விவேகானந்தரின் நறுக்

கடவுள் நாம் விரும்பியதை கொடுப்பவர் அல்ல, நமக்குத் தேவையானதை கொடுப்பவர்...

January 31, 2012

பதிவர்கள் பலவிதம்



மு.கு: இது ஒரு மொக்கை பதிவு. சீரியஸ் பதிவோ உள்குத்து பதிவோ அல்ல

வணக்கம் நண்பர்களே... பதிவுகள் எழுதத் தொடங்கி கிட்டத்தட்ட இரண்டாண்டுகள் முடியப்போகிறது. நான் வந்தபோது ஏற்கனவே எழுதிக்கொண்டிருந்தவர்கள் இன்னும் எழுதுகிறார்கள். பலர் எழுதுவதை விட்டு விட்டார்கள். சிலர் எழுதாமல் விட்டதில் எனக்கும் நிறைய வருத்தம் உண்டு. இந்த இரண்டு வருட காலத்தில் பெரிதாக எதுவும் எழுதி விடாத நிலையில் பதிவர்களின் தன்மைகளைப் பற்றியாவது கொஞ்சம் புரிந்து வைத்திருக்கிறேன். பதிவர்கள் பல வகைப்படுவார்கள். தலைவர் ஸ்டைலில் சொல்வதாக இருந்தால் பதிவர்களை பொதுவாக மூன்று வகைக்குள் அடக்கலாம். சாத்வீகம், ப்ரசோதகம், பயானகம். இதற்குள்ளும் உட்பிரிவுகள் உண்டு

சாத்வீகம்

பதிவுலகில் இவர்கள் வாயில்லா பூச்சிகள். எந்த வம்பு தும்புக்கும் போகாதவர்கள். இவர்கள் பதிவுகள் மிகவும் சாந்தமாக இருக்கும். தானுண்டு தன் பதிவு உண்டு என்று இருப்பவர்கள். பெரும்பாலும் காதல் கவிதைகள், சிறுகதைகள், பார்வர்ட் மெயிலை பதிவாக எழுதுபவர்களாக இருப்பார்கள்.   பெரும்பாலான பெண் பதிவர்கள் இந்த பிரிவுக்குள் வந்து விடுவார்கள்இவர்கள் தவிர தொழில்நுட்ப பதிவர்களும் இதில் அடங்குவார்கள். வலைத்தள டிசைன்களுக்கு டிப்ஸ் என்று தொடங்கி பல்வேறு பயனுள்ள பதிவுகளை எழுதுவார்கள்இவர்களின் தன்மையை வலைத்தள டெம்ப்ளேட்டை வைத்தே கண்டுபிடித்து விடலாம். பூக்கள், மரங்கள், இலைகள், வண்ணத்து பூச்சிகள் என்று லேஅவுட் வைத்திருப்பார்கள். இவர்களை திட்டி கமெண்ட் போட்டாலும், வருகைக்கு நன்றி என்று கூறுவார்கள். அதே போல வேறு பதிவர்களின் தளத்திற்கு சென்றாலும், விமர்சனம் செய்யாமல், பாராட்டி விட்டு வந்து விடுவார்கள். இவர்களிடம் உள்ள ஒரு நல்ல குணம், யாருமே வந்து கமெண்ட் போடாவிட்டாலும் தங்களின் பணியை சிறப்பாக செய்வார்கள். பெரும்பாலான புதிய பதிவர்கள் முதலில் இந்த பிரிவிலேயே இருப்பார்கள். கொஞ்ச நாள் ஆன பிறகே அடுத்த பிரிவுகளுக்கு முன்னேறுகிறார்கள். மிகவும் சேஃப்பான ஆனால் அதே நேரம் அதிகம் கலெக்ஷன் ஆகாத பீல்குட் பிரிவு இது

ப்ரசோதகம்:



பெரும்பாலான பதிவர்கள் கடைசியாக வந்து சேரும் இடம் இதுதான். இந்த பிரிவினருக்குத்தான் பதிவுலகில் வரவற்பு அதிகம். இந்த வகை பதிவுகள் எழுதுவதற்கு நாட்டு நடப்பு அறிவும், கொஞ்சம் தில்லும் இருந்தால் போதும். இந்த வகை பதிவர்கள்,  'கில்மா பதிவர்கள்' என்று அழைக்கப்பட்டாலும் அதுவும் ஒரு உட்பிரிவுதான். கும்மி பதிவர்கள், சினிமா பதிவர்கள், மொக்கை பதிவர்கள், காக்டெயில் பதிவர்கள் என்று எல்லோருமே இந்த வகைக்குள் வந்துவிடுவார்கள். பதிவு எழுதுவதற்கு யோசிக்கிறார்களோ இல்லையோ, தலைப்பு வைக்கவே நிறைய யோசிப்பார்கள். இந்த பிரிவினரின் தலைப்புகள் மிக கவர்ச்சியாக, இலைமறை காய்மறையாக, அதே நேரம் இரட்டை அர்த்தத்துடன் இருக்கும். முதன் முதலில் படிப்பவர்கள் நாக்கை தொங்க போட்டுக்கொண்டு வந்து பல்பு வாங்குவார்கள். ஆனால் அவர்களை திருப்தி படுத்தும் வகையில் கண்டிப்பாக நடிகைகளின் படங்களாவது இருக்கும்.  இவ்வகை பதிவர்கள் வரம்பு மீறினாலும் அதை யாரும் சீரியசாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள். அதே போல யாராவது இவர்களை திட்டினாலும் சீரியசாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள். சினிமா, அரசியல் அவ்வப்போது விளையாட்டு என்று ஒரே கோட்டில் பயணிக்கும் இவர்கள், சிலநேரம் உள்குத்து எழுதி கலாய்த்து விடுவதும் உண்டு. இதில் காக்டெயில் பதிவர்கள், சாத்வீகம் மற்றும் பயானகம் பிரிவுக்குள் சென்று வருவதும் உண்டு.  நிறைய கருத்துக்கள் மற்றும் ஓட்டுகள் வாங்கும் இந்த பதிவர்களுக்கு இருக்கும் ஒரே பிரச்சனை, இவர்கள் சீரியசாக பேசினாலும் அதை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளாததுதான்.


பயானகம்: 

ரோட்டில் நடந்து போகும்போது ஆங்காங்கே நடக்கும் சண்டைகள், ஊர் வம்புகள், அரசியல் மேடைப்பேச்சுகள் ஆகியவற்றில் நீங்கள் ஆர்வம் காட்டுபவரா? கண்டிப்பாக இவ்வகை பதிவர்களை உங்களுக்கு தெரிந்திருக்கும். மிக மிக சீரியசாக பதிவுகள் எழுதும் இவர்களுக்குள்ளும் நல்லவர்கள், வம்புக்காரர் மற்றும் வீம்புக்காரர் என்று உட்பிரிவுகள் உண்டு. . நல்லவர்களின் பதிவுகள் நேர்மையாக, நடுநிலைமையாக அதே நேரம் பல சான்றுகளோடு இருக்கும். இவர்கள் மிக அரிதாக இருப்பவர்கள். மேலும் இவர்கள் பதிவுகள் மிக நீளமாக உப்பு சப்பில்லாமல் இருப்பதால் இவர்களுக்கு மவுசு குறைவு. ஆனால் தங்களை நல்லவர்கள் என்று நினைத்துக்கொண்டே தெரிந்து தெரியாமலோ வம்பு செய்பவர்களும் இருக்கிறார்கள். இவர்கள் பெரும்பாலும் தங்களுக்குரிய மேட்டர்களை பதிவுலகில் இருந்தே எடுக்கிறார்கள். பிற பதிவர்களின் செய்கைகளை விமர்சித்தோ அல்லது கடுமையாக திட்டியோ காரசாரமாக பதிவு எழுதுவார்கள். இந்த பதிவுகள் படிப்பவர்களுக்கு எதேனும் ஒரு வகையில் பாதிப்பை ஏற்படுத்தி விடும். இது வெறும் திரிதான். இதன் பின்னர்தான் பெரிய அணுகுண்டுகள் வெடிக்கும். இவரால் வம்பிழுக்கப்பட்டவர் பயானகமாகவோ அல்லது ப்ரசோதகமாகவோ இருந்து விட்டால் ஆட்டம் களை கட்டி விடும். இரு தரப்பினரும் அடியாட்களோடு ஆஜர் ஆகி விடுவார்கள். வம்புக்காரர்களின் பதிவுகளை விட, கருத்துரைப்பகுதிகளே மிக சுவாரசியமாக இருக்கும். கருத்துக்களை படிப்பதற்கென்று தனியே பெரிய வாசகர் வட்டமே உண்டு.  வாரக்கணக்கில், மாதக்கணக்கில் பதிவு யுத்தம் அல்லது கருத்து யுத்தம் நடக்கும். திடீரென்று எல்லோரும் தத்தம் வேலைகளைப்பார்க்க சென்று விடுவார்கள். நம்மாள் அடுத்த மேட்டரை தேடி சென்று விடுவார்


இதில் உள்ள மற்றொரு பிரிவினர்தான் வீம்புக்காரர். இவரோடு யாருமே சேரமாட்டார்கள். ஏனென்றால் கூட பழகும் நண்பரையே கடித்து விடும் குணமுடையவர். இவர் தனியாளாகத்தான் இருப்பார்.  ஒன் மேன் ஆர்மீதன் எண்ணம்போல கண்டபடி பதிவிடுவார். இது கண்டிப்பாக எதேனும் சமுதாய பிரச்சனையை அல்லது பதிவர்களை பற்றியே இருக்கும்தன் பதிவிற்கு வரும் கருத்துக்களை சாரி திட்டுக்களை ஒற்றை ஆளாக சமாளிப்பார். அதே நேரம் பிற பதிவர்களின் தளத்துக்கு சென்று ஒற்றை ஆளாக வம்பிழுத்து சளைக்காமல் போராடுவார். கடைசியில் எல்லோரும் சேர்ந்து இவரை காமெடி பீஸ் ஆக்கி விடுவார்கள். அது தெரியாமலேயே வெற்றி களிப்போடு திரும்பி வருவார். கொஞ்ச காலம் இப்படியே இருந்து விட்டு, பிறகு யாருமே வராத கடையில் உட்கார்ந்து தனக்குத்தானே புலம்பி கொண்டிருப்பார். பிறகு விரக்தியில் எழுதுவதையே விட்டுவிடுவார்

நிறைய மைனஸ் ஓட்டுக்களை வாங்கி குவிக்கும் பயானக பிரிவினரும் ஒரு வகையில் மிக பிரபலமானவர்களே. இவ்வகைப்பிரிவினர்களின் ஒரே பலம் மற்றும் பலவீனம், தனக்கு மட்டுமே இந்த சமூகத்தின் மீது அக்கறை உண்டு என்றும், மற்றவர்கள் எல்லோருமே போறம்போக்குகள், அவர்களை தன்னால் மட்டுமே திருத்த முடியும் என்று நினைப்பதுதான். கடைசியில் அந்த எண்ணம் பொய்யாகும்போது எழுதுவதை கொஞ்சம் கொஞ்சமாக நிறுத்தி விடுகிறார்கள் அல்லது ரூட்டை மாற்றி ப்ரசோதக ஜோதியில் ஐக்கியமாகி விடுகிறார்கள்

இன்ன பிற வகையினர்:

ஆர்வக்கோளாறு பதிவர்கள்: வந்த புதிதில் நிறைய அலப்பறை செய்து, எல்லோரையும் வம்பிழுத்து, அர்ஜண்ட் ரவுடியாக தன்னை காட்டிக்கொண்டு, பிறகு ஒரு கட்டத்துக்குமேல் என்ன எழுதுவது என்று தெரியாமல் காலப்போக்கில் காணமல் போவார்கள். அல்லது எதேனும் ஒரு குருப்பில் தன்னை இணைத்துக்கொண்டு அவ்வப்போது கூட்டத்தோடு கோவிந்தா போடுவார்கள்.

அல்ப பதிவர்கள்: இவர்களுக்கு தெரிந்தது இரண்டே விஷயம்தான். ஒன்று காப்பி. மற்றொன்று பேஸ்ட். பிரபல பதிவர், புது பதிவர் என்று விவஸ்தையே இல்லாமல் யார் எழுதிய பதிவாக இருந்தாலும், எழுத்துப்பிழை முதற்கொண்டு மாறாமல் அப்படியே ஒட்டி வெளியிடுவார்கள். இவர்களால் வெகுகாலம் நிலைக்க முடிவதில்லை.

ஸ்பூஃப் பதிவர்கள்: இது சமீபகாலமாக உருவாகி வரும் ஒரு பிரிவு. வேறொரு பதிவர் எழுதிய பதிவுகளை, அதே ஸ்டைலில் செமையாக கலாய்த்து ரீமேக் செய்து வெளியிடுவார்கள். நகைச்சுவை உணர்வுக்காக அல்லது தனிப்பட்ட வெறுப்பின் காரணமாக என்று பல்வேறு காரணங்கள் இருந்தாலும், இவ்வகை பதிவுகளுக்கு மிகுந்த வரவேற்பு இருக்கிறது. ஆனால் யாரும் வெளிப்படையாக பாராட்டுவதில்லை

நான் பதிவுலகத்தை புரிந்து கொண்டது அவ்வளவுதான். இது போக பதிவர்களில் வேறு பிரிவினர் யாராவது இருக்கிறார்களா என்று தெரியவில்லை. உங்களுக்கு தெரிந்தால் கருத்துரையில் தெரிவியுங்கள். கூடிய விரைவில் வாசகர்கள் பலவிதம் என்பது குறித்து ஒரு பதிவு வெளியிடுகிறேன்

முழுவதும் படிக்க >>

January 20, 2012

விஜய் செய்த அட்வைஸ்.....

போட்டோ கமெண்ட்ஸ் போட்டு ரொம்ப நாள் ஆகிவிட்டதால், சமீபத்திய நிகழ்வுகளை வைத்து கொஞ்சம் போட்டோ கமெண்ட்ஸ் போட்டிருக்கிறேன். 


மு.கு:  இது வழக்கம்போல வெறும் நகைச்சுவைக்காக மட்டுமே உருவாக்கப்பட்டுள்ளது. யார் மனதையும் புண்படுத்தும் நோக்கமோ, யாரையும் இழிவு படுத்தும் நோக்கமோ கிடையாது. கருத்துக்கள் அனைத்துமே என் சொந்த கற்பனையே.... 









































முழுவதும் படிக்க >>

January 11, 2012

இது கவனிக்க வேண்டிய விஷயம்

"என்னடா, ஒரே சீரியஸ் மேட்டாரா எழுதுகிறான்?", என்று நினைக்காதீர்கள். இதை இந்த நேரத்தில்தான் எழுதவேண்டும், என்று எந்த முடிவும் செய்து கொள்ளாமல், அவ்வப்போது எழுதுகிறேன். அது தொடர்ந்து சீரியஸ் மேட்டராகவும், இல்லை சினிமா மேட்டராகவும் அமைந்து விடுகிறது. தனிமனித வாழ்க்கை மட்டுமல்ல, நம் சமுதாயமே ஆரோக்கியமாக இருக்கவும், ஒரு நல்ல எதிர்கால இந்தியா அமையவும் முக்கிய காரணமாக இருக்கும் ஒரு விஷயத்தை மிக சாதாரணமாக கூட நாம் எடுத்துக்கொள்வதில்லை. (நாம் எதில்தான் சிரத்தையோடு இருந்திருக்கிறோம்?) கால ஓட்டத்தில் கொஞ்சம் கொஞ்சமாக நம்மால் மறக்கப்பட்டு வரும் இந்த விஷயத்தை பற்றி என் கருத்துக்களை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். 




நான் எதை பற்றி பேசுகிறேன் என்று விளங்குகிறதா? குழந்தைகளைப் பற்றித்தான் பேசுகிறேன். "அதற்கென்ன இப்போ? அவர்களை யார் கவனிக்காமல் விட்டது?", என்று நிறைய பேர் முணுமுணுக்கலாம். பசங்க படம் வந்தபோது இயக்குனர் சசிகுமார் சொன்ன ஒரு விஷயம், "நம் நாட்டில், குறிப்பாக தமிழகத்தில், குழந்தைகளுக்கான, இலக்கியங்கள் மற்றும் படைப்புகள் என்பது மிக மிக குறைவு." இன்னும் சொல்லப்போனால் கிடையவே கிடையாது என்பதுதான் உண்மை. கொஞ்சம் யோசித்து பார்த்தால் இது புரியும். குழந்தைகள் மிக மிக ஷார்ப்பானவர்கள். எல்லாவற்றையுமே மிக இலகுவாக உள்வாங்கி கொள்வார்கள். எந்த ஒரு விஷயமானாலும் அதிலேயே லயித்து விடும் பண்பு மிக்கவர்கள். இது எல்லோரும் அறிந்ததே. நான் என் குழந்தை பருவத்தில் படித்த சில புத்தகங்களை நினைத்து பார்க்கிறேன். நான் நான்கு வயதில் படித்த மோரா என்ற யானை கதை இன்னும் நினைவில் இருக்கிறது. ஐந்து வயதில் இருந்தே அம்புலிமாமாவின் ரசிகன் நான். சிறுவர் மலர், கோகுலம் கதிர் வந்தவுடன் முதலில் என் கைக்கே வரும். இதோடல்லாமல், ஏகப்பட்ட காமிக்ஸ் வகைகளை திரும்ப திரும்ப படித்திருக்கிறேன். மேலும் அருகில் இருக்கும் நூலகங்களில் தெனாலிராமன், மரியாதை ராமன், விக்கிரமாதித்தன் உள்பட பல கதைகளை படித்திருக்கிறேன். 



இது எனக்கு மட்டுமல்ல பெரும்பாலான நண்பர்களின் அனுபவமாக இருக்கும். அந்த காலத்திலேயே குழந்தைகள் இலக்கியத்துக்கு அவ்வளவாக முக்கியத்துவம் தரப்படவில்லை ஆனாலும், ஒரு சில பத்திரிக்கைகள் குழந்தைகள் மலருக்காக கொஞ்சம் சிரத்தை எடுத்தது உண்மை. ஆனால் தற்காலத்தில் குழந்தைகளுக்கு வாசிக்கும் பழக்கம் என்று ஒன்றே இல்லாமல் போய் விடுமோ என்று அச்சமாக உள்ளது. குழந்தைகள் மலர் வெளியிடும் பத்திரிக்கைகளும் முன்பு போல மிக சுவாரசியமான விஷயங்களை வெளியிடுவதில்லை. தற்கால குழந்தைகளை தொலைக்காட்சியும் கணிப்பொறியுமே முழுக்க ஆக்கிரமித்துள்ளது. அப்படியானால் தற்கால குழந்தைகளுக்கு இந்த மாதிரி எந்த வாய்ப்புமே இல்லையா என்று கேட்க தோன்றும். இருக்கிறது, ஆனால் அவை நாம் தாய்மொழியில் கிடையவே கிடையாது. ஹாரிபாட்டர் கதைகளை இருபது வருடங்களுக்கு முன்னமே அம்புலி மாமா கதைகள் படித்தவர்களுக்கு தெரியும். 



பத்திரிக்கை துறை இப்படி இருக்க, தொலைக்காட்சி மற்றும் சினிமா துறை இன்னும் மோசம். குழந்தைகளை கண்டுகொள்வதே இல்லை. வன்முறை மிகுந்த கார்ட்டூன் தொடர்கள், நாடகங்களே குழந்தைகளை கவர்கிறது. கந்தசாமி படத்தை சுசி கணேசன் வாய் கூசாமல் குழந்தைகளுக்கான படம் என்று கூறினார். பசங்க பாண்டியராஜன் கூட, குழந்தைகளை வைத்து பெரியவர்களுக்கான படமே எடுத்தார். அதில் கொஞ்சமேனும் குழந்தைகளுக்கான விஷயங்களை சேர்த்திருப்பார். மற்ற நாடுகள் போல முழு நீள குழந்தைகளுக்கான படங்கள் என்பது இங்கு கிடையவே கிடையாது. இங்கிருக்கும் எல்லா இயக்குனர்களுமே சமுதாயத்தை திருத்துவது போல படமெடுக்கிறேன் என்று அதில் எல்லோரையும் கவரும் விதமாக சில மசாலா ஐட்டங்களை சேர்த்து வெளியிடுகின்றனர். ஆனால் உண்மையில் ஒரு சமுதாயத்தை திருத்த வேண்டுமானால் அது நாளைய சமுதாயத்தை அதாவது குழந்தைகளை மனதில் கொண்டு இருக்கவேண்டும். நல்ல குத்து பாட்டும், அதிரடி சண்டைக்காட்சிகளும் ஒரு சில சாகசங்களும் இருந்தாலே அது குழந்தைகளுக்கான படம் என்று ஆகி விடாது. 



இவற்றுக்கெல்லாம் முக்கிய காரணம் வியாபார நோக்கமே. குழந்தைகளுக்கான புத்தகங்கள், படங்கள் ஆகியவை மிக குறைந்த லாபத்தை தருவதாக இருப்பதும், பெரும்பாலான பெற்றோர் எந்த ஒரு விஷயமும் ஆங்கிலத்தில் இருந்தால்தான் அது தரமானதாக இருக்கும் என்று தவறாக எண்ணுவதே இதன் முக்கிய காரணங்கள். இந்த மாதிரி புத்தகங்கள் மற்றும் படங்கள் தாய்மொழியில் இருப்பதால், சம்பந்தப்பட்ட குழந்தைகளுக்கு சிந்திக்கும் திறன் பல மடங்கு அதிகரிப்பதோடு, தாய்மொழி அறிவும் வளரும் என்று யாரும் சிந்திப்பதில்லை.  ஒரு சில ஒழுக்கங்கள் மற்றும் மாரல்கள் வளர்ந்த பிறகு எவ்வளவு படித்தாலும் மண்டையில் ஏறுவதில்லை. ஆனால் அவையே நாம் சிறுவயதில் கதையாக படிக்கும்போது நாம் குணாதிசயமாகவே மாறிவிடுகிறது. குழந்தைகள்தானே என்று விளையாட்டாக எடுத்துக்கொள்ளாமல், அவர்கள் நாளைய சமுதாயம் என்று செயல்பட வேண்டும். அதற்கு குழந்தைகளுக்கான புத்தகங்கள், கதைகள், திரைப்படங்கள் நிறைய வரவேண்டும். 

உங்க கருத்துக்களை இங்கே பதிவு பண்ணுங்க.... 
 
முழுவதும் படிக்க >>

January 7, 2012

கடவுள் பெயரால் ஒரு மோசடி


மு.கு 1: இது மிக சீரியஸான பதிவு. போரடிக்கும் என்று முதலிலேயே சொல்லி விடுகிறேன்
மு.கு 2: இங்கே கடவுள் என்ற பதம் ஒரு குறிப்பிட்ட மதத்தையோ, குறிப்பிட்ட கடவுளை மட்டும் குறிக்கவில்லை. 


கடவுள். என்ன ஒரு உன்னதமான ஒரு சொல்!! நம்புபவன், நம்பாதவன் எல்லோருடைய எண்ணங்களுமே இவரை சுற்றியே பெரும்பாலும் இருக்கிறது. உலகம் தோன்றிய காலத்தில் இருந்தே கடவுள் என்ற சொல்தான் மிக மிக சர்ச்சைக்குரிய ஒரு சொல். உலகிலேயே அதிகம் பாராட்டப்பட்டவர் கடவுள். அதிகம் இகழப்பட்டவர் கடவுள், அதிகம் விமர்சிக்கப்பட்டவரும்  கடவுள்தான். இப்படி எங்கும் நிறைந்திருப்பதால்தான் அவரை கடவுள் என்கிறார்களோ என்னவோ? இப்போது நான் சொல்வது கடவுள் இருக்கிறாரா? இல்லையா? என்பதை பற்றிய ஆராய்ச்சி அல்ல. இருக்கிறாரோ இல்லையோ, அவரை வைத்து பல்வேறு மோசடிகள் நடக்கின்றன. அதைப்பற்றித்தான்.
 

இறை மறுப்பாளர்கள் என்பவர்கள் காலந்தோறும் இருந்து வருகிறார்கள். இவர்களிடம், "உங்களுக்கு ஏன் கடவுள் நம்பிக்கை இல்லாமல் போய் விட்டது?", என்று கேட்டால், அவர்கள் சொல்லும் பதில், "கடவுள் என்ற ஒருவர் இருந்தால், அவர் கருணை வடிவானவராக இருந்தால், மனிதர்களுக்கு ஏன் இவ்வளவு கஷ்டங்கள்? கவலைகள்? நோய் எதற்கு? வறுமை எதற்கு? ஏற்றத்தாழ்வுகள் எதற்கு?", என்று கேட்பார்கள். "கடவுள் என்ற நம்பிக்கை மனிதனை சோம்பேறி ஆக்கும் ஒரு விஷயம். அவனது போராடும் குணத்தை மந்தப்படுத்தும் ஒரு விஷயம்." என்றும் சொல்வார்கள். மேலும், "கடவுள் என்பது கயவர்களின் கண்டுபிடிப்பு. மக்களை ஏமாற்றி பிழைக்க சில அயோக்கியர்களால் கண்டு பிடிக்கப்பட்டவரே கடவுள். கடவுளின் பெயரை சொல்லி எத்தனை சாமியார்கள் மக்களின் பணத்தை பறிக்கிறார்கள்? பெண்களின் கற்பை சூறையாடுகிறார்கள்? அப்படியானால் கடவுள் மோசடி செய்பவர்களை தண்டிக்க வேண்டுமே? தண்டிக்கிறாரா? இல்லையே? பின்னே என்ன கடவுள்?", என்று ஆதங்கத்தை வெளிப்படுத்துவார்கள்.


உண்மைதான் கடவுள் பெயரால் பல மோசடிகள் உலகில் நடந்து வருகிறதுதான். அதற்கு கடவுள் எப்படி பொறுப்பாக முடியும்? செய்யும் தப்பை எல்லாம் செய்துவிட்டு, "கடவுளுக்கு சக்தி இருந்தால் தடுக்கச்சொல் பார்க்கலாம்?", என்று சொல்வது எந்த வகை பண்பு? நியூட்டன் சொன்னது போல எந்த ஒரு நிகழ்வுக்கும் ஒரு எதிர் விளைவு உண்டு. இதுதான் பலாபலன். இதுதான் விதி. "நாம் கண் முன்னே ஒருவன் தவறு செய்கிறான் என்றால் அதை கண்டும் காணாமல் சென்று விடு.", என்று எந்த கடவுளும் சொல்லவில்லை. கடவுளை பொறுத்தவரை எல்லா செயல்களுக்குமே சமமான எதிர்விளைவுகள் உண்டு. இதை தவிர்க்கவே முடியாது. ஆனால் அது எந்த வழியில் வரும், யார் மூலமாக வரும் என்பதுதான் யாருக்கும் புரியாத சூட்சமம். 

சரி இறைநம்பிக்கையாளர்கள் எல்லோரும் சோம்பேறிகள்தான். பலர் மோசடிக்காரர்கள்தான். இது உண்மையானால், இறை மறுப்பாளர்கள் எல்லோருமே நல்ல பண்பாளர்களாக, நேர்மையாளர்களாக இருக்க வேண்டுமே? சமீபத்தில் ஒரு வலைத்தளத்தில் பெரியார் எழுதிய ஒரு கட்டுரையை வெளியிட்டிருந்தார்கள். அறுபது ஆண்டுகளுக்கு முன்னால் அவர் எழுதிய அந்த கட்டுரையை அச்சு பிசகாமல் அப்படியே வெளியிட்டிருந்தார்கள். அது சமகாலத்துக்கும் பொருந்தும் என்ற நோக்கம் அதில் தெரிந்தது. அந்த கட்டுரையின் சாராம்சம் இதுதான். நம் தேசம் கடவுள் நம்பிக்கையால் இன்னும் முன்னேறாமல் இருக்கிறதாம். நாம் தினமும் பயன்படுத்தும் அறிவியல் கண்டுபிடிப்புகள் அனைத்தும் மேலை நாட்டவர் கண்டுபிடித்ததாம். அதை எல்லாம் நாம் பயன்படுத்திக்கொண்டே, கடவுளை கொண்டாடி மூட நம்பிக்கையில் உழன்று கொண்டிருக்கிறோமாம். இந்த கட்டுரை மட்டுமல்ல, இதே போன்ற கருத்தை பல்வேறு நண்பர்களும், கருத்துரை மூலமாகவோ, பதிவுகள் மூலமாகவோ கூறி வருகின்றனர். மேலோட்டமாக பார்த்தால் இது சரி என்றே தோன்றுகிறது. 


இந்த கட்டுரையை படித்தவுடன் எனக்கு இரண்டு சந்தேகங்கள் தோன்றின. முதலாவது, மேலை நாட்டில் கடவுள் நம்பிக்கை கிடையாதா? இல்லை இந்த மாதிரி அறிவியல் அறிஞர்கள் எல்லோருமே இறை மறுப்பாளர்களாக இருந்தார்களா? இந்த கேள்விக்கு உண்மையான பதில், இல்லை என்பதுதான். உலகமெங்கும் கடவுள் நம்பிக்கை என்பது நீக்கமற நிறைந்திருக்கிறது. அதே போல, அறிவியல் அறிஞர்களில் தீவிர இறை மறுப்பாளர்களும் உண்டு, அதீத கடவுள் பக்தி கொண்டவர்களும் உண்டு. இதற்கு சிறந்த உதாரணம் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன். கடைசி வரை அவர் கடவுளை நம்பினார் . இரண்டாவது சந்தேகம், இந்தியாவில் அறிவியல் அறிஞர்களே கிடையாதா? இல்லை அவர்கள் சொல்வது போல இந்தியா அறிவியலுக்கு எந்த பங்களிப்பும் தரவில்லையா? இந்த கேள்விக்கு பதில் வேண்டுமானால் List of Indian Scientists என்ற பெயரில் இணையத்தில் தேடிப்பாருங்கள். இவர்கள் அனைவருமே இறை நம்பிக்கையாளர்களும் இல்லை. மறுப்பாளர்களும் இல்லை. ஆக ஒரு நாடு முன்னேறாமல் போனதற்கு மூட நம்பிக்கைகள் மட்டுமல்ல, வேறு பல காரணங்களும் உண்டு. நம்மூர் பகுத்தறிவாளர்கள்தான் சைக்கிள் கேப்பில் ஆட்டோ என்ன, கப்பலே ஒட்டுவார்களே? ஒரு குறிப்பிட்ட சாதி துவேசத்தை தூண்டும் பொருட்டு, இந்த விஷயத்தில் கடவுள் என்ற வஸ்துவை கையில் எடுத்திருக்கிறார்கள் அவ்வளவே. 


உடனே மற்றவர்கள், "அவர்கள் எல்லோரும் போலி நாத்திகர்கள், நாத்திகத்தை கொள்கையாக அல்லாமல் ஒரு தொழிலாக கொண்டவர்கள். அவர்களை வைத்து பகுத்தறிவை எடைபோடக்கூடாது." என்று கூறுவார்கள். மிக மிக குறைந்த சதவீதம் மக்கள் தொகையை கொண்டவர்களுக்குள்ளேயே போலிகள் இருக்கும்போது, மிக மிக அதிக மக்கள் தொகையை கொண்ட இறை நம்பிக்கையாளர்களுள் போலிகள் என்பது மிக சாதாரணம்தானே?  இன்னொரு நண்பர் இன்னும் கொஞ்சம் இறங்கி வந்து, "நான் கடவுள் நம்பிக்கையை குறை சொல்லவில்லை, ஆனால் அதை ஒரு பொது விதியாக்கி, மற்றவர்களுக்கும் கற்பிப்பதுதான் தவறு." என்று கூறினார். சரிதான், என் நம்பிக்கையை என் குழந்தைக்கும் நான் விதைப்பது தவறுதான். ஆனால் இதையேதானே பெரும்பாலான இறை மறுப்பாளர்களும் செய்கிறார்கள்? தங்கள் குழந்தைகள் கடவுள் சம்பந்தமான விஷயங்களை தெரிந்து கொள்ளக்கூடாது என்று நினைக்கிறார்கள்? இதுவும் தவறுதானே? கடவுள் நம்பிக்கை வைத்திருப்பவன் எல்லோரும் அயோக்கியன், மூடன், காட்டு மிராண்டி, என்று பரிகாசம் செய்கிறார்கள்? இதுவும் ஒரு வகை கருத்து திணிப்புதானே?


ஒரு சிலரை தவிர பெரும்பாலான மனிதர்கள் தன் வாழ்வில் ஏதோ ஒரு கட்டத்தில் நாத்திகனாக மாறுகிறான். அதற்கு பல்வேறு காரணங்கள் உண்டு. வாழ்வில் ஏற்பட்ட விரக்தி, தான் கற்ற கல்வியின் ஆதிக்கம், பிற ஊடகங்களின் பாதிப்பு என்று நிறைய விஷயங்கள் அவர்களது மனதை ஆக்கிரமிக்கிறது. இந்த காலகட்டத்திலேயே கடவுள் குறித்த உண்மையான தேடல் தொடங்குகிறது. இதை சரியான வாய்ப்பாக பயன்படுத்தும் மோசடி பேர்வழிகள் இவர்களை மூளை சலவை செய்ய தொடங்குகிறார்கள். விரக்தி அடைந்தவரை கடவுள் பக்கமும், கல்வி கற்று பொருளாதார ரீதியாக பலமாக இருப்பவரை நாத்திகம் பக்கமும் இழுப்பது மிக சுலபம். இரண்டுமே மோசடிதான். இரண்டு பக்கமுமே சில பல உண்மைகள் திரித்தே சொல்லப்படுகிறது. இவர்களின் நோக்கம் மக்களை நல்வழிப்படுத்துவது அல்ல. தன் பக்கம் கூட்டம் சேர்ப்பது. ஆகவே மனிதர்கள் கடவுளை தேட தங்களின் பகுத்தறிவை பயன்படுத்துவது முக்கியம். ஆனால் பெரும்பாலானவர்கள் அடுத்தவரின் பகுத்தறிவை தன்னுடையது என்று நினைத்துக்கொள்வதாலேயே ஏதோ ஒரு பக்கம் கண்மூடித்தனமாக சாய்ந்து விடுகிறார்கள்.ஒரு அப்பட்டமான குற்றச்சாட்டை இங்கே வைக்கிறேன். பெரும்பாலான இளைஞர்களுக்கு கடவுள் நம்பிக்கை இருப்பதில்லை. இதன் முக்கிய காரணம், இந்த கால கட்டத்தில் பணம்தான் கடவுள் என்கிற விஷயம் அவர்கள் மனதில் ஆழ வேரூன்றி விடுகிறது. பணமிருந்தால் எதையும் சாதிக்கலாம் என்ற எண்ணம் தலை தூக்கி விடுகிறது. மேலும் ஏதேனும் ஒரு மதத்தை சார்ந்திருப்பது, தனது சுதந்திரமான செயல்களுக்கு இடைஞ்சல் தரும் என்பதாலேயே கடவுள்கள் மீது ஈடுபாடு இல்லாமல் போய் விடுகிறது. மற்றபடி கொள்கைரீதியாக கடவுள் மறுப்பு உள்ளவர்கள் மிக சொற்பமே. அதிலும் இதை வாழ்நாள் முழுவதும் கடைபிடிப்பவர்கள் ஒரு சிலரே.  


என்னை பொறுத்தவரை, கடவுளை புகுத்துபவனும், மறுப்பவனும் மோசடிக்காரர்களே. கடவுளை தேடுபவனே உண்மையான பகுத்தறிவாளன். 

உங்க கருத்துக்களை இங்கே பதிவு பண்ணுங்க.... 

முழுவதும் படிக்க >>

January 3, 2012

அஸ்கா... லஸ்க்கா...சாமியே சரணம் ஐய்யப்பா....



எல்லா நண்பர்களுக்கும் கொஞ்சம் லேட்டான புத்தாண்டு வாழ்த்துக்கள். தவிர்க்க முடியாத பயணங்களால் சுமார் ஒரு மாத காலம் பதிவுலகில் எட்டி பார்க்க முடியாத நிலை. எனக்கும் ஏர்டெல்லுக்கும் இருந்த வாய்க்கால் தகராறு வேறு முற்றி விட, இன்டர்நெட் இணைப்பையும் துண்டித்து விட்டேன். குறைந்த பட்சம் பதிவுகளை படிக்கக்கூட நேரமில்லை. தற்போதுதான் கொஞ்சம் செட்டில் ஆகி இருக்கிறேன். 


இது போலீஸ் சீசன் 


கடந்த இரண்டாண்டுகளுக்குள் தமிழ் சினிமாவில் நிறைய போலீஸ் சப்ஜெக்ட் படங்கள் வந்து விட்டன. நிறைய முன்னணி நடிகர்கள் போலீஸ் கெட்டப்பில் நடித்து விட்டார்கள். தனுஷ் மற்றும் விஜய் மட்டுமே பாக்கி. விஜய் ஏற்கனவே அந்த கெட்டப்பில் நடித்து மக்களை நகைச்சுவை வெள்ளத்தில் ஆழ்த்தி இருக்கிறார். மீண்டும் துப்பாக்கி படத்தில் போலீஸ் கெட்டப் போடுகிறாராம். ஆக மிச்சம் இருப்பது தனுஷ் மட்டுமே. தனுஷ் போலீஸ் கெட்டப்பில் நடிப்பதை நினைத்து பார்க்கவே பயமாக இருக்கிறது. தனுஷ் போலீஸ் கெட்டப்பில் நடிப்பதை விட, மனோபாலா நடிப்பதையே பார்த்து விடலாம். இரண்டு பெரும் போலீஸ் உடையில் ஒரே மாதிரிதான் இருப்பர். அப்புறம் தனுஷ் என்றவுடன்தான் நினைவுக்கு வருகிறது. தற்போது புகழ் பெற்றிருக்கும் கொலவெறி பாடலை ஒரு வழியாக நானும் கேட்டு விட்டேன். ஆனால் நான் முதன் முதலில் கேட்டது தனுஷ் குரலில் அல்ல. பாடகர் சோனு நிகாமின் 4 வயது மகன், நேவான் நிகாம் குரலில். வீடியோவுடன் அந்த பாடலை பார்க்கும்போது," ச்சோ.... சுவீட்!!", என்று சொல்லாமல் இருக்க முடியவில்லை. அதன் பின் தனுஷ் குரலில் அதை கேட்டபோது, ஏதோ ஒன்று குறைவதை போன்றே தோன்றுகிறது. நேரமிருந்தால் நேவான் குரலில் அந்த பாடலில் யு டியூபில் பாருங்கள். 


அஜீத் ரசிகரான EBகாரர் 


புத்தாண்டு அன்று நண்பன் பட பாடல் வெளியீட்டு விழாவை சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பினார்கள். ஈபியில் வேலை பார்ப்பவர் அஜீத் ரசிகராக இருப்பார் போலிருக்கிறது. பின்னே, கரெக்டா நிகழ்ச்சி தொடங்கும்போது கரண்ட் கட் பண்ணினால் எப்படி?, கரண்ட் வரும்போது கிட்டத்தட்ட நிகழ்ச்சி முடிந்து விட்டது. இயக்குனர் சங்கர் மேடையில் பேசிக்கொண்டிருந்தார். பாடல்களை இன்னும் கேட்கவில்லை. படத்தோடு பாடல்களை பார்த்துக்கொள்ளலாம் என்று விட்டு விட்டேன். நான்கு வரிகள் கேட்டவரை, அஸ்கா லஸ்கா, இருக்கானா...இல்லியானா பாடல்கள் நன்றாக இருக்கிறது. சங்கர் கடைசியில், "எந்திரனை மனதில் வைத்துக்கொண்டு இந்த படத்துக்கு வராதீர்கள், அந்த மாதிரி எதுவும் இந்த படத்தில் கிடையாது. வேறு சில விஷயங்கள் இதில் உண்டு. உங்கள் எதிர்பார்ப்பு மீட்டர்களை ஜீரோவில் வைத்துக்கொண்டு வந்தால் நல்ல படம் பார்த்த திருப்தி கிடைக்கும்." என்று கூறினார். எதை மனதில் வைத்துக்கொண்டு இதை கூறினார் என்று தெரியவில்லை. 


டாப் டென் 2011 


"எங்க ஆள் படம்தான் ஃபர்ஸ்ட்... இல்ல எங்க ஆள் படம்தான் ஃபர்ஸ்ட்", என்று ஆளாளுக்கு தன் அபிமான நடிகரின் படத்தை தாங்கி பிடித்தாலும், மனசாட்சிப்படி எல்லோருக்குமே எந்த படம் நன்றாக ஓடியது, வசூலித்தது என்று தெரியும். சொல்லப்போனால் கடந்த ஆண்டு எல்லா நடிகர்களின் படங்களுமே ஓரளவுக்கு சுமாராகப்போனது. எந்த படங்களும் யாரையும் ஏமாற்றவில்லை என்பதே உண்மை. அதே போல டாப் டென் படங்கள் என்று வரிசைப்படுத்துவது மிக தவறானது. ஏனென்றால், ஒரு குறிப்பிட்ட படத்தை பற்றி வெளியிடப்படும் தகவல்கள் அனைத்துமே உண்மைதன்மை அற்றவைகளாக உள்ளன. ஆகவே எந்த அடிப்படையில் அவற்றை வரிசைப்படுத்துவது என்பதே பெரிய குழப்பம். மொத்தத்தில் சென்ற ஆண்டு எல்லா நடிகர்களுக்கும் நல்ல ஆண்டுதான். மிகப்பெரிய வெற்றி அடையாவிட்டாலும், யாரும் சறுக்கலை சந்திக்கவில்லை என்பது உண்மை. ஆகவே கொஞ்சம் வித்தியாசமாக இந்த ஆண்டு நான் பார்த்ததிலேயே டாப் டென் மொக்கை படங்களை பட்டியலிடுகிறேன். 



10. எங்கேயும் காதல் 

9. முதல் இடம் 

8. யுவன் யுவதி 

7. சிங்கம் புலி 

6. ஒஸ்தி 

5. ரௌத்திரம் 

4. போடிநாயக்கனூர் கணேசன் 

3. பவானி ஐபிஎஸ் 

2. சீடன் 

1. ராஜபாட்டை 


சாமியே சரணம் அய்யப்பா.... 



இந்த பதிவு முழுவதும் சினிமா பற்றி பேசி விட்டேன். அதற்கு சிறிதும் சம்பந்தம் இல்லாத ஒரு செய்தி. இது சபரிமலை சீசன் என்பதால் எங்கு பார்த்தாலும், மாலை போட்ட ஐய்யப்ப சாமிகளை பார்க்க முடியும். முன்பெல்லாம் மாலை போட்டவர்களை பார்த்தால் ஒரு வித மரியாதை ஏற்படும். இப்போதெல்லாம், "இவனெல்லாம் ஏண்டா மாலை போட்டிருக்கிறான்?", என்று திட்ட தோன்றுகிறது. இந்த காலகட்டம் என்பது, விரதம், பரதேசிகோலம், எளிமை எல்லாமே ஒரு வித பற்றற்ற நிலையை குறிப்பது. சுயத்தை இழந்து கடவுளை மட்டுமே சிந்திக்கும் நிலையே பற்றற்ற நிலை. இந்த காலகட்டத்தில் நமக்கு எந்த வித எதிர்மறை எண்ணங்களும் தோன்றி விடக்கூடாது என்பதாலேயே, எதிர்மறை எண்ணங்களை தோற்றுவிக்கும் விஷயங்களான, மாமிசம், மது, மாது போன்றவற்றை தவிர்க்க சொல்கிறார்கள். ஒரு காலத்தில் ஐய்யப்பன் தண்டித்து விடுவான் என்ற பயத்தில் பலர் இந்த செயலில் ஈடுபடாமல் இருந்தாலும், தற்போது, இந்த மாதிரியான செயல்களில் ஈடுபடுபவர்கள் மிக அதிகம். 

இதனால் நமக்கு தண்டனை எதுவும் கிடைக்கப்போவதில்லை. ஆனால் நாம் புனிதம் என்று நினைத்து கொண்டிருக்கும் கடவுளின் புனிதத்தை நாமே கெடுத்தது போலாகும். மாலை போட்டவுடன் கடவுள் நமக்குள் குடிவந்து விடுகிறார் என்பது ஒரு நம்பிக்கை. ஆகவே தான் மாலை போட்டவர்களை சாமி என்று அழைக்கிறார்கள். கடவுள் வெளியே எங்கும் இல்லை. உனக்குள்ளேயே இருக்கிறார் என்பதே இதன் அடிப்படை தத்துவம். கடவுள் நமக்குள் இருக்கிறார் என்று யார் நினைக்கிறார்களோ, அவர்கள் கண்டிப்பாக இந்த மாதிரி செயல்களில் ஈடுபட மாட்டார்கள். சபரி மலைக்கோ, ஐய்யப்பனுக்கோ சக்தி இருக்கிறதா? இல்லையா? என்பது வேறு விஷயம். பக்தி என்பதும் ஒரு வித மனக்கட்டுப்பாட்டை கொடுக்கவேண்டும். வெறும் பயத்தால் மட்டுமே வந்தால் அது பக்தி அல்ல. மாலை போடுவது என்பது ஒரு பேஷன் அல்ல. வருடத்தில் ஒரு குறிப்பிட்ட காலத்தில் மட்டும் துறவு வாழ்க்கை வாழும் ஒரு உன்னத தருணம் என்பதை எப்போது இவர்கள் உணருவார்கள் என்று தெரியவில்லை. 

உங்க கருத்துக்களை இங்கே பதிவு பண்ணுங்க... 

முழுவதும் படிக்க >>
Related Posts Plugin for WordPress, Blogger...