மு.கு 1: இது மிக சீரியஸான பதிவு. போரடிக்கும் என்று முதலிலேயே சொல்லி விடுகிறேன்
மு.கு 2: இங்கே கடவுள் என்ற பதம் ஒரு குறிப்பிட்ட மதத்தையோ, குறிப்பிட்ட கடவுளை மட்டும் குறிக்கவில்லை.
கடவுள். என்ன ஒரு உன்னதமான ஒரு சொல்!! நம்புபவன், நம்பாதவன் எல்லோருடைய எண்ணங்களுமே இவரை சுற்றியே பெரும்பாலும் இருக்கிறது. உலகம் தோன்றிய காலத்தில் இருந்தே கடவுள் என்ற சொல்தான் மிக மிக சர்ச்சைக்குரிய ஒரு சொல். உலகிலேயே அதிகம் பாராட்டப்பட்டவர் கடவுள். அதிகம் இகழப்பட்டவர் கடவுள், அதிகம் விமர்சிக்கப்பட்டவரும் கடவுள்தான். இப்படி எங்கும் நிறைந்திருப்பதால்தான் அவரை கடவுள் என்கிறார்களோ என்னவோ? இப்போது நான் சொல்வது கடவுள் இருக்கிறாரா? இல்லையா? என்பதை பற்றிய ஆராய்ச்சி அல்ல. இருக்கிறாரோ இல்லையோ, அவரை வைத்து பல்வேறு மோசடிகள் நடக்கின்றன. அதைப்பற்றித்தான்.
இறை மறுப்பாளர்கள் என்பவர்கள் காலந்தோறும் இருந்து வருகிறார்கள். இவர்களிடம், "உங்களுக்கு ஏன் கடவுள் நம்பிக்கை இல்லாமல் போய் விட்டது?", என்று கேட்டால், அவர்கள் சொல்லும் பதில், "கடவுள் என்ற ஒருவர் இருந்தால், அவர் கருணை வடிவானவராக இருந்தால், மனிதர்களுக்கு ஏன் இவ்வளவு கஷ்டங்கள்? கவலைகள்? நோய் எதற்கு? வறுமை எதற்கு? ஏற்றத்தாழ்வுகள் எதற்கு?", என்று கேட்பார்கள். "கடவுள் என்ற நம்பிக்கை மனிதனை சோம்பேறி ஆக்கும் ஒரு விஷயம். அவனது போராடும் குணத்தை மந்தப்படுத்தும் ஒரு விஷயம்." என்றும் சொல்வார்கள். மேலும், "கடவுள் என்பது கயவர்களின் கண்டுபிடிப்பு. மக்களை ஏமாற்றி பிழைக்க சில அயோக்கியர்களால் கண்டு பிடிக்கப்பட்டவரே கடவுள். கடவுளின் பெயரை சொல்லி எத்தனை சாமியார்கள் மக்களின் பணத்தை பறிக்கிறார்கள்? பெண்களின் கற்பை சூறையாடுகிறார்கள்? அப்படியானால் கடவுள் மோசடி செய்பவர்களை தண்டிக்க வேண்டுமே? தண்டிக்கிறாரா? இல்லையே? பின்னே என்ன கடவுள்?", என்று ஆதங்கத்தை வெளிப்படுத்துவார்கள்.
உண்மைதான் கடவுள் பெயரால் பல மோசடிகள் உலகில் நடந்து வருகிறதுதான். அதற்கு கடவுள் எப்படி பொறுப்பாக முடியும்? செய்யும் தப்பை எல்லாம் செய்துவிட்டு, "கடவுளுக்கு சக்தி இருந்தால் தடுக்கச்சொல் பார்க்கலாம்?", என்று சொல்வது எந்த வகை பண்பு? நியூட்டன் சொன்னது போல எந்த ஒரு நிகழ்வுக்கும் ஒரு எதிர் விளைவு உண்டு. இதுதான் பலாபலன். இதுதான் விதி. "நாம் கண் முன்னே ஒருவன் தவறு செய்கிறான் என்றால் அதை கண்டும் காணாமல் சென்று விடு.", என்று எந்த கடவுளும் சொல்லவில்லை. கடவுளை பொறுத்தவரை எல்லா செயல்களுக்குமே சமமான எதிர்விளைவுகள் உண்டு. இதை தவிர்க்கவே முடியாது. ஆனால் அது எந்த வழியில் வரும், யார் மூலமாக வரும் என்பதுதான் யாருக்கும் புரியாத சூட்சமம்.
சரி இறைநம்பிக்கையாளர்கள் எல்லோரும் சோம்பேறிகள்தான். பலர் மோசடிக்காரர்கள்தான். இது உண்மையானால், இறை மறுப்பாளர்கள் எல்லோருமே நல்ல பண்பாளர்களாக, நேர்மையாளர்களாக இருக்க வேண்டுமே? சமீபத்தில் ஒரு வலைத்தளத்தில் பெரியார் எழுதிய ஒரு கட்டுரையை வெளியிட்டிருந்தார்கள். அறுபது ஆண்டுகளுக்கு முன்னால் அவர் எழுதிய அந்த கட்டுரையை அச்சு பிசகாமல் அப்படியே வெளியிட்டிருந்தார்கள். அது சமகாலத்துக்கும் பொருந்தும் என்ற நோக்கம் அதில் தெரிந்தது. அந்த கட்டுரையின் சாராம்சம் இதுதான். நம் தேசம் கடவுள் நம்பிக்கையால் இன்னும் முன்னேறாமல் இருக்கிறதாம். நாம் தினமும் பயன்படுத்தும் அறிவியல் கண்டுபிடிப்புகள் அனைத்தும் மேலை நாட்டவர் கண்டுபிடித்ததாம். அதை எல்லாம் நாம் பயன்படுத்திக்கொண்டே, கடவுளை கொண்டாடி மூட நம்பிக்கையில் உழன்று கொண்டிருக்கிறோமாம். இந்த கட்டுரை மட்டுமல்ல, இதே போன்ற கருத்தை பல்வேறு நண்பர்களும், கருத்துரை மூலமாகவோ, பதிவுகள் மூலமாகவோ கூறி வருகின்றனர். மேலோட்டமாக பார்த்தால் இது சரி என்றே தோன்றுகிறது.
இந்த கட்டுரையை படித்தவுடன் எனக்கு இரண்டு சந்தேகங்கள் தோன்றின. முதலாவது, மேலை நாட்டில் கடவுள் நம்பிக்கை கிடையாதா? இல்லை இந்த மாதிரி அறிவியல் அறிஞர்கள் எல்லோருமே இறை மறுப்பாளர்களாக இருந்தார்களா? இந்த கேள்விக்கு உண்மையான பதில், இல்லை என்பதுதான். உலகமெங்கும் கடவுள் நம்பிக்கை என்பது நீக்கமற நிறைந்திருக்கிறது. அதே போல, அறிவியல் அறிஞர்களில் தீவிர இறை மறுப்பாளர்களும் உண்டு, அதீத கடவுள் பக்தி கொண்டவர்களும் உண்டு. இதற்கு சிறந்த உதாரணம் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன். கடைசி வரை அவர் கடவுளை நம்பினார் . இரண்டாவது சந்தேகம், இந்தியாவில் அறிவியல் அறிஞர்களே கிடையாதா? இல்லை அவர்கள் சொல்வது போல இந்தியா அறிவியலுக்கு எந்த பங்களிப்பும் தரவில்லையா? இந்த கேள்விக்கு பதில் வேண்டுமானால் List of Indian Scientists என்ற பெயரில் இணையத்தில் தேடிப்பாருங்கள். இவர்கள் அனைவருமே இறை நம்பிக்கையாளர்களும் இல்லை. மறுப்பாளர்களும் இல்லை. ஆக ஒரு நாடு முன்னேறாமல் போனதற்கு மூட நம்பிக்கைகள் மட்டுமல்ல, வேறு பல காரணங்களும் உண்டு. நம்மூர் பகுத்தறிவாளர்கள்தான் சைக்கிள் கேப்பில் ஆட்டோ என்ன, கப்பலே ஒட்டுவார்களே? ஒரு குறிப்பிட்ட சாதி துவேசத்தை தூண்டும் பொருட்டு, இந்த விஷயத்தில் கடவுள் என்ற வஸ்துவை கையில் எடுத்திருக்கிறார்கள் அவ்வளவே.
உடனே மற்றவர்கள், "அவர்கள் எல்லோரும் போலி நாத்திகர்கள், நாத்திகத்தை கொள்கையாக அல்லாமல் ஒரு தொழிலாக கொண்டவர்கள். அவர்களை வைத்து பகுத்தறிவை எடைபோடக்கூடாது." என்று கூறுவார்கள். மிக மிக குறைந்த சதவீதம் மக்கள் தொகையை கொண்டவர்களுக்குள்ளேயே போலிகள் இருக்கும்போது, மிக மிக அதிக மக்கள் தொகையை கொண்ட இறை நம்பிக்கையாளர்களுள் போலிகள் என்பது மிக சாதாரணம்தானே? இன்னொரு நண்பர் இன்னும் கொஞ்சம் இறங்கி வந்து, "நான் கடவுள் நம்பிக்கையை குறை சொல்லவில்லை, ஆனால் அதை ஒரு பொது விதியாக்கி, மற்றவர்களுக்கும் கற்பிப்பதுதான் தவறு." என்று கூறினார். சரிதான், என் நம்பிக்கையை என் குழந்தைக்கும் நான் விதைப்பது தவறுதான். ஆனால் இதையேதானே பெரும்பாலான இறை மறுப்பாளர்களும் செய்கிறார்கள்? தங்கள் குழந்தைகள் கடவுள் சம்பந்தமான விஷயங்களை தெரிந்து கொள்ளக்கூடாது என்று நினைக்கிறார்கள்? இதுவும் தவறுதானே? கடவுள் நம்பிக்கை வைத்திருப்பவன் எல்லோரும் அயோக்கியன், மூடன், காட்டு மிராண்டி, என்று பரிகாசம் செய்கிறார்கள்? இதுவும் ஒரு வகை கருத்து திணிப்புதானே?
ஒரு சிலரை தவிர பெரும்பாலான மனிதர்கள் தன் வாழ்வில் ஏதோ ஒரு கட்டத்தில் நாத்திகனாக மாறுகிறான். அதற்கு பல்வேறு காரணங்கள் உண்டு. வாழ்வில் ஏற்பட்ட விரக்தி, தான் கற்ற கல்வியின் ஆதிக்கம், பிற ஊடகங்களின் பாதிப்பு என்று நிறைய விஷயங்கள் அவர்களது மனதை ஆக்கிரமிக்கிறது. இந்த காலகட்டத்திலேயே கடவுள் குறித்த உண்மையான தேடல் தொடங்குகிறது. இதை சரியான வாய்ப்பாக பயன்படுத்தும் மோசடி பேர்வழிகள் இவர்களை மூளை சலவை செய்ய தொடங்குகிறார்கள். விரக்தி அடைந்தவரை கடவுள் பக்கமும், கல்வி கற்று பொருளாதார ரீதியாக பலமாக இருப்பவரை நாத்திகம் பக்கமும் இழுப்பது மிக சுலபம். இரண்டுமே மோசடிதான். இரண்டு பக்கமுமே சில பல உண்மைகள் திரித்தே சொல்லப்படுகிறது. இவர்களின் நோக்கம் மக்களை நல்வழிப்படுத்துவது அல்ல. தன் பக்கம் கூட்டம் சேர்ப்பது. ஆகவே மனிதர்கள் கடவுளை தேட தங்களின் பகுத்தறிவை பயன்படுத்துவது முக்கியம். ஆனால் பெரும்பாலானவர்கள் அடுத்தவரின் பகுத்தறிவை தன்னுடையது என்று நினைத்துக்கொள்வதாலேயே ஏதோ ஒரு பக்கம் கண்மூடித்தனமாக சாய்ந்து விடுகிறார்கள்.ஒரு அப்பட்டமான குற்றச்சாட்டை இங்கே வைக்கிறேன். பெரும்பாலான இளைஞர்களுக்கு கடவுள் நம்பிக்கை இருப்பதில்லை. இதன் முக்கிய காரணம், இந்த கால கட்டத்தில் பணம்தான் கடவுள் என்கிற விஷயம் அவர்கள் மனதில் ஆழ வேரூன்றி விடுகிறது. பணமிருந்தால் எதையும் சாதிக்கலாம் என்ற எண்ணம் தலை தூக்கி விடுகிறது. மேலும் ஏதேனும் ஒரு மதத்தை சார்ந்திருப்பது, தனது சுதந்திரமான செயல்களுக்கு இடைஞ்சல் தரும் என்பதாலேயே கடவுள்கள் மீது ஈடுபாடு இல்லாமல் போய் விடுகிறது. மற்றபடி கொள்கைரீதியாக கடவுள் மறுப்பு உள்ளவர்கள் மிக சொற்பமே. அதிலும் இதை வாழ்நாள் முழுவதும் கடைபிடிப்பவர்கள் ஒரு சிலரே.
என்னை பொறுத்தவரை, கடவுளை புகுத்துபவனும், மறுப்பவனும் மோசடிக்காரர்களே. கடவுளை தேடுபவனே உண்மையான பகுத்தறிவாளன்.
உங்க கருத்துக்களை இங்கே பதிவு பண்ணுங்க....
34 comments:
Good Post!
கடவுள் பற்றிய கருத்துக்கள் அருமை. மதங்களும், மதவாதிகளும், நாத்திகமும் நாத்திகவாதிகளும், மக்களுக்கு நன்மை செய்வதைவிட கூட்டு சேர்க்கவே செய்கிறார்கள் என அழகாக விளக்கி இருக்கிறீர்கள்.
பகிர்வுக்கு மிக்க நன்றி..
http://anubhudhi.blogspot.com/
பாலா... கடவுள் மறுப்பு என்பதற்கும் கேரக்டருக்கும் யாதொரு சம்பந்தமுமில்லை. கடவுள் உண்டு என்று நம்புபவர்களுக்குள்ளும் பல குழப்பங்கள் உண்டுதான். ஒரு மகான் (பெயர் மறந்து போச்சு) கற்பழிக்கப்பட்ட ஒரு பெண்ணிடம் “நதியில் ‘ராமா ராமா ராமா’ என மூன்று முறை சொல்லி மூழ்கி எழுந்தால் புனிதமாவாய்” என்க, அவரின் அன்னையார் சொன்னது: “என் மகனுக்கு இன்னும் கடவுள் தெரியவில்லை. ராமா என ஒருமுறை சொன்னாலே போதுமே...” என்பது. இறை நம்பிக்கை என்பது ஆழமாக இருப்பவர்களுக்கும், அறவே இல்லாதவர்களுக்கும் பிரச்னை இல்லை. அரைகுறையாய் இருப்பவர்கள்தான் அவதிப்படுகிறார்கள் என்பது என் எண்ணம். (ரொம்ப குழப்பிட்டனா) நல்லதொரு பிரச்னையை அலசிய இன்னும் சிந்திக்கத் தூண்டிய உங்களுக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும். (எப்படா இதுமாதிரி சீரியஸா எழுதப் போற கணேஷ்?)
மிக குறைந்த அளவுள்ள நாத்திகத்திலேயே இத்தனை போலிகள் இருந்தால் - அதிக மக்கள் தொகை உள்ள ஆத்திகத்தில் எத்தனை போலிகள் இருக்க மாட்டார்கள்.....
சத்தியமான, அற்புதமான வார்த்தைகள் பாலா.
ஆராய்ச்சிப் பதிவு.கடவுளயே (சிலைகளை)கடத்திட்டு போனாலும் அவர் கம்னுதான் இருக்கார்.கோவில் காவலாளியக் கூட காப்பாத்தமாட்றார்.
மனிதன் நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் நடப்பதையெல்லாம் ஏற்றுக்கொள்ளும் பக்குவம் வந்துவிட்டால் கடவுள் என்ற வார்த்தைக்கு இடம் இருக்காதுன்னு நினைக்கிறேன்.
நல்ல அலசல் ..
அதிசயம் ஆனால் உண்மை
கேமரா இல்லாமல் போட்டோ எடுக்கும் அதிசய சாப்ட்வேர்(ராஜபாட்டை ஸ்பெஷல் )
மாப்ள நல்ல அலசல்...இங்கு கடவுள் எதிர்ப்பாளர்கள் சிலர் இப்படி எதிர்ப்பதை என்னவோ சாதனை என்றல்லவா நினைத்து பெருமை பட்டுக்கொள்கின்றனர்..இருப்பவனுக்கு இருக்கான்..இல்லை என்பவனுக்கு இல்லை அவ்வளவே சர்தானே!
ஒரு நாடு முன்னேறாமல் போனதற்கு மூட நம்பிக்கைகள் மட்டுமல்ல, வேறு பல காரணங்களும் உண்டு. நம்மூர் பகுத்தறிவாளர்கள்தான் சைக்கிள் கேப்பில் ஆட்டோ என்ன, கப்பலே ஒட்டுவார்களே? ஒரு குறிப்பிட்ட சாதி துவேசத்தை தூண்டும் பொருட்டு, இந்த விஷயத்தில் கடவுள் என்ற வஸ்துவை கையில் எடுத்திருக்கிறார்கள் அவ்வளவே./
நிறைவான அருமையான பகிர்வு..
இரை தேடுவதுடன்
இறை தேடலே மானிட மாண்பு!
// ஒரு அப்பட்டமான குற்றச்சாட்டை இங்கே வைக்கிறேன். பெரும்பாலான இளைஞர்களுக்கு கடவுள் நம்பிக்கை இருப்பதில்லை. இதன் முக்கிய காரணம், இந்த கால கட்டத்தில் பணம்தான் கடவுள் என்கிற விஷயம் அவர்கள் மனதில் ஆழ வேரூன்றி விடுகிறது. பணமிருந்தால் எதையும் சாதிக்கலாம் என்ற எண்ணம் தலை தூக்கி விடுகிறது. மேலும் ஏதேனும் ஒரு மதத்தை சார்ந்திருப்பது, தனது சுதந்திரமான செயல்களுக்கு இடைஞ்சல் தரும் என்பதாலேயே கடவுள்கள் மீது ஈடுபாடு இல்லாமல் போய் விடுகிறது. மற்றபடி கொள்கைரீதியாக கடவுள் மறுப்பு உள்ளவர்கள் மிக சொற்பமே. அதிலும் இதை வாழ்நாள் முழுவதும் கடைபிடிப்பவர்கள் ஒரு சிலரே. //
மிக அருமையாக சொன்னீர்கள்!
// என்னை பொறுத்தவரை, கடவுளை புகுத்துபவனும், மறுப்பவனும் மோசடிக்காரர்களே. கடவுளை தேடுபவனே உண்மையான பகுத்தறிவாளன். //
மிக மிக அருமை....என்னுடைய கருத்தும் இதுவே !
கடவுளை தேடுபவனே உண்மையான ஆத்திகன். இந்த கட்டுரை அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய விழிப்புணர்வு கட்டுரை.
நல்ல தெளிவான அனைவருக்கும் புரியும்படியான அலசல்...
மிக நல்ல விளக்கமான பதிவு
////செய்யும் தப்பை எல்லாம் செய்துவிட்டு, "கடவுளுக்கு சக்தி இருந்தால் தடுக்கச்சொல் பார்க்கலாம்?", என்று சொல்வது எந்த வகை பண்பு?////
தவறுகளுக்கு கடவுள் பொறுப்பாக முடியாது என்பது என்னோவோ உண்மை தான். அப்படியானால் மனிதனின் தனிப்பட்ட வெற்றிகளும், சாதனைகளும், நன்நடத்தைகளும் கூட அவனது முயற்சியால் உண்டானது என்பதும் உண்மையாக வேண்டும் அல்லவா. அங்கு மட்டும் எப்படி கடவுள் பொறுப்பாகிறார். இதை தான் பெரியார் கடவுளின் பெயரால் நாம் பின் தங்கி உள்ளோம் என்றார். மனிதன் முதலில் தோற்றால் கடவுள் அனுகிரகம் இல்லை என்று அப்படியே ஒதுங்கி விடுகிறான்.
கடவுள் இருக்கிறாரா இல்லையா -- இது அவரவர் விருப்பம்.
என்னைப் பொறுத்தவரை.. கடவுள் இருக்கிறார்..... நான் என்னால் முடிந்தவரை சக மனிதருக்கு நல்லதே நினைக்க / செய்ய வேண்டும் ..
@Robin
Thank you very much
@Sankar Gurusamy
மிக்க நன்றி நண்பரே. என்னை விட நீங்கள் இது குறித்து மிக அருமையாக எழுதி இருக்கிறீர்கள்.
@கணேஷ்
தெளிவாதான் சொல்லி இருக்கிறீர்கள். சீரியஸா இருந்தாலும், காமெடியா இருந்தாலும் சொல்ல வந்த விஷயத்தை சொன்னால் போதாதா? மிக்க நன்றி சார்.
@thirumathi bs sridhar
உண்மைதான். கடவுள் என்பவர் ஒவ்வொரு பேரின் கண்ணுக்கும் ஒரு மாதிரி தெரிவார். அந்த கடவுளை கண்டுகொள்பவனே பக்குவம் அடைகிறான். அது கோவிலில்தான் இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை.
@"என் ராஜபாட்டை"- ராஜா
நன்றி நண்பரே
@விக்கியுலகம்
கரெக்ட் மாப்ள. சிம்ப்ளா சொல்லீட்டீங்க
@இராஜராஜேஸ்வரி
நன்றிங்க
@Enathu Ennangal
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே
@NKS.ஹாஜா மைதீன்
கருத்துக்கு நன்றி நண்பரே
@சென்னை பித்தன்
நன்றி சார்
@சுதன்
உண்மைதான். நான் சொன்னது விதண்டாவாதம் செய்பவர்களைப்பற்றி. நாம் வெற்றிகளுக்கு மட்டுமல்ல தோல்விகளுக்கும் கடவுளே பொறுப்பு. முயற்சியை கைவிடுபவன், தவறாக புரிந்து கொண்டுள்ளான் என்று அர்த்தம் அல்லது தவறாக போதிக்க பட்டுள்ளான் என்று அர்த்தம்.
@Madhavan Srinivasagopalan
மறுக்க முடியாத உண்மை. கருத்துக்கு நன்றி நண்பரே
ஒரு காலத்தில் பூமி தட்டையானது என்று உலகத்தின் 90 விழுக்காட்டினர் நம்பினர். பின்னர் அது தவறு என்று நிருபனம் செய்யப்பட்டுவிட்டது. நம்பிக்கைகள் என்பது வளர்ச்சிக்குரியது, பழைய நம்பிக்கைகள் தற்போது இல்லை. பண்டைய தெய்வங்கள் தற்பொழுது வழக்கில் இல்லை, சதுர்த்தியின் போது சிலைகளில் வினாயகர் அன்னா ஹசாரேவாக அவதாரம் எடுக்கிறார். எனவே நம்பிக்கைகள் உண்மைசார்ந்த ஒன்று இல்லை, அவை நம்பிக்கை மட்டுமே.
சொரிமுத்து என்ற ஒரு சாமியை பழங்காலத்தில் கும்பிட்டு இருப்பார்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள், தற்பொழுது அது இல்லை, அவை காலஓட்டத்தில் செத்துப் போய்விட்டது எனலாம். புதிய மதத்தின் தோற்றம் என்பது பழைய மதங்களின் வீழ்ச்சி என்று கொள்ளத்தான் முடியுமே அன்றி அவையும் மதக் கூறுகளில் ஒன்று என்று கொள்ளவே முடியாது.
கடவுள் கொள்கைகள் என்று திணிக்கப்படுபவைகள் பெரும்பாலும் தான் தோன்றித்தனமாக இருப்பதால் நாத்திகன் ஒருவாகிறான், ஒரு தேவநாதன், ஒரு கல்கிசாமி, ஒரு நித்தியானந்தா, ஒரு ஜெயந்திர சரஸ்வதி போன்று பெண் பித்துகளில் அடிப்பட்டவர்களை வணங்கச் செல்பவர்களை தடுப்பது கடவுள் நம்பிக்கை எதிரானது நாத்திகம் என்றுச் சொன்னால் உங்களால் தமிழக மக்கள் தொகையில் பாதியை நாத்திகனாகப் பார்க்க முடியும்.
முன்னோர்கள் சொன்னதை கிளிப்பிள்ளையாக கேட்காமல் முன்னோர்களில் முட்டாள்களும் உண்டு என்று கருதியதால் தான் பூமி உருண்டை என்று நிருபனம் செய்த கலிலியோவிற்கு கொடுத்த மரண தண்டனையை நினைத்து கிறித்துவம் தலைகுணிகிறது. இது போன்ற தலைகுணிவுகளை நாமும் செய்தால்
'பூமியை பாயாக சுருட்டி கடலுக்குள் ஒழித்தான் கண்ணன்' என்பதையும், தட்டையாக இல்லாத பூமியை ஒரு பாதத்தால் அளந்தான் மறுபாதத்தால் இல்லாத வானத்தை அளந்தான் மூன்றாம் பாதத்திற்கு இடம் இல்லாத போகவே மாவலி சக்ரவர்த்தியை மண்ணுக்குள் புதைத்தான் என்ற பழமையான அவதாரக்கதைகளை புறக்கணித்திருக்க முடியும்.
@கோவி.கண்ணன்
பழங்கதைகள் என்பனவற்றை அப்படியே நம்பவேண்டும் என்ற கட்டாயம் இல்லை. அதை ஒரு இல்லஸ்ட்ரேசன்ஆக கூட கொள்ளலாம். மிகுந்த பலம் பொருந்திய ஒரு 'மனிதனை' கொஞ்சம் மிகைப்படுத்தி எழுதியவையாக கூட இருக்கலாம். நம் முன்னோர்கள் சொன்னதை கிளிப்பிள்ளையாக கேட்க தேவை இல்லை. தெரிந்து கொள்வதிலும் தவறு இல்லை.
நீங்கள் சொல்லும் மனிதர்களை கடவுளாக வணங்குவது என்பது முற்றிலும் தவறு. ஆனால் அவர்களை வைத்து ஓட்டு மொத்த மதத்தையும் எடை போடுவதும் தவறு. மதம் என்பது கடவுளை உருவாக்கவில்லை. கடவுள் பின்னாலேயே மதம் உருவானது. மதம் ஒரு அமைப்பு அல்ல. காலப்போக்கில் அப்படி ஆகி விட்டது. மதம் என்பது ஒரு பாதை அவ்வளவுதான். ஆனால் தற்போது அதை ஒரு இனமாக்கி, அடித்துக்கொள்வது வேதனையான விஷயம்.
எல்லா மதங்களுமே அடிப்படையில் கூறும் விஷயம், எல்லோருடனும் அன்பாய் இரு, பிறருக்கு தீமை செய்யாதே என்பதுதான். ஆனால் பிற்காலத்தில் தோன்றியவர்கள் இதற்கு மெருகேற்றுகிறேன் என்று அடிப்படை தத்துவத்தை கொஞ்சம் கொஞ்சமாக மாற்றி விட்டார்கள். இந்த அடிப்படை விஷயங்களை ஒருவர் செய்ய தொடங்கி விட்டாலே அவர் எந்த கடவுளையும் வணங்க தேவை இல்லை. ஏனென்றால் அம்மானிதர்களுக்கு அப்போதே கடவுளை பற்றிய உண்மைகள் தெரிய தொடங்கி விடும்.
அருமையான பதிவு, பாலா. சிந்திக்க தூண்டியது. வாழ்த்துக்கள். :-)
வழக்கம்போல மூன்றாவது கோணத்திலும் அலசப்பட்ட பதிவு. அருமை. கடவுள் என்பவனை உன்னுள் தேடு என்றுதான் எல்லா மதமும் சொல்கிறது. அகம் ப்ரம்மாஸ்மி என்பதன் அர்த்தமும் அதுதான். அறிவைத்தான் கடவுள் என்று அர்த்தம் கொள்ள வேண்டும். ஆனால் அந்த கடவுள் என்கிற விசயத்தை வைத்து அறிவினை மழுங்கடிக்கிறார்கள்.
@சரவணகுமரன்
உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி நண்பரே
@Karthikeyan
மிகச்சரியாக சொல்லி இருக்கிறீர்கள். நன்றி நண்பரே
என்னை பொறுத்தவரை, கடவுளை புகுத்துபவனும், மறுப்பவனும் மோசடிக்காரர்களே. கடவுளை தேடுபவனே உண்மையான பகுத்தறிவாளன்.
எனக்கும் இதுவே உண்மையாக தோன்றுகிறது... அருமையான பதிவு அன்பரே..
கருத்துக்கு நன்றி நண்பரே. அடிக்கடி வாங்க
Post a Comment