவேகானந்தரின் நறுக்

கடவுள் நாம் விரும்பியதை கொடுப்பவர் அல்ல, நமக்குத் தேவையானதை கொடுப்பவர்...

January 11, 2012

இது கவனிக்க வேண்டிய விஷயம்

"என்னடா, ஒரே சீரியஸ் மேட்டாரா எழுதுகிறான்?", என்று நினைக்காதீர்கள். இதை இந்த நேரத்தில்தான் எழுதவேண்டும், என்று எந்த முடிவும் செய்து கொள்ளாமல், அவ்வப்போது எழுதுகிறேன். அது தொடர்ந்து சீரியஸ் மேட்டராகவும், இல்லை சினிமா மேட்டராகவும் அமைந்து விடுகிறது. தனிமனித வாழ்க்கை மட்டுமல்ல, நம் சமுதாயமே ஆரோக்கியமாக இருக்கவும், ஒரு நல்ல எதிர்கால இந்தியா அமையவும் முக்கிய காரணமாக இருக்கும் ஒரு விஷயத்தை மிக சாதாரணமாக கூட நாம் எடுத்துக்கொள்வதில்லை. (நாம் எதில்தான் சிரத்தையோடு இருந்திருக்கிறோம்?) கால ஓட்டத்தில் கொஞ்சம் கொஞ்சமாக நம்மால் மறக்கப்பட்டு வரும் இந்த விஷயத்தை பற்றி என் கருத்துக்களை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். 




நான் எதை பற்றி பேசுகிறேன் என்று விளங்குகிறதா? குழந்தைகளைப் பற்றித்தான் பேசுகிறேன். "அதற்கென்ன இப்போ? அவர்களை யார் கவனிக்காமல் விட்டது?", என்று நிறைய பேர் முணுமுணுக்கலாம். பசங்க படம் வந்தபோது இயக்குனர் சசிகுமார் சொன்ன ஒரு விஷயம், "நம் நாட்டில், குறிப்பாக தமிழகத்தில், குழந்தைகளுக்கான, இலக்கியங்கள் மற்றும் படைப்புகள் என்பது மிக மிக குறைவு." இன்னும் சொல்லப்போனால் கிடையவே கிடையாது என்பதுதான் உண்மை. கொஞ்சம் யோசித்து பார்த்தால் இது புரியும். குழந்தைகள் மிக மிக ஷார்ப்பானவர்கள். எல்லாவற்றையுமே மிக இலகுவாக உள்வாங்கி கொள்வார்கள். எந்த ஒரு விஷயமானாலும் அதிலேயே லயித்து விடும் பண்பு மிக்கவர்கள். இது எல்லோரும் அறிந்ததே. நான் என் குழந்தை பருவத்தில் படித்த சில புத்தகங்களை நினைத்து பார்க்கிறேன். நான் நான்கு வயதில் படித்த மோரா என்ற யானை கதை இன்னும் நினைவில் இருக்கிறது. ஐந்து வயதில் இருந்தே அம்புலிமாமாவின் ரசிகன் நான். சிறுவர் மலர், கோகுலம் கதிர் வந்தவுடன் முதலில் என் கைக்கே வரும். இதோடல்லாமல், ஏகப்பட்ட காமிக்ஸ் வகைகளை திரும்ப திரும்ப படித்திருக்கிறேன். மேலும் அருகில் இருக்கும் நூலகங்களில் தெனாலிராமன், மரியாதை ராமன், விக்கிரமாதித்தன் உள்பட பல கதைகளை படித்திருக்கிறேன். 



இது எனக்கு மட்டுமல்ல பெரும்பாலான நண்பர்களின் அனுபவமாக இருக்கும். அந்த காலத்திலேயே குழந்தைகள் இலக்கியத்துக்கு அவ்வளவாக முக்கியத்துவம் தரப்படவில்லை ஆனாலும், ஒரு சில பத்திரிக்கைகள் குழந்தைகள் மலருக்காக கொஞ்சம் சிரத்தை எடுத்தது உண்மை. ஆனால் தற்காலத்தில் குழந்தைகளுக்கு வாசிக்கும் பழக்கம் என்று ஒன்றே இல்லாமல் போய் விடுமோ என்று அச்சமாக உள்ளது. குழந்தைகள் மலர் வெளியிடும் பத்திரிக்கைகளும் முன்பு போல மிக சுவாரசியமான விஷயங்களை வெளியிடுவதில்லை. தற்கால குழந்தைகளை தொலைக்காட்சியும் கணிப்பொறியுமே முழுக்க ஆக்கிரமித்துள்ளது. அப்படியானால் தற்கால குழந்தைகளுக்கு இந்த மாதிரி எந்த வாய்ப்புமே இல்லையா என்று கேட்க தோன்றும். இருக்கிறது, ஆனால் அவை நாம் தாய்மொழியில் கிடையவே கிடையாது. ஹாரிபாட்டர் கதைகளை இருபது வருடங்களுக்கு முன்னமே அம்புலி மாமா கதைகள் படித்தவர்களுக்கு தெரியும். 



பத்திரிக்கை துறை இப்படி இருக்க, தொலைக்காட்சி மற்றும் சினிமா துறை இன்னும் மோசம். குழந்தைகளை கண்டுகொள்வதே இல்லை. வன்முறை மிகுந்த கார்ட்டூன் தொடர்கள், நாடகங்களே குழந்தைகளை கவர்கிறது. கந்தசாமி படத்தை சுசி கணேசன் வாய் கூசாமல் குழந்தைகளுக்கான படம் என்று கூறினார். பசங்க பாண்டியராஜன் கூட, குழந்தைகளை வைத்து பெரியவர்களுக்கான படமே எடுத்தார். அதில் கொஞ்சமேனும் குழந்தைகளுக்கான விஷயங்களை சேர்த்திருப்பார். மற்ற நாடுகள் போல முழு நீள குழந்தைகளுக்கான படங்கள் என்பது இங்கு கிடையவே கிடையாது. இங்கிருக்கும் எல்லா இயக்குனர்களுமே சமுதாயத்தை திருத்துவது போல படமெடுக்கிறேன் என்று அதில் எல்லோரையும் கவரும் விதமாக சில மசாலா ஐட்டங்களை சேர்த்து வெளியிடுகின்றனர். ஆனால் உண்மையில் ஒரு சமுதாயத்தை திருத்த வேண்டுமானால் அது நாளைய சமுதாயத்தை அதாவது குழந்தைகளை மனதில் கொண்டு இருக்கவேண்டும். நல்ல குத்து பாட்டும், அதிரடி சண்டைக்காட்சிகளும் ஒரு சில சாகசங்களும் இருந்தாலே அது குழந்தைகளுக்கான படம் என்று ஆகி விடாது. 



இவற்றுக்கெல்லாம் முக்கிய காரணம் வியாபார நோக்கமே. குழந்தைகளுக்கான புத்தகங்கள், படங்கள் ஆகியவை மிக குறைந்த லாபத்தை தருவதாக இருப்பதும், பெரும்பாலான பெற்றோர் எந்த ஒரு விஷயமும் ஆங்கிலத்தில் இருந்தால்தான் அது தரமானதாக இருக்கும் என்று தவறாக எண்ணுவதே இதன் முக்கிய காரணங்கள். இந்த மாதிரி புத்தகங்கள் மற்றும் படங்கள் தாய்மொழியில் இருப்பதால், சம்பந்தப்பட்ட குழந்தைகளுக்கு சிந்திக்கும் திறன் பல மடங்கு அதிகரிப்பதோடு, தாய்மொழி அறிவும் வளரும் என்று யாரும் சிந்திப்பதில்லை.  ஒரு சில ஒழுக்கங்கள் மற்றும் மாரல்கள் வளர்ந்த பிறகு எவ்வளவு படித்தாலும் மண்டையில் ஏறுவதில்லை. ஆனால் அவையே நாம் சிறுவயதில் கதையாக படிக்கும்போது நாம் குணாதிசயமாகவே மாறிவிடுகிறது. குழந்தைகள்தானே என்று விளையாட்டாக எடுத்துக்கொள்ளாமல், அவர்கள் நாளைய சமுதாயம் என்று செயல்பட வேண்டும். அதற்கு குழந்தைகளுக்கான புத்தகங்கள், கதைகள், திரைப்படங்கள் நிறைய வரவேண்டும். 

உங்க கருத்துக்களை இங்கே பதிவு பண்ணுங்க.... 
 

13 comments:

கவிதை வீதி... // சௌந்தர் // said...

நல்லதொரு பதிவு

கவிதை வீதி... // சௌந்தர் // said...

தொலைக்காட்சி கார்டூன்கள் வந்துவிட்டு பிறகு குழந்தைகளை அடிமைபடுத்தி விட்டது...

அதனால் குழந்தைகள் புத்தகங்களில் படங்களை பார்த்து தெரிந்துகொள்ளுதல்..
சிறுவர் கதைகள் படித்தல்போன்ற விஷயங்கள் குறைந்திருக்கிறது...


குழந்தைகளை அறிவு பூர்வமாண விஷயங்களை கற்க ஊக்குவிக்கவேண்டும்...


வாழ்த்துக்க்ள...

r.v.saravanan said...

இவற்றுக்கெல்லாம் முக்கிய காரணம் வியாபார நோக்கமே. குழந்தைகளுக்கான புத்தகங்கள், படங்கள் ஆகியவை மிக குறைந்த லாபத்தை தருவதாக இருப்பதும், பெரும்பாலான பெற்றோர் எந்த ஒரு விஷயமும் ஆங்கிலத்தில் இருந்தால்தான் அது தரமானதாக இருக்கும் என்று தவறாக எண்ணுவதே இதன் முக்கிய காரணங்கள்.

correct bala

சுசி said...

மிக நல்ல பகிர்வுங்க.

K.s.s.Rajh said...

//// ஐந்து வயதில் இருந்தே அம்புலிமாமாவின் ரசிகன் நான். சிறுவர் மலர், கோகுலம் கதிர் வந்தவுடன் முதலில் என் கைக்கே வரும். இதோடல்லாமல், ஏகப்பட்ட காமிக்ஸ் வகைகளை திரும்ப திரும்ப படித்திருக்கிறேன். மேலும் அருகில் இருக்கும் நூலகங்களில் தெனாலிராமன், மரியாதை ராமன், விக்கிரமாதித்தன் உள்பட பல கதைகளை படித்திருக்கிறேன்./////

உண்மையான ஆதங்கம் பாஸ் இப்ப எல்லாம் எங்கே இப்படியான படைப்புக்கள் குழந்தைகளுக்கு வருகின்றது...இப்பவாவது கொஞ்சம் வருகின்றது இனி வரும் காலத்தில் நீங்கள் சொன்ன மாதிரி தமிழில் முற்று முழுதாக நின்றுவிடும்...ம் என்ன செய்வது..

Yoga.S. said...

வணக்கம் சார் உண்மைதான். பெண்களுக்கென்று பல மலர்கள்,வெளிவர ஆரம்பித்த பின்னர் தான் இந்த நிலை என்று தோன்றுகிறது!சரி,காசு பார்க்கவேண்டுமென்று பத்திரிகைகள் அலைகிறது தான்!அந்தப் பெண்களுக்கான பத்திரிகைகளிலாவது சில பக்கங்களை குழந்தைகளுக்கென்றும் ஒதுக்கலாமே??????

shanmugavel said...

கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயம்,அழுத்தமான பகிர்வு.

Mohammed Arafath @ AAA said...

neenga solrathu unmai than bala sir... nanum chinna vayasula verithanama siruvar malar. rani comics kathaikal padichavan than.. innum solla pona ipavum padika arvama than iruken.. aana neram than illa...

ipo ulla siruvarkaluku padichu therichukara alavu time ila.. visual la pakaranga tv la..

பால கணேஷ் said...

யப்பா பாலா... இன்னிக்கு குழந்தைங்களுக்கு ஸ்கூல் புத்தகங்களைப் படிக்கிறதே பெரிய விஷயம். இந்த பேரண்ட்ஸ் இருக்காங்களே... மியூசிக் கிளாஸ், கராத்தே கிளாஸ், நீச்சல் கிளாஸ்னு வேற நிறையக் குழந்தைங்களச் சேத்து படுத்தி எடுக்கறாங்க. புத்தகம் படிக்கற பழக்கத்தை எத்தனை பேரன்ட்ஸ் தங்கள் குழந்தைகளுக்கு ஏற்படுத்தறாங்ன்னு சொல்லுங்க... அப்புறம்ல குழந்தை இலக்கியம்லாம் வரும்? பத்தாததுக்கு குழந்தைங்களோட கொஞ்ச ஓய்வு நேரமும் போகோ ‌மாதிரி சானல்கள்ல போயிடுது. என்னத்தச் சொல்ல..?

ஹாலிவுட்ரசிகன் said...

அம்புலிமாமா, கோகுலம் இதழ்களில் சிறுவயதைக் கழித்தவன் நான். சிலநேரங்களில் முழுநாளையும் லைப்ரரியில் கழித்தமையும் உண்டு.

// ஹாரிபாட்டர் கதைகளை இருபது வருடங்களுக்கு முன்னமே அம்புலி மாமா கதைகள் படித்தவர்களுக்கு தெரியும் //
100% உண்மை.

இப்பொழுதெல்லாம் பதிவுகளை வாசிக்கவே நேரம் சரியாக போய்விடுகிறது. அதுக்குள்ள எங்க புத்தகங்கள் படிக்கிறது? (ஒரு பெரிய குழந்தை பேசுகிறது)

Karthikeyan said...

மிக அருமையான பதிவு பாலா.. உங்களின் ஆதங்கம் எனக்கும் உண்டு. சிறு வயது நினைவுகளை கொண்டு வந்தது உங்கள் பதிவு. ஆர்ச்சியின் படம் நீண்ட வருடங்களுக்கு பிறகு என் கண்ணில் தெரிகிறது. இரும்புக்கை மாயாவி, இன்ஸ்பெக்டர் ஆசாத் இவர்களையும் மறக்க இயலாது.

சீனுவாசன்.கு said...

பால் பொங்குச்சா?

சீனுவாசன்.கு said...

பால் பொங்குச்சா?

Related Posts Plugin for WordPress, Blogger...